பெரியார் பெருமை பெரிதே!

Vinkmag ad
Dec 19, 2020
EVR Periyar.JPG
இந்த நாளில் அன்று!….
சென்னை தியாகராயர் நகரில், டிசம்பர் 19, 1973 அன்று, தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய இறுதிப் பேருரை இரவு 10 மணிக்கும் மேல் தொடர்ந்தது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, வரும் அடுத்த ஆண்டு 1974 ஜனவரியில் நடத்தத் திட்டமிட்ட “சமுதாய இழிவு ஒழிப்பு” என்ற கிளர்ச்சியின் நோக்கம் மற்றும் தேவை என்ன என்பதை விளக்கி, அதில் மக்களின் கடமை என்ன என்று சிந்திக்கச் சொல்லி சமுதாய இழிவு ஒழிப்பு கிளர்ச்சியில் பங்கேற்க அவரது தொண்டர்களை(தோழர்களை) ஆயத்தமாக்குகிறார். தந்தை பெரியாரின் இந்த இறுதிப் பேருரையை, ‘மரண சாசனமாகவே அமைந்துவிட்ட தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை’ என்றே பலரும் குறிப்பிடுவதை அறிய முடிகிறது. பெரியாரின் இறுதி உரையின் வரலாற்றுப் பின்னணி குறித்த அறிமுகம் இங்கு தேவையாகிறது.
தந்தை பெரியார் 1957 நவம்பர் மாதம் 4-ஆம் நாள் தனது சட்ட எரிப்புப் போராட்டத்திற்கு மக்களிடம் அழைப்பு விடுத்தார். அப்பொழுது அவர் 78 வயது முதியவர். “நம் மக்களுக்கு ஏதாவது காரியம் செய்துவிட்டு நான் சாக வேண்டும். இல்லையென்றால், நம் மக்களுக்கு உணர்ச்சியூட்டி விட்டுச் சாகவேண்டும். இந்த மாதம் 26 ஆம் தேதிக்குள், பிராமணன் என்ற ஒரு சாதி கிடையாது. சட்டத்தில் அந்த மாதிரிக் கருதமாட்டோம் என்று அறிக்கை வராவிட்டால் அரசாங்கச் சட்டப்புத்தகத்தை நாங்கள் கொளுத்தப் போகிறோம்” என்ற புரட்சிக் குரலை எழுப்பினார். அரசியல் அமைப்பின் 25 மற்றும் 26 ஆவது மதப்பாதுகாப்புப் பிரிவுகளைக் கடுமையாக எதிர்த்தார். சட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, சாதி ஒழிப்பு கூறப்படவில்லை. சாதிகளின் ஏற்றத் தாழ்வு நிலை மதப்பாதுகாப்புப் பிரிவுகளின் உதவியுடன் தொடர்கிறது என்று சுட்டிக் காட்டி இந்திய அரசியல் சட்டத்தினை எரிக்கவும் செய்தார். அப்பொழுது இந்தியாவில் சட்டத்தினைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்பது குறித்துச் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, தொடர்ந்து தேசிய சின்னங்கள் அவமானப்படுத்துதல் தொடர்பான குற்றத்திற்குத் தண்டனை சட்டமும் இயற்றப்பட்டது.
கடவுள் மறுப்புக் கொள்கை பரப்பிய பெரியார், அதற்கு முற்றிலும் மாறாக, கோவில் நுழைவுப் போராட்டங்களையும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற கோயில் கருவறை நுழைவுப் போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தியவர். மனித உரிமை மீறலுக்கு எதிரான பெரியாரின் கலகக்குரல் அது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வழியில்லை என்ற நிலை மாறவேண்டும் என்பதற்காக அவர் நடத்திய போராட்டங்களின் அடிப்படை அவரது சாதியொழிப்புக் கொள்கை.
மீண்டும், 1970ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று தமிழகத்தில் கோயில் கருவறை நுழைவுப் போராட்டத்தினை அறிவித்தார் பெரியார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற பெரியாரின் கோரிக்கையை ஏற்று சட்டமாக்குவதாக முதல்வர் கருணாநிதி உறுதியளித்து அப்போராட்டத்தினைக் கைவிடச் செய்தார். பார்ப்பனர் அல்லாதோரும் பயிற்சி பெற்று, அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டத்தினை 1970 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்தார்.
இச்சட்டத்தினை எதிர்த்து பார்ப்பனர்கள் வழக்குத் தொடுத்தனர். அவர்களில் சேஷம்மாள் என்ற பார்ப்பனரும் ஒருவர், ஆகவே அவர் பெயருடன் ‘சேஷம்மாள் வழக்கு’ என்று அந்த வழக்கு குறிப்பிடப்படுகிறது. தந்தை பெரியார் அரசியற் சட்டத்தினை கொளுத்தவேண்டும் என்று எந்த சட்டப் பிரிவுகளைக் காரணம் காட்டினாரோ, அதே பிரிவுகளை உதவிக்கு அழைத்திருந்தனர் வழக்குத் தொடுத்தோர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26 ஆகிய பிரிவுகள் வழங்கியுள்ள மதச்சுதந்திரம் மற்றும் வழிபாட்டுரிமை ஆகியவற்றில் தமிழக அரசு தலையிடுவதாகப் பன்னிரண்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். அவ்வழக்கில் மார்ச் 15, 1972 அன்று தீர்ப்பளித்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி திரு. எஸ்.எம்.சிக்ரி மற்றும் திரு. ஏ.என்.குரோவர், ஏ.என்.ரே, டி.ஜி. பாலேகர், எம்.எச். பெய்க் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு, அர்ச்சகர் நியமனத்தில் வாரிசு உரிமைகோர முடியாது என்றனர். அதாவது அர்ச்சகர் தொழில் பரம்பரை தொழில் அல்ல. ஆனால், அர்ச்சகர் நியமனத்தில் ஆகம விதிகள் மீறப்பட்டால், அச்சட்டத்தினை எதிர்த்த பார்ப்பனர்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்தனர். தனது விடுதலை இதழில், “ஆபரேஷன் வெற்றி; நோயாளி மரணம்” என்று இந்தத் தீர்ப்பினைப் பற்றி தந்தை பெரியார் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தலையங்கத்தை எழுதினார். இதுதான் நான் என் வாழ்க்கையில் சாதிக்காத கடைசி விஷயம் எனப் பெரியார் சொல்லி இருக்கிறார்.
இந்த சாதி இழிநிலையை ஒழிக்க மீண்டும் போராட்டத்தில் இறங்கினார் பெரியார். “சமுதாய இழிவு ஒழிப்பு” என்ற கிளர்ச்சியினை 1974 ஆம் ஆண்டு ஜனவரியில் நடத்த தொண்டர்களைத் திரட்டினர். அந்த முயற்சியின் ஒரு பகுதிதான் சென்னை தியாகராயர் நகரில், புதன்கிழமை டிசம்பர் 19, 1973 அன்று இரவு தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய இறுதிப் பேருரை.
அவரது உரை சமுதாய இழிவு ஒழிப்பு அல்லது சாதி ஒழிப்பை நடைமுறை அளவில் தடை செய்யாத சட்டம் மீது கொண்ட எதிர்ப்பு என்றாலும்; வழக்கமான அவரது கடவுள் மறுப்புக்கொள்கை, சாஸ்திரம், சமயம் இவற்றைக் குறித்து கேள்வி எழுப்புவதும் உரையில் வெளிப்படுகிறது. எடுத்துக்காட்டாக: “நான் கேட்கிறேன், பெரிய மதக்காரனையே கேட்கிறேன். இந்து மதம் என்றால் என்ன அர்த்தம்? எப்ப வந்தது? எவன் அதற்குத் தலைவன்? என்ன அதற்குக் கொள்கை? அதற்கு என்று இருக்கிற சாஸ்திரம் என்ன?” என்று கேட்கும் அவர் தொடர்ந்து, “கடவுள் ரொம்ப அன்பானவர்; கருணையே உருவானவர் அப்படி என்கிறான். கடவுளைப் போய்ப் பார்த்தால், அந்தக் கடவுள் கையில் அரிவாள், கொடுவாள், வேலாயுதம், சூலாயுதம், ஈட்டி கொலைகாரப் பயல்களுக்கு என்ன வேணுமோ அதுவெல்லாம் கடவுள் கையில் இருக்கிறது. கடவுள் கருணையே உடையவர் என்கிறான். எந்தக் கடவுள் மனுஷனைக் கொல்லாதவர். அசுரனைக் கொன்றார், ராட்சசனைக் கொன்றார், மனிதனைக் கொன்றார், மூன்று கோடி பேரைக் கொன்றார், 5 கோடி பேரைக் கொன்றார் என்று கசாப்புக் கடைக்காரன் மாதிரிப் பண்ணிப் போட்டு, அவரைக் கருணை உள்ளவர் என்றால் எப்படி?” என்று கேள்விகளைத் தொடர்கிறார்.
அத்துடன் கடவுள் மறுப்புக் கொள்கை பேசும் பகுத்தறிவாளர்களான நாங்கள் வன்முறையாளர்கள் கிடையாது. சமயச் சார்புள்ளவர்களிடம்தான் வன்முறை அதிகம் என்பதை வரலாறு, இலக்கியங்கள் ஆவணப்படுத்தியுள்ளன என்று குறிப்பிட்டு; கடவுள் இல்லை என்கிறவனைக் கொல்ல வேண்டும் என்பது போன்ற வன்முறைக் கருத்துகளை சம்பந்தர், தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஆகியோர் பாடினார்கள். பௌத்தர்களை ஒழித்ததை கல்லில் வெட்டி வைத்துள்ளார்கள், சமணர்களைக் கழுவில் ஏற்றினோம் என்று ஒவ்வொரு ஆண்டும் இன்றுவரை விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நாங்கள் பகுத்தறிவை அடிப்படையாக வைத்துக் கடவுள் சங்கதி பேசினாலே கொஞ்சம் மரியாதையாகப் பேசுவோம்; மானத்தோடு பேசுவோம். பகுத்தறிவு இல்லாதவர்கள், கொஞ்சம் கடுமையாகத்தான் பேசுவார்கள்; நம்மைவிட மோசமாக.  உதாரணமாகச் சொல்கிறேன். நாலாயிரப் பிரபந்தம் பாடின ஆழ்வார்கள், தேவாரம், திருவாசகம் எல்லாம் பாடின நாயன்மார்கள், இந்தப் பசங்க சொன்னதைவிட நாங்கள் அதிகமாகச் சொல்வதில்லை. அதை மனசிலே வைத்துக் கொள்ளுங்கள். நாம் இவனைத்தான் திட்டுகிறோமே தவிர, இவனுடைய புத்தியைத்தான் திட்டுகிறோமே தவிர, அந்தப் பசங்க சொன்னதுபோல, அவர்கள் பெண்டாட்டி, பிள்ளைகளை நாம் ஒன்றும் குறை சொல்லவில்லை.”
மேலும், மேலைநாடுகளின் கண்டுபிடிப்புகளான செயற்கை முறை கருத்தரிப்பு, விந்து-கருமுட்டை வங்கி, சோதனைக்குமாய் குழந்தை, நிலவிற்குச் சென்று வந்த அறிவியல் வளர்ச்சி, நவீன மருத்துவ கண்டுபிடிப்புகளால் சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பு, விமானம், தொலைபேசி போன்ற அறிவியல் வளர்ச்சிகள் பெரியாரைப் பெரிதும் கவர்ந்தன என்பதை அவர் உரையினால் தெளிவாக அறிய முடியும். அது போன்றவற்றில் நம்மவர்கள் பங்களிப்பு இல்லையே என்ற ஏக்கமும்; மாறாகப் புராணக் கதைகளை நம்பிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆற்றாமையும், புராணக் கதைகளை உருவாக்கி மக்களிடம் பரப்பும் கூட்டத்தினர் மீது எரிச்சலும் வெறுப்பும் அவர் உரையில் பன்முறை வெளிப்படுகிறது.
அவரது உரை மிக எளிய சொற்களுடன் சிறு சிறு வாக்கியங்களாகவும் மக்களைச் சென்று அடையும் வண்ணம் அமைந்துள்ளது. சாதாரண பேச்சு வழக்கில் மக்களிடம் நேருக்குநேர் பேசும் உரையாடல் முறையில் அமைந்துள்ளது. நடுவண் அரசு குறித்துப் பேசினாலும் ஏதோ ஒரு ஆள் எதிரில் நிற்பது போல உருவகித்துக் கொண்டு கேள்விகள் எழுப்புகிறார்? எடுத்துக்காட்டாக அரசை விமர்சிக்கும் இந்தப் பகுதியைக் குறிப்பிடலாம்: “நீ இல்லாவிட்டால் எங்களுக்கு என்ன நட்டம்? எங்களுக்கு என்ன உப்பு இல்லையா, தண்ணீர் இல்லையா, மலை இல்லையா, காடு இல்லையா, சமுத்திரம் இல்லையா? இல்லை நெல் விளையவில்லையா? கம்பு விளையவில்லையா? என்ன இல்லை எங்களுக்கு? உன்னாலே எனக்கு என்ன ஆகுது?” என்கிறார்.
“காங்கிரசு ஒழிந்தது; அது ஒன்றும் உருப்படியாகாது; உருப்படியாகாது” என்று 47 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்துள்ளார் என்பதையும் அறிய முடிகிறது. உரையின் இடையில் உடல் நலக் குறைவின் காரணமாக வலியால் அவர் வெளியிடும் வேதனை அரற்றலும் உரையின் ஒலிப்பதிவில் பதிவாகியுள்ளது, உரை நூலிலும் அப்பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை தியாகராயர் நகரில், 19.12.1973 அன்று தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய 5,000 சொற்களுக்கும் மேற்பட்ட இறுதிப் பேருரையிலிருந்து, அவர் போராட்ட முயற்சிக்கான நோக்கம் குறித்த உரையின் பகுதி மட்டும் 1,000 சொற்களுக்கும் குறைவாகச் சுருக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
“தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை”
 
பேரன்புமிக்க தலைவர் அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!
 
இன்றைய தினம் இந்த இடத்திலே “சமுதாய இழிவு ஒழிப்பு” சம்பந்தமாக சென்னையில் 10 நாள்களுக்கு முன்னால் நடந்த மாநாட்டின் தீர்மானத்தை விளக்கவும், மற்றும் நம்முடைய கடமைகளை எடுத்து விளக்கவும், அதன்படி பேரறிஞர்கள் பலர் அத்தீர்மானத்தை விளக்கியும், அது சம்பந்தமான மற்றும் பல அறிவு விஷயங்களை உங்களுக்கு நல்ல வண்ணம் எடுத்து விளக்கினார்கள். எல்லா விஷயங்களையும் நல்ல வண்ணம் விளக்கினார்கள். என்னையும் ஒரு முக்கியப் பேச்சாளனாக நீங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதினாலே நானும் சில வார்த்தை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.[…]
 
அண்மையில் நடக்கப்போகின்ற கிளர்ச்சியை முன்னிட்டு, சென்னையில் பல பாகங்களிலும் அது விஷயமாகத் தெளிவுபடுத்த பல கூட்டங்கள் போடவேண்டும் என்று தீர்மானித்ததன்படி, பல கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. என்னமோ இது ஒன்று இரண்டுதான் நடந்தது. இன்னமும் நடக்கலாம். ஜனவரி 26 ஆம் தேதிக்குள் மற்ற பாகங்களிலும் நடக்கலாம். நடக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.[…]
 
ஐம்பது வருஷமாய் உழைத்ததிலே ஏதோ கொஞ்சம் மாறுதல். அதுவும், எதிரே நம்மைப் பார்த்து, சூத்திரன் என்று சொல்லமாட்டான். வீட்டிலே பேசுவான்.  இந்தச் சூத்திரப் பசங்க என்றுதான் பேசுவான். இந்த இழிவிலே இருந்து நீங்கணும். […]
 
இன்றைக்குத் திருட்டுத்தனமாக மறைவாகப் பேசுகிறவர்கள், நாளைக்கு வெளிப்படையாகப் பேசுகிறான். பேசுகிறவனை மாலைப் போட்டு வரவேற்கிறான். அவனுக்கு விளம்பரம் கொடுக்கிறான். எனவே, தோழர்களே, நம்முடைய நிலைமை உலகத்திற்கே தெரியும் மானக்கேடான நிலைமை. இரண்டாயிரம் வருஷமாக இருக்கிற முட்டாள்தனத்தைவிட, இந்த சட்டத்திலே இருக்கிற இந்துலாவிலும் மற்ற அரசியல் சட்டத்திலேயும், அது பெரிய முட்டாள் தனம். அதைவிட, இதைச் சொல்லி மாற்றச் செய்யாமல், இந்த ஆட்சியிலே நாம் குடிமகனாக இருக்கிறோமே, அது மகாமகா மானங்கெட்டத்தனம். […]
 
இல்லாவிட்டால், விதி, இன்னும் எத்தனை நாள்களுக்கு இப்படியே இருப்பது. இப்படியே இருப்போம் என்பது என்ன நிச்சயம்? நாம் ஒழிந்தால் நாளைக்கு மாற்றிவிடுகிறான். மாற்றினானே! நம்முடைய கலைஞர் கருணாநிதி அவர்கள், “கல்தான், யார் வேண்டுமானாலும் பூஜை பண்ணலாம்; ஆனால், முறைப்படி செய்யணும்” என்று யாருக்குமே அனுமதி கொடுத்தார். […]
 
நாதி இல்லையே, சொல்றதற்கு ஆள் இல்லையே; சிந்திக்க ஆள் இல்லையே! ஒரு ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான்? பெண்டாட்டியைத் தவிர மற்றதை எல்லாம் கொடுக்கிறானே. ஓட்டு வாங்குவதற்கு. இதற்குக் கவலையே படமாட்டேன் என்கிறானே. முன்னேற்றக் கழகத்துக்காரனை, மற்றவனை எல்லாம், என்னை எல்லாம் வைவான். இவனுக்கு என்ன கேடு, இந்த வேலையை ஏன் பண்ணிக்கிட்டு இருக்கிறான் என்று. அவனுக்கு ஓட்டுதான் பெரிது. […]
 
கோவில் கிட்டே போனதும், டக்கென்று வெளியே நின்றுகொள்கிறானே, வாசற்படிக்கிட்டே! ஏன்டா, அங்கே நிற்கிறாய் என்றால், நான் சூத்திரன், உள்ளே போகலாமா? என்கிறான். எப்போது, 1973 லே. நம்ம நாடு, நம்ம சமுதாயம், நமக்கு மானம், அவமானம் என்கிறது ஒன்று இருக்கிறது அப்படின்னு சொல்லமுடியுமா? அது பெரிதில்லையே, அதற்காக யார் பாடுபடுகிறார்கள். நாங்கள்தானே மூணே முக்கால் பேரு; மற்றவன் எல்லாம் வேற வேற கட்சி. ஒரு கட்சிக்காரன்கூட கடவுளைப்பற்றி பேசவேமாட்டான். […]
 
இவ்வளவு பண்ணினோம், இவ்வளவு பிரச்சாரம் பண்ணினோம்; இவ்வளவு மாநாடு எல்லாம் நடத்தினோம். எவன் எங்களை ஆதரித்தான்? பயப்படுகிறானே! ஆதரித்தால் ஓட்டுப் போய்விடுமே, ஆதரித்தால் அரசாங்கம் என்ன பண்ணுமோ!  அருமைத் தோழர்களே, இப்போது நமக்கு வேண்டியதெல்லாம் மான உணர்ச்சி வேணும்; நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும். அப்புறம் மேலே போகலாம்; போகணும். […]
 
காமராசர் நம்மோடு சேர்ந்ததால், கொஞ்சம் காரியங்களைச் செய்தார். பக்தவத்சலம் வாயிலே வருமா ஜாதி ஒழியணும் என்று. இல்லை, சுப்பிரமணியம் வாயிலே வருமா ஜாதி ஒழியணும் என்று. சொன்னாலும், காங்கிரசில் இருக்க முடியாதே! அந்த மாதிரித் திட்டத்தோடு இருக்கிறானுங்க; அது இனிமேல் உருப்படியாகுமா? முன்னேற்றக் கழகம் ஒழிந்தாலும், காங்கிரசு ஒழிக என்கிற, ஜாதி ஒழிக என்கிற சீர்திருத்த உணர்ச்சி உள்ளவர்கள்தான் இனி வருவாங்க […]
 
ஆனதினாலே, மக்கள் அறிவு பெற்றுக்கிட்டு வருகிறார்கள். பயன்படுத்திக்கொள்ள வேணும். அவர்களுக்கு விஷயங்களை எடுத்துச் சொல்லணும், தெரியாது வெகுப் பேருக்கு. எனவேதான், இப்போது நாம் முன்னேற்றம் அடையணும்; மேலே வருவதற்குள்ளே பள்ளத்திலே இருந்து நிலத்து மட்டத்துக்கு வரணும்; அப்புறம் மேலே ஏறணும். இப்போது நாம் பள்ளத்திலே கிடக்கிறோம். என்ன? நாலாவது ஜாதி, ஐந்தாவது ஜாதி, தீண்டப்படாத ஜாதி, பார்ப்பானுடைய வைப்பாட்டி மக்கள் இப்படியல்லவா இருக்கிறோம் நாம். இது மாறவேணும், அப்புறம் மேலே போகணும்; மாறாது மேலே போக முடியுமோ? யாரும் கவனிக்கவில்லை. கவனிக்காமல் போனால், நாங்கள் சும்மா இருக்கலே; ஒன்று போனால் ஒன்று செய்துகிட்டேதான் இருக்கிறோம். நாளுக்கு நாள் கொஞ்சம் மாறிக்கிட்டேதான் வந்தது. இன்னும் மாறணும். எங்களால்தான் முடியும் என்று இருக்கிறது நிலைமை. வேற எந்தக் கட்சிக்காரனுக்கும் இதிலே கவலை இல்லை. இவங்களோடு சேர்ந்தால் ஓட்டுப் போய்விடுமே என்று பார்க்கிறான்; மானம் போறதைப்பத்தி அவனுக்கு வெட்கமில்லை. ஆகவே, நாம் மாநாடு போட்டோம். இந்த மாநாடு போட்டதற்குக்கூடக் காரணம் சொன்னாரே! தீண்டாமை இல்லை என்று சட்டத்திலே எழுதிப் போட்டான்; எந்த விதத்திலேயும் தீண்டாமை இல்லை என்று சொல்லிவிட்டான். ஆனால், மதத்திற்கு மதம் உண்டு என்று ஒரு அடையாளம் வைத்துவிட்டான்; நிபந்தனை.[…]
 
இனிமேல் நாம் இழிமகன். எனவேதான், மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியத்திற்கு வந்துவிட்டோம்; அவைகளையெல்லாம் பார்த்தோம், மாற்றி ஆகணும். சட்டத்திலேயும், சாஸ்திரத்திலேயும் இருக்கிறதினாலே, முதல்லே அதைக் கேட்டோம். சட்டத்திலே இருக்கிறது ஒழியவேணும் என்றால், சட்டம் ஒழிந்தால் உண்டு. […]
 
நாமதான் அதைப்பற்றிக் கவலைப்படுகிறோம். மாற்றியாகணும் என்கிறோம். நேற்று நடந்த மகாநாட்டுக்கு வேற கட்சிக்காரர்கள் யாரும் ஒண்ணும் வரவில்லையே, வரலாம் அல்லவா? அவனவன் சக்திக்கு, அனுசரணையா எங்களுக்கு வந்து உதவி பண்ணலாமில்லே. ஒருத்தரும் வரவில்லை. எங்கள் ஆட்கள்தான். அவன், டில்லிக்காரன் சி.ஐ.டி.யைப் போட்டுவிட்டான். வேற கட்சிக்காரன் எவனாவது உள்ளே வருகிறானா பார் என்று. அதைப் பார்த்து ஒருத்தனுமே வரவில்லை. மந்திரிகளா, அவனோ, மற்ற கட்சிக்காரனா ஊகும், வரவில்லை. இழிவு ஒழிய வேணும் என்று சொன்னால், இழிவுக்கு ஆளானவன் எல்லாம் வரணுமே, வந்து உதவிக்கு நிற்க வேணுமே. நாங்கள்தான். ஆனதினாலே, விஷயம் ரொம்ப முக்கியமானது மாறியே ஆகணும், மாறாவிட்டால் சாகணும்; அந்த உணர்ச்சி உள்ளவன்தான் மிஞ்சுவான். […]
 
ஆகவேதான், எந்தச் சங்கதி எப்படி ஆனாலும், இப்போது நாம் ஆரம்பித்துள்ள ‘இழிவு ஒழிவு கிளர்ச்சிக் காரியம்’ மிகவும் நியாயமானது என்பதற்கு என்ன ஒரு உதாரணம் உங்களுக்கு வேண்டுமானால், இன்றைக்கு எத்தனை நாளாகிறது? 10 நாளாகிறது. நல்லா கவனிக்கணும். இரகசியமா இல்லை. பத்தாயிரம் பேருக்கு மேலே வந்தார்கள். 30 பத்திரிகைக்காரர்கள் வந்தார்கள். எல்லாத் தீர்மானத்தையும் அவரவர் பத்திரிகையில் போட்டார்கள். இந்தியா பூராவும் பரவியது, அடுத்த நாளே பரவியது. நான் கேட்கிறேன், கவனியுங்கள், இந்தப் பத்து நாளா ஒருவனாவது இந்தத் தீர்மானத்தை எதிர்த்துப் பேசினானா? எந்தப் பத்திரிகையிலேயாவது செய்தி வந்ததா? ஏன் சொல்லுகிறேன், நாம் பண்ணினது அவ்வளவு நேர்மையான காரியம். எவனாலேயும் ஆட்சேபிக்க முடியவில்லை. […]
 
பண்ணனும், நாளைக்குக் கிளர்ச்சி பண்ணினால் அவன் பிடிப்பான்; பிடிக்கவில்லையானால் பண்ணிக்கொண்டு இருப்போம்; பிடிக்க ஆரம்பித்து விட்டான் என்றால், 5 ஆயிரம், 10 ஆயிரம் என்று ஜெயிலுக்குப் போவோம். நாம் தயாராய் இருக்கிறோம், காரியம் முடிகிறவரைக்கும் ஜெயிலிலே வேணுமானாலும் இருக்கத் தயாராய் இருக்கிறோம் என்று நாம் காட்டணும். அப்புறம் அவன் பரிகாரத்திற்கு வரணும் […]
 
[இந்தப் பகுதியை பேசிக்கொண்டிருக்கும் பொழுது வலியில் அம்மா .. அஆ.. அம்மா .. என்று பெரியார் துடிப்பதும், சிறிது இடைவெளிக்குப் பிறகு உரையைத் தொடர்வதும் ஒலிப்பதிவில் பதிவாகியுள்ளது]
 
இது எப்படி அய்யா தப்பாகும். இதனாலே எப்படி நாம் கெட்டவனாவோம்; இதனாலே நாம் எப்படி அரசுக்கு விரோதமாவோம்? கவனியுங்கள், தாய்மார்களே! தோழர்களே! இந்த விஷயங்களையெல்லாம் முதலிலே சொன்னோம். இது நம்ம கடமை. 25 ஆம் தேதி ஆரம்பிப்போம். மளமள மளவென்று வரணும்; என்ன சொல்கிறோமோ அதைச் செய்யணும். சட்டங்களை எரிக்கிறது முதற்கொண்டு, மறியல் பண்ணுறது முதற்கொண்டு இன்னமும் பல காரியங்கள் திட்டம் போட்டுச் செய்யணும். கலகத்துக்குப் போகமாட்டோம்; எவனையும் கையாலே தொடமாட்டோம். எவனாவது அடித்தாலும், பட்டுக் கொள்வோம், திருப்பி அடிக்கமாட்டோம். ஞாபகத்திலே வைத்துக்கொள்ளுங்கள்! நான், நீ என்று மீசையை முறுக்கக்கூடாது. அடித்தால் பட்டுக்கணும். போலீஸ்காரன் இருப்பான், அதிகமாக அடிக்காமல் பார்த்துக் கொள்வான். அப்புறம் என்னத்துக்கு நாம் ஒருத்தனை அடிக்கப் போகணும்; நாம் யாரோடு சண்டைப் பிடிக்கிறோம்?[…]
 
ஆனதினாலே, தோழர்களே, பக்குவம் அடையணும் நாம். எதற்காக இங்கே நான் நாத்திகப் பிரச்சாரம் பண்ணவரவில்லை. கடவுள் இல்லை என்று உங்களுக்குச் சொல்வதற்காக வரவில்லை. அது வேறே, நாங்கள் பண்ணிக்கிறோம். அவனவன் நம்பட்டும், ஆராயட்டும், இருக்கட்டும். முட்டாள்தனமான காரியங்கள், பகுத்தறிவுக்கு ஒவ்வாத காரியங்கள், மானத்துக்குக் கேடான காரியங்கள் செய்கிறதற்கு நாம் இடம் கொடுத்துக்கிட்டு, நாம் மனுஷனாக வாழணுமா?[…]
 
ஆனதினாலே, தயவு செய்து நீங்கள் விஷயங்களைத் தீவிரமாகக் கவனிக்கணும். ரொம்பத் தீவிரமாய்க் கவனிக்கணும். ஜெயித்தே ஆகணும்! நான் சொல்கிறேன், என்று கேலி பண்ணாதீர்கள், நீ என்ன நாளைக்கு சாகப் போறே, துணிந்து வந்திருப்பாய் என்று.  நானே பண்ண வேணும் என்று இல்லை; நீங்கள் பண்ண வேண்டிய காரியத்தைத்தானே நான் செய்கிறேன். அதனாலே எல்லோரும் துணியணும்; மளமளவென்று கலந்துகொள்ளணும்.
 
[இதற்குப் பிறகு, இதுவரை பேசிய செய்திகளை, கருத்துகளையே பெரியார் மீண்டும் வேறுவகையில் பேசுகிறார், ஆகவே அவை இங்கு தவிர்க்கப்படுகிறது]
இந்த உரையாற்றிய சில நாட்களில், ஒரு வாரத்திற்குள், உடல் நலக் குறைவின் காரணமாக டிசம்பர் 24, 1973 அன்று தமது 94ஆவது வயதில் பெரியார் மறைந்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று குரல் எழுப்பி கோயில் கருவறையில் கடைபிடிக்கப்படும் தீண்டாமையை அகற்ற தம் வாழ்நாள் முழுவதும் முயன்று போராடிய பெரியார் இறுதியில் அது நிறைவேறும் முன்பே மறைந்தார்.
அவரது இறுதிப் பயணத்தில், ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக இயலவில்லை, தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளுடன் அவரைப் புதைக்கிறோம்’ என்றார் அன்றைய முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அரசியற் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்ற சட்டமன்றத் தீர்மானத்தையும், நாடாளுமன்ற தனிநபர் மசோதாவினையும் 1974 இல் முதல்வர் கலைஞர் கருணாநிதி கொண்டுவந்தார். ஆனால் அதற்குள் அரசியல் களத்தில் பற்பல மாற்றங்கள், எம். ஜி. ஆரால் கட்சியில் பிளவு, இந்தியாவின் இந்திரா காந்தியின் அவசரநிலைப் பிரகடனம், 1976ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சி கவிழ்ப்பு, ஆட்சி கைமாறிப்போனது என்ற பல மாற்றங்கள் நிகழ்ந்தன. திராவிட கழகம் தொடர்ந்து வற்புறுத்திய காரணத்தால் தொடர்ந்து பதவி ஏற்ற எம். ஜி ஆர். தனது காலத்தில் இதற்காக 1982ஆம் ஆண்டு நீதியரசர் மகாராஜன் குழு என்றொரு குழு அமைத்தார். அக்குழுவினர், வேத, ஆகம பயிற்சிப் பள்ளிகளை நிறுவி அதன்மூலம் அனைத்து சாதியினரையும் பயிற்றுவித்து, ஆகம விதிகள் மீறப்படாமல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கலாம் என்ற பரிந்துரையை அரசுக்கு வழங்கியது.
எம். ஜி ஆர். மறைவிற்குப் பின்னர் பதவிக்கு வந்த ஜெயலலிதாவின் அண்ணா.தி.மு.க அரசு, ‘வேத பயிற்சி பள்ளிகள்’ நிறுவப்படும் என்று அறிவித்தது. அப்பெயர் ஏற்புடையது அல்ல என்று போராடி அவற்றை ‘அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள்’ எனப் பெயர்மாற்றம் செய்ய வைத்தது திராவிடர் கழகம். ஆனால் அறிவிப்பைத் தவிர வேறெந்த ஏற்பாட்டையும் ஜெயலலிதாவின் அரசு முன்னெடுக்கவில்லை. மீண்டும், 2006 இல் ஆட்சி அமைத்தார் கலைஞர் கருணாநிதி. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான தனிச்சட்டத்தை இயற்றிய கருணாநிதி, ‘பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்குவதற்கான நடவடிக்கைதான் இது’ எனக் கூறினார். மேலும் கலைஞர் கருணாநிதியின் அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை நிறுவியதுடன் 69% விழுக்காடு அடிப்படையில் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்ற அரசாணையையும் வழங்கியது.
இம்முறை இதை எதிர்த்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஆதி சைவச் சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் மற்றும் தென்னிந்தியத் திருக்கோயில் பரிபாலன சபை ஆகியவற்றின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  முதலில் இவ்வழக்கில் நீதி மன்றம் இடைக்காலத் தடை வழங்கியது. பிறகு 16.12.2015 அன்று, சுமார் 9 ஆண்டுகளுக்குப் பின்னர், நீதியரசர் திரு. ரஞ்சன் கோகாய், நீதியரசர் திரு. ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் தமிழக அரசின் சட்டத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. மூன்றாண்டுகளுக்குப் பின்னர் ‘தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும்’ மதுரை அழகர் கோவிலுக்குட்பட்ட அய்யப்பன் கோவிலில் அர்ச்சகராக மாரிச்சாமி என்ற பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர் பணியமர்த்தப்பட்டார். ஆனால் இந்த ஐயப்பன் கோயில் ஆகமம் இல்லாதது. ஆகமம் உள்ள கோயில்களில் பார்ப்பனர் அல்லாதவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
அர்ச்சகர் பயிற்சி நிலைய திட்டத்தின்கீழ் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் உட்பட மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர். பயிற்சி பெற்ற 207 பேர்களில் ஒருவரை மட்டும் அர்ச்சகர் பணிக்கு அமர்த்திய அதிமுக அரசு பின்னர் அது குறித்து அக்கறை காட்டவில்லை என்பதுதான் இன்றைய நிலை. பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு இன்றுவரை ஆகமக் கோவில்களில் பணிநியமனம் வழங்கப்படவில்லை. ஆகமம் முறையைக் கடைபிடிக்கும் பெரிய கோயில்களில் பிராமணரல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்படும்போது தான் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் முழுமையாக அகற்றப்படும் என்பது பெரியாரிய கொள்கையாளர்களின் கருத்து.
பிராமணரல்லாத ஒருவர் இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றால் கட்டுப்பாடு அரசின் கையில் உள்ளது என்பது பொருள். இதனை முறியடிக்க விரும்புவோருக்கு சட்டப்படி நேரடியாக எதிர்க்கவும் வழியில்லை. அதனால், இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளின் மீது குற்றங்கள் பல சுமத்தப்பட்டு வருவது கண்கூடு. இந்து சமய அறநிலையத் துறையை ஒழித்துக் கட்டும் நோக்கில் சனாதன ஆர்வலர்களின் முயற்சி தற்பொழுது வேகம் பிடித்துள்ளது.
சமநீதிக்காகக் குரல் எழுப்பி, மக்களுக்கு எழுச்சியூட்டி, துடிப்புடன் இறுதி வரை தனது தள்ளாத வயதிலும் சமுதாய இழிவு ஒழிப்புக்காகப் போராடிய தந்தை பெரியாருக்கு வீரவணக்கம்.
மேலதிகத் தகவலுக்கு உதவக் கூடியவை:
(1) தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை: மரண சாசனம், தந்தை பெரியார், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு, கிண்டில் பதிப்பு, 2017
(2) தமிழர் தலைவர் தந்தை பெரியார் – ஓர் கையடக்க வரலாறு, பெ. மருதவாணன், பெரியார் இயக்கம் பப்ளிகேஷன்ஸ், 2010, பக்கம் 59-60
(3) பெரியாரின் மரண சாசனம், இறுதி ஊர்வலம் – http://www.madhumathi.com/2012/12/blog-post_7375.html
(4) தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை – காணொளி:  https://youtu.be/xchSEp93RN0
(5) தமிழகத்தில் முதன்முறையாகப் பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமனம்: சமூக நீதிக்கான முக்கிய நகர்வு – https://www.hindutamil.in/news/reporters-page/139846-.html
(6) பெரியார் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்படுமா? கருவறை தீண்டாமை ஒழியுமா? – https://www.vinavu.com/2020/09/17/periyar-142-archakar-manavar-sangam-prpc/

News

Read Previous

கதீஜா டீத்தூள்

Read Next

மக்கள் குரலே மகேசன் குரலாகுமா!

Leave a Reply

Your email address will not be published.