மூன்றாம் உலகப் போர் நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர் ஆற்றிய உரை

Vinkmag ad

நந்தவனத்தில் மல்லிகை – மருக்கொழுந்து – ரோஜா என மலர்கள் இருப்பதைப் போல
கதை, கற்பனை, அறிவியல் என பல்வேறு கூறுகளும் இணைந்து படிப்பதற்கு
பரவசத்தையும் இருள் போக்கும் வெளிச்சத்தையும் தரக்கூடியதாக அமைந்துள்ளது
மூன்றாம் உலகப் போர்!’கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய நூலினை வெளியிட்டு
தலைவர் கலைஞர் பெருமிதம்!

சென்னை, ஜூலை 14 –

கவிப்பேரரசு வைரமுத்துவின் மூன்றாம் உலகப் போர்’’ நூல் கதை, கற்பனை,
அறிவியல் என பல்வேறு கூறுகளும் இணைந்து படிப்பதற்கு பரவசத்தையும் இருள்
போக்கும் வெளிச்சத் தையும் தரக்கூடியதாக அமைந்துள்ளது என்று தலைவர்
கலைஞர் அவர்கள் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய நூலினை வெளியிட்டு
உரையாற்றும் போது பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் மூன்றாம் உலகப் போர்’’ நூல் வெளியீட்டு
விழா நேற்று மாலை சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் நூலினை வெளியிட்டு தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-

என் அருமைத் தம்பி கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய “மூன்றாம்  உலகப் போர்”
என்ற  இந்த நூலின்  முதல் படியைப் பெற்றுக்கொண்ட,  எழுத்து வேந்தர்,
அருமை நண்பர் ஜெயகாந்தன் அவர்களே,

வாழ்த்துரை வழங்கிய  தம்பி கலைஞானி கமல்ஹாசன் அவர்களே,

ஏற்புரையாற்ற இருக்கின்ற  இந்த  நூலின் ஆசிரியர், கவிப்பேரரசு  அன்புத்
தம்பி வைரமுத்து அவர்களே,

பெரியோர்களே, தாய்மார்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே,

கவிப்பேரரசு வைரமுத்து  எழுதிய நூல்களை யெல்லாம் அவர் என்னைக் கொண்டு
வெளியிடுவதும், அதை நான் முக்கியப் பணியாகக் கருதி, கலந்து கொள்வதும்
இது முதல் முறையல்ல.

“கருவாச்சி காவியம்” –  “பெய்யெனப் பெய்யும் மழை” –  “தமிழுக்கு நிறம்
உண்டு”  –  “தண்ணீர் தேசம்”   போன்ற  அவரது  படைப்புகளை  நான் வெளியிட்
டிருக்கிறேன்.

இந்த “நூல்”  புத்தகமாக வெளியிடுவதற்கு முன்பே “ஆனந்தவிகடன்”  இதழில்
தொடர் நாவலாக வெளிவந்த போதே, ஒவ்வொரு வாரமும் படித்துவிட்டு அவ்வப் போது
அதைப் பற்றி தம்பி வைரமுத்துவிடம் தொலை பேசியிலேயே என் கருத்துக்களைச்
சொல்லி யிருக்கிறேன்.  அதன் ஒட்டுமொத்த தொகுப்பினைத்தான் தற்போது வெளியிட
வுள்ளேன்.

தம்பி கவிப்பேரரசு  வைரமுத்து  அவர்கள் இந்த நூலில்  நிலம், நீர், காற்று
ஆகியவை  மாசு படுதலால் சுற்றுச் சூழலும் மாசுபட்டு,  விவசாயமும் கெட்டு,
மனித வாழ்க்கை எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு வருகிறது என்பதைப் பற்றி –
ஒரு கிராமத்துக் கதையோடு  பின்னிப் பிணைந்து  – அற்புதமான ஒரு
சித்திரமாகத் தீட்டியிருக் கிறார்.

நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம்  எனும்   ஐம்பெரும் பூதங்கள்
பற்றி   இப்போதல்ல  – சங்க காலந்தொட்டே நமது புலவர் பெருமக்கள்  பாடி
வைத்திருக்கிறார்கள்.

உதாரணமாக,

“மண்  திணிந்த  நிலனும்,

நிலம்  ஏந்திய  விசும்பும்,

விசும்பு தைவரு  வளியும்,

வளித்  தலைஇய  தீயும்,

முரணிய  நீரும்,  என்றாங்கு”

என்று   புறநூ ற்றுப் பாடலிலும்  —  அதைப் போல,“முப்பாழும்  பாழாய்
முதற் பாழுஞ்  சூனியமாய்

அப்பாழும்  பாழாய்”
என்று  பட்டினத்தார்  பாடலிலும்  —
தொடர்ந்து  தமிழ்  இலக்கியங்களில்  சூரியன்,
சூரியனைச் சூழ்ந்திருக்கும் கோளங்கள்,
ஐம்பெரும் பூதங்கள்  ஆகியவற்றைப் பற்றியெல்லாம்
சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றைப் படித்த தினால்
ஏற்பட்ட உந்துதலால்
உலகத்தின் தோற்றம்  –
ஐம்பெரும் பூதங்களிடையே  உள்ள உறவு, பகை  –
புள்ளினம்,  விலங்கு  ஆகியவற்றின் பெருக்கம் –

பரிணாம  வளர்ச்சியில்  குரங்கிலிருந்து  குதித்த மனிதன்  –
பற்றியெல்லாம்நான் “காலப் பேழையும் கவிதைச் சாவியும்”  என்ற  லில்
எழுதியிருக்கிறேன்.   அந்த நூலின்  முதல் பாடலிலேயே,

“வெளி!  வெளி!  வெளி!

யாரும் பார்க்காமல்  –

பார்க்க முடியாமல்

பார்த்திட  யாருமே  இல்லாமல்,

பரவிக் கிடக்கும் வெளி!

ஒளி வந்தது  முதலில் –

எந்தத் திசையில்?

தெரியாது   தெரியவே தெரியாது.

வந்த திசைக்குத் தான் வழங்கினோம் பெயரை!

வணங்குகிறோம் திசையை!

வெளியையும்  கண்டதில்லை

ஒளியையும் பார்த்ததில்லை

நாமே இல்லாத போது

நமக்கேது பார்க்கும் சக்தி?

பாழ் வெளியில் பற்பல ஒலிகள்!

பற்பல நேரங்களில்!

யாரும் கேட்காமல்

கேட்க முடியாமல்

கேட்க யாருமே இல்லாமல்!

பல கோடி இடிகள்

ஒரு கோடியில் இடித்திட

சிவப்புக் கோள்

நெருப்புப் பந்துகள்

சீறிப் பாய்ந்து

சிதறிப் பறந்தன.

ஒன்பது பத்து கோள் இருக்குமென்பார்

ஒன்றிரண்டு கூடவும் இருக்கலாம்.

உலகம், அவற்றில் ஒன்றென உற்பத்தியானது

கலகமும் பிறகே ஆரம்பமானது!

இது எதுவுமே அப்போது தெரியாது

எத்தனையோ கோடி ஆண்டு கழித்தே

தண்ணீர் கேட்டது தாகமெடுத்த உலகம்!

கண்ணீர் கொட்டியது ‘இல்லை’ என இயற்கை.

மழை அதுவென பெயர் மாற்றிச் சொல்லி

மன ஆறுதல் பெற்றது பூமி!

உடற் கொதிப்பை ஆற்றிக் கொண்டு

கடற் பரப்பாய் மழை நீரும் தேக்கியது.

நீர், நிலம், காற்று, விண்வெளி

நெருப்பு – ஐம்பெரும் பூதங்களிடையே

நித்தமும் பகையாம்   நிலையான உறவாம்.

முத்தமிடாமலே உயிரினம் புதுப் புது வரவாம்.

அதிலும் மாறுதல் அவற்றுள் மாறுதல்

புதிதாய்க் கண்டு புணர்வும் கொண்டு

புழு, பூச்சி, புள்ளினப் பெருக்கம்

பொல்லா விலங்குக் கூட்டம் –

பொறுமை நிறை வீட்டுப் பிராணிகள் கோட்டம்

பொலிவு மிகும் பரிணாம வளர்ச்சியில் நாட்டம்.

குரங்கிலிருந்துமெதுவாமெதுவாகுதித்த
மனிதர் நாம் –

அரங்கில் நின்று கொள்கைக் குரல் கொடுத் திடுவோம்

“உடைமை பொது – உரிமை பொது

உலகம் தனியார் சொத்து எனல் தீது!’’

என்று    குறிப்பிட்டுள்ளேன், அந்தப் புத்தகத்தில்!

காலப்பேழையும் கவிதைச் சாவியும்’’ என்ற எனது

நூலின் பரிணாம வளர்ச்சியாக  கருதுகிறேன்!

தம்பி கவிப்பேரரசு வைரமுத்து  அவர்கள்  எழுதி  இன்று   வெளிவரும்
“மூன்றாம்  உலகப் போர்”  என்ற  நூலை  –

“காலப்பேழையும்,  கவிதைச்சாவியும்”  என்ற  எனது  நூலின்  பரிணாம
வளர்ச்சியாகவே கருதுகிறேன்.

ஏனென்றால்  இந்த நூலில்  உலகம்  தோன்றியதற்குப்  பிறகு  ஏற்பட்ட  மனித
சமூக  மாறுதல்கள்  –  சுற்றுச் சூழலில்  மனிதன் ஏற்படுத்தி வரும்
தாக்கம்  –  அதன் எதிர் மறை விளைவுகள்  பற்றிய  அனைத்து  விவரங் களையும்
கருத்தாழத்தோடும், கற்போர் வியந்திடும் அறிவியல் விவரங்களோடும்,   கவிதை
நயத்தோடும்  தம்பி  வைரமுத்து அவர்கள்  வகுத்தும், தொகுத்தும்
வழங்கியிருப்பது     எண்ணியெண்ணி  இறும்பூது  எய்து வதற்கேற்றதாகும்.

இரண்டு உலகப் போர்கள் முடிந்து, 65 ஆண்டுகளுக்குப் பின்னர் “மூன்றாம்
உலகப் போர்”  என்ற   இந்த  நூலை,

தம்பி கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்  உருவாக்கி,அதை இங்கே வெளியிடச் செய்துள்ளார்.

சிறுபிழையினால் எரிந்ததுதா ஹிரோஷிமா – நாகசாகி!

இரண்டு உலகப் போர்கள்  –  முதலாம் உலகப் போரும், இரண்டாம் உலகப் போரும்  –
உலக நாடுகளுக்கிடையே  உருவான அணிகளா லும்,  அந்த அணிகளின் படைகளாலும்
நடத்தப் பட்டன.

முதல் உலகப் போர், 1914 முதல் 1918 வரை நான்காண்டுகளும்  -இரண்டாம் உலகப்
போர்,  1939 முதல்  1945 வரை  ஆறாண்டுகளும் –  நடைபெற்று உலகத்தையே
உலுக்கி எடுத்தன.

இரண்டாம் உலகப் போரில் தான்  ஹிரோஷிமா  மற்றும் நாகசாகி  நகரங்கள் மீது
அணுகுண்டுகள் வீசப்பட்டு பேரழிவுக்கு உள்ளாக்கப்பட்டன.

ஹிரோஷிமா  அழிந்ததற்கு சுவையான கதை ஒன்றைச் சொல்லுகிறார் நமது கவிப்பேரரசு!

“ஹிரோஷிமாவில்  அமெரிக்காவின் அலுமினியக் கோழிகள்  அக்கினி
முட்டையிடுவதற்கு முன்பு,  ஜப்பானியப் படைகள் தங்களிடம் சரண் அடைந்து
விட்டால்,  அணுகுண்டு எறிய மாட்டோம் என்றதாம் அமெரிக்கா.

“மோஹுயஅயீ சட் யஅயீ ” என்று அமெரிக்காவுக்கு தகவல் தரச் சொன்னது ஜப்பானிய
ராணுவத் தலைமை.   அந்த ஜப்பானிய சொற்களுக்கு “உங்கள் கோரிக்கையைப்
பரிசீலிக்கிறோம்” என்று அர்த்தம்.

ஆனால் நடந்தது என்ன?

அரைகுறை ஆங்கில அறிவு பெற்ற ஒருவன்,  “உங்கள் கோரிக்கையை நிராகரிக்கி
றோம்” என்று மொழி பெயர்த்து அனுப்பிவிட்டான்.

அந்தச் சிறு பிழையில் எரிந்ததுதான் ஹிரோஷிமா   அழிந்தது தான் நாகசாகி.

அதற்குப் பிறகு நாங்கள் அமெரிக்காவை வெறுத் தோம்   ஆங்கிலத்தை நேசித்தோம்.
சுவையான கதை – ஆனால் சோகமான முடிவு.

என்று  இஷிமுரா என்ற ஜப்பானிய கதாபாத்திரம் சொல்வதாக நம்முடைய
கவிப்பேரரசு  அமைத் துள்ளார், இந்த லில்!

முதல் உலகப் போர் முடிந்து, இருபதாண்டுகள் கழித்து,  இரண்டாம் உலகப் போர்
மூண்டது.

இப்போது தம்பி வைரமுத்து எழுதி வெளியிடும் “மூன்றாம் உலகப் போர்”  –
எப்போது தொடங்கியது   எப்போது முடிவுக்கு வரும்  என்று அறுதியிட்டுச்
சொல் வதற்கில்லை.  அவருடைய வார்த்தைகளில் சொல்வ தானால்

“மூன்றாம் உலகப் போர்”  –  “முகத்துக்கு முகம் பார்த்து மோதாத போர்
ஆயுதங்களை ஒளித்துக் கொண்டு நிகழ்த்தும் போர்   மனிதனுக்கும் இயற்கைக்கு
மான  போர்   இது மனித குலம் சந்தித்திராத  மோசமான முகமூடிப் போர்

புவி வெப்பமயமாதல்  –  உலகமயமாதல்  என்ற இரண்டு சக்திகளும்  வேளாண்மைக்கு
எதிராகத் தொடுத்திருக்கும் விஞ்ஞானப் போர்”  என்று  “மூன்றாம் உலகப்
போரின்” அடிப்படையை அலசுகிறார்  கவிஞர்.

“முதல் இரண்டு உலகப் போர்கள் முடிந்து விட்டன என்று  சரித்திரம்
அறிவித்து விட்டது.  ஆனால் மூன்றாம் உலகப் போர் தொடங்கி விட்டது என்பதை
அது இன்னும் அறிவிக்கவே இல்லை. அது கண்ணுக்குத் தெரியாத யுத்தம்
கைகுலுக்கிக் கொண்டே நடக்கும் யுத்தம்.   இது மனிதனுக்கும் மனிதனுக்கும்
மட்டுமல்ல   மனிதனுக்கும் இயற்கைக்குமான போர்.  மண்ணுக்கும்
விண்ணுக்குமான  போர் ”  என்று இப்போது நடந்து கொண்டிருக்கும்  போருக்கு
“மூன்றாம் உலகப் போர்” என்று பெயரிட்டுப்  பிரகடனப்படுத்துகிறார்  நமது
கவிஞர்.

நான் எழுதியதாக தொடக்கத்திலேயே குறிப்பிட்ட –  மனித  நாகரிகத்தின்
பரிணாம  வளர்ச்சி  வேளாண்மையிலிருந்தே தொடங்குகிறது.

வேளாண்மையே  கலாச்சாரத்தின் அடையாளம் தான்.   வேளாண்மையே மனித குல
வாழ்வாதாரத்திற்கு  ஆணி வேராக விளங்குவது –  அதனால் தான்  அய்யன்
திருவள்ளுவர்  –   “சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம் அத னால் உழந்தும் உழவே
தலை”  என்று  –   வேளாண்மையை  முதன்மைப்படுத்தினார்.

“உலகெங்கும் உணவுகள் மாறும்   உண்ணுதல் மாறாது   எல்லோருக்கும்  உணவு வேண்டும்.

உலகெங்கும்  இல்லங்கள் மாறும்   இருத்தல் மாறாது   எல்லோருக்கும்
வீடுகள் வேண்டும்.

உலகெங்கும்  உடைகள்  மாறும்   உடுத்தல்  மாறாது   எல்லோருக்கும்  ஆடைகள்
வேண்டும்”  என்று  கவிப்பேரரசு எழுதியிருக்கிறார்.

ஐ.நா.மன்றம் தந்த தகவல்

அண்மையில் ஐ.நா. மன்றம் தந்த  தகவல் ஒன்றைக் கூறுகிறேன்.

உலக அளவில் உற்பத்தியில் 3ல் ஒரு பங்கு உணவு வீண் ஆகிறது என்று ஐ.நா.
மன்றம் 26-6-2012 அன்று அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜி.20 நாடுகளின் மாநாடு நடந்தது.
அதையொட்டி சுற்றுச் சூழல் திட்ட அறிக்கையை ஐ.நா. மன்றம்  வெளியிட்
டுள்ளது.

அதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:

ஒவ்வொரு  ஆண்டும் உலகம் முழுவதும் தயாராகும் உணவுப் பொருட்களில் 3ல் ஒரு
பங்கு மனிதர்களால் பயன்படுத்தப்படாமலே வீணடிக்கப்படுகிறது.
போக்குவரத்தில் ஏற்படும் இழப்பில் ஒரு பகுதி வீணாகிறது. நுகர்வோர்
தெரிந்தே வீணாக்குவது மீதி.  வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில்
மட்டும் ஆண்டு தோறும், சாப்பிடக்கூடிய நிலையில் சுமார் 22.2 கோடி டன்
உணவு வீணடிக்கப்படுகிறது.

சுவீடனை சேர்ந்த புட் அண்ட் பயோ டெக்னாலஜி” (குடிடின யனே க்ஷ -கூந டடிபல)
கல்வி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் குழு இதற்கான ஆய்வை கடந்த ஆண்டில்
நடத்தியது.  அதன்படி, உணவு பொருட்கள் அவை உற்பத்தியாகும் விளை நிலைத்தில்
தொடங்கி, போக்குவரத்து, சேமிப்பு கிடங்கு, சந்தை எனத் தொடர்ந்து வீட்டின்
“டைனிங் டேபிள்” வரை வீணடிக்கப்படுகின்றன.  குறிப்பாக, நடுத்தர மற்றும்
உயர் வருமான பிரிவினர் அதிகமுள்ள நாடுகளில் உணவுகள் அதிக பட்சம்
வீணாகின்றன.  மாறாக, ஏழை நாடுகளில் நுகர்வோரின் கைக்கு வந்து சேரும்
முன்பே உணவில் ஒரு பகுதி வீணடிக் கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஆண்டுக்கு 130 கோடி டன் உணவு வீணாகிறது.

அமெரிக்கர்கள் மட்டும் உணவில் 25 சதவீதத்தை குப்பையில் எறிகின்றனர்.

ஐரோப்பா, அமெரிக்காவில் சராசரியாக ஒருவர் ஆண்டுக்கு 300 கிலோ
உணவை  வீணடிக்கிறார்.

இந்தியா  உட்பட  தெற்காசிய  நாடுகளில் இது 170 கிலோவாக உள்ளது.

உணவு,  உடை,  உறையுள்  ஆகிய  மூன்று அத்தி யாவசியத் தேவைகளுக்கும்  ஆதி
மூலமாய் விளங்குவது  வேளாண்மை.

இந்த வேளாண்மைக்கெதிராக தொடுக்கப்பட் டிருக்கும்  போர் தான்  “மூன்றாம்
உலகப் போர்”.

வேளாண்மை, நிலத்தைச்சார்ந்தது.   நிலம், மண்ணைச் சார்ந்தது.    மண்
என்பது ஓர் உயிரி.   அந்த உயிரி,  ரசாயன உரப் பயன்பாடும்,  பூச்சி
மருந்து பயன் பாடும்  அதிகரித்து  வருவதால்  கொஞ்சம் கொஞ்சமாகச்
செத்துக் கொண்டிருக்கிறது.

கவிஞரின்  மொழியில்,  மண்  மலடாகிப் போய்க் கொண்டிருக்கிறது.   அதனால்
விவசாயம் பாழாகிப்போகிறது   விளையும் உணவுப் பொருள் விஷமாகிப்போகிறது.

அந்த ரசாயன உரங்களும்,  பூச்சிகொல்லி மருந்துகளும் எப்படி உருவாயின?

கவிப்பேரரசு  நடந்து செல்லும்  பாதையில்  –  கடந்து  செல்லும்  வழியில்
–  அவர் கலந்து கொள்கிற இடம்  கவியரங்கம் ஆனாலும்  – கருத்தரங்கம்
ஆனாலும்  –  மக்கள்  வெள்ளம்   பெருக்கெடுக்கும்  மாமன்றம் ஆனா லும்  –
ற்றுக்கு  தொண் று  இடங்களி லாவது  ரசாயன  உரங்களும்,  பூச்சிக்கொல்லி
மருந்து களும்  எப்படி உருவாயின  என்ற  கேள்வியைக் கேட்டு, அதற்கு
விஞ்ஞான  ரீதியான விளக்கம் தர அவர் தவறியதே இல்லை.

இதோ கவிஞர்  மொழியிலேயே சொல்லுகிறேன் :

“உலகப் போர்களின்  எச்சம் தான்  இந்த உரங்கள்.   முதல் உலகப் போரில்  8
லட்சம் சிறைக் கைதிகளைக் கொல்ல  “அமோனியா” நச்சுப்புகை  பயன்படுத்தப்
பட்டது.  உலகப் போர் முடிந்ததும், அதுவே பூச்சிக் கொல்லி மருந்தாக புது
அவதாரம் எடுத்தது.

இரண்டாம் உலகப் போர் முடிந்ததில்  வெடிகுண் டுக்காரர்களின்  சந்தை
சரிந்தது.   வெடிகுண்டு தயாரிப் பில் மிச்சப்பட்ட  அமோனியா  –  சூப்பர்
பாஸ்பேட்  போன்ற வெடி உப்புகளை  எங்கு கொட்டித் தொலைப்பது?

அல்லது  இந்தக் கழிவுகளை எப்படி சந்தைப் படுத்துவது?

வியாபார  மூளைகளில்  கந்தகம்  எரிந்தது.   எந்த உலோக உப்புகள்  மனித
சந்தையை இழந்து விட்ட னவோ,  அதே உலோக உப்புகளுக்கு  ஒரு  மண் சந்தை
தயாரிக்கப் பட்டது.   அவை  ரசாயன உரங்களாய்,  ரசவாதம் பெற்றன.

மனிதனைக் கொன்ற மிச்சம், மண்ணைக் கொன்றது.  இது தான் பூச்சி மருந்தும்,
உரமும் பிறந்த கதை”  என்கிறார் நம்முடைய கவிப்பேரரசு.

இப்படித் தான்,  இரண்டு உலகப் போர்களின் எச்சமாகத் தொடங்கி  –  மூன்றாம்
உலகப் போர் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

மண்ணின் உயிர்த் தன்மை,  ரசாயன உரத்தால்  எப்படி அழிந்து வருகிறது
என்பதை,  “மண் டவ ன்று கொடுப்ப தெல்லாம்  உள்ளிருக்கும் உயிர்த்
தன்மையால் தான்.   அந்த உயிர்த் தன்மை தான் கொல்லப்படுகிறது.  ஜான்
ஜீவன்ஸ்  என்ற பிரெஞ்ச் விஞ்ஞானியை  இந்தச் சத்தியத்தை நிறுவ சாட்சிக்கு
அழைக்கிறேன்.   அமெரிக் காவில் ரசாயன விவசாயம்,  ஆறு கிலோ மண்ணின்
உயிர்த் தன்மையைக் கொன்று விட்டுத் தான்  ஒரு கிலோ விளைவிக்கிறதாம்.
இந்தியாவில்  12 கிலோ மண்ணின்  உயிர்த் தன்மை கொல்லப்பட்ட பிறகு தான்,
ஒரு கிலோ விளைகிறதாம்.

சீனாவில்  18 கிலோ மண்ணின் உயிர்த் தன்மையைத் தின்று விட்டுத் தான், ஒரு
கிலோ உணவு விளை கிறதாம்”

என்றும் விளக்கியுள்ளார் கவிஞர்.

விஞ்ஞான ரீதியானமூன்றாம் உலகப்போர்!

வேளாண்மைக்கு எதிரான  விஞ்ஞானப் போர்  ஒரு புறம்.  சுற்றுச் சூழல்
பெருமளவுக்கு மாசடைந்து,  ஓசோன் கூரை கிழிந்து வருகிறது.  அதனால் புவி
வெப்பம் கூடிக் கொண்டே போகிறது.

ஓசோன் கூரையைப் பற்றி, கவிஞர் எழுதுகிறார்.

“பூமியின் சிறப்புக் காப்புறுதிகளுள்  ஒன்று,  இயற்கை உச்சத்தில் கட்டிக்
கொடுத்திருக்கும் ஓசோன் கூரை. காற்று  மண்டலத்திற்கு  மொத்தம் மூன்று
அடுக்கு. பூமிக்கு மேலே  12 கிலோ மீட்டர் உயரம் வரை உள்ளது முதல்
அடுக்கு,  இதில் தான் இருக்கிறது  பூமிக்கான காற்றின் 90 விழுக்காடு.
முதல் அடுக்கின் முடிவில் தொடங்கி,  50 கிலோ மீட்டர் உயரம் வரை இருப்பது,
இரண்டாம் அடுக்கு   இதில் ஓரளவு வரை தான் இருக்கும் உயிர்க் காற்று.
60 கிலோ மீட்டருக்கு மேலே இருப்பது மூன்றாம் அடுக்கு   அது காற்றற்ற
வெற்று அடுக்கு.   ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்திற்கு மேலே இருப்பது வெட்ட
வெளி  –   ஒளியும், ஒலியுமற்ற பாழ் வெளி.   விண்கலங்களும்,  செயற்கை கோள்
களும்  விடப்படுவது  அங்கே தான்.   இந்த நான்கு அடுக்கு களிலும்,
பூமிக்கு முக்கியமானது, பத்து முதல்  நாற்பது கிலோ மீட்டர் உயரம் வரை
அமைந்திருக்கும் ஓசோன் கூரை தான்.

அந்தக் கூரையைத் தான்  இன்று கிழித்தெறிந்து விட்டான்  இந்த ற்றாண்டு
தொழிற்புரட்சி மனிதன்.   இதுவரை 29 மில்லியன்  சதுரக் கிலோ மீட்டருக்கு
கிழிந்து கிடக்கிறது ஓசோன் கூரை.

புவி வெப்பத்தால்  ஒரு  மணி நேரத்திற்கு ஓர் உயிரினும்  அழிந்து கொண்டே
இருக்கிறது.  இன்னும் மூன்றே மூன்று டிகிரி  வெப்பம் கூடினால் போதும்
உலகின்  33 விழுக்காடு விலங்கினங்கள்  அழிந்து போகும் என்கிறார்கள்
ஆய்வாளர்கள்.

புவி  வெப்பம்  கூடிக் கொண்டே  போவதால்,  அது உலகத்தை கொஞ்சம் கொஞ்சமாக
அரித்துக் கொண்டிருக்கிறது.   இது  மற்றொரு புறத்தில் நடைபெற்றுக்
கொண்டிருக்கும் மூன்றாம் உலகப் போர்.

விஞ்ஞான ரீதியான இந்த மூன்றாம் உலகப் போரை,  அப்படியே  அறிவியல்
உண்மைகளோடும், புள்ளி விவரங்களோடும்  சொன்னால் புரிந்து கொள்வது  சற்றுக்
கடினம் என்பதற்காகவோ  –  கதை ஒன்றோடு இணைத்தும்  கலந்தும் சொன்னால்,
சுவையாக இருக்கும் என்பதற்காகவோ  –   மண் வாசனை மிகுந்த  கதை ஒன்றையும்,
மாத்தமிழால் விளைந்த  கற்பனை யையும்  சேர்த்து

படிக்கப் படிக்க நாவினிக்கும் படைப்பு!

நந்தவனத்தில்  பறித்த மலர்களைத் தொடுத்து,  கதம்பம் ஆக்குவதைப் போல
படிக்கப் படிக்க நாவினிக்கும்  படைப்பு ஒன்றை நமக்கு அளித்துள்ளார்.

நந்தவனத்தில்  மல்லிகையும்  இருக்கும்   மருக் கொழுந்தும் இருக்கும்
ரோஜாவும் இருக்கும்   இன்னபிற  மலர்களும்  இருக்கும்.   அதைப் போல
கவிஞரின்  இந்த “மூன்றாம் உலகப் போரில்”,  கதை, கற்பனை, அறிவியல்  என
பல்வேறு கூறுகளும்  இணைந்து  படிப்பதற்கு பரவசத்தையும்,   எண்ணிப்
பார்ப்பதற்கு  இருள்போக்கும் வெளிச்சத்தையும்  தரவல்லதாக அமைந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள அட்டணம்பட்டி  என்னும் ஊர் தான் கதை நிகழும் இடம்.

கருத்தமாயி,  சிட்டம்மா,  முத்துமணி,  சின்னப் பாண்டி  ஆகியோர் தான்
முக்கிய கதா பாத்திரங்கள்.

இவர்களுக்கிடையே  ஜப்பானிய இயற்கை விவசாயி மகன்  இஷிமுரா

அமெரிக்கச் சுற்றுச்சூழல் பட்டதாரி  எமிலி   என்ற  சிறப்பான இரண்டு
கதாபாத்திரங்கள்.
கவிஞர் வைரமுத்துவும்  கதையில் ஒரு பாத்திரமாய் வருகிறார்.

அந்தப் பாத்திரம்  சொல்லும்  மேற்கு தொடர்ச்சி மலை பற்றிய  விளக்கங்கள்
எனது  நெஞ்சில் இப்போதும் நிறைந்திருக்கின்றன.

மேற்கு தொடர்ச்சி மலை பற்றி கவிஞர் சொல்கிறார்.

“இந்தியாவின்  60 சதவிகிதத்தை நனைக்கும்  நதிகள்  மேற்கு  தொடர்ச்சி
மலையிலே தான் ஊற்றெடுக் கின்றன.

நர்மதா,  தபதி   நதிகளை குஜராத்துக்குள் இறக்கி விட்டது  இந்த மலை தான்.

கிருஷ்ணா, கோதாவரியை  ஆந்திரப் பிரதேசத் துக்குள் அனுப்புவதும் இந்த மலை தான்.

தமிழ்நாட்டுக்குள்  காவிரியாய்ப் பெருக் கெடுக்கும்  கபினியை
கர்நாடகத்துக்கு  டவ ன்று  புறந்தருவதும்  இந்த மலை தான்.

தமிழ்நாட்டுக்குள்  அமராவதியாய்  வழியும்,  நொய் யாற்றையும்,  வைகையில்
கலக்கும் பெரியாற்றையும்,  கேரளத்தில்  உற்பத்தி செய்வதும்  இந்த மலை
தான்.

தமிழ்நாட்டுக்குள்  பிறந்து,  தமிழ்நாட்டுக்குள்  மட்டுமே  பரவிப் பாயும்
தாமிரபரணியைத் தருவதும்  இந்த மேற்கு மலைத் தொடர் தான்.  ஆனால்,  கங்கா,
யமுனா  நதிகளைப்  போல் இவை  கவனிக்கப் படவில்லை.

அசோக சக்கரவர்த்திக்குள்ளும்,  அக்பருக்குள்ளும்  எங்கள்  சேர, சோழ,
பாண்டியர்கள் மறைக்கப் பட்டது போல்,  இமயமலையின் இடுக்குகளில்  எங்கள்
மேற்கு தொடர்ச்சி மலை புதைக்கப்பட்டு விட்டது.

அரபிக் கடல் காற்றைத் தடுத்து,  மேகத்தின் மடியில் செலுத்தி,  மழை
கறப்பது  இந்த மலை தான்.

இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் 5000 வகை தாவரங்கள்,  520 வகை பறவைகள்,
130 வகை பா ட் டிகள்,  65  வகை  பாம்புகள்,  160 வகை டவ ருயிரிகள்
உயிர்த் தொடர்ச்சியாய்  வாழ்ந்து கொண்டே இருக்கின்றன.”

மேற்கு  தொடர்ச்சி மலை குறித்த  கவிஞரின் ஏக்கத்தைப் போக்கிடும் வகையிலோ
என்னவோ  –  இயற்கைப் புதையல்களை  தன்னகத்தே  கொண்டுள்ள  மேற்கு தொடர்ச்சி
மலை,  மழைக்கு ஆதாரமாக இருக்கும்   –  பல்லுயிர் இனக் காப்பகமாகத்
திகழும் மேற்கு தொடர்ச்சி மலை,  உலகத்தின் மிகச் சிறந்த  பாரம்பரிய
இடமாக,  ஐக்கிய நாடுகள் சபையின்  கல்வி, விஞ்ஞான, கலாச்சார அமைப்பால்
(யுனெஸ்கோ)  சென்ற வாரம்  அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தம்பி கவிப்பேரரசு வைரமுத்து இந்தக் கதையில்

இயந்திரங்களின் கைகளுக்குப் போகும் விவசாயம்,

பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு.

சுருங்கி வரும் விளை நிலம்

அருகி வரும் விவசாயம்

குறைந்து  வரும்  உற்பத்தி

அட்டணம்பட்டியை  மாதிரிக் கிராமமாக மாற்றும்  முயற்சி ஆகியவற்றைப்
பற்றியெல்லாம் கதையின் போக்கில் அழகாக விவரித்துள்ளார்.

மாதிரி கிராமமாக  மாற்ற  ஆரம்ப முயற்சிகள் தோல்வி கண்ட போது,
சின்னப்பாண்டியிடம்  இஷிமுரா  சொன்ன சொற்கள்  அனைத்தும், கவிப் பேரரசு
வைர முத்துவால் எழுதப்பட்ட

தங்கத் துகள்கள்.

அவை  இதோ :-

“தோல்வி  கண்டு  கலங்காதே.  நீ விதைத்திருக்கிறாய்.   தோல்வியின்
விதையிலிருந்து  வெற்றியின் விளைச்சல்.    நீ  மனம் கிழிந்து
கிடக்கிறாய்.   விதையின்  கிழிசல் என்பது  அழிவல்ல   முளைப்பின் முதல்
முயற்சி.  கடவுள்  என் முன் பிரசன்னமானால், நான் வெற்றிகளை யாசிக்க
மாட்டேன்.   கை நிறைய தோல்விகளையும், அவற்றில் மீண்டுவரும் வழிகளையும்
தந்தருளும்  என்று  மன்றாடுவேன்.   தோல்வியை நேசிக்கக் கற்றுக் கொள்ள
வேண்டும் மனிதர்கள்.  (எனக்காகவே எழுதப்பட்டது போல் இருக்கிறது)
(கைதட்டல்)  கன்னம் கிள்ளி சொல்லிக் கொடுப்பது  வெற்றி   கன்னத்தில்
அடித்துச் சொல்லிக்  கொடுப்பது தோல்வி”  (எவ்வளவு அழகான வரிகள்,
பாருங்கள்)

சின்னப்பாண்டியின்  லட்சியம் நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.

எமிலி  –  இஷிமுரா  இருவரிடமும்  சின்னப் பாண்டி,  “பாலித்தீன் இல்லாத
கிராமம்  என் குறைந்த பட்ச லட்சியம்   கார்பன் இல்லாத கிராமம்  என்
உயர்ந்த பட்ச லட்சியம்”  என்று சொன்னது   இன்றைய நிலையில்  ஒவ்வொரு
ஊரிலும்  ஒருவராவது  மேற்கொள்ள வேண்டிய சபதம்.

வனத்துறையில் வேலை பார்த்துக் கொண்டே,  வனச் செல்வங்களைக் கொள்ளை
அடித்திடும் முத்துமணி யின்  கொடுமையான நடவடிக்கைகள்  –  எமிலியின்
அழைப்பை யேற்ற  சின்னப் பாண்டி வெளிநாடு செல்ல முயற்சி.  முறிந்து போன
அந்த முயற்சி.    நிலத்தைப் பறிக்க வந்த  தன் மூத்த மகன் முத்து மணியோடு
கருத்தமாயி மோதல்.   கொலையில் முடிந்த மோதல்   – இறுதிக் கட்டத்தில்
சிட்டம்மா,  தனது  கணவன் கருத்தமாயியுடன்  பேசி,  தனது  சபதத்தை
முடித்துக் கொள்ளுதல்  என்று  கதை நிகழ்வுகளை  மனித உறவுகளின் மேல்
அடுக்கடுக்காக எழுப்பி   ஏராளமான  செய்திகளை  –  எச்சரிக்கைகளை  இந்த
லின் மூலம் தம்பி கவிப்பேரரசு   இந்நாட்டுக்கு வழங்கியுள்ளார்.

திடுக்கிட வைக்கும் செய்திகள்   சிந்தையைக் குலுக்கும்  உண்மைகள்    ஆதார
பூர்வமான  அறிவியல்  சான்றுகள்.   அனைத்தும்  கட்டுரை  –  கதை  –
கவிதைக் கலப்பில்  கண்கொள்ளாக் காட்சிகளாய் விரிந்து,  நம் நெஞ்சை
நிரப்புகின்றன.

சின்னப்பாண்டியின்  முயற்சியால்  அட்டணம் பட்டி  மாதிரி கிராமமாக  மாறி வருகிறது.

எப்படி?

“கவுண்டமாரு  வீட்டுவாசலத்  தேவமாரு  வீட்டுப் பிள்ள  பெருக்குது
தேவமாரு வீட்டு  வாசலப் பிள்ளை மாரு வீட்டுப் பிள்ளை  பெருக்குது.
தாழ்த்தப்பட்டவக  வீட்டு வாசல நாயக்கமாரு  பய  பெருக்கிறான்.  நாயக்கமாரு
வீட்டு வாசல ராவுத்தர் வீட்டுப் பய பெருக்கிறான்.  ராவுத்தமாரு  வீட்டு
வாசல  செட்டியார் வீட்டுப் பிள்ள பெருக்குது” (இது தான்  கடந்த கால கழக
ஆட்சியில் அமைக்கப்பட்ட சமத்துவபுரத்தின் தத்துவம்)

(கைதட்டல்)

“இந்த நாடே இப்படி மாறிப் போனா  நல்லா யிருக்குமில்ல”.

பஞ்சாயத்துல  போயிக் கெஞ்சிக் கூத்தாடி  வீட்டு வீட்டுக்கு ஒரு குப்பை
வாளி  கொடுக்கச் சொன்னான் சின்னப் பாண்டி.

இரவு நேரத்தில்  வரப்புத் தகராறு –  வாய்த் தகராறு நடப்பதை ஒழிக்க,
அதுவரைக்கும்  அங்கே எரியாமல் இருந்த மின் விளக்குகளை,  எரிய  வைத்தான்
சின்னப்பாண்டி.

சின்னப் பாண்டியின்  சீரிய முயற்சிகளைப் பார்த்து  எமிலி  சொன்னாள் :

“ஒரு தனி மனிதனால்  முடியாது ஊரைத் துடைத்து வைக்க.  ஒரு புலிக்குட்டி
தன் நாக்கால் தன்னை நக்கித் ய்மைப்படுத்திக் கொள்வதைப் போல ஓர் ஊர்
தன்னைத் தானே சுத்திகரித்துக் கொள்ள வேண்டும்”

“மக்களின் பங்களிப்பு இல்லாத  எந்தப் பணியும் மக்களைச் சேருவதில்லை.
அரசு நிதியே மக்கள் நிதி தான்.   பூமியிலிருந்து  புறப்பட்ட மேகம்
பூமிக்கே மழை யாகி வருவதுமாதிரி மக்களுக்கே  திரும்ப வேண்டும்   மக்கள்
பணம்.   அதற்கு மக்களைத் திரட்டு   பொது மானம் காக்கத் தனி மானம் தியாகம்
செய்”

அட்டணம்பட்டியைப் போல  ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சின்னப்பாண்டி வேண்டும்
ஊரின் ஒத்துழைப்பும் வேண்டும்  என்ற ஆசையும்,  அதை நிறைவேற்றிடும்
துடிப்பும்  எல்லோருக்கும் வேண்டும்.

“புவிச்சூடு  ஆண்டுக்கு  3 லட்சம் மக்களைக் கொன்று விட்டுப் போகிறது.

85 கோடி மக்கள் ஊட்டச் சத்தில்லாமல் வாழ் கிறார்கள்  உயிரைப் பிடித்துக் கொண்டு!

உலகத்தின் பத்துக் கோடி மக்கள் கடல் மட்டத்தி லிருந்து  மூன்றடி
உயரத்தில் தான் வாழ்கிறார்கள்.

இப்போதுள்ள கடல் மட்டம்  மூன்றடி கூடினால் வங்க தேசத்தில்  ஏழு கோடி
மக்கள் இடம் பெயர நேரிடும்.   புவிச் சூடு கட்டுப்படுத்தப் படாவிட்டால்
இது நேரவே நேரும்.”

என்று கவிஞர்  புவிச் சூடு பற்றி அறிவியல் ரீதியாக  அள்ளித் தரும்
விளக்கம்  நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது.

புவிச்சூடு  நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது என்றால்   எமிலி,
இஷிமுரா  சந்தித்த  பைசா இல்லாத  பரதேசியின்  பாடல்  அவர்களைப் போலவே
நம்மை யும்  ஆச்சரியப்பட வைக்கிறது.

“பைசா இல்லாத  பரதேசி  –  நான்

பன்னண்டு  மாசமும்  சுகவாசி.

எல்லார்க்கும்  ஆசையெல்லாம்

தென்னாட்டு  மலையளவு

எனக்குள்ள  ஆசையெல்லாம்

திருவோட்டுக் குழியளவு

க்கத்தை  வித்து வித்து

சொத்து  பத்து  வாங்குறியே

சொத்து பத்து  செலவழிச்சுத்

க்கத்த வாங்குவியா?

சொத்துபத்து வித்துப்புட்டேன்

சொந்த பந்தம் விட்டுப்புட்டேன்

எச்சித் திருவோட்ட

எரிய மனம் கூடலையே

கருவோடு  பிறக்கையிலே

கையோடு  பொருளுமில்ல

திருவோடு  துறக்காம

நானொண்ணும்   துறவியில்ல”

ஒரு பரதேசியின்  பாட்டில் இத்துணை தத்துவ விலாசமா?   ஒரு பண்டாரப்
பாட்டில் இத்துணை அறிவின் விசாலமா?   திருவோடு கூட  உடைக்கப்பட வேண்டிய
உடைமையா?  அந்தத் தத்துவ அதிர்ச்சி யிலிருந்து  விடுபட  வெகு நேர
மாயிற்று  எமிலிக்கும், இஷிமுராவுக்கும்.

இந்தப் பாட்டைப் போலவே,  பாட்டு முடிந்ததும் நடந்த நிகழ்ச்சியும் நம்மை
ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

எமிலி,  பரதேசியிடம்  5 டாலர்  கொடுக்க  –  அது இங்கே செல்லாது என்று
பரதேசி திருப்பிக் கொடுத்து விட

இஷிமுரா  100 ரூபாயை  பரதேசியிடம் கொடுக்க  –  பரதேசிக்கும்
இஷிமுராவுக்கும் நடக்கும் உரையாடல்  –  நாம் உறங்கும்போதும்  நமது
செவிகளிலே எதிரொலிக் கிறது.

“இம்புட்டுக் காசை வச்சிருந்தா எனக்கு ஒறக்கம் வராது  ராசா.  இன்னைக்குத்
தேவை  அம்பது, அத மட்டும் கொடு”

“மிச்சத்தை நாளையத் தேவைக்கு வைத்துக் கொள்ளலாமே”  என்றான் இஷிமுரா.

பரதேசி சொன்னான்  —
“நான் நாளைக்குச் சாப்புடற  சாப்பாட்ட இன்னைக்கே  சமைக்கிறதில்ல.
நாளைக்குச் சமைக்கிற பொருளுக்கு  நான் இன்னைக்கே  சேமிக்கிறதில்ல”

இதைக்கேட்ட எமிலி சொன்னாள் :

“இந்தியாவில்  ஞானம்  தெருவில் கொட்டிக் கிடக்கிறது”  என்பதே அந்த உரையாடல்.
எனினும் அந்த உரையாடலின் தொடர்ச்சியாக “இங்கே நீங்கள் பார்ப்பது
இந்தியாவின் இன்னொரு முகம்.  உண்மையான இந்தியா பிரதான சாலையை விட்டுப்
பிரிந்து கிடக்கிறது”  என்று சின்னபாண்டி சொல்வது  நமது சிந்தனையில்
பதிவாகிறது.

பைசா இல்லாத  பரதேசி  நம்மை ஆச்சரியப்பட வைப்பதைப் போல,  கவிப்பேரரசு
வைரமுத்துவின்  இந்த லில்  இடை யிடையே அவருடைய குறும்பு போகவில்லை.
இளமைக் குறும்பு!   என்னை விட இளமையானவர்.   எனக்கு  89,  அவருக்கு  59.
இளமை இருக்கிறது, ஆனால் குறும்பு போகவில்லை.   அதை மெய்ப்பிக்கும்
விதத்தில் இதோ  சில வரிகள்..

ம்ம்

கெழங்குராணி  என்ற பெண்ணை வைரமுத்து வர்ணிக்கிறார்.பாருங்க.

கெழங்குராணி மாதிரி ஒரு பெறவிய யாரும் பாத்திருக்க மாட்டீக.
பாத்திருந்தா கடைவாயில பாலு ஊத்துற வரைக்கும் கண்ணை விட்டுப் போகாது அவ
ரூவம்.

கொஞ்சம் எக்கி நின்னா ஆறடி இருப்பா.   அவ பின்னி வச்ச சடை பின் முதுகு
தாண்டிப் பிருஷ்டப் பள்ளத்துல எறங்கிக்  கெண்டைக்கால உரசிக் குதிகாலத்
தொட, இன்னும் கொஞ்சம் வசதியில்லையேன்னு வருத்தப்படும்.

அகலமான ஒடம்பு அவளுக்கு   சொளகு மாதிரி முதுகு.    அதுல –  ஒரு துளி
இருட்டு ஒழுகி விழுந்த மாதிரி  ஒரு மச்சம்.

விளைஞ்ச  தேனைப் புழிஞ்சு  வடிகட்டி வச்சு  ரெண்டு நாளைக்குப் பெறகு
தொறந்து பாத்தா  –  தெளிஞ்சு நிக்குமே  –  அப்படி ஒரு நெறம்.

எண்ணால  8  எழுதுனா  நடுவுல  ஒடுங்கி நிக்குமா  இல்லையா  அப்படி ஒரு இடுப்பு.

விளைஞ்ச வெள்ளைப் பாறைய  வாழைத் தண்டுப் பதத்துக்கு  வழவழன்னு செதுக்கி
வச்ச மாதிரி ரெண்டு காலு.

ஊமை காதுல சொன்ன  ரகசியம் மாதிரி  உள்ளடங் கிப் போன  வயிறு.

“ஆம்பளையா இருந்தா அடக்கிப் பாரு”ன்னு வாறவன் போறவனையெல்லாம் வம்புக்கு
இழுக்கிற மார்பு.

இளவாழை இலைய நெய்யில துடச்சு வச்ச மாதிரி மினுமினுன்னு  ஒரு கழுத்து.

இந்தப் பொருத்தமான  உடம்புக்குத் திருத்தமான  மூஞ்சி இது தாண்டான்னு
பிரம்மனே  வேட்டி போட்டுத் தாண்டுற மாதிரி  செதுக்கி வச்ச மொகம்.

ம்ம்

இன்னொரு இடம்  —

அண்ணன் முத்துமணி   விலை நிலங்களை விற்க முயலுகிறான்.   தம்பி
சின்னப்பாண்டி தடுக்கிறான்.

அப்போது அவன் கூறுகிறான் :-

“உங்களுக்கும்  ஊருக்கும் நல்லது சொல்லவே வந்திருக்கிறேன்.   தன்னை விற்க
நேர்ந்தாலும்  மண்ணை விற்காதீர்கள்.   விவசாய நிலங்களின் மீது
விரிக்கப்பட் டிருப்பது  உள்ளூர் வலை அல்ல   இது சின்ன மீன்களைப் பிடிக்க
திமிங்கிலங்கள் விரித்த வலை.

வர்த்தகச் சூதாடிகளின் ஏகபோகச் சூறையாடலில் உருத் தெரியாமல்  நொறுங்கிக்
கொண்டிருக்கிறது உலக விவசாயம்.  தீ வைத்துக் கலைக்கப்படும் தேனீக்களைப்
போல, தங்கள் வாழ்விடங்களை விட்டு விரட்டப்படு கிறார்கள்  விவசாயிகள்.
தாயிட மிருந்து  குழந்தையைக் குரங்குகள் பறித்துக் கொண்டு  ஓடுவது
மாதிரி,  விவசாயமே  அறியாதவர்கள்  பறித்துக் கொண்டிருக் கிறார்கள் விளை
நிலங்களை.

விற்று விரட்டப்பட்டவன் எங்கு போவான்?  பாலை வனத்தில்
விசிறியடிக்கப்பட்ட பட்டாம்பூச்சிகள் எங்கு போய் இரை தேடும்?  வர்த்தகச்
சக்கரவர்த்திகளுக்கும் நிலக் கொள்ளை நிறுவனங்களுக்கும்  உங்கள் நிலம்
இல்லையென்றால்,  வேறு முதலீடு  உண்டு.  ஆனால், விற்றுவிட்டால்
உங்களுக்கு வேறு நிலம் உண்டா?  நிலம்  இல்லாதவனும்  நிலம் பெற வேண்டும்
என்ற வாதம்  வலுப்பெற வேண்டிய கால கட்டத்தில்,  இருக்கும் நிலத்தை
இழப்பது என்ன நியாயம்?

நிலம் தான் உங்களுக்கு ஆதாரம்.  நிலம் தான் உங்கள் பிறப்புக்கும்
இருப்புக்குமான  காரணம்.  உங்களை அறியாமல் நீங்கள் செய்யும் தர்மம் தான்
விவசாயம்.   உங்கள் குடும்பத்தின் ஐந்தாறு வயிறு களுக்காக மட்டுமா
நீங்கள் உழைக்கிறீர்கள்?   உங்கள் உழைப்பின் எச்சத்தில் உலகம்
பசியாறுகிறது.  நீங்கள் இல்லை யென்றால், வயிற்றுக்குப் பசையு மில்லை
பூமிக்குப் பசப்பும் இல்லை.  நீங்கள் நிலத்தை  விற்று விட்டு  ஊரை விட்டு
வெளியேறினால், உங்களை நம்பியிருக்கும்  கொக்கு களும், குருவி களும்,
நாரைகளும், காக்கை களும் உங்களுக்கு முன்னால் இந்த ஊரைவிட்டு வெளியேறி
விடக் கூடும்.

இன்னொன்றும்  சொல்லுவேன் – நீங்கள் உழுத நிலம்  விற்கப்பட்டால், அந்த
நிலத்தை இன்னொரு கலப்பை உழும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.
கார்பரேட் நிறுவனங்களின் கான்கிரீட் கல்லறைகளுக் குள்  உங்கள் பூமி
புதைக்கப்படலாம்.  வாழை விளைந்த மண்ணில் குரோட்டன்ஸ், நெல் விளைந்த
நிலத்தில்  கொரியன் புல்.  உங்கள் வம்சாவளிகள் இருக்கலாம்
காம்பவுண்டுக்கு வெளியே  காக்கிச் சட்டைக் காவ லாளிகளாய்!  உங்களைக்
கையெடுத்து கும்பிடுகிறேன், தயவுசெய்து விளைநிலங்களை மட்டும்..விட்டு
விடுங்கள் ”

ம்ம்

எனது இந்த உரையை நிறைவு செய்திடும் இந்த நேரத்தில்

“உன் தாய் கிராமத்தைப் புதிதாய்ப் பெற்றெடு.   புதிய அச்சில்  மக்களை
வார்த்தெடு.    கார்பன் இல்லாத ஊர் உண்டாக்கு.    மண்ணில் குப்பைகளை
எரிக்காதே, உரமாக்கு.

மனிதக் குப்பைகளை எரிக்க அவர்களின் மூளைக்குள்  மூட்டு .தீயை.    பாமர
மக்களுக்குக் கற்பிப் பதற்கு பிள்ளைகளை ஆசான்களாக்கு.   காற்றும் தண்
ணீரும்  மக்களும்  மாசுபடுவதைத் தடு. நிலத்தடியில் நீரும்,  மனத்தடியில்
கருணையும்  பாதுகாக்கப் படட்டும்.   பறவைகள் தங்குவதற்கு மரங்களும்,
மரங் களில் தங்குவதற்கு பறவைகளும்,  உயிரோடு இருக் கட்டும்.  ஓசோன் கூரை
தைக்கும்  ஊசிகள்  உலகெங்கும் தயாரிக்கப்படட்டும்.   ஏனிருக்கக் கூடாது
முதல் ஊசியாய் நீ?”

என்று  தம்பி  வைரமுத்து இந்த லில் எழுப்பி யுள்ள கேள்வி விதையை   உங்கள்
ஒவ்வொருவர் இதயத் திலும், மூளையிலும் விதைத்து, விடைபெறுகிறேன்.


க. சரவணன்

உதவிப்பேராசிரியர். தமிழ்த் துறை
அரசு கலைக்கல்லூரி [தன்னாட்சி ]
கரூர். 639005
தொலைபேசி: 04324255558
அலைபேசி: 97870595828

தனி மின்னஞ்சல்: tamizperasiriyar@gmail.com

skype:  ksnanthusri

News

Read Previous

கணியம் கணிநுட்பக் கட்டுரைப் போட்டி

Read Next

இரத்ததானம்

Leave a Reply

Your email address will not be published.