தமிழக முஸ்லிம்களே,உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் நடுநிலை சமுதாயமாக சிந்தியுங்கள்!

Vinkmag ad

தமிழக முஸ்லிம்களே,உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் நடுநிலை சமுதாயமாக சிந்தியுங்கள்!

அதிமுகவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஜமாத் நிர்வாக பொறுப்பில் இருந்து விலக வேண்டும்,அல்லது அதிமுகவில் இருந்து விலக வேண்டுமென சமூக வலை தளங்களில் பகிரப்படுகிறது!

@இதற்கு என்ன காரணமென்றால் முஸ்லிம்களை கருவறுக்கும் பாசிஸ பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாம்.

இந்த விசயம் சில திமுக முஸ்லிம் ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது என்று உளவு துறை அதிகாரிகள் மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாம்.

அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைப்பது இது முதன் முறையல்ல,இரண்டாம் முறையாகும்.1998ல் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்த போது அதிமுக உறுப்பினர்களை ஜமாத் நிர்வாகத்தில் இருந்து விலகிக்கொள்ள கோரிக்கை வைக்கவில்லை.ஆனால் இம்முறை வைக்கப்பட்டுள்ளது ஏன்?என்பதே உளவுத்துறையின் கேள்வியாகும்?

அதிலும் முஸ்லிம்களின் ஷரீ அத்துக்கு எதிராக முத்தலாக் தடை சட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக முஸ்லிம் உறுப்பினர் அன்வர் ராஜா உள்ளிட்ட அதிமுகவின் அனைவருமே பாராளுமன்றத்தில் ஓட்டு போட்ட போது கூட ஜமாத் நிர்வாக பொறுப்பில் இருந்து அதிமுகவினர் விலக வேண்டுமென்ற கேள்வி எழவில்லை.

1999ல் இதே முஸ்லிம் விரோத பாசிஸ பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்த போது, திமுக முஸ்லிம்கள் உடனே ஜமாத் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் அல்லது திமுகவை விட்டு விலக வேண்டுமென்ற கோரிக்கையை அப்போது ஏன் எழுப்பவில்லை? என்ற பிற சமுதாய மக்களின் கேள்விக்கு நம்மிடம் உரிய பதிலும் இல்லை.

பல்வேறு உணர்ச்சிகளின் அடிப்படையில் செயலாற்றும் ஒரு சமூகமாகவே நாம் வாழ்கிறோம் என்பதை ஒவ்வொரு தேர்தலின் போதும் நாம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறோம்.

ஜமாத் நிர்வாகத்தை தேர்வு செய்வதவற்கான குறைந்தபட்ச விதிமுறை நம்மிடம் உள்ளதா?அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாக இருப்பவர்களை ஜமாத் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்க கூடாது என்றொரு விதியை உருவாக்கி இருக்கலாமே?

இப்போதும் காலம் கடந்து விடவில்லை,அரசியல் கட்சிகளில் பொறுப்பில் இருப்பவர்கள் ஜமாத் நிர்வாகிகளாக நீடிக்க கூடாது என்று பொதுவானதொரு விதிமுறையை ஒவ்வொரு ஜமாத்திலும் நிறைவேற்றுங்கள்.

அரசியல் கட்சிகள் என்பது சமுதாய கட்சிகளையும் சேர்த்து தான் குறிக்க வேண்டும்.தமிழகத்தின் அனைத்து ஜமாத்துகளுமே மாநில அரசின் வக்ஃபு நிர்வாகத்தின் கீழ் செயல்படுவதென்பதை மறந்து விடவேண்டாம்?

நாம் நினைப்பது போல் அல்லாமல்,இந்த தேர்தலில் மீண்டும் பாசிஸ பாஜகவே ஆட்சி அமைக்கும் பட்சத்தில் மாநிலத்தில் எடுப்பிடிகளின் அதிமுகவின் ஆட்சி தான் நீடிக்கும் என்பதையும் உள்வாங்கி கொள்ளுங்கள்.

கடந்த கால தேர்தல் விழாக்களில் திமுக-அதிமுக மற்றும் பல்வேறு பெரிய கட்சிகளோடு முஸ்லிம் அமைப்புகள் ஆளுக்கொரு கூட்டணியாக நீடித்ததையும், ஒரே அமைப்பு ஒரே தேர்தலில் பாஜக அல்லாத பல கட்சிகளுக்கும் ஆதரவு கொடுத்ததையும் நினைவூட்டுகிறேன்.

ஒரு கட்சியை மட்டுமே மொத்த முஸ்லிம்களும் ஆதரித்தால்…பிற கட்சிகள் ஆட்சியின் போது பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்களை முஸ்லிம்கள் ஆட்சியாளர்களின் மூலம் சந்திக்க நேரிடும் என்ற முன் எச்சரிக்கையை சொல்லி தான் ஒரு தேர்தலில் தொகுதி வாரியாக நிறைய கட்சிகளுக்கு ஒரு ஜமாத் அமைப்பு ஆதரவு கொடுத்ததையும் நினைவூட்டுகிறேன்.

முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்தின் பொதுமக்களே,உங்களின் உணர்ச்சிகளை தொலை நோக்கு சிந்தனையோடு சாதக பாதகமில்லாத நடுநிலையான வகையில் வெளிப்படுத்துங்கள்.

அரசியல் வேறு,ஆன்மீகம் வேறு என்று செயல்படுங்கள் என சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற முஸ்லிம்லீக் மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதையும் இங்கே நினைவில் கொள்ளுங்கள்.

வாக்களிப்பது நமது உரிமை,யாருக்கு வாக்களிக்க கூடாது என்று முடிவு செய்வதும் நமது உரிமை தான்.தேர்தல் நேரத்தில் வாக்குச்சீட்டின் மூலம் நமது எதிர்ப்பினை பாசிஸத்திற்கு எதிராக பயன்படுத்துவதற்கு நமக்கு முழு உரிமை உண்டு.

தேர்தல் நேரத்தில் ஜமாத் நிர்வாகத்தின் பெயரால் அரசியல் எதிர்ப்பு நிலையை நாம் பிரதிபலிப்பது நமக்கு பாதகமாகவே அமையும் என்பதை கடந்த கால சில கசப்பான சம்பவங்கள் இன்றும் நமக்குள் இருந்து கொண்டு தானிருக்கிறது.

திமுகவோ? அதிமுகவோ? யார் ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லிம்களின் நிலை மாறி விட போவதில்லை.நோன்பு நேரத்தில் பள்ளிவாசலுக்கு கொடுக்கும் அரிசியின் எடையில் சற்று முன்னேற்றம் காணலாம்?அல்லது உலமாக்களின் ஓய்வூதிய தொகையில் சற்று கூடுதலை காணலாம்?

இதை தாண்டி வேறு எந்த முன்னேற்றமும் நாம் கண்டு விட போவதில்லை?இதற்காக வெளிப்படையில் ஜமாத் நிர்வாகத்தின் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது ஆரோக்கியமானதல்ல.

அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை என்பதை கடந்த 50 ஆண்டுகால தேர்தல் கூட்டணி கணக்குகளை அனுபவம் வாய்ந்த முதியோர்களிடம் கேட்டு தெளிவு பெறுவது காலத்தின் அவசியமாகும்.

உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் நடுநிலை சமுதாயமாக சிந்தியுங்கள்.
-கீழை ஜஹாஙகீர் அரூஸி.

News

Read Previous

கோவையில் இஸ்லாமிய நூலகம் மற்றும் புத்தக விற்பனை நிலையம் தொடக்க விழா

Read Next

இளைஞர்களே நீங்களும் அறிந்துக் கொள்ளுங்கள் !

Leave a Reply

Your email address will not be published.