தமிழ் எண்களின் பெயர் விளக்கங்கள்

Vinkmag ad

தமிழ் எண்களின் பெயர் விளக்கங்கள்

முன்னுரை:

தமிழர்கள் பழங்காலம் தொட்டே நிறுத்தல் அளவை, நீட்டல் அளவை, முகத்தல் அளவை போன்ற பலவகை அளவைகளில் எண்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்கள் பலவகைகளாக இருந்தாலும், நம் வசதிக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்டவை என்றும் ஒன்றுக்குக் கீழ்ப்பட்டவை என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்டு எண்ணற்ற எண்கள் இருப்பதால் ஒன்றாதிபதி** (ஒன்று முதல் பத்து வரையிலானவை) எண்களுக்கான தமிழ்ப் பெயர்கள் மட்டும் எவ்வாறு தோற்றம் பெற்றன என்பதை விரிவாகப் பார்ப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

பாவாணரின் விளக்கம்:

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் ஒன்றாதிபதி தமிழ் எண்களின் பெயர்களுக்கான தமது விளக்கங்களை ஏற்கெனவே கொடுத்திருக்கிறார். எனவே அதனை முதலில் காணலாம். சான்று: விக்கிபீடியா (தமிழ்)

ஒன்று – ஒன்று சேர்தல் என்பதால் ஒன்று ஆனது. (ஒல் – ஒன் – ஒன்று)

இரண்டு – ஒன்றை இரண்டாக அறுத்தலால் கிடைப்பது. (ஈர் – இர் – இரது – இரண்டு)

மூன்று – முப்பட்டையான மூக்கின் பெயரில் இருந்து தோன்றியிருக்கலாம். (மூசு – மூகு – மூது – மூறு – மூன்று)

நான்கு – குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் என்ற நால்வகை நிலத்தால் தோன்றிய பெயர். (நால் – நால்கு – நான்கு)

ஐந்து – கையில் ஐந்து விரல்கள் இருப்பதால் கை என்பது ஐந்தையும் குறிக்கும். (கை – ஐ – ஐது – ஐந்து)

ஆறு – பண்டைத் தமிழகத்தில் ஐந்திணைச் சிறு தெய்வ வணக்கமும், கடவுள் வழிபாடும் சேர்ந்து அறுவகை ஆறாய் இருந்ததினால் ஆறென்னும் மதப் பெயர் ஆறென்னும் எண்ணைக் குறிக்கலாயிற்று. (ஆறு = வழி, நெறி, மதம்)

ஏழு – இன்னிசை ஏழாதலால் அது எழுதலைக் குறிக்கும் சொல்லினின்று ஏழ் என்னும் எண்ணுப் பெயர் தோன்றிற்று. (எழு – ஏழ் – ஏழு)

எட்டு – தமிழில் எல்லை என்னுஞ் சொல் இடவரம்பையும் திசையையும் குறிக்கும். எல்லை என்பதற்கு ஒரு பொருள் மறுசொல் எண் என்பதாம். நேர்த்திசை நான்கும், கோணத்திசை நான்குமாகத் திசை எட்டாதலின் திசையைக் குறிக்கும் எண் என்னுஞ் சொல் எட்டு எனும் எண்ணுப் பெயரைத் தோற்றுவித்தது. (எண் – எட்டு)

ஒன்பது (தொண்டு) – மாந்தன் உடம்பில் ஒன்பது தொளையிருந்தால் தொளைப் பெயர் அதன் தொகைப் பெயராயிற்று. தொண்டு வழக்கற அஃதிருந்த இடத்திற்குத் தொண்பது (90) தொன்பதாகி ஒன்பதாகியது. (தொள் – தொண்டு = தொளை).

பத்து – பல் = பல. பல் – பது – பத்து – பஃது

புதிய விளக்கம்:

பாவாணர் ஐயாவின் ஒன்றாதிபதி எண்களுக்கான பெயர் விளக்கங்களை மேலே கண்டோம். அவற்றில் சில விளக்கங்கள் (ஒன்று, இரண்டு) ஏற்புடையதாக உள்ளன. சில விளக்கங்கள் ஏற்புடையதாக இல்லை. பத்தாம் எண்ணிற்கு விளக்கம் போதவில்லை. இந்நிலையில், புதிய விளக்கங்கள் என்னவென்று கீழே விரிவாகப் பார்க்கலாம்.

ஒன்று:

ஒன்னுதல் என்றால் பொருந்துதல், தொடுதல் என்று பொருளுண்டு. ஒரு செயலைத் துவக்க வேண்டுமென்றால் முதலில் அதற்கான பொருளைத் தொட வேண்டும். இதனால் தான் துவக்கத்திற்குத் தொடக்கம் (தொடு + ஆக்கம்) என்ற பெயரும் உண்டானது. எண்களின் தொடக்கமாக இந்த எண் விளங்குவதால் இந்த எண்ணிற்கு ஒன்று என்ற பெயர் ஏற்பட்டது. ஒன்று என்ற பெயரின் தோற்றத்தைக் கீழே காணலாம்.

ஒன் (=பொருந்து, தொடு) + து = ஒன்று = தொடக்கம்.

இரண்டு:

ஈர்தல் என்றால் கிழித்தல், வகுத்தல் என்ற பொருளுண்டு. ஒருபொருளை ஒருமுறை கீறும்போது கிடைப்பது இரண்டு பாகங்கள் என்பதால் ஈர்தல் வினையே இந்த எண்ணிற்கு அடிப்படையானது. இரண்டு என்ற எண்ணின் பெயர்த் தோற்றத்தினைக் கீழே காணலாம்.

ஈர் (=கீறு, கிழி) + அண்டு (=அடை, பெறு) = ஈரண்டு >>> இரண்டு = கீறுவதால் / கிழிப்பதால் பெறுவது.

மூன்று:

பழந்தமிழர்கள் தமது வாழ்வில் இயற்கையுடன் இணைந்து அதனை உற்றுநோக்கி வாழ்ந்தனர் என்பதும் அந்த அடிப்படையிலேயே பல சொற்களின் பெயர்களை அமைத்தனர் என்பதும் மறுக்க இயலாத உண்மை ஆகும். அவ்வாறு இயற்கை நியதியை உற்று நோக்கித் தமிழர்கள் அமைத்த பல எண்ணுப் பெயர்களில் ஒன்றுதான் மூன்று என்பதாகும்.

இயற்கையை உற்றுநோக்கிய தமிழர்கள் அதன் நியதியில் பெரும்பாலும் மூன்று பிரிவுகளே / வகைகளே இருப்பதை அறிந்தனர். சில சான்றுகளை மட்டும் கீழே காணலாம்.

வாழ்க்கை வகை : பிறப்பு – வாழ்வு – இறப்பு

இருப்பிட வகை : மேல் – இடை – கீழ்

இயல்பொருள் வகை : திடம் – திரவம் – வாயு

பாலின வகை : ஆண் – அலி – பெண்

வரிசை வகை : முதல் – இடை – கடை

பொழுது வகை : காலை – மதியம் – இரவு

இயற்கையின் நியதியில் இத்தகைய மூன்று வகைகளே பெரும்பான்மையாக அறியப்பட்டதால், இயற்கை நியதியைக் குறிக்கும் “முறை” என்ற சொல்லில் இருந்தே இந்த எண்ணுக்கான பெயரை அமைத்தனர். மூன்று என்ற பெயரின் தோற்றத்தைக் கீழே காணலாம்.

முறை (=இயற்கை நியதி) + உ = மூறு >>> மூன்று = இயற்கைப் பிரிவுகள்.

நான்கு:

இயற்கையாய் அமைந்திருக்கும் திசைகளின் எண்ணிக்கை அடிப்படையில் வைக்கப்பட்ட பெயரே நான்கு ஆகும். இயற்கையின் அடிப்படைத் திசைகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்ற நான்கு மட்டுமே. ஏனை நான்கும் இவற்றின் கூடுதலால் விளைபவை. எனவேதான் திசையைக் குறிக்கும் சொல்லான ஞாங்கர் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த எண்ணிற்கான பெயரைக் கீழ்க்காணுமாறு அமைத்தனர். .

ஞாங்கர் (=பக்கம், திசை) + உ = ஞாங்கு >>> நாங்கு >>> நான்கு = திசை வகைகள்

ஐந்து:

அத்துதல் என்றால் பொருந்துதல், பற்றுதல் என்று பொருளுண்டு. பொருட்களைப் பற்ற உதவுவதால் கைகளுக்கு அத்தம் என்ற பெயருண்டு.

அத்து (=பற்று) + அம் = அத்தம் = பற்ற உதவுவது = கை.

அத்தம் என்ற தமிழ்ச்சொல்லில் இருந்தே கையினைக் குறிப்பதாக அச்`தம், க`ச்`தம், கா`த் போன்ற பிறமொழிச் சொற்கள் தோன்றின. கையில் இருக்கும் ஐந்து விரல்களே கைக்குப் பற்றும் இயல்பினைத் தருவதால், கையைக் குறிக்கும் அத்தம் என்ற சொல்லில் இருந்தே ஐந்து எண்ணிற்கான பெயரைக் கீழ்க்காணுமாறு அமைத்தனர்.

அத்தம் (=கை) + உ = அத்து >>> அந்து >>> ஐந்து = விரல் பிரிவுகள்.

ஆறு:

கை விரல்களைக் கொண்டு ஐந்து என்ற எண்ணின் பெயரை அமைத்ததைப் போல, கால் விரல்களைக் கொண்டு ஆறாம் எண்ணிற்கான பெயரை அமைத்தனர். தேனீ, வண்டு முதலான பெரும்பாலான பூச்சிகளில் கால்களின் எண்ணிக்கை ஆறாக அமைந்துள்ளது. இந்த அடிப்படையில், தேனீ / வண்டைக் குறிக்கும் பெயரை அடிப்படையாகக் கொண்டே இந்த எண்ணிற்கான பெயரைக் கீழ்க்காணுமாறு சூட்டினர்.

அரி (=தேனீ, வண்டு) + உ = ஆரு >>> ஆறு = தேனீ / வண்டின் கால்வகை.

ஏழு:

இயற்கையில் தோன்றும் வண்ணங்களை எண்ணத் தொடங்கினால் அது கணக்கில் அடங்காது என்று அறிவோம். ஆனால் வானவில்லில் தோன்றும் வண்ணங்களின் எண்ணிக்கையோ ஏழாகவே எப்போதும் அமைந்து விடுகிறது. இந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட பெயரே ஏழு ஆகும். ஏழு எனும் எண்ணுப் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

எழில் (=வானவில்) + உ = ஏழு = வானவில்லின் நிறவகை.

எழில் என்ற சொல்லுக்கு வானவில் என்ற பொருள் அகராதிகளில் நேரடியாகக் கொடுக்கப்படவில்லை. ஆனால், அச்சொல்லுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உயர்ச்சி, பருமை, அழகு, நிறம் ஆகிய பொருட்களை இணைத்தால் உயரத்தில் தோன்றும் பருமையான அழகிய நிறங்கள் என்ற விளக்கத்தைப் பெறலாம். இந்த விளக்கம் வானவில்லுக்குப் பொருந்துவதாகவே இருந்தாலும், எழில் என்ற சொல்லுக்கு வானவில் என்ற பொருள் பொருந்துவதான இலக்கிய இடங்கள் சிலவற்றையும் கீழே காணலாம்.

நறவு பெயர்த்து அமர்த்த நல் எழில் மழை கண் – பெரும் 386பூ குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழை கண் – நெடு 38ஏந்து எழில் மழை கண் வனைந்து வரல் இள முலை – பதி 54ஏந்து எழில் மழை கண் எம் காதலி குணனே – அகம் 83

மேற்பாடல்களில் வரும் “எழில் மழைக் கண்” என்பது மழைக்கால வானவில் போல அழகு செய்யப்பட்ட கண்ணிமை என்ற பொருளைத் தருவதாகும். வானவில் என்பது மழையுடன் தொடர்புடையதைப் போல, மேற்காணும் பாடல்களில் வரும் எழில் என்பதும் மழையுடன் தொடர்புடையதாய் “ எழில் மழை “ என்று இயைந்து வருவது குறிப்பிடத் தக்கதாகும். இதிலிருந்து, எழில் என்ற சொல்லுக்கு வானவில் என்ற பொருளும் பொருந்தும் என்பதை அறியலாம்.

எட்டு:

எள் தாவரத்தை அடிப்படையாகக் கொண்டு எட்டு என்ற எண்ணுப் பெயரை அமைத்துள்ளனர். எள்ளின் காயைப் பார்த்தால், அதில் எட்டு பிரிவுகள் இருப்பதைப் போல வெளிப் பார்வைக்குத் தோன்றும். அருகில் எட்காயின் படம் காட்டப்பட்டுள்ளது. எள்ளைக் குறிக்கும் பெயரில் இருந்து இந்த எண்ணுக்குரிய பெயரை அமைத்திருக்கும் விதத்தினைக் கீழே காணலாம்.

எள் (=எட்காய்) + து = எட்டு = எட்காயின் பிரிவுகள்.

ஒன்பது:

இந்த எண்ணுக்குத் தொண்டு, ஒம்பது, ஒம்போது போன்ற புழங்கு பெயர்களும் உண்டு. பத்து என்பது எண்ணிக்கையின் முழுமையைக் குறிக்கும் நிலையில், ஒன்பதைக் குறிக்கும் பெயர்கள் அனைத்தும் முழுமை அற்றது அல்லது குறைவுடையது என்ற பொருளைத் தருவதாகவே அமைக்கப்பட்டுள்ளன. இப்பெயர்கள் உருவான முறையினைக் கீழே காணலாம்.

ஓவு (=நீங்கு, அறு) + பொதி (=முழுமை) + உ = ஓப்பொது >>> ஒம்போது >>> ஒம்பது >>> ஒன்பது = முழுமை அற்றது.

 

தோண்டு (=நீக்கு) >>> தொண்டு = நீக்கப்பட்டது, குறையுடையது.

பத்து:

பத்து என்பது முழுமையானது என்னும் பொருளில் எண்ணிக்கையின் முழுமையைக் குறிக்கின்ற சொல்லாகும். காரணம், ஆதியில் கைவிரல்களைக் கொண்டே எண்ணிக்கை சொல்லப்பட்டது என்பதும் கைவிரல்கள் மொத்தம் பத்தே என்பதுமாகும். எண்ணிக்கையில் மட்டுமின்றி, அன்றாட வாழ்விலும் பத்து என்ற சொல்லை நிறைவு / முழுமைப் பொருளில் நாம் பயன்படுத்தி வருகிறோம். சாப்பாடு போதுமா ? என்று கேட்பதற்குப் பதிலாக சாப்பாடு பத்துமா? என்று கேட்கும் வழக்கம் பல ஊர்களில் உண்டு. இதில் வரும் பத்து என்பதும் நிறைவு / முழுமைப் பொருள் கொண்டதாகும்.

பற்றுதல் என்றால் போதியதாதல், நிறைதல் என்ற பொருளுண்டு. இதிலிருந்து தோன்றியதே பத்து என்ற பெயராகும்.

பற்று (=போதியதாகு, நிறை) >>> பத்து = நிறைவானது, முழுமையானது.

முடிவுரை:

இதுவரையிலும் தமிழர்கள் பயன்படுத்துகின்ற ஒன்றாதிபதி எண்களுக்கான பெயர்கள் தோன்றிய விதங்களை விளக்கமாகக் கண்டோம். இவற்றை எல்லாம் தொகுத்துப் பார்க்குமிடத்து, பழந்தமிழர்கள் எண்களுக்குப் பெயர் அமைக்க வேண்டும் என்பதற்காகக் கண்மூடித் தனமாகவோ எதேச்சையாகவோ செய்யவில்லை என்பதை அறியலாம். அதுமட்டுமின்றி, மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட நிலப்பாகுபாடு, சமயம், இசை போன்றவற்றை அடிப்படையாகக் கொள்ளாமல் இயற்கை நியதி, வானவில், திசைகள், தாவரம், விலங்கு, பறவை போன்ற இயற்கைப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டே அவற்றை ஆராய்ந்து தெளிந்து காரணப் பெயர்களாகவே அமைத்துள்ளனர் என்னும் செய்தியையும் அறியலாம்

பின்குறிப்பு:

** ஒன்றாதிபதி = ஒன்று + ஆதி + பத்து + இ = ஒன்று முதல் பத்து வரையில் ஆனவை.

News

Read Previous

உடல் நலம்…

Read Next

செல்போன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *