பூமியைப் போலவே உள்ள மூன்று கிரகங்கள்

Vinkmag ad

அறிவியல் கதிர்

பூமியைப் போலவே உள்ள மூன்று கிரகங்கள்
பேராசிரியர் கே. ராஜு

தூரத்திலுள்ள நட்சத்திரங்களைச் சுற்றி பூமியைப் போன்று உயிரினங்கள் வாழத்தகுந்த கிரகங்கள் உள்ளனவா என்ற தேடல் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அண்மையில் அமெரிக்காவிலுள்ள மசாசூட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தையும் பெல்ஜியத்திலுள்ள லீஜ் பல்கலைக்கழகத்தையும் சேர்ந்த வானவியலாளர்களின் சர்வதேசக் குழு இந்தக் கோணத்தில் நம்பிக்கையளிக்கக்கூடிய மூன்று கிரகங்கள் இருப்பதைக் கண்டுபிடித்து அறிவித்துள்ளனர். அந்த கிரகங்கள் அக்வேரியஸ் நட்சத்திரக் கூட்டத்தைச் சேர்ந்த பூமியிலிருந்து 39 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள ஒரு வெள்ளைக் குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றன. புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட  அந்த கிரகங்களின் அளவும் வெப்பநிலையும் வெள்ளி கிரகம் மற்றும் பூமியின் அளவையும் வெப்பநிலையையும் ஒட்டி இருப்பதாக வானவியலாளர்கள் கூறுகின்றனர்.
சூரியக் குடும்பத்திற்கு அப்பால் உயிரினம் உள்ளதா என்று இதுவரை நடந்த தேடலில் அதிகமான சாத்தியக்கூறு உள்ள இலக்குகளாக இந்த கிரகங்களை எடுத்துக் கொள்ளலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. சிலியில் உள்ள லா சில்லா வான் ஆய்வகத்தில் டிராப்பிஸ்ட் என்று பெயரிடப்பட்ட 60 செ.மீ. தொலைநோக்கியை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர். சூரியனைவிட  மிகக் குளிர்ச்சியான, மங்கலான குள்ள நட்சத்திரங்களே அவர்களது இலக்கு. அப்படித் தேடியதில் இந்த வெள்ளைக் குள்ள நட்சத்திரத்தைக் கண்டுபிடித்து அதற்கு டிராப்பிஸ்ட்-1 (TRAPPIST-1) எனப் பெயரும் சூட்டிவிட்டனர்.
மைக்கேல் கில்லான் தலைமையிலான பெல்ஜியம் லீஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த நட்சத்திரத்திலிருந்து வெளிவரும் வெளிச்சம் குறிப்பிட்ட இடைவெளிகளில் சற்று மங்குவதைக் கண்டறிந்தனர். பூமிக்கும் நட்சத்திரத்திற்கும் இடையே சில பொருட்கள் குறுக்கிடுவதே இதற்குக் காரணமாக இருக்க முடியும் என அவர்கள் ஊகித்தனர். நட்சத்திரத்தைச் சுற்றி வந்த மூன்று கிரகங்களே அந்தப் பொருட்கள் என்பது விரிவான ஆய்வுக்குப் பிறகு தெரியவந்தது.
இன்னமும் பெரிதான தொலைநோக்கிகளைக் கொண்டு கூர்நோக்கியதில் அந்த கிரகங்கள் அளவில் பூமியை ஒத்தவை எனத் தெரிந்தது. அதில் ஒரு கிரகம் 1.5 நாட்களிலும் இரண்டாவது கிரகம் 2.4 நாட்களிலும் தங்கள் நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றன. மூன்றாவது கிரகம் நட்சத்திரத்தைச் சுற்றிவர 4.5லிருந்து 73 நாட்கள் வரை எடுத்துக் கொள்கிறது. சுற்றிவருவதற்கு மிகக் குறைந்த நேரமே எடுத்துக் கொள்ளும் முதல் இரண்டு கிரகங்கள், டிராப்பிஸ்ட்-1  நட்சத்திரத்திலிருந்து பூமியிலிருந்து சூரியன் இருப்பதைவிட 20லிருந்து 100 மடங்கு நெருக்கமாக இருக்கின்றன. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், நட்சத்திரத்திற்கு மிக அருகாமையில் இருந்தபோதும் அவற்றின் வெப்பநிலை மிக அதிகமாக இல்லை என்பதே. சூரியனைவிட  டிராப்பிஸ்ட்-1 நட்சத்திரத்திலிருந்து வெளிவரும் வெப்பமும் வெளிச்சமும் மிகக் குறைவாக இருப்பதே அதற்குக் காரணம்.  அந்த வெப்பமே கூட பூமியில் உள்ளதுபோல உயிரினங்கள் வாழ்வதற்கான வெப்பநிலையை விட அதிகம்தான். இருப்பினும் அந்த கிரகங்களின் சில பகுதிகளாவது உயிரினம் வாழத்தகுந்த சூழலில் இருக்கலாம் என்பது வானவியலாளர்களின் எதிர்பார்ப்பு. மூன்றாவது கிரகத்தின் சுற்றுப்பாதை பற்றி இன்னமும் அவர்கள் ஆராய வேண்டியுள்ளது.
ஒரு கிரகம் தன்னுடைய நட்சத்திரத்தைச் சுற்றிவரும்போது, நட்சத்திரத்திலிருந்து பூமிக்கு வந்துசேரும் ஒளி அவ்வப்போது மறைக்கப்படும். அந்த நேரங்களில் பூமிக்கு வந்து சேரும் ஒளியின் மீது கிரகத்தின் வாயுமண்டலம் ஏற்படுத்தும் விளைவினை ஆய்வு செய்து அந்த கிரகத்தில் உயிரினம் இருப்பதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பதை வானவியலாளர்கள் கண்டுபிடிப்பது வழக்கம். ஆனால் பெரும்பாலான நட்சத்திரங்களைச் சுற்றிவரும் கிரகங்கள் ஏற்படுத்தும் இந்த விளைவினைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. காரணம், பூமிக்கு வந்துசேரும் ஒளியின் மீது ஏற்படும் மாற்றம் மிகக் குறைவானது. ஆனால் பொதுவாக ஒரு நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி பிரகாசமானது. எனவே, அந்த ஒளியின் பின்னணியில் இந்த சிறிய மாற்றத்தைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. ஆனால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மூன்று கிரகங்களைப் பொறுத்த அளவில் உயிரினம் இருப்பதற்கான சாத்தியத்தைக் கண்டுபிடிப்பது ஒப்பீட்டு அளவில் எளிது. காரணம், டிராப்பிஸ்ட்-1 குள்ள நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி மிகப் பிரகாசமாக இல்லாததால், கிரகங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் அளவிடக்கூடிய வகையில் இருக்கும்.
சூரியனுக்கு அருகே உள்ள நட்சத்திரங்களில் 15 சதமானவை வெப்பநிலை குறைவாக உள்ள குள்ள நட்சத்திரங்களே. இதனால் பூமிக்கு வெளியே உயிரினத்தைத் தேடும் பயணத்தில் இந்த மூன்று கிரகங்களின் கண்டுபிடிப்பு முக்கியமானதொரு மைல்கல்லாக இருக்கும் என வானவியலாளர்கள் கணிக்கின்றனர்.
(உதவிய கட்டுரை : ஜூலை 2016 ட்ரீம் 2047 இதழில் பிமன் பாசு எழுதியது)

News

Read Previous

கவிதாஞ்சலி!

Read Next

முன்விரோத தகராறு: கத்தியால் குத்திய 4 பேர் மீது வழக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *