பாதைகள் ———— ஜே.எம். சாலி

Vinkmag ad

பாதைகள்

ஜே.எம். சாலி

 

  சபியா வந்திருக்கிறாள்.

நிரம்பவும் தளர்ந்து போயிருக்கிறாள். நாற்பத்தெட்டு வயதில், சற்று அதிகமாகவே நரையோடி இருக்கிறது. வயதுக்கு வந்த மூன்று பெண்களை வீட்டோடு வைத்திருக்கும் கவலைதான் காரணமோ?

அப்துல் கபூர், பார்த்ததும் பார்க்காதது போல் தலையை தாழ்த்திக் கொண்டார். சன்னமான குரலில் “சவுக்கியமா இருக்கிறியா. தங்கச்சி?” என்றார். ‘வந்தக் காரியத்தைச் சொல்லச் சொல்கிறார்’ என்பதைச் சபியா புரிந்து கொண்டாள்.

அவ்வப்போது, தம்மைத் தேடி வருபவர்களில் சபியாவும் ஒருத்தி என்பதைத் தவிர, அதிகமாக அவர் யோசிக்கவில்லை. கபூர் இப்பொழுது அனைவரிடமும் ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்ற தோரணையில் தான் நடந்து கொள்கிறார்.

“வீட்டிலே எல்லாரும் சவுக்கியந்தானே?” அவர் ஒப்புக்குக் கேட்டார்.

“அல்லாவுடைய கிருபையிலே நல்லாவே இருக்கோம்… ஆனா, கலியாணத்துக்குக் காத்திருக்கிற மூணு குமர்களில் ஒன்றையாச்சும் கரையேத்த முடியாதாங்கிற கவலைதான் சதா அரிச்சுட்டிருக்கு..”

“நம்ம கையிலே என்ன இருக்கு, சபியா? ஆண்டவன் நாடினால் எல்லாமே நடக்கும் !

“அந்த நம்பிக்கையை இழந்துடலே… எல்லாம் அறிஞ்சவன் அவன்… ஆனா, பக்கத்துத் தெருவிலே இருக்கிற எங்க நிலைமையைக் கண்கூடாப் பார்த்துக்கிட்டிருக்கிற உங்ககிட்டே மனக்குறையை சொல்லணும் போல இருந்தது!”

“சரி … நான் என்ன செய்யணும், சபியா ?”

“உங்களுக்கு மூணு பொண்கள் இருக்கிறதா நினைச்சி, ஏழைப் பிள்ளைங்க யாரும் இருந்தா சொல்லுங்க… வயசுக்கு வந்த பொண்களைக் கரையேத்திட்டோம்னா, எல்லாருக்கும் நிம்மதியா இருக்கும். என்னுடைய சக்தி என்னங்கறது உங்களுக்குத் தெரியும்.”

“அப்படிச் சொல்லாதே, சபியா… ஆண்டவன் மேல பொறுப்பைச் சாட்டு. அவன் பேரில் பாரத்தைப் போடு… நான் சாமானியன். என்னாலே என்ன செய்ய முடியும்னு நினைக்கிறே?” என்றார் கபூர்.

“என்னமோ உங்களிடம் சொல்லிட்டுப் போகணும்னு மனசிலே துடிப்பு. அதுக்காகத்தான் வந்தேன்!”

“சரி… நீ சொன்னதை மனசில் வச்சிக்கிறேன். கால நேரம் வரும்போது, அதுஅது நடக்கும் கவலைப்பட்டு ஆகப் போறது ஒண்ணுமில்லே!”

‘ஒரு வழியாகச் சபியாவை அனுப்பிவிட்டு நிம்மதியாக அவள் அழுது புலம்பி ஒப்பாரி வைக்காதவரை நல்லதாகப் போயிற்று’ என்ற திருப்தி அவருக்கு. மூன்று வருடங்களுக்கு முன் அகால மரணமடைந்த அவருடைய நண்பர் அப்துல் மஜீதின் மனைவிதான் சபியா. கபூரும் மஜீதும் இரட்டையர்களைப் போல. விவரம் தெரிந்த நாளிலிருந்தே பினாங்கில் இருவரும் பக்கத்து கடைகளுக்குச் சொந்தக்காரர்கள். தையல் கடை ஒன்றைக் கடைத் தெருவில் வைத்திருந்தார் கபூர். மஜீத் பஞ்சு மெத்தைக் கடை. கபூரைவிட மஜீதுக்கு சற்று கூடுதலான வியாபாரம். சேமித்து வைக்க முயன்றார் மஜீத். அடுக்கடுக்காகப் பெண்களைப் பெற்று விட்டதற்கு, அப்படி ஏதாவது செய்தாக வேண்டும் என்ற கட்டாயம்.

கபூருக்கு சேமிப்பு இல்லாவிட்டாலும் குடும்பத்தை நிமிர்த்தக் கூடியவர்களாக ஆண் வாரிசுகள் வளர்ந்து கொண்டிருந்தார்கள்.

மூன்று நான்கு வருடத்திற்குள் நிலைமை அடியோடு மாறிவிட்டது. மஜீதின் மரணம், ஆரம்பத்தில் கபூரின் மனத்தைப் பிசைந்து எடுத்தது. சங்கடப்பட்டார். “என்ன செய்யலாம்?… நாடியபடி அல்லா அவரவரையும் அழைத்துக் கொள்கிறான்… நல்ல வழிகாட்டுவான். பொறுமையாக இரு, சபியா!” என்று நண்பரின் மனைவியைத் தேற்றினார்.

மரணத் துக்கமும் துயரமும் நாளாவட்டத்தில் மறையக் கூடிய வடுக்களைப் போன்றவை தான். அப்படி நினைத்து அடுத்த கட்டப் பணியில் முனைந்தார் கபூர். மூத்த மகனை ஆஸ்திரேலியாவுக்கு சம்பாத்தியத்திற்கு அனுப்பினார். மேலும், சில மாதங்களில் அவன் மூலம் அடுத்த பிள்ளையையும் விமானம் ஏற்றிவிட்டார்.

அந்தப் பயனை கடந்த மூன்று வருடங்களாக அவர் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

அதிர்ஷ்டம் வந்தால், தையல்கார அப்துல் கபூருக்கு வந்த மாதிரி வரணும் ! பிள்ளைகள் ரூபத்தில் அவருக்கு வாழ்வு வந்திருக்கிறது. லட்சாதிபதி ஆயிட்டார் !” அனைவரும் பேசிக் கொள்கிறார்கள்.

டைலர் அப்துல் கபூர் என்று இப்பொழுது அவரை யாரும் அழைப்பதில்லை… மதிப்பும் மரியாதையும் தருகிறார்கள்.

“முதலாளி …! இருக்கிறீகளா, உள்ளே?”

குரலைக் கேட்டு, கபூர் நிமிர்ந்தார். சில வாரமாக எதிரொலிக்கும் குரல்.

கல்யாணத் தரகர் காதிர்பாட்சாவின் உருவம் தெரிந்தது. உள்ளே வரச் சொன்னார்.

வெல்வெட் தொப்பி, வெள்ளை முழுக்கை சட்டை, தங்க நிறத்தில் பித்தான்கள் பளிச்சிட்டன. வாழைப்பழத்தை மடியில் வைத்துக் கட்டிய மாதிரி லுங்கிக் கட்டு. தோள்களைத் தழுவி இறங்கிய மடிப்பு வேட்டியை இரண்டு கைகளாலும் பிடித்தபடி, ஹிட்லர் மீசைச் சிரிப்புடன் எதிரே நின்றார் காதிர்.

நூறு கல் சுற்றுவட்டாரத்தில் பல நூறு திருமணங்களை இவர் நடத்தி இருக்கிறார். முன்பு இஸ்லாமியப் பாடல் கேசட்டுகளை விற்றுக் கொண்டிருந்தவர் இப்போது திருமண ஏஜெண்டாக மாறி விட்டார். அரை லகரத்திற்கு மேற்பட்ட பண விவகாரம் சம்பந்தப்பட்டால் மட்டுமே காதிர் தலையிடுவார்.

“முதலாளி பெண் வீட்டுக்காரங்க ரொம்ப நெருக்குறாங்க ! தேதி சொல்லச் சொல்லி வற்புறுத்தறாங்க… அவங்க தொல்லை பொறுக்க முடியாமதான் இப்ப வந்திருக்கேன் !” என்றார் காதிர் பாட்சா.

தரகரின் முறையீட்டில் நியாயம் இருக்கிறது. மூத்த மகன் முஸ்தபாவுக்கு திருமண ஏற்பாடு இவர் மூலமாகத்தான் நடக்கிறது. கோலாலம்பூரில் பசையுள்ள இடமாகப் பார்த்திருக்கிறார்கள். கைக்கூலி, சீர் வரிசை, நகைநட்டு, கார், வீடு என்று பெண் வீட்டார் தர வேண்டியதை ஏற்கனவே கபூரும் காதிரும் பேசி முடிவு செய்து விட்டார்கள். கல்யாணச் சாப்பாட்டுச் செலவும் பெண் தரப்பே ஏற்றுக்கொள்ள இணங்கியிருக்கிறது.

அதே அளவுக்கு வேறு யாரும் தருவதானால் இரண்டாவது பிள்ளைக்கும் ஏக காலத்தில் நிக்காஹ் செய்து வைத்துவிடலாம் என்று கபூர் எண்னியிருந்தார். அந்த முயற்சியிலும் காதிர் பாட்சா ஈடுபட்டிருக்கிறார்.

திருமண ஏற்பாட்டை விவரித்து முஸ்தபாவுக்கு ஏற்கனவே கடிதம் எழுதிவிட்டார் கபூர். எந்த நேரமும் பதில் கிடைக்கலாம். ‘மகன் புறப்பட்டு வரும் தேதியைத் தெரிந்துகொண்டு நாள் நிச்சயிக்கலாம்’ என்று பெண் வீட்டாருக்குச் சொல்லி அனுப்பியிருந்தார். தரகர் காதிர் பாட்சா தான் இருதரப்புக்கும் பாலமாக இருக்கிறார்.

“நிக்காஹ் தேதி கேட்டு பெண் வீட்டார் நெருக்குகிறார்கள்… முதலாளி. முஸ்தபாவுக்கு டெலிபோன் செய்து பேசலாமே…!

கபூருக்கு என்ன சொல்வது என்ற தவிப்பு.

“அதெல்லாம் வேண்டாத வேலை.. என் பிள்ளை நான் கிழிச்ச கோட்டைத் தாண்டாதவன். இன்னிக்கோ நாளைக்கோ கடிதம் வரத்தான் போகுது. ஆக்கப் பொறுத்தவங்க, ஆறப் பொறுக்கக் கூடாதா?”

“நியாயம் … ஆனா பெண் வீட்டுக்காரங்களுக்கு அது புரிய மாட்டேங்குறதே ! லட்சக்கணக்கில செலவு பண்ணப் போறவங்க… பாருங்க… அதனால நாமும் நீக்குப் போக்கா, நெளிவு சுளிவா நடந்துக்கத்தான் வேண்டியிருக்கு!” என்றார் தரகர்.

“அவுங்க அவ்வளவு அவசரப்பட்டா ஒரு வழி பண்ணிட வேண்டியது தான். இன்னியிலேர்ந்து இருபது நாள்லே கலியாணத்தை வச்சிக்கலாம். எப்பாடு பட்டும் முஸ்தபாவை இரண்டு வாரத்துக்குள் இங்கே அழைச்சிடுவேன். நீங்க போய் ஆக வேண்டியதைப் பாருங்க!” தரகரிடம் கம்பீரமாகவே பேசினார், பிள்ளையின் தகப்பனார்.

வாசலில் கதம்பக் குரல்கள்…

“யாரு அங்கே…? அப்துல் கபூர் தூக்கலான குரலில் கேட்டார்.

“இளைஞர் சங்கத்திலேர்ந்து வந்திருக்கோம்!”

‘வாலிபப் பட்டாளம்! சங்கத்துப் பிள்ளைகள் என்ற பெயரில் அலையும் வம்புப் பட்டாளம். நம்மைப் பார்க்க ஏன் வந்திருக்கிறார்கள்’ என்ற கேள்வியுடன் வாசல் பக்கம் வந்தார்.

“உட்காருங்க… என்ன சமாச்சாரம்?”

“ஒரு பத்து நாள் பிரசங்கத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். தினமும் ராத்திரி இஷா தொழுகைக்குப் பிறகு நம்ம வாலிபர் சங்கக் கட்டிடத்திலே பிரசங்கம்… நீங்களும் வரணும்..”

“சந்தோஷம்… எதுக்காக இந்த ஏற்பாடு?”

“மார்க்கப் பிரச்சாரம், வரதட்சணை ஒழிப்பு, ஏழைப் பெண்கள் திருமணம் இதுக்கெல்லாம் ஆதரவு திரட்டுவது எங்களுடைய நோக்கம்..”

“பேச்சினாலேயே அதைச் சாதிச்சிடுவீங்களா?”

“உங்கள மாதிரி வசதி ஏற்பட்டவர்களுடைய ஒத்துழைப்புடன் செய்ய முடியும்னு நினைக்கிறோம்… ஏழைப் பெண்களுக்கு வாழ்வு கிடைக்கறதுக்கு ஏதாவது செய்ய முடியுங்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு…”

“சரி எல்லாருமே வயசுப் பையன்களா இருக்கிறீங்க… நீங்களே அந்த நல்ல காரியத்தைச் செய்யலாமே?”

“நாங்களும் செய்வோம்… இன்ஷா அல்லாஹ், மத்தவங்களையும் செய்யச் சொல்லி இயக்கம் நடத்துவோம். எதுக்கும் பெரியவர்களோட ஆசி வேணும் இல்லையா?”

இதெல்லாம் முடிகிற காரியமா? அவங்கவங்க வேலைகளைப் பார்த்துட்டுப் போங்கப்பா… என்று வாய் விட்டுச் சொல்ல வேண்டும் போல் ஆத்திரம் குமுறிக்கொண்டு வந்தது. ஆனால், அவர் வாய் திறக்கவில்லை. சில நிமிட மெளனத்திற்குப் பிறகு, “இப்ப நான் என்ன செய்யணும்னு சொல்றீங்க?” என்றார்.

“பத்து நாள் பிரசங்கத்துக்கு வெளியூர்ப் பிரமுகர்கள் சிலரை அழைக்கிறோம். போக்குவரவுச் செலவு தரணும். ஏழைப் பெண்கள் திருமண நிதியும் திரட்டுகிறோம்… நீங்க தாராளமா நிதி அளிக்கணும்…”

“சரி… என் பங்குக்கு என்ன செய்யணுமோ செய்யலாம். திட்டப்படி உங்க வேலையைக் கவனிங்க… நான், ஆக வேண்டியதை அப்புறமா செய்யறேன்!”

“உங்க இஷ்டம் … தவறாக நிகழ்ச்சிக்கு வந்திடுங்க…”

இளைஞர் அணி அங்கிருந்து புறப்பட்டது. அவர்களின் துடிப்பும் உற்சாகமும் அப்துல் கபூரை வியக்க வைத்தன. கூடவே மனத்தில் ஒரு திகைப்பும் முற்றுகை இட்டது.

இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு, அப்துல் கபூர் பால்கனி பக்கம் வந்தார். ஒலிபெருக்கியில் எடுப்பான குரல் முழங்கிக் கொண்டிருந்தது. இளைஞர் சங்கத்தின் ஏற்பாடு சொன்னபடி, செயலில் இறங்கியிருக்கிறார்கள்.

அவருக்கு வெறுப்பு மண்டியது. ஆனாலும் விலகிப் போக முடியவில்லை. தலைநகரிலிருந்து அழைக்கப்பட்டிருந்த சீர்திருத்தப் பேச்சாளர் ஒருவர் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். மனத்தை இழுத்துப் பிடிக்கும் விதத்தில் பேச்சு அமைந்திருந்தது.

எளிய திருமணம் ஏழைப் பெண்களுக்கு மண வாழ்வு அளிக்கும் அவசியம், வரதட்சணை தலைதூக்கி வரும் கொடுமை, அனாதைகளின் துயர் துடைப்பு என்று அடுக்கடுக்காக விஷயங்களை மாலை போல் தொடுத்துப் பேசிக் கொண்டிருந்தார் அந்தச் சொற்பொழிவால்.

அப்துல் கபூர் உள்ளே போனார். படுக்கையில் ஓய்ந்தாலும், அந்தப் பேச்சு ஓயாமல் செவியில் பாய்ந்து சிந்தையில் உருள்கிறது.

கடிதம் வந்துவிட்டது. அப்துல் கபூர் ஆவலோடு எதிர்பார்த்திருந்த கடிதம். மகன் முஸ்தபா எழுதியிருக்கிறான். இந்தக் கடிதம் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் தான். கல்யாணத் தரகர் காதிரிடம் திருமணத்திற்கு ஒப்புதல் சொல்லி அனுப்பியிருந்தார் கபூர்…

ஆவலோடு கடிதத்தைப் பிரித்தார். வழக்கமான ஸலாம், நலம் விசாரிப்புடன் கடிதத்தைத் துவங்கியிருந்தான் முஸ்தபா. மேலே போனார் கபூர்… “தங்கள் விரிவான கடிதம் கிடைத்தது. திருமண ஏற்பாடுகளைத் தெரிவித்திருந்தீர்கள். சீர் வரிசை, வரதட்சணை, நகை மற்ற விவரங்களின் பட்டியலையும் பார்த்துக் கொண்டேன். இதுபற்றி இங்கு, தம்பியையும் கலந்து பேசினேன். மிகவும் முயன்று இந்த இடத்தைப் பேசி முடித்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. திருமணம் சம்பந்தமாகப் பலமுறை தாங்கள் வற்புறுத்திக் கடிதம் எழுதி வந்திருப்பதால், நான் சம்மதிக்கிறேன். தம்பியும் தூண்டிக் கொண்டிருக்கிறான். கல்யாணத்துக்குச் சம்மதம் தெரிவிக்கும்படி, ஆகையால், கல்யாணத் தோதுக்கு நான் புறப்பட்டு வருகிறேன்…”

கடிதத்தைப் படிப்பதை நிறுத்திவிட்டு மனம் மலர்ந்து போனார் கபூர். தன் பிள்ளை, தான் கிழித்த கோட்டைத் தாண்டாதவன் என்ற பெருமை அவருக்கு எப்பொழுதும் உண்டு. இப்பொழுது அதை மெய்ப்பித்திருக்கிறான் முஸ்தபா என்ற பூரிப்புடன் கடிதத்தைத் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார்.

‘திருமணத்திற்கு முன்னால், ஒரு விஷயத்தை தங்களிடம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு முக்கிய விஷயத்தைப் பல வருஷமாக மனத்தில் மறைத்து வைத்திருந்தேன். போன முறை நான் ஊருக்கு வந்திருந்த சமயம் அதைப் பற்றி விசாரிக்க முடியாமல் போய்விட்டது…”

பளிச்சென்று பொறி தட்டியது போல் இருந்தது கபூருக்கு. மகன் என்ன சொல்ல நினைக்கிறான் என்பது புரியாமல் தத்தளித்துப் போனார். மறுபடியும் கடிதத்தில் கவனம் பதிந்தது…

“எங்களைத் தூக்கி வளர்த்தவரைப் பற்றித்தான் சொல்ல வருகிறேன். தம் பெண்மக்களின் கல்யாணத்தை உத்தேசித்து, கொஞ்ச நஞ்ச சேமிப்புத் தொகையை அவர் யாரிடமோ அமானிதமாகக் கொடுத்து வைத்திருந்தார் என்றும், மரணத் தருவாயில் சொல்லாமல் கண்ணை மூடிவிட்டார் என்றும் கேள்விப்பட்டேன். அந்த ‘யாரோ ஒருவர்’ வேறு யாரும் அல்ல…

தொடர்ந்து கடிதத்தைப் படிக்க முடியாதபடி, ஒரு திரை கண்ணை மறைத்தது.

“இப்பொழுதாவது ஒப்புக் கொள்வீர்களா என்று நம்புகிறேன். மஜீத் மாமா பஞ்சு மெத்தை வியாபாரத்தில் கிடைத்த கணிசமான தொகையை தனது பெண் மக்களின் எதிர்காலத்திற்கு வியர்வை சிந்தச் சேர்த்து வைத்த தொகையைத் தங்களிடம் தானே ஒப்படைத்தார். அந்தப் பணத்தைக் கொண்டுதானே என்னை வெளிநாட்டுக்கு அனுப்பினீர்கள்? சபியா மாமிக்கு அரைகுறையாக அந்த ரகசியம் தெரியும் என்று தெரிகிறது. என்றாலும் அவர்கள் பெருந்தன்மையாக இருக்கிறார்கள். புலன்விசாரணை செய்து, நான் இதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.”

நாடி ஒடுங்கியவராகப் பிரமையுடன் விழித்தார் அப்துல் கபூர். கடிதத்தைப் பிடித்திருந்த கை நடுங்கியது. முஸ்தபாவுக்கு இந்த இந்த ரகசியம் தெரிந்துவிட்டதே என்ற அதிர்ச்சி !

கடைசிப் பத்தியைச் சிரமப்பட்டுப் படித்தார். “நம் வீட்டில் நல்ல காரியம் நடக்க வேண்டும் என்ற தங்கள் ஆசையை அல்லாஹ்வின் கிருபையினால் நிறைவேற்றுகிறேன். நான் அடுத்த சில தினங்களில் புறப்பட்டு வருகிறேன். மஜீது மாமாவின் மூத்த மகள்தான் உங்கள் மூத்த மருமகள். உடனடியாக இந்த ஏற்பாட்டைச் செய்யுங்கள். சபியா மாமிக்கும் இன்று கடிதம் எழுதுகிறேன். மற்ற விஷயங்களை நேரில் பேசிக் கொள்ளலாம்.”

மகனின் கடிதத்தை மடித்து வைத்தார் அப்துல் கபூர்; கூடவே கண்ணீரையும் துடைத்துக் கொண்டார்.

 

நன்றி :

நம்பிக்கை மாத இதழ்

மலேசியா

நவம்பர் 2010

 

 

 

News

Read Previous

முன்னுதாரணமான ஆசிரியர் !

Read Next

Dubai Bazaar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *