ஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்!

Vinkmag ad
அறிவியல் கதிர்
ஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்!
பேராசிரியர் கே. ராஜு

செப்டம்பர் 17-ம் தேதியிலிருந்து ஜெர்மனியில் உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் வண்டி ஓடத் தொடங்கியிருக்கிறது. காற்று மண்டலத்தை மாசுபடுத்தும் டீசல் ரயில்களுக்கு மாற்றாக சுற்றுச் சூழலுக்கிசைந்த போக்குவரத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு இது ஒரு நல்ல செய்தி என்பதில் சந்தேகம் இல்லை. ஃப்ரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த அதிவேக டிஜிவி ரயில்களைத் தயாரிக்கும் அல்ஸ்டாம் நிறுவனம்தான் இந்த கொராடியா ஐலிண்ட் ஹைட்ரஜன் ரயில்களையும் கட்டமைப்பு செய்திருக்கிறது. 100 கி.மீ. பாதையில் ஓடி வடக்கு ஜெர்மனியில் உள்ள நகரங்களை இந்த பளிச்சென்ற நீல நிற ரயில்கள் இணைக்கத் தொடங்கியிருக்கின்றன. இதற்கு முன்பு இந்தப் பாதையில் டீசல் ரயில்கள் ஓடிக் கொண்டிருந்தன.

“உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் வணிகச் சேவையில் இறங்கியிருக்கிறது. இன்னும் பல ரயில்கள் தயார் நிலையில் உள்ளன. இவைகளிலிருந்து எந்த கார்பன் வெளியீடும் இருக்காது. 2021-க்குள் மேலும் 14 ரயில்களை கீழ் சாக்ஸனி மாநிலத்திற்குத் தர இருக்கிறோம்” என்கிறார் அல்ஸ்டாம் சிஈஓ ஹென்றி போபார்ட் லஃபார்கே. ஜெர்மனியின் பிற மாநிலங்களும் ஹைட்ரஜன் ரயில்களுக்கு மாறப் போவதாக அறிவித்திருக்கின்றன.
ஹைட்ரஜனையும் ஆக்சிஜனையும் இணைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் எரிபொருள் செல்கள் ஹைட்ரஜன் ரயில்களில் பொருத்தப்பட்டுள்ளன. தண்ணீரும் நீராவியும் மட்டுமே இந்த செல்களிலிருந்து வெளியேறும். இயங்குவதற்குச் செலவான ஆற்றல் போக கூடுதலாக உள்ள ஆற்றல் அயான் லித்தியம் பாட்டரிகளில் சேமித்து வைக்கப்படுகிறது. ஒரு தொட்டி ஹைட்ரஜனைக் கொண்டு சுமார் 1000 கி.மீ. வரை இந்த கொராடியா ஐலிண்ட் ரயில்கள் ஓடக்கூடியவை. டீசல் ரயில்களின் ஆற்றலும் ஏறக்குறைய இதே அளவுதான். காற்று மண்டலம் மாசுபடுவதைச் சமாளிக்க பல ஜெர்மானிய நகரங்கள் திணறிக் கொண்டிருக்கும் சூழலில் புதிய மூச்சுக் காற்றாக ஹைட்ரஜன் ரயில்கள் வந்திருப்பதை மக்கள் பெரிதும் வரவேற்கின்றனர்.
ஹைட்ரஜன் ரயிலின் விலை டீசல் ரயிலின் விலையைவிட அதிகம் என்றாலும் ரயிலை ஓடவைத்துப் பராமரிக்கும் செலவு டீசல் ரயிலைவிடக் குறைவுதான் என்கிறார் திட்ட நிர்வாகி ஸ்டீஃபன் ஷ்ராங்க்.
நம் நாட்டிலும் புல்லட் ரயில்களை நோக்கி ஓடுவதற்குப் பதிலாக ஹைட்ரஜன் ரயில்களை இயக்கத் தேவையான முயற்சிகளை எடுப்பது வரவேற்கக் கூடிய மாற்றமாக இருக்குமே? ஆட்சியாளர்கள் மனம் வைப்பார்களா?

News

Read Previous

சல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்

Read Next

ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *