முன்னுதாரணமான ஆசிரியர் !

Vinkmag ad

( எஸ்.வி.எஸ். ஜெகஜோதி )

  வகுப்பறைக்கு பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்குச் செல்லும் வழியில் பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக்குப்பைகளை எடுத்து வைத்தார்.

மாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான்தான் இதையெல்லாம் எடுத்துக்கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை. இனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.

குப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள். அதே ஆசிரியர், வகுப்பில் ஒரு முஸ்லிம் மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் “நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே ! இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துப் போட்டுக் கொண்டு வர வேண்டும்” என்று பலமுறை சொல்லியும் அந்த மாணவர் அழுக்கான தொப்பியையே அணிந்து வந்தாராம். இதைச் சகித்துக்கொள்ள முடியாத அந்த ஆசிரியர், மாணவரின் தலையிலிருந்து குல்லாவை அவரே எடுத்துக் கொண்டு போய் சுத்தமாகத் துவைத்து எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாராம்.

ஆசிரியரே தனது அழுக்குக் குல்லாவைத் துவைத்து வந்து கொடுத்ததைக் கண்டதும் அந்த மாணவர் வெட்கித் தலைகுனிந்தார். அதன் பிறகு அந்த மாணவர் எப்போதும் குல்லாவை சுத்தமாகவே அணிந்து வந்தாராம். கல்வியை மட்டும் மாணவருக்குக் கற்றுத் தராமல் சுகாதாரத்தையும் ஒழுக்கத்தையும் சேர்ந்துக் கற்றுத்தந்த அந்த ஆசிரியர் யார்?

தில்லியில் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தை நிறுவி அதன் துணைவேந்தராக இருந்தவர். ஜெர்மன் நாட்டுக்குச் சென்று படித்து பி.ஹெச்.டி. டாக்டர் பட்டம் பெற்றவர். மிகச்சிறந்த கல்வியாளர். அவர்தான் டாக்டர் ஜாகீர் ஹுசைன்.

அவர் நடத்தி வந்த பல்கலைக்கழகத்துக்கு காந்தி, நேரு போன்ற தேசியத் தலைவர்கள் உள்பட பலரும் நிதியுதவி செய்து வந்துள்ளனர். இவரது பல்கலைக்கழகத்துக்கு நிதியுதவி செய்தவர்களில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக இருந்த பலரும் திடீரென நிதியுதவி செய்வதை நிறுத்தி விட்டனர்.

நிதி நிலைமை மோசமான நிலையிலும் கூட கல்விக் கொள்கையை மாற்றிக் கொள்ள விரும்பாத டாக்டர் ஜாகீர் ஹுசைன், நிதி நிலைமையைச் சரிசெய்ய தன்னுடைய சம்பளத்தையும் மற்ற ஆசிரியர்களின் சம்பளத்தையும் குறைத்துக் கொள்வதென முடிவு செய்தார். அவரிடம் பணிபுரிந்த ஆசிரியர்களும் அதற்கு உடன்பட்டார்கள் என்பதுதான் வியப்புக்குரிய விஷயம். அனைவரும் மாதம் ரூ 300 சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள முடிவு செய்தார்கள். ஆனால், மற்ற பல்கலைக்கழகங்களில் பணிசெய்த ஆசிரியர்களின் சம்பளமோ ரூ 2000 முதல் ரூ 3000 வரை இருந்தநிலையில் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் ரூ 300 மட்டுமே சம்பளமாக பெற்றுக் கொள்ள முடிவு செய்த செய்தி மிகப்பெரிய தியாகமாகப் பேசப்பட்டது. ஊதியக் குறைவுக்காக எந்தவித ஆர்ப்பாட்டங்களோ, பேரணிகளோ நடத்தவில்லை. அப்படி இருந்தும் அந்தப் பல்கலைக் கழகத்தின் நிதி நிலைமை மேலும் மோசம் அடைந்தது. மாதம் ரூ 300 சம்பளமாகப் பெறும் தொகையையும் குறைத்துக் கொண்டு ரூ 200 சம்பளமாகப் பெற்றனர். இதுவும் அதைவிடப் பெரிய தியாகச் செயலாகப் பேசப்பட்ட நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு நிதி நிலைமை மேலும் மோசமாகவே ஆசிரியர்கள் தங்கள் சம்பளத்தை ரூ 150 ஆகவும் குறைத்துக் கொண்டனர்.

ஆனால், ஜாகீர் ஹுஸைனோ தனது சம்பளத்தை ரூ 95 ஆக குறைத்துக் கொண்டார். இந்த 95 ரூபாய் மாதச் சம்பளத்தில் தான் சுமார் 20 ஆண்டுகள் அதே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணி புரிந்தார். இந்த தேச உணர்வும், தியாக உணர்வும் இருந்த கல்வியாளரைத்தான் இந்தியா தனது குடியரசுத் தலைவருக்கான பதவியில் மூன்றாவது முறையாக அமர வைத்து அழகு பார்த்தது. இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்த முதல் முஸ்லிம் அறிஞர் அவர்.

கீழே இருப்பவர் மேலே போக, ஏறிச் செல்ல உதவும் ஏணியும் இக்கரையில் இருப்பவர் அக்கரைக்குச் செல்லத் தோணியும் உதவுவதைப் போல மாணவச் செல்வங்களுக்காகவே தங்களை உருக்கிக் கொண்டு வெளிச்சத்தைத் தந்து கொண்டிருக்கும் இந்த மெழுகுவர்த்திகள் போற்றுதலுக்குரியவர்கள். ஆசிரியர் மட்டும் மனது வைத்துவிட்டால் அனைத்து மாணவர்களையும் அறிஞர்களாக மாற்றிவிட முடியும். அவமானங்களும் அலட்சியங்களும் விண்ணைத் தொடும் வெற்றிகளுக்கான எரிசக்திகள் என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

நன்றி : நம்பிக்கை  மாத இதழ், மலேசியா, நவம்பர் 2010

News

Read Previous

ஜம் ஜம் பசிக்கு உணவு …! நோய்க்கு மருந்து ..!

Read Next

பாதைகள் ———— ஜே.எம். சாலி

Leave a Reply

Your email address will not be published.