நிறைமதி நூலகம், கடையநல்லூர்

Vinkmag ad

ource – https://www.facebook.com/story.php?story_fbid=1716046968582853&id=100005326995335

நிறைமதி நூலகம், கடையநல்லூர்.
பரணிலிருந்து முகநூலுக்கு …
கடையநல்லூர் பெரியதெருவில் அமைந்திருந்தது.
எங்கள் இல்லத்திலிருந்து 3 நிமிட நடை தூரம்தான்.
இந்த
“நிறைமதி நூலகம்”,
தேசவிடுதலைக்குப் பிறகு,
இந்தியக் குடியரசு தினத்திற்கு முன்பாக,
1948 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் நாள், ஹிஜ்ரி 1368 ஆம் ஆண்டு, முஹர்ரம் மாதம் முதல்நாள், புதன்கிழமை அன்று தனது ஆண்டுவிழா மலரை வெளியிட்டிருக்கிறது.
ஏழாப்புப் படித்துக்கொண்டிருந்த நாங்கள், நிறைமதி நூலகத்தில் விளையாட்டாகச் சித்திரக்கதைகள் படிக்க ஆரம்பிக்க, வாசிப்பு வசப்படத் தொடங்கியது  1963 ஆம் வருடம்.  அப்பல்லாம், “கண்ணன்”, “அம்புலிமாமா” “தினத்தந்தி”, மாலைமுரசு, இதழ்களில் படக்கதைகள் வரும். படக்கதைகள் தாண்டிக் “கல்கண்டு” தமிழ்வாணனிடம் நேசமாகி,  சங்கர்லால் கதைகள் படிக்கத்தொடங்கினோம். தொடர்ந்து “ஆனந்த விகடன்”, “தினமணி கதிர்”, ” குமுதம்” இதழ்களின் தொடர்கள்.
“யூ” எனக் கடையநல்லூர் மக்களால் பாசமாக அழைக்கப்பட்ட அண்ணன் ( Late)  U. அப்துல் ஹமீது அவர்களின் தனிமனித உழைப்புதான் “நிறைமதி நூலகம்”. யூ. அப்துல் ஹமீது அவர்கள் கௌரவ ஆசிரியராக இருக்க, ஞா.ம. மசூது ஆசிரியராகவும், கொ.அ. உமர் துணை ஆசிரியராகவும் இருந்து மலர் தயாரித்துள்ளார்கள்.
நூலகத்தின் செயலராகக பொறுப்பில் இருந்தவர் சேமர் சார்வாள். ஹிதாயத்துல் இஸ்லாம் எலிமென்டரி ஸ்கூல் வாத்தியார். எங்களைக் கண்டதும்,
” சின்னப்பயல்களெல்லாம் வரக்கூடாது” என்று சொல்லி விரட்டுவார். விரட்டுவதற்குக் காரணம். படிப்பதற்குப் பதில், எங்களை அறியாமலே, கிசு கிசு எனப் பேசிக்கொண்டும், குசும்புச் சிரிப்பிலும் இருப்போம். அதன் பிறகு, சத்தமில்லாமல் அமைதியாக வாசிக்கத் தொடங்கி சார்வாளுடன் நட்பானோம்.
மலரில்,
அப்போது அரசால் போடப்பட்ட “புது விவசாய மசோதா” பற்றியக் கேலிச்சித்திரங்கள் அசரவைக்கின்றன.
1. “புது விவசாய மசோதா” பற்றிய ஒன்று,
2. “ஐ.நா. காஷ்மீர் கமிஷன் ( Kashmir Commission )
மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பிவிட்டனர், ஆனால் திரும்ப வந்துவிடுவார்கள்” என்கிறது மற்றொரு சித்திரம்,
3. “டில்லியிலுள்ள யூதர்கள், தங்கள்
வணக்கத்தில், “அரசர்” என்பதற்குப் பதில்
“ராஜாஜி” என்ற வார்த்தையைச் சேர்த்துக்
கொண்டனர்” என்கிறது மற்றொரு கேலிச்சித்திரம்.
இப்படியாக கார்டூன் கலாச்சாரத்தின் வரலாறுகளைப் பேசுகிறது சில பக்கங்கள்.
ஆங்காங்கே இயற்கைக் காட்சிகளோடு,
மகாத்மா காந்தி, முஹம்மதலி ஜின்னா, ஜவஹர்லால் நேரு, காயிதேமில்லத் எம். முஹம்மது இஸ்மாயில் போன்றோர் ஓவியங்கள் பாலிதீன் கவரில் மின்னுகின்றன. அத்தனை பளீச்.
அட்டை தவிர்த்து 118 பக்கங்கள் உள்ளன.
தலையங்கம், அறிவிப்பு, பொருளடக்கம், கதை, கவிதை, கட்டுரை –
உ.மூ.சே. செய்யது மக்தூம் சாஹிபு ( உதுமானியா சங்கம் ) அவர்களின் சன்மார்க்க, ஆன்மீகக் கட்டுரை,
ஸிராஜ் அவர்களின் “பழைய பட்டி” எனும் கவிதைகளுடன் கூடிய கட்டுரை,
மீ.இ. அபுல் ஹஸன் ஷாதலியின் வாழ்த்துக் கட்டுரை,
ஹம்து வின் தேசவிடுதலையைச் சிறப்பிக்கும் “தயக்கமேன்”,
பம்பாய் K.A. அப்பாஸின் ” சிட்டுக் குருவிகள்” கதை,
“சிறார் பொறுப்பு” எனும் தலைப்பில் பாரதிதாஸன் கட்டுரை,
“எழுத்தாளன்” எனும் தலைப்பில் ரா ப மூ. கனி B.A., B.L.,
“நட்பின் மாண்பு” பற்றிய K.M. முஹம்மது யூசுபு B.A.,
அதிர் எழுதிய “அஞ்சாதே”,
எட்வின் ஆர்னால்ட்டின், “குட்டிக்கதை” போன்றவை நம்முன் கவிதைக் காட்சிகளாக விரிகிறது.  “நமது பேச்சு” எனும் தலைப்பில் ஆசிரியன் கட்டுரை மலரை நிறைவுசெய்து வைக்கிறது.
இறுதிப் பக்கங்களில் “பிரயாணம்” என்ற தலைப்பில் கடையநல்லூர் முழுவதிலுமுள்ள  27 அமைப்புகளில்,  பெற்றுக்கொண்டவர் – தேதியுடன் கூடிய கையெழுத்துடன் பாதுகாப்புத் தேடும் பயணத்தை மேற்கொண்டுள்ளது “நிறைமதி” ஆண்டு மலர்.
உலகப் புத்தக, காப்புரிமை தினம்.
April 23 – World Book and Copyright Day.
படம் :
நூலகத்தின் பின்புறம், தேனீ வளர்ப்பு, குரோட்டன்ஸ் வண்ணச் செடிகள் சூழ, சிறுநீர் கழிப்பிட வசதியும் செய்யப்பட்டிருந்தன.
பென்ஸி.

News

Read Previous

பசுமை மாநிலமாக சிக்கிம்

Read Next

மழலைப்பள்ளி செல்லுவோம்!

Leave a Reply

Your email address will not be published.