சிதைந்து வரும் கூட்டுக் குடும்பம்!

Vinkmag ad

சிதைந்து வரும் கூட்டுக்குடும்பம்!

உலகில் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு
கோணத்தில் சிந்திக்கும் நிலையில் தான் இறைவன் மனிதனுக்கு அறிவை கொடுத்துள்ளான்.இதில் ஒருவரின் சிந்தனை இன்னொருவரின் சிந்தனைக்கு மாற்றமாய் இருக்கும் என்பது உலகியல் இயல்பு.

தான் நினைப்பதும் சொல்வதும் தனக்கு சரியென நினைக்கிறோம்.ஆனால் இது மற்றவர்களுக்கு தவறென்றாகி விடுகிறது.

குடும்பம் என்று வரும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் மீது உரிமை எடுப்பது அத்துமீறல் அல்ல,அழகிய பண்பு தான்.இத்தகைய பண்பு தான் கூட்டுக்குடும்பம் என்னும் பல வண்ண பூக்களுக்கு பெருமை சேர்க்கும்.

நல்லதோ கெட்டதோ எதுவாகினும் ஒருவருக்கொருவர் தகுந்த ஆலோசனை செய்வதும் பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவதும் தான் கூட்டுக்குடும்பத்தின் அடிப்படை சாராம்சம்.

ஒரு காலத்தில் இருந்த கூட்டுக்குடும்ப வாழ்வியல் சூழலில் எவரும் சோகமாய் இருந்ததில்லை.மகிழ்ச்சியோடு தான் இருந்தார்கள்.போதிய செல்வம் இல்லையெனினும் எல்லோரும் கூடி வாழ்ந்தது தான் பெரும் செல்வமாய் அன்று உணரப்பட்டது.

ஒரு குழந்தை இரு குழந்தை என்ற வாழ்வியல் நிலைபாடு மாறிய பின்பு அவர்களுக்குள் கூட ஒற்றுமை இல்லாமல் போய் விட்டது.

எட்டு,பத்து பிள்ளைகளை பெற்றெடுத்த அன்னையர்கள் தம் பிள்ளைகளுக்குள் சகோதரத்துவ ஒற்றுமை குறித்த பள்ளி பாடம் நடத்தினார்கள்.இன்றும் சில இடங்களில் அத்தகைய பெரியதொரு கூட்டுக்குடும்பம் இருக்கத்தான் செய்கிறது.

அன்றைய காலத்தில் குடும்ப ஒற்றுமை சீர் குலைவதற்கு எந்த வகையிலும் பெண்கள் காரணியாய் இருந்ததில்லை.ஆனால் இன்றைய காலத்தில் பெண்களால் தான் குடும்ப ஒற்றுமை சீர்குலைகிறது என பண்பட்டவர்களின் கூற்றை மறுக்கவியலாது.

ஒருவரின் மீது ஒருவர் உரிமை எடுக்கும் போது சில உராய்வுகளும்,சறுக்கல்களும் ஏற்படத்தான் செய்யும்.அது நம் குடும்பத்தின் நன்மைக்காகத்தானே? என அனைவரும் கருதினால்…குடும்ப ஒற்றுமை சீர்குலையாது.

அன்றைய காலத்தில் ஆண்கள் வெளியே சென்று உழைத்து வீட்டுக்கு வரும் போது அவர்களுக்கு மட்டும் தான் வெளி உலக பரபரப்பும் டென்ஷனும் இருந்தது.அதனால் தான் வெளியில் போய்விட்டு வீட்டுக்குள் வரும் கணவனுக்கு குளிர்ந்த நீர் கொடுத்து மனைவியென்பவர் கணவனை ஆசுவாசப்படுத்துவார்.

இன்றைய காலத்தில் கணவன்,மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் நிலையென்றான பின்பு இருவருமே வெளியில் போய்விட்டு டென்ஷனோடு வீட்டுக்குள் வருகின்றனர்.யாருக்கு யார் குளிர்ந்த நீர் கொடுப்பது என்பதில் கூட கருத்தொற்றுமை இருப்பதில்லை.

40 ஆண்டுகளுக்குள் தற்போதை குடும்பவியல் சூழல் முற்றிலும் மாறிவிட்டது.இனிவரும் அடுத்த தலைமுறையை நினைக்கும் போது மிகுந்த கவலையளிக்கிறது.

கணவன்-மனைவி,அண்ணன்-தம்பி,அக்கா-தங்கை என்ற கூட்டுக்குடும்ப வாழ்வியலை தற்போது நினைத்து கூட பார்க்கவியலாது.அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்து வரும் ஒருசில கூட்டுக்குடும்பமாய் வாழ்வோருக்கு நாம் சொல்வது இதுதான்.கூட்டுக்குடும்பம் என்ற அழகிய மனித பண்பினை அடுத்த தலைமுறைக்கு உணர்த்தி செல்லும் வகையில் உங்களின் சகோதரத்துவ ஒற்றுமையை இறுக்கமாக்கி கொள்ளுங்கள்.

சகோதரத்துவ நிலைபாட்டில் நமக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்படுமாயின்? நம் அண்ணன் தானே?நம் அக்கா தானே?நம் தம்பி தானே?நம் தங்கை தானே? என்ற உணர்வினை உள்வாங்கினால்,எவ்வளவு பெரிய சண்டையானாலும் குடும்பத்தில் பிளவுகள் ஏற்படாது.

ஒரு நேரத்தில் சண்டை போடுவோம் அடுத்த கணமே ஒன்று சேர்ந்து கொள்வோம்.இதுதான் கூட்டுக்குடும்ப வாழ்வியல் பண்பு.

நாம் பிறக்கும் போது காசு,பணம்,பதவி,படிப்பென எதையும் கொண்டு வருவதில்லை.சகோதரத்துவ அடையாளத்தை மட்டுமே கொண்டு வருகிறோம்.

எனக்கு தம்பி பிறந்துள்ளான்,எனக்கு தங்கை பிறந்துள்ளாள் என்று அண்ணனும் அக்காவும் கூறிக்கொள்வது தான் மனித பிறப்பின் சகோதரத்துவ பண்பு.

இத்தகைய அழகிய பண்பென்னும் கண்ணாடி மாளிகையின் மீது கருத்து வேறுபாடு என்ற கல்லெறிந்து கூட்டுக்குடும்ப தேன் கூட்டினை கலைத்து விடாதீர்கள்.

குடும்பம் முக்கியம் அதைவிட அதற்கான சகோதரத்துவம் முக்கியம்.இதை உணர்ந்து வாழும் நன்மக்கள் என்னும் பெரும்பேற்றினை இறைவன் அனைவருக்கும் வழங்குவானாக.
கீழை ஜஹாங்கீர் அரூஸி.
(04.09.2023)

News

Read Previous

ஞாயிறு  போற்றுதும்

Read Next

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது

Leave a Reply

Your email address will not be published.