சல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்

Vinkmag ad

சல்மாவின் ‘சாபம்’ சிறுகதைத் தொகுப்பில் – பெண்களின் பிரச்சனைகள்

அ.ஜவஹர் பாஷா,
ஆய்வு உதவியாளர்,
இஸ்லாமிய பண்பாட்டு ஆய்வு மையம்,
ஜமால் முகம்மது கல்லூரி,
திருச்சிராப்பள்ளி – 620 020.

97151 90456

 

முன்னுரை :
பழங்காலத்தில் பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை சிறிய அளவிலேயே காணப்பட்டன. தற்காலத்தில் ஆண் கவிஞர்களுக்கு இணையாக பெண் கவிஞர்களும் படைக்கின்றனர். பெண் கவிஞர்கள் தங்களின் பிரச்சனைகளை சமூகத்திற்கு ஊடகங்களிலும், எழுத்துக்களின் மூலமாகவும் எடுத்துரைக்கின்றனர். அவ்வகையில் கவிஞர் சல்மா அவர்கள் ‘சாபம்’ எனும் சிறுகதைத் தொகுப்பில் சலனம், வலி, பொறி, சாபம், யுத்தம், இழப்பு, விளிம்பு, விதி, இருள், தோழி, மறுமுகம் வழியாக பெண் பிரச்சனைகளைக் ஏழு விதமாகக் கூறுகிறார். அவை,
1.காதலால் ஏற்படுவன, 2. குழந்தையின்மையால் ஏற்படுவன
3. சம உரிமை இன்மை மற்றும் சந்தேகம்
4. வன்புணர்ச்சிக்கு உள்ளாதல், 5. விதவைகளுக்கானப் பிரச்சனைகள்
6. பெண்களுக்குள் பெண்களால் ஏற்படும் உறவுப் பிரச்சனைகள், 7. சமயம்

காதலால் ஏற்படும் பிரச்சனை :
சங்க இலக்கியம் முதல் தற்காலம் வரை முக்கியமாகக் காதலும், வீரமும் பேசப்படுகின்றன. வகையில், காதல் செய்வதினால் சில பெண்களுக்கு நல்ல வாழ்க்கை அமைந்து விடுகின்றது. மீதமுள்ளப் பெண்களுக்கு அது பிரச்சனையாக மாறிவிடுகின்றது. அப்பிரச்சனைக் காரணிகளில் மதமும் ஒன்றாகும். காதல் திருமணம் செய்துக்கொண்டு மற்ற பெண்களிடம் தகாத முறையில் நடந்து ஓடி போதல், காதல் செய்துகொண்டிருக்கும் போது கர்பமாக்கி வேறு பெண்ணை மணந்து கொள்ளுதல், ஒரு காதலன் தன் கடிதத்தைக் கொண்டு வந்து பெண்ணிடம் கொடுத்து, அதை மறுத்தால் ஆசிட் முகத்தில் ஊற்றுதல் பெண்ணை கொலை செய்தல் போன்ற அநியாயங்கள் நிகழ்வதைப் பார்க்கின்றோம்.

‘சலனம்’ எனும் சிறுகதையில் மதம் ஒரு தடையாக இருப்பதாக சல்மா காட்டியுள்ளார். யாசரின் சித்தி, அனிதாவின் அம்மாவிடம் உங்களுடைய பெரிய பொண்ணு காதலிச்சு தானே திருமணம் செய்துகொண்டாங்க என்று சொன்னதற்கு மறுகனமே அனிதாவின் அம்மா “அவ ஒரு இந்துப் பையனத்தான் காதலிச்சா” (ப.21) என்று மறைமுகமாக சொன்னார்கள். இவ்வாறு காதலில் மதபேதத்தை வெளிப்படுத்துகின்றனர் பெற்றோர்கள்.

‘விதி’ சிறுகதையில் ரஷீத் ஒருமனதாக நூரியை காதலித்து வந்தான். நூரிக்கு திருமணம் நடக்கக் கூடாது என்று மொட்ட கடிதத்தை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்புகிறான். கடிதத்தை கைப்பற்றி சவுரு, இசரத்திடம் கொடுத்தாள். படித்துப்பார்த்து இசரத்தும் நூரியும் அழுகிறார்கள். பிறகு, நூரி தூக்குப்போட்டு இறந்துவிடுகிறாள். மொட்டைக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள செய்தி,
“உண்மையானவர்களே, உங்களிடம் சொல்கிறேன். நீங்கள் உங்கள் மகனுக்குப் பேசி முடித்திருக்கும் பெண் நூர்ஜஹான் ஒழுக்கமான பெண்ணல்ல. அதனால்தான் உள்ளுரில் யாரும் மண முடிக்க மறுக்கிறார்கள்.

இப்படிக்கு,
உங்கள் நண்பன்.” (ப.110)

இச்சிறுகதையில் சல்மா சொல்லிய செய்தி தற்காலத்திலும் தொடர்வது சுட்டிக் காட்டத்தக்கது.
குழந்தையின்மையால் ஏற்படும் பிரச்சனைகள் :

பொதுவாக, புதிதாகத் திருமணமான தம்பதியர்களிடம் 5,6 மாதங்களில் குழந்தைப்பேறு குறித்து ‘எதுவும் விஷேசம் உண்டா?’ என்று வினவும் மரபு உண்டு. இப்படி கேட்கின்றவர்களுள் நல்ல எண்ணங்களோடு கேட்பவர்களை விட வருத்தப்பட வேண்டும் என்று கேட்கின்றவர்களே அதிகமாக உள்ளனர்.

‘வலி’ எனும் சிறுகதையில், கணவனே அப்படி பேச ஆரம்பித்தான் “உனக்கு இன்னும் குழந்தை பிறக்கலை ஞாபகம் வைத்துக்கொள்” (ப.28) என்று சண்டையில் குறிப்பிடுகிறான் இதனால் அவளுக்கு ஏற்படக்கூடிய மன உளைச்சலும், நிம்மதியின்மையும் ஏற்படுகின்றன. அவள் எங்கு சென்றாலும், அவளை மலடி என்று சொல்வதால், வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் சூழல் உண்டாவதாக சல்மா கூறுகிறார்.

சம உரிமை இன்மையும், சந்தேகமும் :

கல்வி, அரசியல், ஊடகம், வின்வெளி, சுற்றுப்பயணம் பல இடங்களில் பெண்கள் வேலைப்பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் மூலமாகவும், உடன் வேலை பார்ப்பவர்களின் மூலமாகவும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

‘பொறி’ எனும் சிறுகதையில், மனைவி தன் கணவனிடம் “என்ன விஷயம், எங்க போனீங்க? என்று கேட்டதற்கு ஒண்ணுமில்லைன்னா விடமாட்டியா?” (ப.35) என்று கூறுவது அவர்களுக்குள் நிலவும் சம உரிமையின்மையை காட்டுகின்றது.

‘யுத்தம்’ எனும் சிறுகதையில், தொலைபேசி வந்ததும் மனைவியை “இப்ப உடனே ஒரு பிறந்தநாள் விழாவிற்குப் போகனும்” (ப.55) என்று சொல்லி விழாவிற்கு காரில் அழைத்துச் செல்கிறான் கணவன். அங்கு உள்ளவர்களின் எண்ணிக்கை 30லிருந்து 35 பேர் இருந்தார்கள். கணவனுடைய நண்பன் “அருமையான சாப்பாடு. நீ கொடுத்து வைத்தவன்.” (ப.56) என்று சொன்னதற்குப் பிறகு கணவன் தன் மனைவியை நோக்கி ஆணுக்கே உரித்தான கர்வத்தை வெளிப்படுத்துகிறான். எந்த விழாக்களுக்குச் சென்றாலும் எந்த ஒரு ஆணுடனும் பேசக்கூடாது என்று கணவன் எண்ணுகிறான் என்பதை இச்சிறுகதையின் மூலமாக கூறுகிறார்.

‘இருள்’ எனும் சிறுகதையில் ஜன்னத் சமையல் என்ன செய்வது என்று கத்திஜாவிடம் கேட்டாள். சப்பாத்தி சமைக்கலாம் என்று ஜன்னத்தின் மாமியார் சொன்னார்கள். பிறகு சமைக்க ஆரம்பிக்க போகும் போது குழந்தைக்கு பசி எடுத்துவிடுகிறது. தன் குழந்தைக்கு வீட்டு வாசல்படியில் சாப்பாடு கொடுக்கும் போது ரஹீம், கையை பிடித்து தரதரவென்று இழுத்து வீட்டினுள்ளே விட்டான். மனைவியின் மீது சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்கிறான். சிறு வயதில் பேய் படம் பார்த்து தூங்கும்போது, திருமணம் ஆனதற் பிறகு கணவன் உடன் தூங்கி பழக்கம் ஆனதற்கு பிறகு அவன் இல்லாமல் தூக்கமே வரவில்லை என்று இச்சிறுகதையின் வாயிலாக சல்மா கூறுகிறார். இச்சிறுகதையில் கணவன் ஹோட்டலில் கணவன் சர்வரிடம் காபி கேட்டான். எடுத்து வந்து மனைவியிடம் கொடுத்து விட்டான். அதனால் கணவன் “உன் மொகரையை மூடு. புர்கா போட்டா போதுமா? மூஞ்சிய எவன்கிட்டக் காட்டத் தொறந்து போட்டிருக்க” (ப.115) என்று மனைவியை சந்தேக கண்ணோட்டத்தில் கணவன் பார்ப்பதைக் கூறியுள்ளார்.

 

வன்புணர்ச்சிக்கு உள்ளாதல் :

உலகத்தில் எங்கு சென்றாலும் வன்புணர்ச்சிக்கு உள்ளாகும் பெண்கள் சொந்த உறவினர்கள் மூலமாவும், காதலன் மூலமாகவும், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என்று அனைத்து துறைகளிலும் நடக்கக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. ‘சாபம்’ எனும் சிறுகதையில் தோப்பின் வழியாக நடந்து வந்துக்கொண்டிருக்கும் போது பின்னால் வந்த ரஷிதாவின் கணவனை கானோம். அப்போது பெரும் மழை பெய்துக்கொண்டிருக்கிறது. அதனால் அங்கு சாயபுவிடம் தங்குவதற்கு ரஷிதா, ரஷிதாவின் குழந்தை அடைக்கலம் அடைந்தார்கள். சாயபுவிடம் கற்பை காப்பாற்றுவதற்கு “எங்களை விட்டுவிடுங்க” (ப.42) என்று எவ்வளவோ முயற்சி எடுத்தும் குழந்தையைக் கொன்று கற்பை சூரையாடுகிறான் என்பதை சிறுகதையின் வாயிலாக சல்மா எடுத்துரைக்கிறார்.

 

விதவைகளுக்கானப் பிரச்சனைகள் :

திருமணம் செய்து நன்றாக வாழ்ந்தவர்கள் கணவன் இறந்த பிறகு இந்த உலகம் அவர்களை தனிமைப்படுத்தி வைத்து விடுகிறது. தெருக்களில் நடந்து செல்லும் போதும், திருமண நிகழ்ச்சி மற்றும் மற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் போது மன ரீதியாக அவமானப்படுத்தி வெளியே போ என்று சொல்லும் அளவிற்கு இந்த சமூகம் இருந்து வருகின்றது. மனிதர்கள் விதவைப் பெண் என்றால் உடை வெள்ளை நிறமாக இருக்க வேண்டும் என்றும், வலையல்கள் அணியக்கூடாது என்றும், பொட்டு வைக்கக் கூடாது என்றும், மெட்டி, அணிகலன்கள் எவற்றையும் போடக்கூடாது என்று சமூகம் கட்டுப்பாட்டை விதித்துள்ளது. பழங்காலத்திலிருந்து தற்காலம் வரை நடக்கக் கூடியதாக ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

‘இழப்பு’ சிறுகதையில் கணவன் இல்லாத போது மனைவிக்கு ஏற்படும் பிரச்சனைகளை எடுத்துக்கூறும் வகையில் அமைந்துள்ளது. அதில் எப்போதும் இரவு நேரங்களில் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருப்பது, இரவு நேரத்தில் அவனால் ஏற்படும் நிலைகள் நினைத்துப் பார்ப்பது, கணவன் இல்லாத போது சமூகம் எவ்வாறு நடந்துக்கொள்ளும் என்று சல்மா அவர்கள் கூறியுள்ளார்.

பெண்களுக்குள் பெண்களால் ஏற்படும் உறவுப் பிரச்சனைகள் :

‘விளிம்பு’ என்னும் சிறுகதையில் வாயிலாக உறவுப் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லப்படுகின்றது. இக்கதையில் வரும் மாமியார் மருமகளிடம் எது சொன்னாலும் செய்யனும் எனும் தன்மையை மாமியார் உருவாக்கியுள்ளார். ஒரு நாள் சம்மந்திமார்களுக்கு உடம்பு செரியில்லை என்று தெரிய வந்து அவர்களை காரில் அழைத்துச் செல்லும் போது நீ பெரியவளா நான் பெரியவளா என்று மாறி மாறி சன்டையிட்டுக்கொள்வார்கள். ஏ.ஸி. போடனும் என்று மருமகளிடம் ஆள்காட்டி விரலால் குத்தி போடச்சொல்வதும். திரும்பவும் பாட்ட போடு என்று சொல்வதும், அந்த பாட்டு சரியில்லை வேற பாட்டு போடு என்று கூறுவதுமாக இருந்தது. “ஏப்பா அந்தக் கண்றாவிய நிறுத்தமாட்ட. பிரயாணம் செய்றப்ப இதையெல்லாமா கேப்பாங்க! கர்மம், கர்மம். பிரயாணத்தை சுலபமாக்கு அல்லான்னு பைத்து கேசட்ட போட்டுவிடுவியா அதவுட்டு மானேதேனேங்கிற பாட்ட போட்டுக்கிட்டு…” (ப.93) என்று ஆசிரியர் பெண்களுக்குள் பெண்களால் ஏற்படும் பிரச்சனைகளை கூறியுள்ளார்.

சமயம்:

‘மறுமுகம்’ எனும் சிறுகதையில் முகமது என்கிறவன் காலேஜ் படிக்கக்கூடியவனாக இருக்கின்றான். அவனது தங்கை ரிஸ்வானா மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறாள். அவளைப் பார்த்துக்கொள்ள சுஜிதா என்ற பெண்ணை ஏஜென்ட் அனுப்பினான். சுஜிதா நன்றாகத்தான் 15 நாட்களாக வேலைப் பார்த்துக்கொண்டு வந்தாள். 20 நாட்கள் லீவ் போட்டு சென்றிருந்த சமையல் செய்பவள் வந்ததும் சமையல் செய்து “சாப்பாடு வச்சாச்சு. வாங்க சாப்பிடலாம்” (ப.141) என்று கூப்பிட்டுப் பார்த்தும் சாப்பிட வருவதில்லை சுஜிதா. பிறகு சமையல் காரி ஒரு எஸ்சி என்று சொல்லி போய்விட்டாள். இக்கதையில் சமையல் காரியை ஒரு சமயத்தைச் சார்ந்தவளாக பார்க்கவில்லை உறவினராக அந்த குடும்பம் பார்க்கின்றது, அவற்றை மட்டும் சொல்லாமல் அவளின் மறுமுகத்தையும் கதையில் மூலமாக ஆசிரியர் கூறுகிறார்.
உலகெங்கிலும் நட்பின் மூலமாக உயிரைக் கொடுத்தாவது நண்பனைக் காப்பாற்றனும் என்று நினைப்பார்கள். சிலர் எதிர்மறையாக இருப்பார்கள். ‘தோழி’ எனும் சிறுகதையில் வர்ஷி, துஷியின் மீது நட்பு ஏற்பட்டு லீவு நாட்களில் ஹாஸ்டலிலிருந்து வீட்டுக்கு அழைத்து வருவதும் ஹாஸ்டலில் விடுவதுமாக இருப்பாள். ஆனால் வரும்போது எப்போதுமே அதிமாக பேசவே மாட்டாள் அதனால் வர்ஷியின் கணவன் திட்டுவான். வர்ஷி ஹாஸ்டலுக்கு செல்லும் போது தோழியிடம் “பரவாயில்லை சொல்லு. என்னாச்சு அவளுக்கு?” (ப.134) அவளுக்கு அல்சர் என்று சொன்னதும் ஹாஸ்டலுக்கு கிழம்பி செல்கின்றனர். இது சமயத்தைக் கடந்த நட்பாக கூறுகிறார்.

முடிவாக :

‘சாபம்’ எனும் சிறுகதைத் தொகுப்பின் வாயிலாக பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் பெண் எழுத்தாளராக சல்மா திகழ்கிறார்.

News

Read Previous

அயிரை அப்துல் காதர் வஃபாத்து

Read Next

ஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *