இதுதான் கல்விச் சேவை

Vinkmag ad

இதுதான் கல்விச் சேவை.
இப்படித்தான் முஸ்லிம்கள்
சிந்திக்க வேண்டும்.
—————————————
முஸ்லிம் சமூகத்தில் மஹல்லா ஜமாஅத்கள் சங்கங்கள் அறக்கட்டளைகள் உள்ளிட்டவை பல்வேறு சமூக மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.இந்த செயல்பாடுகளுக்கு ஒரு தொலைநோக்கு இலக்கை வகுத்துக் கொண்டால் அது ஊரிலும் உம்மத்திலும் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டு வரும் என்பது நிச்சயம்.

ஒரு அமைப்பு வகுக்கும் தொலைநோக்கு இலக்கு அதன் உறுப்பினர்களிடம் முதலில் பொறுமையையும் திட்டமிட்டு செயல்படும் தன்மையையும் உண்டாக்கும். அதோடு தளராத மனதையும் இடைவிடாத முயற்சியையும் அவர்களின் இயல்பாக்கும்.

பிறந்த ஊர் மீது அக்கறையுள்ள சகோதர்கள் உங்கள் ஊரை உங்கள் சந்ததிகள் வாழ்வதற்கு ஏற்றதாக அமைத்துவிட்டு செல்வது தான் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் தேடிவைக்கும் ஆகப்பெரும் சொத்தாக அமையும்.

அதற்கு கீழ்கண்ட மூன்று ஆதாரமான துறைகளில் கவனம் செலுத்தினால் சீரழிந்த வரும் நமது மஹல்லாக்களை ஓரளவிற்கு மீட்டெடுத்துவிடலாம்.

👉 ஊரை பசுமையாக மாற்றுவதற்கான திட்டம்
👉 நீராதாரங்களை பாதுகாப்பதற்கும் புதிதாக உருவாக்குவதற்குமான திட்டம்
👉 பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிப்பதற்கான திட்டம்

இந்த ஆண்டு உயிரியல் பிரிவில் +2 தேர்வு எழுதிய சமூக அக்கறை கொண்ட குடும்பத்து மாணவர்கள் 12 பேரை தேர்வு செய்து அவர்களை அடுத்த 8 ஆண்டுகளுக்கு படிக்கவைப்பதற்கான செலவுகளை திட்டமிட வேண்டும். பெரிய செலவுகள் எல்லாம் கிடையாது முறையாக திட்டமிட வேண்டும் அவ்வளவு தான்.அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

உங்கள் வாழ்விற்கு வளம் சேர்க்க நாங்கள் உதவுகிறோம் பதிலுக்கு பிறந்த மண்ணிற்கு நீங்கள் வளம் சேர்க்க வேண்டும்.இது தான் ஒப்பந்தம். 12 மாணவர்களையும் திருச்சி ஜமால்,சென்னை புதுக்கல்லூரி போன்ற முஸ்லிம் மேனேஜ்மென்ட் கல்லூரி ஒன்றில் சேர்த்துவிடுங்கள்.

மாணவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் 6 துறைகளில் தலா 2 மாணவர்களை சேர்த்துவிட வேண்டும்.
1.History
2.Botany
3.Microbiology
4.Chemistry
5.Zoology
6.Social Works
இவற்றோடு சேர்த்து அருகில் உள்ள அன்வாருல் உலூம் போன்ற மதரஸாவில் ஆலிமியத் படிப்பு அல்லது B.A. Islamic Studies (இந்த ஆண்டு முதல் ஒரே காலத்தில் இரண்டு படிப்புகளை படிக்கலாம்) படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

முதுநிலை படிப்பையும் (PG) ஆய்வுக் கல்வியையும் (Ph.D) மேற்கொள்கின்றபோது படிப்பும் கல்லூரியும் மாற வேண்டிய சூழல் ஏற்படலாம் ஆனால் அவர்களுக்கு நீங்கள் கொடுத்துள்ள இலக்கு மாறாது. அவர்களின் கல்வி காலம் முழுவதும் ஊரின் சூழலை மாற்றி உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாக அமைத்திட வேண்டும் என்ற இலக்கை தொடர்ந்து அவர்களிடம் விதைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் ஊர் வருகின்ற போதெல்லாம் உங்களோடு இணைந்து சேவையாற்றிட வேண்டும்.

இன்ஷா அல்லாஹ்…. அவர்கள் அனைவரும் 25 – 28 வயதில் மிகப்பெரும் சூழலியல் ஆய்வாளர்களாக நிச்சயம் மாறுவார்கள். பெரும் பொறுப்புகளும் பொருளாதார வளமும் அவர்களைத்தேடி வரும்.கூடவே நீங்கள் விதைத்த விதை அவர்களை உறங்க விடாது. பிறந்த ஊரை மட்டுமல்ல இந்த நாட்டையும் பல்லுயிர் வாழும் சோலையாக நிச்சயம் மாற்றுவார்கள்.

இவை அனைத்தும் உங்களின் தொலைநோக்குத் திட்டத்திலும், அவர்களை படிக்க வைப்பதற்கு நீங்கள் வழங்கும் பொருளாதாரத்திலும்,தொடர்ச்சியாக அவர்களுக்கான இலக்கை விதைப்பதிலும், மிக முக்கியமாக உங்களின் பொறுமையிலும் தான் உள்ளடங்கியுள்ளது.

இதுதான் கல்விச் சேவை.
இப்படித்தான் முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.

– CMN SALEEM

News

Read Previous

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்

Read Next

விவேகானந்தர் மொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *