செல்போன்

Vinkmag ad

கால் வலிக்க முள்ளு சேர்த்து அரை வயிறு கஞ்சிக்குடிக்க காடு மேடு அலைஞ்சி திருஞ்சி …அக்கரயா சொல்லுவா எங்க அம்மா..

அய்யாசாமி பத்திரமா போயா பள்ளிக்கூடத்துக்கு..வாத்தியார் பேச்ச கேட்டு நடயானு…
அம்பது காசு முட்டாய் வாங்க முண்டாச விரிச்சு காசு தருவார் எங்க அய்யன்..பயல்வளோட சண்டபிடிக்காம படியா…ஒத்துமயா இருக்கனும்…பொறவு சண்ட பிடிச்சா வாத்தியார்ட சொல்லுவேனு…

ஆசையா திட்டுவா எங்க அக்கா மணிக்கணக்குல..பக்கத்துல உக்காந்த காத பிடிச்சு கணக்கு சொல்லித்தருவா கவனத்தோட…கணக்குப்பாடத்துல முட்ட வாங்குனா டீச்சர் என்ன வஞ்ச மாட்டாங்க..எங்க அக்காவ கூட்டியார சொல்லுவாங்க..

மணியடிச்சதும் தட்டை தூக்கிட்டு நிப்போம் சத்துணவு தின்போம் சத்தம்போடாம..
கைய கழுவிட்டு கபடி விளையாடுவோம் வேத்து கொட்ட…
மதியானம் தமிழ் வாத்தியார் வருவார்…முறுக்கு மீசையோட..வாசபடி ஒரமா நின்னு மறைஞ்சு மறைஞ்சு போவோம் வகுப்புக்கு….பாட்டுபாடி பாடம் நடத்துவாரு தனித்தமிழ்ழ…தண்ணி ஒரு க்ளாஸ் குடிச்சிட்டு வரேன் சார்னு சொன்னா முறுக்கு மீசையோட முறைச்சி முறைச்சி பார்ப்பார்…அய்யா தண்ணீர் குடித்து விட்டு வருகிறேன்னு தாய்மொழிய வளர்த்தார் எங்க நாக்குல..

அதுக்குபின்ன அறிவியல் வாத்தியார் வருவார் சொட்டத்தலயா…கண்ணு படம் வரைஞ்சி காது வலிக்க கத்துவார் தெள்ளத்தெளிவா..ஒன்னுமே ஏறலனாலும் ம் போடுவோம் சும்முனாச்சுக்கும்…

பூகோள வாத்தியார் வருவார் நம்ம மிட்டாய்கட தாத்தாமாட்டோம்…வயிறு வந்து நிக்கும் மேசமுட்டும்…ஐதர்அலி காலத்துலேந்து அக்பர் காலம் வர அக்குவேறா ஆணிவேரா பிரிச்சு பிரிச்சு சொல்லுவார் வரலாற..ஆம்னு தூங்கிகிட்டே துதி பாடுவோம் தேசப்பற்று இருக்ற மாதிரி…

நாலுமணிக்கு மணியடிக்க பைய தூக்கிட்டு பைய நடப்போம் வீட்டுக்கு..எதித்த தெரு குமார் பக்கத்து தெரு மணி நானு என் மாமா மொவன் கதிரவன்னு..கைல கொடுத்த அம்பது பைசாக்கு அஞ்சு காசு மிட்டாய் பத்து வாங்கி பகிர்ந்து தின்போம் பாசத்தோட..
நமது தலைமுறை இவ்வாறு மகிழ்ந்தோம்..உணர்வுகளை மதித்து…

இத்தலைமுறையை ஆன்லைனுள் அடைக்கிறோம்…செல்போன் உலகத்தில் உயிர்களின் மதிப்பு எவ்வாறு புரியும் இவர்களுக்கு என யோசிக்காமல்

சோ.ஞா.பிரசன்னா..

News

Read Previous

தமிழ் எண்களின் பெயர் விளக்கங்கள்

Read Next

கடலோடி

Leave a Reply

Your email address will not be published.