விபி.சிங்…

Vinkmag ad

vpsinghவிபி.சிங்…
******
ஒடுக்கப் பட்டவர்களின்
உரிமைகளுக்காக
உரத்து முழக்கியது இவன் குரல்!

தாழ்த்தப் பட்டவர்களின்
தகுதிகளையும்
தரங்களையும்
உயர்த்துவதற்காகவே
வாழ்ந்து முடித்தவன் இவன்!

சந்தர்ப்ப வாத அரசியலுக்குச்
சற்றும் பொருந்தாதவன்
சகுனிகளோடு இருந்தும்
சதிராடத் தெரியாதவன்!

ஆலயத்துக் கடைவாய்
அரிசன பக்தர்களுக்கு
அனைவரும்
சுண்டல் கொடுக்கையில்
அரியாசன
மண்டல் கொடுத்தவன்
இந்த மாவீரன்…!

இவன்
மயிலிறகு ஆசனங்களுக்கு
மனிதாபிமானம்
சாமரம் வீசும் -அதனை
இந்தியச் சரித்திரத்தின்
இருள் படியா பொன்னேடுகள்
சந்தணமாய்ப் பேசும்!

ஊரையடித்து உலையிலிடும்
உதவாக்கரைகளுக்கு மத்தியில்
தன் சொந்த நிலங்களையே
ஏழைகளுக்குத்
தாரை வார்த்துத் தந்த
தயாள சிந்தைக் காரன் இவன்!

உயிர் பிழியப் பட்டவர்க்கு
உதவியதற்காக
இவனது மகுடத்தில்
ஆணிகள் அறையப் பட்டன !

பிற்படுத்தப்பட்டவர்க்கான
சிலுவைகளைச் சுமந்ததால்
இவன் பாதங்களில்
கொப்புளங்கள் வெடித்தன!

சேரிப் புறங்களுக்கும்
சரியாசனங்கள் இட்டதால்
வருனாசிரமங்களுக்கு எதிராக
இவன் வர்ணிக்கப் பட்டான்!

கறுப்புச் சந்தைப்
பிணந்தின்னிக் கழுகுகளின்
இறக்கை வெட்டினான்
பொய் முகமூடி வேடதாரிகளின்
தோலுரித்துக் கட்டினான்!

சம்பல் பள்ளத் தாக்கு
இவனால் சாம்பல் பூத்தது
அந்த வழிகளில்
பயணிப்போர் மனங்களில்
வழிப்பறி இல்லை எனும்
ஆம்பல் பூத்தது!

கதவு தட்டி வந்த
தலைமைப் பதவிகளைக்
கதவுகளுக்கு அப்புறமே
கை கட்டி நிற்க வைத்த
கண்ணிய வான்களின் வரிசையில்
இவன் முதன்மை யானவன் !

சேரிப் புறத்துச்
செருப்புக் கால்களை
அரண்மனைக்குள்
உலவ விட்ட இவன்
அக்கினி அரசியல் சுட்டும்
அதிசயமாய்ப் பிழைத்தவன்
ஊழல்களின்
முகத்திரை கிழித்தவன்

ஆனைகளோடும்
சேனைகளோடும்
அரசாண்ட
பூர்வீக ராஜ குடும்பத்துப்
புத்திரன் இவன்
இந்திய அரசியலில்
இன்னொரு புத்தன் இவன்…!

இன்று விபி. சிங் அவர்களின் பிறந்த நாள்…

– கவிஞர் அதாவுல்லாஹ்-

News

Read Previous

தொழில் கல்வி பயில விரும்பும் மாணாக்கர்களுக்கு….❗

Read Next

நிதானம்

Leave a Reply

Your email address will not be published.