நீலம் பாரித்துக் கிடக்கிறாள் மலைகளின் இளவரசி

Vinkmag ad

நீலம் பாரித்துக் கிடக்கிறாள் மலைகளின் இளவரசி

–    மு.ஆனந்தன் –

1997ல் வெல்பெர்ட் பிரிட்டோ என்ற படிப்பறுந்த 17 வயது இளைஞன் இல்லை
சிறுவன் கொடைக்கானல் ஹிந்துஸ்தான் யுனிலிவர் தர்மோமீட்டர் பேக்டரியில்
வேலைக்கு சேர்ந்தான். உடைந்து கிடக்கும் தர்மோமீட்டர்களை சேகரிப்பதும்
பேக்டரியை சுத்தம் செய்வதும்தான் அவன் வேலை. வேலை  நிரந்தரக்
கனாவிலிருந்தவனுக்கு தலைவலியே நிரந்தரமானது. தலையில் கர்சீப்பை
இறுகிக்கொண்டு வேலை செய்தான். தலைவலி தாங்கும் எல்லை தாண்டியதால் 1999ல்
வேலையை துப்பிவிட்டு டாக்சி ஓட்டினான்.

உயிர்களை உறிஞ்சிய தர்மோமீட்டர்கள் ;

ஒருநாள் உறங்கத்தில் எழுந்து  இரத்த வாந்தி எடுத்தான். அவனை சொரண்டிப்
பார்த்த டாக்டர்கள் இரண்டு கிட்னியும் கெட்டுப்போச்சுன்னு அதிர
வைத்தார்கள். நுரையீரலில் பனி போல் ஏதோ படர்ந்திருப்பதைப் பார்த்து
வியந்தார்கள்.  சிறிது காலம் டயாலிசிஸ் செய்து மரணத்திற்கு வாய்தா
வாங்கிய பிரிட்டோ 23 வயதில் அதனிடம் மண்டியிட்டு சரணடைந்தான். அவனுடைய
அம்மா அப்பா எட்வர்ட் பிரிட்டோவும், ராணியும்  ஒரே மகனை காப்பாத்த
நகைகளையும், வீட்டையும், மாடுகளையும் எல்லாத்தையும் வித்திட்டோம், இப்ப
எங்களுக்கு மகனும் இல்ல எதுவும் இல்ல என்று நொருங்குகிறார்கள்.

யுனிலிவரில் பணிபுரிந்த மார்கெரட்க்கு மூளை வளர்ச்சி குன்றிப் பிறந்தான்
நிதிஸ். 15 ஆண்டுகளாக நடை பிணமாக வாழ்கிறான். இப்படி   1000 க்கும்
மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நுரையீரல், நரம்பியல்,  சிறுநீரகம், ஈறுகள்,
பற்கள்,  தோல் நோய்களும் கடுமையான தலைவலி, உடல் நடுக்கம், மயக்கம்,
மலட்டுத்தன்மை போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. கடந்த 18 ஆண்டுகளில்
45 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். அதில் 33 நபர்கள் பாதரச நச்சால்
ஏற்பட்டும் நோய்களால் இறந்துள்ளனர். பாதரச பாதிப்புகள் குறித்து
தங்களுக்கு எதுவும் சொல்லவில்லையென்றும் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும்
வழங்கவில்லை என்றும் சொல்கிறார்கள். மரணங்களும் நோய்களும் வேலையோடு
தொடர்புடையதல்ல என மருத்துவ நாட்டாமைகள் தீர்ப்பளித்து விட்டதால் சல்லிப்
பைசா இழப்பீடு கிடைக்காமல் நீதிமன்ற வாசலில் 15 ஆண்டுகளாக பசி
மயக்கத்தில் சுருண்டு கிடக்கிறார்கள்.

இந்தியா வந்தாரு ஜேம்ஸ் பாண்ட் ;

1982 ல் சுற்றுச்சூழல் மாசு குறித்த விழிப்புணர்வால் அமெரிக்காவில்
பருப்பு வேகாமல் இளிச்சவாயன் இந்தியாவில் டேரா போட்டது  பாண்ட்ஸ்.
பாண்ட்ஸ் யாருன்னு தெரியுமில்ல. ஜேம்ஸ் பாண்ட் இல்ல. அதான் பாண்ட்ஸ்
பவுடரு, சோப்பு, காது கொடையுறமே பட்ஸ்ஸு.  ஆங் அதே பாண்ட்ஸ்தான்
கொடைக்கானலில் பாண்ட்ஸ் இந்தியா லிமிடெட் என்ற தெர்மோமீட்டர் பேக்டரி
ஆரம்பிச்சாரு.  பொறகு 1987ல் அதை ஹிந்துஸ்தான் யுனிலிவர் வாங்கிடுச்சு.
சுற்றுலா தவிர வேறு தொழிலே இல்லாத ஊருக்கு வந்த ஒரே பேக்டரி.  தங்களை
காப்பாத்த வானத்திலிருந்து தேவதூதனே வந்துட்டார்ன்னு ரூம் போட்டு
சந்தோஷப்பட்டாங்க சனங்க. அமெரிக்காவிலிருந்து பாதரசத்தை இறக்குமதி செய்து
தெர்மோமீட்டர்கள் தயாரித்து ஏற்றுமதி செய்யும். பாதரசக் கழிவுகளை மட்டும்
யாருக்கும் தெரியாம மண்ணுல புதைச்சிடும்.

–    2  –

பஜனை மடமேறிய பாதரச புராணம் ;

2001ல் தொழிலாளர்களுக்கு கிட்னி, ஈரல் தொடர்பான பாதிப்புகள்
வெடிக்கத்துவங்கியது. பாதரசம் தோய்ந்த உடைந்த கண்ணாடிக் குழாய்கள்
சோலைக்காடுகளிலும் காய்லான் கடையிலும் குவிக்கப்பட்டிருந்தது.
யுனிலிவரின் பாதரச புராணம் பஜனை மடமேற தொழிலாளர்கள் சுற்றுச்சூழல்
ஆர்வலர்களின் போராட்டத்தால் மூடப்பட்டது. விதிமுறைகளை மீறி 5.3 மெட்ரிக்
டன் பாதரசக் கழிவுக்குழாய்களை விற்றதாக ஒப்புக்கொண்டது. சோலைக்காடுகளில்
புதைக்கப்பட்ட 290 டன்  பாதரசக் கழிவுகளை  மீட்டு மறுசுழற்சிக்காக
அமெரிக்காவிற்கு அனுப்பியதாகச் சொல்கிறது. ஒரு பாக்கெட் சாக்கலெட்டை
ஒளித்துக்கொண்டு கேட்டால் ஒரு சாக்கலெட்டை எடுத்துக் கொடுக்குற
குழந்தைமாதிரி  இத்துணுன்டுதான் புதைச்சேன் இப்புட்டு மீட்டேன்னு
சொல்லுது யுனிலிவர். இத நாம நம்பனுமாம்.

கொடைக்கானல் நீர்நிலைகள், மீன்கள், மண்மாதிரிகளை ஆய்வு செய்த
அணுசக்தித்துறை  ஒரு க்யுபிக் மீட்டர் மண்ணில் 0.5 – 10 நானோ கிராம் என்ற
எல்லை தாண்டி 1.32  மைக்ரோ கிராம், ஏரியில் 7.9 நானோ கிராம், மீன்களில்
120 முதல் 290 மில்லி கிராம் பாதரச நச்சு கலந்துள்ளதாக கண்டறிந்துள்ளது.
இது 132  முதல்  2,640  மடங்கு அதிகமானது.  ஆக யுனிலிவர் பாம்பின் பாதரச
நாக்குகள் தீண்டி நீலம் பாரித்துக்கிடக்கிறாள் மலைகளின் இளவரசி. ஒரு
லிட்டரில் 0.002 மி.கி. பாதரசம் கலந்த தண்ணீரைக் குடித்தாலே கிட்னி
அவுட்டாகிவிடுமாம். பாதரச அளவு அதிகமாக இருப்பதால்தான் செதில்களற்ற சுறா,
திமிங்கலத்தை நாம் சாப்பிடுவதில்லை. வெளங்கறமாதிரிச் சொன்னா  வெள்ளி
நீர்வீழ்ச்சியில் போட்டோ எடுத்து பேஸ்புக்குல போடலாம். தண்ணீரைக் குடிக்க
முடியாது. ஏரியில படகு சவாரி போகலாம். மீனைப் புடிச்சுத் திங்க முடியாது.
மீறினா உங்க கிட்னிக்கு கம்பெனி பொறுப்பேற்காது.

இவனுங்க யாரு ஆளுங்க;

1 கிலோ மண்ணில் 0.1 மி.கி. பாதரசம் கலந்திருந்தாலே அது நஞ்சாக்கிவிடும்
என்பது உலகறிந்த உண்மை.  துவக்கத்தில் 10 மி.கி. என்ற டச்சு தரத்திற்கு
சுத்தம் செய்வதாக சொன்ன யுனிலிவர் பிறகு 25 மி.கி என்ற தரத்திற்கு
தாழ்ந்துவிட்டது. 2008ல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 20 மி.கி என்ற
தரத்தை நிர்ணியம் செய்தது. இந்த வாரியம் உண்மையில நம்ம ஆளா இல்ல அவனுடைய
ஆளான்னு டவுட்டு வருமே !

எந்த விகிதத்தில் சுத்தப்படுத்துவது என்ற விவாதமே 14 வருடங்களைத்
தின்றுது.  இப்போதுதான் சுத்தப்படுத்தும் திட்டத்தை யுனிலிவர்
அளித்துள்ளது. ஆனால் அதன் தரம் ஏற்புடையதல்ல.  அதன் தலைமையிடம்
இங்கிலாந்தில் 1 மி.கி தரம். நமக்கு 25 மி.கி தரமா. நம்முடைய மண்ணும்,
மரமும் மக்களும், மிருகங்களும் பாதரசத்தை உண்டு உருகி உருக்குலைய
வேண்டுமா? மேலை நாட்டு அரசோ மக்களோ இத்தரத்தை ஏற்குமா ?. போபால்
கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து. ஆனால் கொடைக்கானல் தெரிந்தே
புதைக்கப்பட்ட அணுகுண்டு. இருந்தும் யுனிலிவர் மீது எந்த கிரிமினல்
வழக்கும் இல்லை.   1 மி.கி. தரம் வேண்டும். யுனிலிவர் மீது கிரிமினல்
கேஸ் வேண்டும். இதைச் செய்தால் இந்த அரசு நம்மாளு ! இல்லைனா ?

–    3  –

தண்ணீர்த்தொட்டியில் விசம் :

விசம் பாரித்த வனங்களும், சோலைக்காடுகளும் பல்லுயிர் அமைப்பும்
நுண்ணுயிர்களும் அழிந்து வருகின்றன. இதனால் மழையும் விவசாயமும் மேலும்
மேலும் பொய்த்துப் போகும். சமதளத்தில் இப்பாதிப்புகள் அத்தோடு
நின்றுவிடும். போபால்  விச வாயு விபத்து ஒரே நாளில் ஒரே இடத்தில்
உயிர்களை புசித்தடங்கியது. ஆனால் கொடைக்கானலில் புதைக்கப்பட்ட பாதரசக்
கழிவுகள் 14 ஆண்டுகளாக  மழையில் கரைந்து பல லட்சம் ஹெக்டேர் மண்ணிலும்
நீரிலும் ஊடு பாய்ந்து மலையிலிருந்து கசிகிறது. அடைமழையின் ஆன்மாவைப்
பற்றி வெள்ளப்பெருக்கோடு தென்வெளியில் பாய்கிறது. கொடைக்கானல் தென்
தமிழகத்தின் தண்ணீர்த் தொட்டி. அதில் விசத்தை கலந்துவிட்டார்கள்.
அதிலிருந்து புறப்படும் மஞ்சளாறு வைகை நதிகள் பாயும் ஆயிரக்கணக்கான
கிராமங்களில் நகரங்களில் நஞ்சை கரைசேர்த்துவருகிறது. அடுத்த
பத்தாண்டுகளில் தென் தமிழகத்தின் நுரையீரல், நரம்புமண்டலம், சிறுநீரகம்,
ஈரல் போன்றவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதை நீங்கள் மறுதளிக்க இயலாது.
போபால்  கொடூரத்தின் கதறல்கள் இன்னும் துடித்தடங்கவில்லை. கொடைக்கானலிலோ
பல மடங்கு போபால் பல்கிப் பெருகிப் பரவி மெளனமாய் தமிழகத்தை கொன்று
வருகிறது.

ஸ்வச் பாரத் கி ஜே ! கொடைக்கானல் கி பெப்பே !!

யுனிலிவரின் தலைவர் பால்பால்மர் 2015 பிப்ரவரி 3 அன்று பிரதமர் மோடியை
சந்தித்து அவருடைய தூய்மை இந்தியா திட்டத்தில் 700 கோடி முதலீடு செய்வதாக
வாக்குறுதியளித்தார். உடனே மோடி அவர் கழுத்தில் துண்டைப் போட்டு ஏண்டா ஈர
வெங்காயம் முதலில் கொடைகானலை சுத்தம் செய்திட்டு வாடா. இல்லைனா 7 லட்சம்
கோடி இழப்பீடு கொடுடான்னு கேட்டிருக்கனும். அப்படியெல்லாம்  கேட்பாங்களா
நம்ம  தலைவர்கள் ? கட்சிக்கு தேர்தல் நிதியல்லவா கேட்பாங்க. கூடவே ஒரு
செல்பியும்.

சார் கொடைக்கானல் போலாமா ?

என்ன சார் கொடைக்கானல் போற ஆசையே போச்சா. நீங்க போறது கிடக்கட்டும்.
அங்கே வாழற மக்களை நினைச்சுப் பாருங்க. பல இந்திய,   சர்வதேச விஞ்ஞானிகள்
கொடைக்கானல் மண்ணை சுத்தப்படுத்தும்படி யுனிலிவருக்கு கடிதம்
அனுப்பியுள்ளார்கள். யுனிலிவருக்கு எதிரான மனுவையும் ஷோபியா அஷ்ரபின்
“கொடைக்கானல் வோன்ட்” என்ற ராப் இசைப்பாடல் வீடியோ தொகுப்பையும்  ஜத்கா
என்ற அமைப்பு இணையத்தில் பரப்பிவருகிறது. அதன் தயாரிப்புகளை
புறக்கணியுங்கள் எனப் பிரச்சாரம் செய்து வருகிறது. விடியோவை இதுவரை 22
லட்சம் பேர் கண்டுள்ளனர். மனுவில் லட்சம் பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
செவ்வகம் மக்கள் திரை அமைப்பு ‘’ பனியில் படரும் பாதரசம் ‘’ என்ற
ஆவணப்படத்தை திரையிட்டு வருகிறது. கிரீன்பீஸ் என்ற சர்வதேச சுற்றுச்சூழல்
அமைப்பு பூவுலகின் நண்பர்கள் உட்பட பல்வேறு அமைப்புகள்
போராடிவருகின்றனர். திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி
சட்டமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறார். அதுசரி அடுத்த கோடையை தேனிலவை
கொடைக்கானலின் பனி மூட்டத்தில் சுகீக்க விரும்பும் நீங்கள் என்ன
செய்யப்போகிறீர்கள்.

மு.ஆனந்தன் –  செல்; 94430 49987 –
மின்னஞ்சல்; anandhan.adv @gmail.com

News

Read Previous

தமிழ் மொழியில் தொழில்நுட்பம்” குறித்தான கருத்தரங்கு

Read Next

உலகளாவிய சமத்துவ மாநாடு

Leave a Reply

Your email address will not be published.