நிதானம்

Vinkmag ad

Dr.Fajila Azad 

(International Life Coach – Mentor – Facilitator)

fajila@hotmail.com    FB:fajilaazad.dr   youtube:FajilaAzad

 

  1. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்

 

வெற்றி பெற்ற மனிதனாக இருக்க முயல்வதை விட மதிப்பிற்குரிய மனிதனாக இருக்க முயற்சி செய்யுங்கள். அதுவே சிறந்த வெற்றி தரும்- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

 

நிதானம்

டென்னிஸ் ராக்கெட்டை மேலும் கீழுமாக சுழற்றி மிக கோபத்தோடு அவன் கீழே வீசுகிறான்.அவனுடைய ‘ஆ’ என்ற கத்தல் அந்த மைதானம் எங்கும் எதிரொலித்து அடங்குகிறது. 

பல்லாயிரக் கணக்கானோர் கூடியிருக்கும் அந்த மைதானத்தில்  விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த டென்னிஸ் போட்டியின் முடிவில்,  அதில் தோற்ற வீரன் தான் கொஞ்சம் கூட விளையாட்டு நாகரீகம் இல்லாத முறையில் இப்படி தனது மட்டையை தரையில் வீசி எறிந்து, என்னவோ கத்தி விட்டு கோபத்துடன் அங்கிருந்து வெளியேறுகிறான். 

இவ்வாறு இவன் செய்வது இதுதான் முதன்முறையல்ல. ஒவ்வொரு போட்டியிலும் பிரமாதமாக விளையாடி இறுதிச் சுற்றிற்கு அருகில் வருவதும் பின் அதில் தோற்பதும், கோபத்தின் உச்சியில் தன் ஆற்றாமையை இப்படி பறைசாற்றி விட்டு வெளியேறுவதும் என அவனது டென்னிஸ் கரியரே இப்படித்தான் இருக்கிறது. 

அவனின் தோல்வியை விட அவனின் அந்த நிதானமற்ற செயல் அவன் பெற்றோரை அதிகமாக வருந்த செய்ய அவனோ எதையும் கண்டு கொண்டதாகக் கூட தெரியவில்லை.

அவனைப் பொருத்த வரை அவனின் எரிச்சல் நியாயமானது. அவனைச் சுற்றி இருக்கும் அவனின் சுற்றமும் இந்த தோல்வியும் தான் நியாயமற்றது. 

அவனைப் போல்… எத்தனை திறமை இருந்தும் எவ்வளவு ஈடுபாட்டுடன் உழைத்தாலும் எதிர் பார்க்கும் அளவிலான பலன் மட்டும் கிட்டாமலேயே இருக்கிறதே என்று இப்படி சுய பச்சாதாபமும் ஆற்றாமையும் கோபமும், வருத்தமும் கொள்ளாதவர்கள் மிகவும் அரிது எனலாம்.

பெரும்பாலும் தங்களை விட திறமை குறைந்தவர்கள், ஏனோ தானோ என்று உழைப்பவர்கள் கூட தங்களைவிட அதிகமான அங்கீகாரத்துடனும் அந்தஸ்துடனும் இருப்பதைப் பார்க்கும்போது அந்த வருத்தம் இன்னும் அதிகமாவதுடன் மன அழுத்தத்தையும் பலருக்கும் கொண்டு வந்து விடுகிறது.

செல்வந்தர் வீட்டில் பிறந்த அந்த செல்லக் குழந்தைக்கு கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தார்கள் அவன் பெற்றோர்கள். அவனுக்கு டென்னிஸ் என்றால் அப்படி ஒரு பிரியம். உலகின் மிக சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக வருவேன், இது தான் அவன் அடிக்கடி சொல்வது. 

அவர்கள் அவனது ஆசைக்காகவே அவனை டென்னிஸ் விளையாடப் பயிற்றுவித்தார்கள். அவன் விரும்பிய துறையில்தான் இருக்கிறான். முழு ஈடுபாட்டுடன் பயிற்சி எடுக்கிறான். மிகச் சிறப்பாக விளையாடுகிறான். இருந்த போதும் எதிர்பார்க்கும் வெற்றி மட்டும் கிட்ட மறுக்கும் எட்டாக் கனியாகவே அவனுக்கு இருக்கிறது. தன் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத அவன் தன் டென்னிஸ் பேட்டை மைதானத்திலேயே இப்படி  சுழற்றி வீசுவது வீறு கொண்டு கத்துவது என பெரும் கோபக் காரனாக உருமாறிக் கொண்டிருக்கிறான்.

அவன் பெற்றோரைப் பொருத்தவரை வெற்றிகள் வந்து விட்டால் மகன் கோபப்பட மாட்டான் என்று நம்புகிறார்கள். 

எனவே அவனை வேறு ஒரு சிறந்த கோச்சிடம் சேர்த்து விடுகிறார்கள். அந்த கோச் சில நாட்கள் எந்த ஒரு புது டெக்னிக்கையும் சொல்லிக் கொடுக்காமல் அவனை அவனது இயல்பில் விளையாட விட்டுப் பார்க்கிறார். அவனின் அலாதியான திறமை அவரைக் கவரும் அதே நேரம் தவறுகளின் போது தறிகெட்டு வெளிப்படும் அவனது கோபமும் புலப்படுகிறது. 

அடுத்து வந்த நாட்களில் அந்த கோச்சின் அனுகு முறை தான் இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று. மறு நாள் பயிற்சிக்குத் தயாராக வந்த இளைஞனிடம் சாதாரண உடைகளுக்கு மாறி வரும்படிக் கூறிய அவர் அன்றிலிருந்து அவனுக்கு மனக் கட்டுப்பாட்டிற்கான பயிற்சிகளை வழங்கத் துவங்குகிறார். விளையாட்டில் தவறுகள் நேரும் தருணங்களை விளக்கும்போது அவன் நிதானம் இழக்கும்போது அதற்கு மாற்றாக என்ன செய்து கொள்ள வேண்டும் என்பதாகவே அவரது கோச்சிங் இருக்கிறது. போட்டிகள் நெருங்கும் நேரம், மற்ற விளையாட்டு வீரர்களெல்லாம் மைதானத்தில் விளையாடி பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது தன்னை மட்டும் வெளியில் இருத்தி பேசிக் கொண்டே இருக்கிறாரே என்று அவனுக்கு இயல்பாக கோபம் எழுந்தாலும் அவரது அணுகு முறை அவரது சொல்லுக்கு அவனைக் கட்டுப்பட வைக்கிறது. சிறிது சிறிதாக மனம் கட்டுப்பாட்டிற்குள் வர அவன் மனநிலையில் நல்ல மாற்றம் தெரிகிறது. அது அவனது விளையாட்டில் பிரதிபலிக்க வெற்றி தேவதை அவனை முத்தமிடத் தொடங்குகிறாள். 

அவனின் முன்னேற்றம் அவனுக்கே மிகுந்த தன்னம்பிக்கையைத் தர அவன் மேலும் நிதானப்படுகிறான். 

அப்போது.. அவன் நிதானத்தையெல்லாம் உடைக்கும் அளவுக்கு அந்த எதிர்பாராத செய்தி அவனுக்கு கிடைக்கிறது. அவனுடைய அந்த கோச் ஒரு கார் விபத்தில் பழியாகி விடுகிறார். தாங்க முடியாத சோகம் மீண்டும் கோபமாக மாறத் துடிக்கிறது. தன்னை அழகாக புரிந்து சரியாக கொண்டு செலுத்திக் கொண்டிருந்த அந்த கோச் இல்லாத தன்மை பெரும் வெற்றிடமாகத் தெரிய இனி வெற்றி என்பதும் எதிர்காலமும் அவனுக்கு ஒரு கேள்விக் குறியாக நிற்கிறது. இனி தான் மீண்டும் முன்பு போல் ஆகிவிடுவோமோ என்ற எண்ணம் எழும்போதே முந்தைய தோல்விகளும், தான் பேட்டை தூக்கி எறிந்து கத்துவது போன்ற நிகழ்ச்சிகளும் அவன் முன் காட்சிகளாக எழுகிறது. அவனாலேயே அந்தக் காட்சிகளை இப்போது கற்பனையில் கூட பார்க்க முடியவில்லை. 

இழப்புகளின்போது நிதானமாக இருப்பதற்குத்தானே இத்தனை காலம் தனது கோச் கற்றுத் தந்தார் என்று நினைத்த கணம் இந்த இழப்பையும் அவரது வழிகாட்டுதல்களின்படியே எதிர்கொள்ள வேண்டும் என்பது அவனுக்குப் புரிபடுகிறது.

இனி தன்னை உடனிருந்து வழி நடத்த கோச் இருக்க மாட்டார் என்பதை ஏற்றுக் கொண்டதும், தான் மரியாதைக்கு உரியவனாகவும் மிகவும் நாகரிகமானவனாகவும் நிதானமானவனகவும் உடன் மாற வேண்டிய அவசியமும் அவனுக்குப் புரிபடுகிறது. 

சுயசிந்தனையும், சுயஅலசலும், ‘தான்’ எங்கே தவறுகிறோம்.. எதை சரி செய்ய வேண்டும்.. என்ற அனுகுமுறையுமே, எந்த சூழலையும் தன் வசப் படுத்தி, ஒருவனை வெற்றி பெற செய்ய மட்டுமல்ல.. அந்த வெற்றியை தக்க வைக்கவும் செய்யும்.

அதன் பின் உலகின் No#1 டென்னிஸ் வீராங்கனை ROGER FEDERER டென்னிஸில் நிகழ்த்தியதெல்லாம் வரலாற்றில் பொறிக்கப் பட்ட அற்புதங்கள். அவரது உலகளாவியலான தொடர் வெற்றியும் சாதனையையும் விளையாட்டையும் தாண்டி அவரது நிதானமான குணமும் இன்று பலருக்கும் பாடமாக நிற்கிறது.

ஃபெடரருக்கு கோபம் போல் உங்களுக்கு எது தடையாக இருக்கிறது என்று நிதானமாக ஆராய்ந்து பாருங்கள். அவரது பெற்றோர், வெற்றி வந்து விட்டால் தங்களது மகனது கோபம் மாறி விடும் என்று நினத்ததைப்போல, நீங்கள் வெற்றி அடைந்து விட்டால் இந்த குணத்தை அல்லது செயலை விட்டு விடுவேன் என்று எதைப் பற்றிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று கண்டு பிடியுங்கள்.

அவருக்கு வெற்றி வந்து அவன் முன்கோபத்தை விரட்டவில்லை, அவன் அந்த கோபத்தை விரட்டியதால்தான் அவனுக்கு வெற்றி வந்தது என்பதை புரிந்து கொண்டு உங்கள் வெற்றிக்குத் தடையாக இருக்கும் அந்த குறிப்பிட்ட குணத்தை அல்லது செயலை சீர் செய்யுங்கள் 

You will not grow if you are not willing to change yourself. உங்களை நீங்களே மாற்றிக் கொள்ள நீங்கள் தயாராகவில்லை என்றால் உங்களால் வளரவே முடியாது என்கிறது வாழ்வியல்.

பொதுவாக நீங்கள் புதிதாக எதுவும் செய்யவில்லை என்றால் அல்லது ஒரே மாதிரியே மீண்டும் மீண்டும் செய்து கொண்டு இருந்தால் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் நீங்கள் பின்னோக்கித் தள்ளப் பட்டுவிடுவீர்கள். தவிர பிறர் தரும் விமர்சனங்களை விரும்பிக் கேளுங்கள். அவைதான் உங்களைத் திருத்தி மேலும் மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும்.

உங்கள் பார்வையில் மட்டும் உலகைப் பார்க்காமல், விமர்சனங்கள் மூலம் மற்றவர்கள் பார்வையில் உங்களைப் பார்க்கும் போது உங்களுக்குப் பல கோணங்களிலிருந்து நீங்கள் அறியாதவைகளைக் கூட அறிந்து உங்களுக்கான மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வர முடியும். முன்னேறத் துடிப்பவனுக்கு மிக முக்கியமானது தன்னை முன்னேற்றிக் கொள்வதே என்பதை உணர்ந்து கொண்டால் வாழ்க்கை வசப்படும். 

News

Read Previous

விபி.சிங்…

Read Next

கொத்தவரங்காய்

Leave a Reply

Your email address will not be published.