வாசித்தல்’ எனும் மந்திரம்…

Vinkmag ad
வாசித்தல் என்பது நம்மை புதிய உலகிற்கு இட்டு செல்லும் ஓர் மந்திரம். இன்றைய உலகில் எந்த மூலையில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறிய ஆயிரம் வழிகள் வந்துவிட்டது. செல்போன் மூலம் விரல் நுனிக்கே வந்துவிட்டது. பார்த்தல் மற்றும் கேட்பது மூலமே பல விஷயங்களை அறிய முடிகிறது, இதில் நமது அறிவுக்கோ சிந்தனைக்கோ வேலையில்லை. எல்லாம் ரெடிமேடாக இருக்கிறது. ஊடகங்கள் மூலம் தகவல் பெறுவது என்பது நாம் வெறும் பார்வையாளராக இருக்க மட்டுமே உதவும். இது பிறர் சொல்வதை கேட்டு நடப்பது மாதிரி தான்.

ஆனால் முன்னோர்கள் வரலாறு, தேசத்தின் வரலாறு, புதிய படைப்புகள் பற்றி படிப்பது என்பது நமது சிந்தனையை தூண்டி புதிய சிந்தனைகள், புதிய படைப்புகள் உருவாக உதவுகிறது. வாசிப்பதால் நமது சிந்தனையை தூண்டி புதிய படைப்புகள் உருவாக்க உதவுகிறது. எனவே தான் வாசிப்பு புதிய உலகத்திற்கு நம்மை இட்டு செல்லும் மந்திரம் ஆகும். வாசிப்பு என்பது தெரியாததை தெரிந்து கொள்வதற்கும், தெளிய வைக்கவும், உற்சாகத்திற்கும், பொழுது போக்கவும், அறிவை வளர்க்கவும் உதவும் கருவி என்றால் மிகையாகாது.
நம் முன்னோர்களின் வரலாற்றையும், பண்பாட்டையும், கலாசாரத்தையும் முழுவதுமாக அறிவது மற்றும் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை படிப்பதின் மூலம் நம்பிக்கை, ஆணவம், காதல், தந்திரம், அன்பு, கடமை இப்படி வாழ்க்கையில் உள்ள கூறுகள் அத்தனையும் நமக்கு காட்டுகிறது. இவைகள் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பயன்பட கூடிய படிப்பினை காட்டுகிறது. விஞ்ஞானம் வளராத காலத்தில் நாம் எப்படி இருந்தோம் வாழ்ந்தோம் என்பதை அறிய நம்மிடம் வாசிக்கும் பழக்கம் இருத்தல் வேண்டும்.
நாம் முன்னேறி வந்து கொண்டே இருந்தாலும் முன்னே நடந்ததை திரும்பி பார்க்க புத்தகங்கள் உதவும் அதனால் தான் புத்தகம் வாசிக்கும் பழக்கம் வளரவேண்டும்.
இன்றைய ஊடகங்கள் கால்பந்தாட்டம், டென்னிஸ், கிரிக்கெட், திரைப்படம், நாடகம் போன்று வெகுஞன விருப்பங்களை காட்டுவதால் உயர்கல்வி நிகழ்ச்சிகள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே தான் இத்தகையவற்றை அறிவதற்கு புத்தகங்கள் உதவுகிறது.
தற்சமயம் வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருவது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.
வாசிப்பு என்பது கற்றவர்களுக்கு மட்டுமே உரியது. வாசித்தல் என்பது படித்தல், அறிதல் என்ற பொருளை தரும்.வாசிப்பதால் உலக வாழ்க்கை முறைகள், பயனுள்ள கருத்துக்கள் அறிந்து கொள்ள உதவுகிறது. ஒரு புத்தகத்தை ஆழ்ந்து படிக்கும் போதே நம்மையும் அந்த உலகத்திற்கே இட்டு செல்லும் உணர்வை உண்டாக்கும் வல்லமை கொண்டவை எழுத்துக்கள் தான். படிக்க படிக்க ஒரு மனிதனின் திறமைகள் மிகும். அவை அவனில் மாறுதலை தோற்றுவிக்கும்.
வாசிப்பு பழக்கம் அதிக விஷயங்கள் அறிந்து அதன் மூலம் ஆளுமை திறனை அதிகரிக்க உதவும், படைப்பாளியாக்கும். அனைத்துலகத்தை புரிந்து உலக சகோதரத்தும் வளர உதவும், புதிய கண்டுபிடிப்புகளை அறியவும் உருவாக்கவும் உதவும். விழிகள் நிகழ்காலத்தை அறிய உதவும் ஆனால் வாசிப்பு இறந்த காலம், எதிர்காலத்தையும் உணரும் திறம் பெற்றவை ஆகும். வாசிப்பு பல வகையாக பிரிக்கலாம்.
அவைகள் காலை செய்திதாள் வாசிப்பது, தேர்வில் வெற்றி பெற பாட நூல் வாசிப்பது, வேலை தேடுவோர் வேலை வாய்ப்பு செய்திகள் வாசிப்பது, வேலைவாய்ப்பு தேர்வுக்கு பொது அறிவு நூல்கள் வாசிப்பது, சொற்பொழிவாற்ற தலைப்பிற்கு தகுந்த செய்தி புத்தகம் வாசிப்பது, பயண நேரம் மற்றும் காத்திருக்கும் போதும் அலுவலக இடைநேரத்தில் கதை புத்தகம் வாசிப்பது, பொது அறிவு வளர்க்கவும் ஆய்வு கட்டுரைகள் எழுதவும் வாசித்தல் உதவுகிறது. வாசிக்க பழகுவோம் அதனால் நம்முள் திறமைகள் மிகும் அவை நம்மிடையே பெரிய மாறுதலை தோற்றுவிக்கும். வாசிப்போம் வளர்வோம்.

News

Read Previous

உச்சரிப்புக்கான இணையதளம்

Read Next

பெண்களை சக மனுஷியாக மதிக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published.