சுற்றுச்சூழலுக்கு கேடின்றி சிலைகளைக் கரைக்க ஒரு வழி

Vinkmag ad

அறிவியல் கதிர்

சுற்றுச்சூழலுக்கு கேடின்றி சிலைகளைக் கரைக்க ஒரு வழி
பேராசிரியர் கே. ராஜு

விநாயகர் சதுர்த்தி அண்மையில் நடந்து முடிந்திருக்கிறது. வருடாவருடம் அந்த விழாவில் எடுத்துச் செல்லப்பட்ட பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும்போது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சமாளிப்பது ஒரு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. சிஎஸ்ஐஆர்  தேசிய வேதியியல் சோதனைக்கூடம் (சிஎஸ்ஐஆர்-என்சிஎல்) பாரிஸ் சாந்தினால் (Plaster of Paris) செய்யப்பட்ட சிலைகளைக் கரைக்க `ஜலாபிஷேகம் என்ற சுற்றுச்சூழலுக்கிசைந்ததோர் வழியைக் கண்டுபிடித்திருக்கிறது. இந்த முயற்சியில் மோஜி, கம்மின்ஸ் ஆகிய வேறு நிறுவனங்களும் இணைத்துக் கொள்ளப்பட்டன.
களிமண் சிலைகளைப் பயன்படுத்தினால் பிரச்சினையில்லை. ஆனால் பெரும்பாலான சிலைகள் பாரிஸ் சாந்தினால் தயாரிக்கப்படுவதுதான் பிரச்சினை. அந்த சிலைகளைக் நீர்நிலைகளில் கரைப்பது சுற்றுச்சூழலுக்கு நேரடியாகவே பாதிப்பை ஏற்படுத்துகிறது. பாரிஸ் சாந்தில் உள்ள ஜிப்சம், நீர் கடினத்தன்மை அடைவதற்கும் நீர்நிலைகள் மாசுபடுவதற்கும் காரணம். சிலைகள் ஆறுகளில் கரைக்கப்படும்போது சிலைகளை அலங்கரிக்கப் பயன்படும் எண்ணெய் பூச்சுகளில் உள்ள கன உலோகங்கள் நீரில் சேர்ந்து விடுகின்றன. அமிலங்களின் அளவு அதிகரித்து ஆக்சிஜன் அளவு குறைந்துவிடுகிறது. பளபளப்பான மேற்பூச்சில் உள்ள ஒளிரும் வண்ணங்கள் இன்னும் அதிகக் கெடுதலை விளைவிக்கின்றன. நீர்நிலையில் வாழும் உயிரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. கரையாமலிருக்கும் சிலைகள் நீரடைப்புக்குக் காரணமாகின்றன. மக்கி அழியாத சிலைகள் நீர்நிலைகளின் இயற்கையான ஓட்டத்தைத் தடுத்து நீர் தேங்கி நிற்பதற்கு வழிவகுத்து விடுகின்றன.
ஜிப்சத்தை 150 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலை வரை சூடுபடுத்தி நீரை அகற்றி பாரிஸ் சாந்து தயாரிக்கப்படுகிறது. பாரிஸ் சாந்து பவுடரில் நீரைச் சேர்க்கும்போது கலவை இறுகிவிடுகிறது. இந்த சாந்து கட்டுமானப் பொருளாகவும் சாலைபோடும்போது சுண்ணாம்புக் கலவையிலும் பயன்படுகிறது. விபத்துகளின்போது காயமடைந்து உடைந்த எலும்புகளுக்கு வலு சேர்க்கவும் அதைப் பயன்படுத்துகின்றனர். பெரும் அளவில் பயன்படுத்தும்போது பாரிஸ் சாந்தின் கழிவை பவுடராக்கி அதை மீண்டும் பயன்படுத்த முடியும்.
பாரிஸ் சாந்தினாலான விநாயகர் சிலைகளை நொறுக்கி பவுடராக்குவதை பக்தர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பக்தர்களின் மனம் புண்படாமலும் அதே சமயம் சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாமலும் பாரிஸ் சாந்து சிலையை மறுசுழற்சி செய்ய வேண்டிய சவாலை சிஎஸ்ஐஆர்-என்சிஎல் விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டனர். சிலையைக் கரைப்பதற்கும் எஞ்சியிருப்பதை வேதியியல் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் டாக்டர் மோகன் டோன்கரே, டாக்டர் ஷுபாங்கி உம்பர்கர் ஆகிய இருவரும் சோடியம் பைகார்பனேட், சோடியம் கார்பனேட், பொட்டாசியம் கார்பனேட், அமோனியம் பைகார்பனேட் போன்ற கூட்டுப்பொருட்களைப் பயன்படுத்திப் பார்த்தனர். சமையல் சோடாவைப் (சோடியம் பைகார்பனேட்) பயன்படுத்த முடிந்தது என்றாலும் சிலை கரைவதற்கு மீக நீண்ட நேரம் தேவைப்பட்டது. குறுகிய நேரத்தில் சிலையைக் கரைக்க அமோனியம் பைகார்பனேட்தான் சிறந்தது என இறுதியில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். சிலை கரைவதற்கு 48 மணி நேரம் மட்டுமே ஆனது.
சிலையை வேகமாகக் கரைக்க அதன் எல்லாப் பக்கங்களிலும் அமோனியம் பைகார்பனேட் கரைசல் சீராகத் தெளிக்கப்பட்டது. துணைப் பொருட்களாக அமோனியம் சல்பேட்டும் கால்சியம் கார்பனேட்டும் கிடைத்தன. பயிர்களுக்கும் தாவரங்களுக்கும் உரமாக அமோனியம் சல்பேட்டைப் பயன்படுத்தலாம். சிமெண்ட் செங்கல்கள், சிமெண்ட் தகடுகள் போன்ற பொருட்களைத் தயாரித்து அவற்றை கட்டுமானத் தொழிலிலும் சாலை போடுவதற்கும் கால்சியம்  கார்பனேட்டைப்  பயன்படுத்த முடியும்.
பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்தபிறகு, சிலைகளைக் கரைக்கும் தொழில்நுட்பம் புனே பேரூராட்சிக்கு அளிக்கப்பட்டது. அத்துடன் 5000 லிட்டர்கள் கொள்ளளவு உள்ள இரு தொட்டிகளையும் சிஎஸ்ஐஆர்-என்சிஎல் அமைத்துக் கொடுத்தது. இந்த ஆண்டில் தனிப்பட்ட நபர்கள், நகராட்சிகள் புனே பேரூராட்சியிடம் சேர்த்துக் கொடுத்த சுமார் 5000 சிலைகள் இந்த நவீனமான முறையில் கரைக்கப்பட்டன. இதை காணொளிக் காட்சியாக எடுத்து புனே பேரூராட்சி விளம்பரப்படுத்தியிருக்கிறது. எதிர்காலத்தில் விநாயகர் ஊர்வலங்கள் நடக்கும் ஊர்களில் எல்லாம் சிலைகளைக் கரைக்க சிஎஸ்ஐஆர் தொழில்நுட்பத்தையே பயன்படுத்த வேண்டும் என்பதை அரசு உறுதிப்படுத்துமா?
    (உதவிய கட்டுரை : ஆகஸ்ட் 2017 சயன்ஸ் ரிப்போர்ட்டர் இதழில் டாக்டர் வாபியா மாசி எழுதியது)

News

Read Previous

விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு!

Read Next

பெரியார்

Leave a Reply

Your email address will not be published.