அப்பா எனும் ஆயிரஞ் சிரிப்பு

Vinkmag ad

 

அப்பா எனும் ஆயிரஞ் சிரிப்பு – வித்யாசாகர் – கவிதை!

 

டித்தாலும் திட்டினாலும்
முண்டம் முண்டமென மண்டையில் குட்டினாலும்
அப்பா வீட்டிலிருக்கும் நாட்கள் தான்
எங்களுக்கு வசந்தமான நாட்கள்..

அப்பா கையில் அடி வாங்குவது
அவ்வப்பொழுது இறந்து பிறப்பதற்கு சமம்..

நம்மை புதிதாகப் பெற்றெடுக்க
அனுதினமும் நெஞ்சில் சுமக்கும் அம்மாக்களாகவே
நிறைய அப்பாக்களும் இருக்கிறார்கள்..

அப்பா திட்டுகையில் என்றேனும்
அப்பா அடிக்கையில் என்றேனும்
பாவம் அப்பா என்று யோசித்திருக்கிறீர்களா ?

உண்மையில் அப்பாக்கள் பாவம்
நான் அடிவாங்கிக்கொண்டு
தூங்குவதுபோல் விழித்திருப்பேன்,
‘பிள்ளை உறங்கிவிட்டானென வந்து
அப்பா அவர் அடித்த இடத்தை தடவிவிட்டு
மனது நோக
பிள்ளைப் பாவமென்றுச் சொல்லி
முத்தமிடுவார்
நான் மறுநாளும் அடிவாங்கக் காத்திருப்பேன் அந்த முத்தத்திற்காக….

விடிகாலையில் அப்பா
வேலைக்கு புறப்படுகையில் தரும்
ஒற்று முத்தத்தை விட
’நாங்கள் உறங்குவதுபோல் நடித்திருக்கையில்’
அப்பா வேலைக்கு கிளம்பிவந்து
வெளியில் இறங்கும் முன்
‘என் செல்லப் பாப்பாவெனச் சொல்லி’
அழுந்த தரும் முத்தம்
அப்படியொரு சுகமானது..

எங்கப்பா பெரிய ஹீரோவெல்லாம் இல்லை
ஆனால் நல்ல மனிதரென்று
எத்தனைப் பிள்ளைகள் அப்பாவை புரிந்துள்ளீர்கள்??

காலம் முழுக்க
எனதம்மாவின் முந்தானைக்குள் விழாமல்
அவளை அடுப்படிக்குள் மட்டுமே அடைக்காமல்
அவருக்குச் சமமாக அவளை வைத்திருக்கும்
என்னப்பா
எனக்கு கதாநாயகன் தானே..?

அப்பா கொஞ்சும்
கொஞ்சலைப் போல
உலகில் வேறு சிறந்த மகிழ்ச்சியில்லை,
அவர் மீசைக் குத்திய முத்தத்திற்கு ஈடு
உலகில் வேறு பரிசே கிடையாது,
அப்பாவின் வாசனைக்கு ஈடாக
இன்னொன்று இந்த உலகில் கிடைக்கப் போவதேயில்லை.,

என்னவோ, எனக்கு தெரியாது
நான் அவ்வப்பொழுது சென்று
அப்பாவின் அருகில் நின்றுகொள்வேன்
அப்பா என் கூடவே இருக்கேவேண்டும் இறைவா என்று தோணும்,
அப்பா என்னைப் பார்த்து
‘என்னடா’ என்பார்,
நான், ஒன்றுமில்லையே என்று பொய்ச்சொல்லிவிட்டு
அங்கிருந்து நகர்வேன்,

உண்மையில்,
எங்களை உயிராக்கியவள் என்னவோ
அம்மாதான்,
ஆனால் எங்களை
தனதுயிராக்கிக் கொண்டவர் அப்பா!!
——————————————————
வித்யாசாகர்

News

Read Previous

உங்கள் கணினியை வேகமாக இயங்கச்செய்வது எப்படி?

Read Next

சைத்தான்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *