பேராசிரியர் முனைவர் பீ. மு. மன்சூர் அவர்களுடன் ஒரு சந்திப்பு !

Vinkmag ad

பேராசிரியர் முனைவர் பீ. மு. மன்சூர் அவர்களுடன் ஒரு சந்திப்பு !

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர், பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், துணை முதல்வர் அதனைத் தொடர்ந்து திருச்சி எம்.ஐ.இ.டி. கலைக்கல்லூரி முதல்வர் எனப் பல பொறுப்புகளை வகித்துவிட்டு அமீரகத்தின் கலாச்சார நகராம் ஷார்ஜாவில் குடும்பத்தினருடன் வசித்து வரும் தனது மகன் தமீம் குடும்பத்தினரைக் காண மூன்று மாத ஓய்வில் வருகை புரிந்த பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூர் அவர்களை இனிய திசைகள் மாத இதழுக்காக சந்தித்தோம்.

மிகவும் மகிழ்வடைந்த அவர் தனது பாணியில் சொல்லுங்க தம்பீ என்று ஆரம்பித்தார். இனிய திசைகள் சமுதாய மேம்பாட்டு மாத இதழின் பணிகளைப் பாராட்டி பேட்டியினைத் தொடர்ந்தார்.

இந்த சந்திப்பிலிருந்து இதோ சில முக்கிய பகுதிகள் இதோ உங்களுக்காக :

1949 ஆம் ஆண்டு ஜுலை 21 ஆம் நாள் அப்போதைய மதுரை மாவட்டம் கம்பம் நகரில் முஹம்மது இப்ராஹிம் – மைதீன் ஃபாத்திமா தம்பதியருக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். இவரையும் சேர்த்து உடன் பிறந்தவர்கள் பத்து பேர். நான்கு பேர் ஆண்கள். ஆறு பேர் பெண்கள்.

இவரும், இவரது பெரியத்தா குடும்பமும் இணைந்து கூட்டுக்குடும்பமாகவே வசித்து வந்தனர். இவரது பாட்டனார் கம்பம் பீர் முஹம்மது பாவலர் ஆவார்.

கம்பம் நகராட்சி பள்ளியில் ஆரம்பக் கல்வியினையும், உயர்நிலைக் கல்வியினை ஏலவிவசாயிகள் ஐக்கிய உயர்நிலைப் பள்ளியிலும், பியூசி புதுமுக வகுப்பினை உத்தமபாளையம் கருத்த ராவுத்தர் கல்லூரியிலும் பயின்றார்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் இளநிலை விலங்கியல் படிப்பினை 1966 முதல் 1969 வரையிலும், எம்.ஏ. தமிழ் முதுநிலை படிப்பினை 1969 முதல் 1971 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். அங்கு வ.சுப. மாணிக்கனாரின் தலைமாணாக்கராய் திகழ்ந்தார். அவரது நினைவு நாளான ஏப்ரல் 24 ஆம் தேதி அவர் இல்லம் சென்று அன்னாரது குடும்பத்தினரை சந்திக்கும் நிகழ்வினை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். முதுநிலை வகுப்பில் தங்கப்பதக்கம் பெற்றார்.

தனது பாட்டனார் இந்திய சுதந்திரத்திற்கும், தமிழ் மொழிக்கும் ஆற்றிய பணிகளின் காரணமாக இயல்பிலேயே தமிழ் ஆர்வம் ஏற்பட்டது. மேலும் அப்போதைய திராவிட இயக்க சூழலும் மற்றுமொரு காரணம்.

1971 ஆம் ஆண்டு ஜுன் முதல் 2007 மே 31 ஆம் தேதி வரை 36 ஆண்டுகள் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து துணை முதல்வராக பணி ஓய்வு பெற்றார்.

காஜாமியான் விடுதியில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய போது 1984 ஆம் ஆண்டு கைக்கூலி கைவிட்டோர் கழகத்தினை ஏற்படுத்தியதன் காரணமாக மாணவர்கள் பலர் கைக்கூலி வாங்காமல் தங்களது திருமண வாழ்வினை அமைத்துக் கொண்டனர். மேலும் ரத்ததானத்திலும் ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு அளப்பரியது.

வெள்ளிக்கிழமை தோறும் விடுதியில் வழங்கப்படும் குஸ்கா மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பினை ஏற்படுத்தி விட்டது. இறைவனிக் கிருபையால் இயற்கையாகவே அது அமைந்து விட்டது. வருடந்தோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறும் முன்னாள் மாணவர்களது நிகழ்விலும் குஸ்கா வழங்கப்பட்டு வருகிறது.

கடலில் மிதக்கும் நிலா என்ற கவிதை நூல் உட்பட  இந்தியத் தத்துவ மீட்டுருவாக்கத்தில் தமிழ் மூலங்களின் பங்களிப்பு, நவீனத் தமிழ்க் கவிதைகளில் மனிதம்,நவீனத் தமிழ்ப் புனை கதைகளில் மனித உறவுகள், இஸ்லாமியத் தமிழ் நூல் அட்டவணை ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

.

பத்து முனைவர்களை உருவாக்கியுள்ளார்.

கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா வெளியீட்டு விழாவில் 4 முறை நூல் விமர்சனம் செய்து உரையாற்ற கலைஞர் விரும்பி அழைத்ததில் பெருமிதம் உண்டு

பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவில் இரு முறை முதல்வர்கள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இஸ்லாமிய இலக்கியக் கழகம் துவங்கப்பட்டு பெரும்புலவர் சி. நைனார் முஹம்மது அவர்களால் 1973 ஆம் ஆண்டு முதலாவது உலக இஸ்லாமியத் தமிழ் மாநாடு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் நடைபெற்ற போது அதன் துணைச் செயலாளராக பணியாற்றிய அனுபவம் உண்டு.

தமிழ் இன்று தமிங்கிலிஷாக உபயோகப்படுத்தும் நிலை கவலைக்குரியது. இத்தகைய நிலையினைப் போக்க பல்கலைக்கழகப் பாடத்திட்டதில் மாறுதல் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

குறிப்பாக இன்றைய இளைஞர்கள் தாய்மொழியாம் தமிழ் மொழியினை சிறப்புறக் கற்பதில் கவனம் செலுத்துதல் வேண்டும். இதுதான் மற்ற படிப்புகளுக்கு அச்சாணி.

தாய்மொழியை சிறப்புற கற்பவர் வாழ்வில் உயர்நிலையினை நிச்சயம் அடைவர் எனபதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

 

( கடந்த 2013-ஆம் ஆண்டு ஷார்ஜா வந்த போது எடுத்த பேட்டி )

 

 

 

 

News

Read Previous

பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி?

Read Next

எதிர்நீச்சல்

Leave a Reply

Your email address will not be published.