இனி ஒரு போதும்…………..

Vinkmag ad

இனி ஒரு போதும்…………..

எஸ் வி வேணுகோபாலன்

ஒரு போர்க்காலத்தில் ஊரை விட்டு விரட்டப்படும்
அதிர்ச்சி நேரம் போலிருந்தது அது…..
எதையெல்லாம் எடுத்துக் கொள்வது 
எதையெல்லாம் மறந்து வெளியேறுவது…
 
மழை நீர் திடுக்கென்று வாயில்படியைத் தொட்டு 
வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்ட அந்தப் பொழுதில் 
அலறி அடித்துக் கொண்டு வெளியேறத் துடித்த தருணம் 
இனி யாருக்கும் நேராதிருக்கட்டும் 
 
இடுப்பளவு நீரில் 
வழித்துணையாக வருபவர்கள் 
திடீரென்று காணாமல் போகும் அவலம் 
இனி எப்போதும் நிகழாதிருக்கட்டும் 
 
பாலத்தின் அடியில் 
பெருத்த ஓசையோடு பாய்ந்து கொண்டிருக்கும் 
வெள்ளநீரோடு கலந்துவிட்டவர்களது 
குரல்களின் ஓலம் 
இந்தப் பாழிரவில் 
வெளியை நிரப்பிக் கொண்டிருக்கும் கொடூரம் 
இனி ஒருபோதும் நடவாதிருக்கட்டும் 
 
பசி, தாகம் எல்லாவற்றையும் அடைத்துக் கொண்டு 
உயிர் வாதை துடித்துக் கொண்டிருந்த 
மோசமான அந்தப் பொழுதுகள் 
இனி வராது போகட்டும் 
 
தொடர்புகள் துண்டிக்கப்பட்டு 
எல்லையற்று விரியும் இருள் காட்டில்
இன்னின்னார் என்ன ஆனார் 
என்ற பரிதவிப்பின் 
அச்சத்தால் கனமேறும் துயரச் சுமைகள் 
இனி தலைமேல் ஏறாதிருக்கட்டும் 
 
உறங்க விடாமலும் உறக்கத்திலும் 
விழிப்பிலும் 
எங்கோ மூழ்கிப் போய்க் கொண்டிருப்பது போன்ற 
பதட்டக் கனவுகள் 
இனி துரத்தாதிருக்கட்டும் 
 
எல்லாவற்றையும் அழித்துச் சென்ற 
வெள்ளநீர் 
நான்கு சுவர்களை மட்டிலுமே 
அடையாளம் வைத்துச் சென்ற வீட்டின்முன் 
நெஞ்சு வெடிக்கக் கதறியழும் பெண்களின் ஒப்பாரி 
இனி காலத்திற்கும் ஒலிக்காதிருக்கட்டும் 
 
எங்கள் தெருவின் விடியலில் அன்றாடம் ஒலிக்கும் 
“இடியாப்பம்” என்ற எளிய விற்பனைக் குரலுக்குச் 
சொந்தமான அந்தக் கருத்த மனிதர் 
இரண்டு பிள்ளைகளோடு இறங்கி நடக்கையில்  
பெருவேக வெள்ளத்தோடு இழுத்துச் செல்லப்பட்ட 
வேதனைச் செய்திகள் 
இனி ஒருபோதும் கேட்காதிருக்கட்டும் 
 
எல்லாக் கடவுள்களாலும் 
கடவுளாகத் தம்மைக் கருதிக் கொள்ளும் ஆட்சியாளர்களாலும் 
மிகத் தேவையான நேரத்தில் 
ஈவிரக்கமின்றிக் கைவிடப்பட்ட 
சோகத்தில் 
தேற்றுவாரின்றிப் புலம்பும் மக்களை
மீண்டும் மீண்டும் வசப்படுத்தத் துடிக்கும் 
தன்னலக் கும்பல்கள் 
இனி வெற்றி பெறாது குமுறட்டும் 
இனியாவது மானுடம் நிமிரட்டும் 
 
                 *********
நன்றி: தீக்கதிர்டிசம்பர் 18, 2015

News

Read Previous

மனைவி

Read Next

மழை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *