நான்காம் தோட்டா

Vinkmag ad

நான்காம் தோட்டா 

: சி.சரவணகார்த்திகேயன்
பாதுகாப்புடன் வாழ விரும்புபவர்கள், உயிர்வாழவே உரிமையற்றவர்கள்.”

பொக்கை வாய் அவிழ்த்துப் புன்னகை உதிர்த்தார் காந்தி. எதிராளியை வாதிட முடியாமற்செய்யும் புன்னகை; துப்பாக்கியுடன் வரும் ஒருவனை, தயங்கச்செய்யும் புன்னகை.

டெல்லி டி.ஐ.ஜி-யும், காந்தியின் உதவியாளர் கல்யாணமும் பதிலற்று நின்றிருந்தார்கள்.

நேற்று போலீஸ் சூப்பரின்டெண்டென்ட், காந்திக்குப் பாதுகாப்பு வழங்குவதைப் பற்றிப் பேசிச் சென்றிருந்தார். காந்திக்கு அதில் விருப்பமில்லை. இது இரண்டாவது முயற்சி.

ஏற்கெனவே அல்புகர்க் சாலையில் அமைந்துள்ள‌ அந்த‌ பிர்லா இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள‌து. போலீஸ்காரர்கள் சீருடையின்றி ஆங்காங்கே திரிகிறார்கள் என்பதை காந்தி கவனித்தே இருந்தார். சந்தேகத்துக்கு இடம்கொடுக்கும் நபர்களை நிறுத்தி விசாரிக்கிறார்கள். எல்லாம் உள்துறை அமைச்சர் சர்தார் படேலின் ஏற்பாடு.

சென்ற வாரம் அங்கு பிரார்த்தனையின் போது நிகழ்ந்த குண்டுவெடிப்புக்குப் பிறகுதான் இந்த‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கை. நல்லவேளையாக உயிர்ச்சேதம் ஏதுமில்லை. சுவர் மட்டும் சேதாரம் ஆகியிருந்தது. பஞ்சாபி அகதி ஒருவன், காந்தியின் மீது சினமுற்று அதைச் செய்திருந்தான். போலீஸ், அவனைத் துருவிக் கொண்டிருக்கிறது.

காந்தி சொன்னார், “அந்தப் பையனைத் துன்புறுத்தக் கூடாது. உண்மையில், நாம் அவன் மீது பரிதாபப்பட வேண்டும். அவன் தவறான வழியில் செலுத்தப் பட்டுவிட்டான், அவ்வளவுதான்.”

“பிர்லா பவனுக்கு வருபவர்களைச் சோதனையிட வேண்டும்’’ என டி.ஐ.ஜி கோரினார்.

“அதைச் செய்வதற்குப் பதில் பிரார்த்தனைக் கூட்டங்களையே நிறுத்திவிடலாமே!”
“…”
“என் வாழ்க்கை கடவுளின் கைகளில் இருக்கிறது. நான் சாக வேண்டும் என்றாகிவிட்டால், எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலும் என்னைக் காப்பாற்ற முடியாது.”

*************
ந்திரா காந்தி விமானநிலையத்தின் 1சி டெர்மினலில் வந்திறங்கியபோது, நீண்ட நாள் பிரிந்திருந்த காதலன்போல் புதுடெல்லிக் குளிர், சபர்மதியை இறுகத் தழுவியது. சென்னையில் விமானம் ஏறிய வேளையில் தோழமை காட்டிய‌ ஸ்லீவ்லெஸ், தற்போது துரோகியாகியிருந்தது. மடித்து வைத்திருந்த‌ ஜெர்கினை அணிந்து கொண்டாள்.

யாரோ ஓர் ஆர்வக்கோளாறு ஆசாமி உச்ச நீதிமன்றத்தில் அளித்த‌ மனு, பத்திரிகைக்காரியான அவளை 1,760 கிமீ தூரம் இழுத்துவந்திருந்தது. காந்தியின் படுகொலையில், கோட்சே தவிர, இன்னொருவன் இருக்கிறான். அதனால் வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்பதுதான் அந்த ஆளின் வாதம். பரந்துவிரிந்த‌ இந்த தேசத்தின் பெரும்பாலான பிரஜைகள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், துரதிர்ஷ்டவசமாக சபர்மதியின் முதலாளி அதை அத்தனை சுலபமாக விடவில்லை.

`அரசியல்.காம்’ என்ற செய்தி வலைதளம் அது. பிரேக்கிங் நியூஸுக்கு அலையாமல் தரமான கட்டுரைகளையும் நேர்காணல்களையும் வெளியிடுகிறார்கள். ஓராண்டில் கணிசமாக வாசகர்கள் கூட, விளம்பர வருமானம்கொண்டே இயங்க முடிந்தது.

எண்பதுகளின் இறுதியில் அரசியல் செய்திகளுக்கு எனத் தனிப்பத்திரிகை தொடங்கப்பட்டபோது அதில் சேர்ந்து இதழியல் தொழிலில் நுழைந்தவர் அவள் முதலாளி. பிறகு, பல பத்திரிகைகள் மாறி, இப்போது ரிட்டையர்மென்ட் காலத்தில் இந்த வலைதள முயற்சி.

சபர்மதி, விகடன் மாணவப் பத்திரிகையாளராகப் பயிற்சி பெற்றவள். பி.டெக் ஐடி முடித்துவிட்டு வேலை கிடைக்காம‌ல் இருந்தபோது, இந்தத் தளத்தில் நிருபர் பணியிடம் இருப்பது கேள்விப்பட்டு, விண்ணப்பித்துச் சேர்ந்துவிட்டாள். அது பெரிய நிறுவனம் எல்லாம் அல்ல. அவளைப்போல் இன்னும் மூன்று நிருபர்கள், லே அவுட் ஆர்டிஸ்ட் ஒருவர், கணக்கு வழக்கு பார்க்க ஒருவர், அலுவலக நிர்வாகத்துக்கு ஒரு பெண் என முதலாளியோடு சேர்த்தே மொத்தம் எட்டுப் பேர்தான்.  ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் தேனாம் பேட்டையிலுள்ள குறுக்கு  சந்து ஒன்றில் அலுவலகம் பிடித்திருந்தார்கள்.

ஐந்து இலக்கச் சம்பளம், மாதம் ஒருமுறை பேன்டலூனில் ஆடைகள் வாங்கவும், கிரீன் ட்ரெண்ட்ஸ் போகவும், ஹிக்கின்பாதம்ஸ் வேட்டைக்கும் சபர்மதிக்குப் போதுமானதாக இருந்தது.

“மதி, திஸ் இஸ் கெட்டிங் இன்ட்ரெஸ்டிங். ரொம்ப நாளா இவங்க சொல்லிட்டிருக்கிறதுதான். இப்ப அபெக்ஸ் கோர்ட்ல‌ பெட்டிஷன் போட்டுப் பெருசுபண்றாங்க. காந்தி அசாசினேஷன்ல இன்னொரு ஆளு இருந்தான், அவன் சுட்ட புல்லட்தான் அவரைப் பலிவாங்குச்சுன்னு. இதை விசாரிச்சு ஒரு ஸ்டோரி பண்ணலாம் நீ.”

“செய்றேன் சார். எப்போ வேணும்?”

“அதை நீதான் சொல்லணும்.”

“ஐடி ரெய்ட்ஸ் பத்தி ஆர்ட்டிகிள் பண்ணிட்டிருக்கேன். அது முடிஞ்சதும் தர்றேன்.”

புன்னகைத்தார்.

“மதி, நான் சொல்றது இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம். டெல்லி போய் விசாரிச்சு, தகவல்கள் சேகரிச்சு எழுதணும்.”

சபர்மதிக்கு, சிரிப்பு வந்துவிட்டது. மரியாதைநிமித்தமாக அதைக் கட்டுப்படுத்திக்கொண்டு, “சார், காந்தி செத்து எழுபது வருஷங்களாச்சு. இப்பப்போய் அங்கே என்ன கேட்கிறது? எங்கன்னு பார்க்கிறது? யாரை விசாரிக்கிறது? அப்ப‌ விசாரிச்சவங்களும், தீர்ப்பு கொடுத்தவங்களும்கூட இப்ப உயிரோடு இருக்கப்போறதில்லை.”

“பத்திரிகையாளன் நினைச்சா எல்லாத்தையும் தோண்டலாம்.”

“போலீஸைவிடவா?”

“நிச்சயமா. காரணம், பத்திரிகைக்காரன்கிட்ட முக்கியமா இருக்கிற ஒரு விஷயம் போலீஸ்காரன்கிட்ட இல்லை. க்யூரியாசிட்டி.”

“ஆனா, இந்த விஷயத்துல இது வெட்டிவேலை சார்.”

“எப்பவாவது நான் சொல்றதைக் கேட்டிருக்கியா நீ?’’

“சேச்சே, அப்படியில்லை சார். இது இன்டர்நெட் யுகம். எல்லாத் தகவல்களும் விரல்நுனியில் வந்து விழுது. அதை வெச்சே கனமான கட்டுரை ஒண்ணு எழுதிட முடியும். ஏற்கெனவே நிறைய செஞ்சுட்டாங்க. நான் புதுசா என்ன கண்டு பிடிக்கப்போறேன்?’’

“காந்தி கொலையைப் பற்றி காந்தியே எழுதியிருக்க முடியாது. அப்படி அவரே எழுதியிருந்தாவேணா, அதை ஆதாரமா எடுக்கலாம். இன்டர்நெட்ல‌ தேடிப் பார்க்கிறியா?”

“சார், டெல்லி போனா மட்டும் என்ன காந்தியேவா என்கிட்ட பேசிட‌ப்போறார்?”

“இந்த ஜெனரேஷனே டெஸ்க்டாப் ஜர்னலிசத்தில் சுகம் கண்டுருச்சு. டேபிள்லயே எல்லாம் முடியணும். ஃபீல்டுல இறங்கவே முடை. நோகாம நுங்கு திங்கணும்.”

சபர்மதி ஏதும் பேசவில்லை. பேசித் தீரும் முரண் எதுவுமில்லை, வளரவே செய்யும்.

“சரி, நாளை காலைக்குள் உன் டெசிஷனைச் சொல்லு. போக வர ஃப்ளைட் டிக்கெட் உண்டு. ஸ்டார் ஹோட்டலில் ரெண்டு நைட்டுக்கு ஸ்டே பண்ண ஏற்பாடு பண்றேன். உனக்கு இன்ட்ரஸ்ட் இல்லைன்னா ஜோசப்பையோ செந்திலையோ அனுப்புவேன். நீ கொஞ்சம் சென்சிபிள்னு நினைச்சுத்தான் உன்னை இதுக்கு செலெக்ட் பண்ணினேன்.”

சபர்மதிக்கு, உண்மையில் இதில் விருப்பமே இல்லை. அவர் சொல்லும் விஷயங்கள் எல்லாமே இன்று இணையத்தில் அல்லது புத்தகங்களில் தேடி எடுத்துவிடலாம், அல்லது சம்பந்தப்பட்டவர்களைத் தொலைபேசியில், மின்னஞ்சலில், தேவைப்பட்டால் ஸ்கைப்பில்கூடப் பிடித்துக் கேட்டுவிடலாம். இதற்காக‌ ஓர் ஆள் டெல்லி வரை செல்வது சிறுபிள்ளைத்தனம். அந்த நேரத்தில் உருப்படியான வேறு வேலைகள் செய்யலாம்.

எல்லாவற்றுக்குமேல் காந்தி, அவள் அரசியலுக்கு ரொம்ப‌ வேண்டியவரும் அல்லர்.

தாத்தா, சுதந்திரப் போராட்டத் தியாகி (கோவை சூலூர் விமானதளத்துக்குத் தீ வைத்த‌ வழக்கில் பெல்லாரி சிறைக்குச் சென்றவர்) என்பதால், காந்தியின் மீதான அபிமானத்தில் பேத்தி பிறந்தபோது `சபர்மதி’ எனப் பெயரிட்டது தவிர, காந்தியுடன் எந்தப் பிராப்தமுமற்ற அவள் இரவெல்லாம் யோசித்து, சம்மதம் சொன்னாள்.

ஃப்ளைட் டிக்கெட்டும் ஸ்டார் ஹோட்டலும் ஆசை காட்டின என்பது வேறு விஷயம்.

*************

News

Read Previous

ஸ்வர்ணகுமாரி தேவி – இந்தியாவின் அறிவியல் விழிப்புணர்வுக்கு வித்திட்ட முதல் இந்தியப் பெண்மணி

Read Next

தமிழகத்தின் கிராமியக் கலைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *