ஸ்வர்ணகுமாரி தேவி – இந்தியாவின் அறிவியல் விழிப்புணர்வுக்கு வித்திட்ட முதல் இந்தியப் பெண்மணி

Vinkmag ad
558 Swarnakumari Deviஸ்வர்ணகுமாரி தேவி
இந்தியாவின் அறிவியல் விழிப்புணர்வுக்கு வித்திட்ட முதல் இந்தியப் பெண்மணி
பேராசிரியர் கே. ராஜு

இந்திய சமூகத்தின் அறிவியல் மறுமலர்ச்சி வரலாற்றில் ஸ்வர்ணகுமாரி தேவியின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பெயர். அறிவியல் தொடர்பான பொருட்களில் ஏராளமாக எழுதிக் குவித்த முதல் இந்தியப் பெண்மணி அவர். அறிவியல் மட்டுமல்ல, சமூக, அரசியல், கலாச்சாரத் துறைகளிலும் அவர் நிறைய எழுதினார். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த வங்காளத்தில் இருந்த சாதாரண மக்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக அவர் தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்த வங்க மொழியையே தேர்ந்தெடுத்துக் கொண்டார். அவருடைய எழுத்துகள் சாதாரணப் பெண்களையும் ஈர்த்தன. அக்கால நிலைமைகளைக் கணக்கில் கொண்டால், அறிவியலை சாதாரண மக்களிடம் கொண்டு சேர்க்கும் இயக்கத்தை முனைப்போடு அவர் நடத்தியதை பெரும் சாதனை என்றே கூறலாம்.

தேபேந்திரநாத் டாகூருக்கும் சாரதா தேவிக்கும் நான்காவது மகளாக ஸ்வர்ணகுமாரி 1855-ஆம் ஆண்டு பிறந்தார். அக்காலத்தில் சிறுமிகளைப் பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம் இல்லை. ஆனால் தேவேந்திரநாத் டாகூர் வீட்டிலேயே ஆசிரியர்களை வரவழைத்து சம்ஸ்கிருதம், ஆங்கிலம், இலக்கியம், இசை, ஓவியம், அறிவியல், மதம், அரசியல் ஞானம் ஆகிய பல்வேறு துறைகளில் ஸ்வர்ணகுமாரிக்குக் கற்பித்தல் நடைபெற ஏற்பாடு செய்தார். ஸ்வர்ணகுமாரிக்கு 13 வயதே ஆனபோது அக்கால வழக்கப்படி ஜானகிநாத் கோஷல் என்பவருடன் அவருக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டது. நாதியா மாவட்ட நிலவுடமையாளரான ஜானகிநாத் கோஷல் இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவனர்களில் ஒருவர். 1890-ல் ஸ்வர்ணகுமாரி காங்கிரசில் சேர்ந்து தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கினார்.

ஸ்வர்ணகுமாரி தன்னுடைய அறிவார்ந்த பயணத்தை ஒரு நாவல் ஆசிரியராகவும் கவிஞராகவும் தொடங்கினார். தீப்நிர்பன் என்ற அவரது முதல் நாவல் 1876-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. நவீன இந்திய இலக்கியத்தில் ஒரு பெண்ணால் எழுதப்பட்ட முதல் புனைவு நூல் அதுதான். அதன் பின் அவர் பல நாவல்களை எழுதினார். அவரது கவிதைத் தொகுப்புகளும் குறிப்பிடத்தகுந்தவையாக இருந்தன. சிறந்த எழுத்தாளராக விளங்கியது மட்டுமின்றி, பெண் விடுதலைக்கு அழுத்தம் கொடுத்த “பாரதி” என்ற மாதப் பத்திரிகைக்கு ஆசிரியராகவும் அவர் இருந்தார். அவரது முதல் அறிவியல் கட்டுரையான “புகர்பா” நான்கு பகுதிகளாக பாரதி இதழில் வெளிடப்பட்டது. அறிவியல் சார்ந்த கட்டுரைகளுக்கு முன்னுரிமை தருவதை பாரதி இதழ் ஆசிரியர் குழுவின் கொள்கையாகக் கொணர்ந்தார் ஸ்வர்ணகுமாரி. 1882-ல் அவர் எழுதிய அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு “பிரதிபி” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. அது பூமி தோன்றி வளர்ந்த கதை. கட்டுரைகளின் தலைப்புகளைப் பார்த்தாலே அத்தொகுப்பின் முற்போக்கான குணாம்சத்தைப் புரிந்து கொள்ள முடியும். “அறிவியல் கல்வி” என்பதுதான் முன்னுரையின் தலைப்பு . “பூமி-சூரியக் குடும்பத்தின் ஒரு உறுப்பினர்”.. “பூமியின் இயக்கங்கள்”, “பூமியின் தோற்றம்”, “பூமியின் மேற்பரப்பு”, “பூமிக்கு உள்ளே”, “பூமியின் எதிர்காலம்”… ஆகியவை பிற கட்டுரைத் தலைப்புகள். அறிவியல் கல்வி பற்றிய முன்னுரையில் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவுக்கு வருதல் (inductive), ஊகங்களின் அடிப்படையில் முடிவுக்கு வருதல் (deductive) ஆகிய அறிவியலின் இரு அம்சங்களைப் பற்றி விளக்கம் தந்ததோடு அவற்றைத் தெளிவாக வேறுபடுத்தியும் வரையறை செய்தார் ஸ்வர்ணகுமாரி. புவியியல், வானியல் ஆகிய பாடங்களின் சிக்கலான அம்சங்களை விளக்கும்போதுகூட ஸ்வர்ணகுமாரியின் சொல்லாடல் குழப்பமின்றி தெளிவாக இருக்கும். சூரியக் குடும்பம். பால் வெளி, பூமியின் தோற்றம் ஆகியவற்றின் சிக்கலான அம்சங்களை சாதாரண மக்களுக்கும் புரியும்படி விளக்க வரைபடங்களையும் எளிய விளக்கங்களையும் தெளிவான பகுப்பாய்வுகளையும் அவர் பயன்படுத்துவார். ஸ்வர்ணகுமாரியின் அறிவியல் ஞானம் பரவலாகவும் ஆழமாகவும் இருந்ததற்குக் காரணம் அவரது தீவிரமான வாசிப்புப் பழக்கம்தான்.

அந்தக் காலத்தில் அறிவியலின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டவர்களிடையே ஸ்வர்ணகுமாரியின் ஆளுமை புகழ்மிக்க உயரத்தில் இருந்தது. அறிவியலில் மட்டுமல்லாது, அரசியல் ஈடுபாட்டிலும் அவர் தன்னிகரற்றவராக விளங்கினார். 1905 வங்கப் பிரிவினையை எதிர்த்தும் அந்நியப் பொருட்களைப் புறக்கணிக்கக் கோரிய சுதேசி இயக்கத்திலும் அவர் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டார். பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார்.

ஸ்வர்ணகுமாரியின் பணியைப் பரிசீலித்தால் இலக்கிய உலகை மட்டுமல்லாது, அறிவியல் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் அவர் செழுமைப்படுத்தியது புலனாகும். முறையான கல்வி பெறுவதில் அவருக்கிருந்த தடைகளையும் மீறி இந்தியாவில் அறிவியலை வளர்க்க அவர் ஆற்றிய பணிகள் அறிவியல் வரலாற்றில் அவருக்கு நிரந்தரமான ஒரு இடத்தைப் பெற்றுத் தந்துள்ளன. தேசத்தை நிர்மாணம் செய்த தலைவர்களில் ஒருவர் என தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் ஸ்வர்ணகுமாரிக்கு புகழாரம் சூட்டுகிறார். 1927-ல் கொல்கத்தா பல்கலைக்கழகம் அவருக்கு ஜகத்தரணி தங்க மெடல் அளித்துக் கௌரவித்தது.

இந்திய மறுமலர்ச்சி யுகத்தின் முன்னணி சீர்திருத்தவாதிகளில் ஒருவராக ஸ்வர்ணகுமாரி போற்றப்படுகிறார் என்பதை இன்றைய இளைஞர்கள் கவனத்தில் கொள்வார்களாக!
              (உதவிய கட்டுரை : நவம்பர் 2017 ட்ரீம் 2047 இதழில் டாக்டர் ராகேஷ் குமார் டுபே எழுதிய கட்டுரை)

News

Read Previous

புள்ளிவிவரம் மாறுமா?

Read Next

நான்காம் தோட்டா

Leave a Reply

Your email address will not be published.