சவால்களின் காலம்

Vinkmag ad
சவால்களின் காலம் 
 
செல்லாக் காசான அரசியலைக்
காப்பாற்றிக் கொள்ளத்  துடிப்போரின் சூதாட்டத்திற்கு எதிராக……...
 
எஸ் வி வேணுகோபாலன் 
 
கிரேக்க புராணக் கதையொன்றில் வரும் டேன்டலஸ் என்பவன் ஒரு சபிக்கப்பட்ட பாத்திரம். அவனுக்கு வழங்கப்படும் தண்டனை விசித்திரமானது.  தூய நீர்ப்பொய்கை ஒன்றில் கழுத்தளவு மூழ்கியபடி மிதந்து கொண்டிருப்பான். அருகிருக்கும் மரத்திலிருந்து அவன்  தலைக்குமேல் பழக்குலை தொங்கிக் கொண்டிருக்கும்.  பசி என்று அவன் கையை உயர்த்துகையில் பழக்குலை அவன் கைக்கு  எட்டாத உயரத்திற்குச் சென்றுவிடும். தாகத்திற்கு இரண்டு கையள்ளிப் பருகலாம் என்று குனிந்து தண்ணீரைத் தொடப் பார்த்தால், நீர்  மட்டம் இறங்கிப் போய்விடும். 

சபிக்கப்பட்ட மக்கள் காத்திருக்கின்றனர் வங்கிகளுக்கு முன்பாக முடிவற்ற வரிசைகளில். தாங்கள் அரும்பாடு பட்டு ஈட்டிய சொந்தப் பணத்தை தங்களுடையதுதான் என்று உறுதி செய்து செலவழிக்க எனது மகராசனிடம் அனுமதி பெறுவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர்.  எப்போது வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளப்பட வீதிகள்தோறும்  நடப்பட்டிருக்கும் ஏடிஎம் எந்திர மரத்தின் கனிகள் வற்றி உலர்ந்து உதிர்ந்தும் போய்விட்டிருக்கின்றன. பக்கத்துத் தெருவில் தண்ணீர் லாரி வந்திருக்கிறது என்று கேள்விப்பட்டு குடங்களைத் தூக்கிக் கொண்டு ஓடுவதைப்போல் எங்கேனும் ஓர் எந்திரத்தில் பணம் கிடைக்கிறது என்று அறிய நேர்ந்தால் நள்ளிரவு நேரமானாலும், அதிகாலை நான்கு மணியானாலும் அடித்துப் பிடித்து ஓடிக் கொண்டிருக்கின்றனர் மனிதர்கள். ரேஷன் கடையில் கெரசின் வந்திறங்கியது கேள்விப்பட்டு ஓடுவதைப்போல அலைகிறது எங்கும் ஜனத் திரள். ஆதார் அட்டையை நகல் எடுக்கும் கடையைத் தவிர மற்ற கடைகள் வெறிச்சோடி இருக்க, கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய் தேடி எடுத்து வருமாறு விரட்டி அடிக்கப்படுகிறது மக்கள் கூட்டம். அறுவை சிகிச்சை வெற்றி, நோயாளிதான் இறந்துவிட்டார் என்பது மாதிரி,  செல்லாதது என்று அறிவிக்கப்பட்ட நோட்டுக்களைக் கொடுத்துவிட்டுப்  புதிய இரண்டாயிரம் ரூபாய்த் தாளைப் பெற்றுக்கொண்டு திரும்பும் மனிதர்கள் கையில் சில்லறை இல்லாததால் ஒரு தேநீர் அருந்தக் கூடக் கதியற்று நிற்கின்றனர்.
‘நெருநல் உளனொருவனா’க இருந்த 500, 1000 ரூபாய்த் தாள்கள் திடீரென்று செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நவம்பர் 8ம் தேதிய இரவு புதிர்களும், குழப்பங்களும், அச்சமும், அதிர்ச்சியும் இன்னபிறவும் சூழ்ந்திருந்த பாழிரவு.  மறுநாள் வங்கி விடுமுறை என்பது தொடங்கி அறிவிக்கப்பட்ட வேறு துணைச் செய்திகள் எதுவும் அப்போதைக்கு ஒற்றை ஆறுதல் மொழியும் கொண்டிருக்கவில்லை.. நவம்பர் பத்தாம் தேதி முதல் டிசம்பர் 30 வரையிலான காலத்திற்கான அந்தக் குறிப்புகள் எந்தக் குறைந்தபட்ச நம்பிக்கை வெளிச்சத்தையும் மிச்சம் வைக்காமல் இருளில் ஆழ்த்துவதாகவே இருந்தன. போர்க்கால நடவடிக்கை என்று சொல்லப்படுவதுண்டு. தேசத்தின் பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாக அறிவித்த இந்த நடவடிக்கைகள் யாருக்கு எதிரான போர் என்பதை அடுத்த சில நாட்கள் உணர்த்தக் காத்திருந்தன.
முதல் நாள் இரவு எட்டுமணிக்கு தொலைக்காட்சியில் சிறப்பு அறிவிப்பு செய்து தேசத்தின் வயிற்றைக் கலக்கிவிட்டு அடுத்த நாள் ஜப்பானில் போய் இறங்கி இருந்தார் பிரதமர். நீரோ மன்னன் மறுபிறப்பு எடுத்துவிட்டிருந்தது போலிருந்ததாக ஒரு நையாண்டிக் கட்டுரையாளர் எழுதி இருந்தார். நாட்டுக்காகச் சொந்த வீட்டை விட்டு வெளியேறி இருந்த ஓர் எளிய மனிதர் பாவம் வேறெதைச் செய்திருக்க முடியும்? (அப்போதுகூட, கட்டிய மனைவியைக் காரணம் சொல்லாமல் விலக்கி வைத்த கொடுமையை ஒப்புக்கொள்ள மறுத்த நேர்மை அவரிடம் தெறித்தது). மகாபாரத தர்மராஜரான அவர் பார்வைக்கு, வங்கிகளின் வரிசையில், ஏடிஎம் கியூவில் நிற்பவர்கள் எல்லாமே கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களாகவே தெரிந்தது குரூர நகைச்சுவை.   ஒரே ஒரு திருடனைக் கண்டுபிடிக்க, அரண்மனை வாசலில் தண்ணீர் நிரம்பிய அண்டாவை வைத்துக் கையை நனைக்குமாறு ஒட்டுமொத்த ஊர்சனத்தையும் வரிசையில் நிற்கவைத்து பரிசோதிக்கும் திமிர்த்தனம் அவரது கண்களில் கட்டுக்கடங்காமல் பொங்கிக் கொண்டிருக்கிறது. எனக்கு 50 நாட்கள் தர மாட்டீர்களா என்று கேட்கும் அவரது குரலில் சத்தியம் மிளிர்வதாக நெகிழ்ந்து போகிறது சங் பரிவார ஆரவாரம்.
கறுப்புப் பணத்தையும், கள்ளப்பணத்தையும் ஒழிக்க இந்த மாபெரும் போர் தொடங்கப்பட்டதாக மத்திய ஆட்சியாளருக்கு ஆதரவான குரல்கள் எழுந்த நவம்பர் பத்தாம் தேதி, வர்த்தகம், உற்பத்தி, போக்குவரத்து, விற்பனை என அனைத்து விஷயங்களும் முடங்கத் தொடங்கின. பால் வாங்கத் தனது தாயின் கையில் இருக்கும் நோட்டுக் கற்றை உதவாது என்பது பசிக்கு அழும் குழந்தைக்குப் புரியவில்லை. மருத்துவ மனையில் அனுமதி மறுக்கப்பட்ட கைக்குழந்தை உயிரை விட்டுவிட்டது. பணத்தை மாற்றிக் கொள்ளவோ, வங்கிக்கணக்கில் கொண்டு கொட்டிவிடவோ வரிசையில் போய் நின்ற சிலர் வீடு திரும்பவே இல்லை. இராப்பகலாக பொருளற்ற முறையில் தொடர்ந்த வேலைச் சுமையின் அழுத்தம் தாள மாட்டாமல் வங்கி ஊழியர் சிலரும் மரணத்தைத் தழுவி இருக்கின்றனர். இவர்கள் யாருக்குமே ஐம்பது நாட்களுக்குத் தம்முயிரைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி அற்றுப் போயிருந்தது மன்னிக்க முடியாத குற்றம். கொடுத்து வைக்காத அற்பப் பிறவிகளின் விதி அப்படி முடிந்தால் அரசு என்ன செய்ய முடியும்?
றக்கம் கெட்டழிந்த நவம்பர் எட்டாம் தேதியன்று மக்கள் நிம்மதியாகத் தூங்கியதாகப் பெருமை பேசிக் கொண்ட மோடி, கறுப்புப்பண ஆசாமிகள் தூக்க மாத்திரை தேடி அலைந்து கிடைக்காமல் தத்தளித்ததாகச் சொல்லவும் செய்தார். ஆனால் உண்மை நேர்மாறாக இருந்தது. உள்ளபடியே உழைத்து ஈட்டிய பணத்தை மீட்டெடுக்கும் தூக்கமிழந்த பெருங்கவலையில் மிக எளிய மக்களும், நடுத்தர பிரிவினருமே ஆழ்ந்திருந்தனர்.
பழைய நோட்டுக்கள் பெட்ரோல் பங்க், அரசு மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் அதன் மதிப்புக்கேற்ப பெற்றுக் கொள்ளப்படும் என்று சொல்லப்பட்டிருந்தும் சில்லறை தட்டுப்பாட்டால் எங்கும் வேலைகள் அத்தனை இலகுவாக முடிவதாக இல்லை. செல்லாது போன ஐநூறு நோட்டோ, ஆயிரமோ அல்லது மாற்றிக் கொண்டபின் கையில் வந்து நின்ற புதிய இரண்டாயிரம் தாளோ, மொத்த பெரும்பகுதியை பெட்ரோலாகப் போட்டுக் கொண்டாலொழிய, மருந்துகளாக வாங்கினாலொழிய, மளிகைப் பொருளாகக் குவித்தாலொழிய அவற்றைச் சில்லறையாக மொழிபெயர்ப்பது இயலாமல் போனதன் வலியை, வேதனையை, தொடர் தொந்தரவான சூழலை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடத்தில் முழங்கிய தமது பேச்சில் பிரதமரின் ஒற்றைச் சொல் கூடக் குறிப்பிடவில்லை என்பது ஆட்சியாளரது அகந்தையின் பிரதிபலிப்பு.
ஆயிரமும், ஐந்நூறும் ஒழிக்கப்பட்டிருந்த கரன்சி நோட்டுக்களின் உலகில் இரண்டாயிரம் ரூபாய் புதிதாக முளைத்தது. ஆனால், அந்த நோட்டு சில மாதங்களாகவே இணையதளத்தில் எப்படி வலம்வந்தது என்பதற்கு அரசு இன்றுவரை விளக்கம் அளிக்கவில்லை. வங்கிகளுக்கே முறையாக வந்து சேருமுன் இரண்டாயிரம் ரூபாய்த்தாள் முழு கட்டு ஒன்றைக் கையில் ஒரு பெண்மணி வைத்துக் கொண்டிருந்த காட்சி வாட்ஸாப் மூலம் பரவியதும் பின்னர் மறக்கடிக்கப்பட்டது.
செல்லாத நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம், நாள் ஒன்றில் நாலாயிரம் ரூபாய் அதிகபட்சம் கிடைக்கும் என்றது அரசு. பின்னர் அந்தத் தொகை நாலாயிரத்து ஐநூறு என்று உயர்த்தப்பட்டது. அதற்குத் தனியே படிவம் நிரம்பித் தரவேண்டும், ஆதார் அட்டையோ, வேறு சில குறிப்பிட்ட ஆவணங்களோ இணைத்து அளிக்க வேண்டும் என்றும் மட்டுமே சொன்ன ஆட்சியாளர்கள், ஒரு வாரத்திற்குப் பிறகு, ஒரு முறை மட்டுமே அப்படி நோட்டுக்களை மாற்றிக் கொள்ள முடியும், அதுவும் இரண்டாயிரத்திற்கு மட்டும், அதற்கு அடையாளமாகக் கைவிரலில் அழியாத மையில் வாக்குச் சாவடியில் வைப்பதுபோலப் புள்ளி வைக்கப்படும் என்று கொண்டுவந்தது. மீதி நோட்டுக்களை என்ன செய்ய? வங்கியில் கணக்கு இருப்பவர்கள் அதில் போட்டுவிட்டுப் போகலாம் என்றது. கணக்கிலிருந்து நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் பத்தாயிரம் எடுக்கலாம் என்றது. பின்னர் வாரத்திற்கு 24,000 ரூபாய் வரை எடுக்கலாம் என்றது. ஐந்தாறு ரேஷன் கடை கூட்டத்தை தங்கள் கிளைக்குள் எதிர்கொண்டு திணறிக்கொண்டிருக்கும் வங்கிகளிலோ வாடிக்கையாளர் ஒவ்வொருவருக்கும் இப்படி கொடுக்கும் அளவுக்குப் பணம் இல்லாது போயிருந்தது. ஐந்தாயிரம், பத்தாயிரம் வழங்கிவிட்டு மேற்கொண்டு அடுத்த நாட்களில் மீண்டும் வந்து பெற்றுச் செல்லுமாறு கெஞ்சிக் கொண்டிருந்தனர் ஊழியர்களும், அதிகாரிகளும். இரண்டாயிரம் மட்டுமே கொடுக்க முடியும் என்று பரிதாபமாக நின்ற வங்கிக் கிளைகளே சிற்றூர்கள் நெடுக நிரம்பி இருந்தன. ஏடிஎம்கள் காலவரையின்றி குளிர்ந்து உறைந்து போயிருந்தன பல இடங்களிலும்.
அடுத்த வேளைக்குச் சோறு சாப்பிடவும் கையில் இருக்கும் பணம் உதவாது போய்த் தவித்தோரிலிருந்து, அதே வார இறுதியில் திருமணம் வைத்துக் கொண்டிருந்தோர் அடைந்த பேரதிர்ச்சி விவரிப்புக்கு அப்பாற்பட்டது. ஆனால், பாஜக விசுவாசிகள், மோடியை கபாலிடா என்று வாட்ஸப் செய்திகள் அனுப்பி மகிழ்ந்து கொண்டாடிக் கொண்டிருந்தனர். எல்லாம் ஒரு பத்து, பதினைந்து நாள் கஷ்டம் தான்… சுனாமியின் போது வாய் திறக்காமல் தாங்கிக் கொள்ளவில்லையா, கடந்த ஆண்டு பெருமழை வெள்ளத்தில் திண்டாடியபோது சகித்துக் கொள்ளவில்லையா, தேச எல்லையில் இராணுவ வீரர்கள் காலம் காலமாக நிற்கிறபோது வங்கிகளுக்கு முன்பாகக் கால் கடுக்க நிற்பதெல்லாம் ஒரு பொருட்டா, உங்களுக்கு தேச பக்தியே இல்லையா என்று பகவான் கண்ணன் வந்து நின்றாலே தோற்றுப் போகுமளவு தத்துவ விசாரம் சமூக ஊடகத்தில் தலையெடுக்கப் பார்த்தது.கதியில்லாமல் பட்டினி இருக்க நேர்ந்தால் ஒப்புக்கொள்ளும் மனம் தாமாகத் தேர்வு செய்து ஏகாதசி விரதத்தை ஏற்றுக் கொள்ள உடன்படாதது போலவே, நல்லது எது நடந்தாலும் அதை சிரமம் என்று ஒதுக்கும் தன்மையைப் பேசுவதான பிரசங்கத்தின் ஊடே ஓர் ஆன்மிகவாதி,கறுப்புப் பண ஒழிப்புக்காக அரசு எடுக்கும் நடவடிக்கையின் விளைவுகளாக ஏற்படும் கஷ்டங்களை சகித்துக் கொள்ளாது புலம்புவது மனத்தின் குற்றம் என்று எடுத்தியம்பியது வேகமாகப் பரவுகிறது.
குறிப்பிட்ட மதிப்பிலான பணத்தாள்கள் செல்லாது என்று அறிவிப்பது இது முதன்முறை அன்று. ஆனால், அமைச்சரவை முடிவாகவோ, அவசர மசாதாவாகவோ இல்லாது ஒரு பிரதமர் தாமே நேரடியாக மக்களுக்கு அறிவித்தது இப்போதுதான் நடக்கிறது. சுதந்திரத்திற்கு முன்பே ஒருமுறை 1946ல் அறிவிக்கப்பட்டது. பின்னர் 1978ல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த ஜனதா ஆட்சிக் காலத்தில் ஒரு முறை நடந்தது. அப்போது செல்லாது என அறிவிக்கப்பட்டவை ஆயிரம், ஐந்தாயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் நோட்டுக்கள். இதில் ஆயிரத்தையாவது அந்தத் தலைமுறை ஆட்கள் கேள்விப்பட்டிருப்பர். மற்ற நோட்டுக்கள் இருந்த விவரமே பெரும்பான்மை மக்களுக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை. எனவே அந்த அளவு உயர்மதிப்புள்ள நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நேரத்தில் சாதாரண மக்களுக்கு இப்போது படும்பாடு நேர்ந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால், 2016 நவம்பர் 8 அன்று நடந்திருப்பதென்ன? தேசத்தின் மொத்தக் கையிருப்பு சுமார் 17 லட்சம் கோடி ரூபாய் என்றும் (லட்சம் கோடி என்பது பதின்மூன்று இலக்க எண் – ஒன்றைத் தொடர்ந்து 12 பூஜ்யங்கள்!), அதில் இப்போது செல்லாது என அறிவிக்கப்பட்டிருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய்த் தாள்கள் மட்டுமே பதினான்கு லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு இருக்கும், அதாவது 86 சதவீத நோட்டுக்கள் இவைதான் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் அதற்கு அடுத்த மட்டத்தில் இருக்கும் நூறு, ஐம்பது, இருபது, பத்து ரூபாய்த் தாள்கள், சில்லறை நாணயங்கள் எல்லாம் சேர்த்தும் 14 சதவீதமே !  எதை வைத்து எதை ஈடு செய்ய? சாதாரண மக்கள் யாருமே தங்களிடம் தங்கிவிட்ட ஐநூறு, ஆயிரம் நோட்டுக்களை ஒட்டுமொத்தமாக மாற்றிக் கொள்ளவும் இயலாது, வங்கியிலிருந்தும் உடனே எடுத்துவிட முடியாது.  அப்படியானால், பத்து, இருபது நாட்களில் தீரக் கூடிய சிரமங்களா நாம் இப்போது எதிர்கொண்டிருப்பது என்பதை மோடியை கபாலி ஆக்கியவர்களுக்கு  யார் எடுத்துச் சொல்வது? மக்கள் கொதித்துக் கொண்டிருப்பது அவர்களது உளவியல் குற்றமா, ஆட்சியாளர்களது களவியல் குற்றமா என்பதை ஏகாதசி சுவாமிகளுக்கு யார் மென்மையாக சாற்றுவது?ஏற்கெனவே வங்கி பெண் ஊழியர்களையும், பின்னர் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாகவும் கரித்துக் கொட்டி மிதமிஞ்சிய மேதைமையோடு வலைத்தளத்தில் எழுதித் தள்ளிவிட்டு இப்போது மோடி பக்கம் சாதகமாகத் திரும்பி இருக்கும் உலக மகா எழுத்தாளர் ஜெயமோகன் வகையறாக்களை யார் மண்டையிலடித்துப் புரிய வைப்பது?
காகிதங்கள் இல்லை என்றால் என்ன, பிளாஸ்டிக் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கடன் அட்டைக்குப் போ, இணைய வங்கிச் சேவை பரிமாற்றத்திற்குப் பழகு என்று சொல்லும் மோடி ஆதரவுக் கும்பலைப் பார்த்து மாநிலங்களவையில் பேசிய மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, ரொட்டி இல்லை என்றால் கேக்குகளைத் தின்னுங்கள் என்று சொன்ன பிரெஞ்சு ராணி மேரி அன்டெனாயிட்டாவோடு மோடியை ஒப்பிட்டார். நீங்கள் வீசிய வலைக்குத் தப்பிய முதலைகள் கரையேறி வேறு பாதுகாப்பான இடம் நோக்கி நகர்ந்துவிட, மாட்டிக் கொண்டு செத்துக் கொண்டிருப்பவை சின்னஞ்சிறு அப்பாவி மீன்களே என்றார் அவர். ஊருக்கு முன்பாக நவம்பர்  எட்டாம் தேதி மூன்று கோடி ரூபாய் ஆயிரம், ஐநூறு நோட்டுக்களாக பாஜக கணக்கில் கட்டப்பட்டது எப்படி என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.  கார்பொரேட்கள் உலகிற்கு இத்தகைய அதிரடி முடிவுகள் எப்படி பகிர்ந்து கொள்ளப்படாதிருக்கும் என்றும் இப்போது அலசப்படுகிறது. 
ஆனால், ஆட்சியாளருக்கு இத்தனை துணிவு எங்கிருந்து வந்தது? மிக நேர்த்தியாக வளர்த்தெடுக்கப்பட்ட கருத்தியல் இதில் முக்கியமானது. ஃபாசிச சக்திகள் எப்போதும் ஓர் எதிரியை அடையாளப்படுத்தி, திரும்பத் திரும்ப அபாயகரமான அளவில் எதிரிக்கு எதிரான செய்திகளைப் பரப்பி, மக்கள் கவனத்தை அதற்குள் குவிமையப்படுத்தி உருவாக்கும் மனநிலை அவர்களது அராஜக செயல்பாடுகளைக் கேள்விக்கு உட்படுத்தக் கூடத் தயங்கும் கதிக்குக் கொண்டு நிறுத்திவிடுகிறது. பாகிஸ்தானிலிருந்து கள்ளப்பணம் அடித்து வருகிறது, ஆயுதங்களுக்குப் பயன்படுகிறது. தீவிரவாதம் வளர்கிறது என்பது தேச பக்தி எனும் காகிதத்தில் சுற்றிச் சுற்றுக்கு விடப்பட்டது. உயர்மதிப்பு நோட்டுக்கள் செல்லாது என்ற மோடியின் சாகச அறிவிப்பு தீவிரவாதக் கும்பல்களை ஒரே இரவில் கதி கலங்கடித்து விட்டது என்ற உரையாடல் முன்வைக்கப்பட்டது. கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பாவம் நடு வீதிக்கு வந்து நிற்க வேண்டியதாயிற்று என்று பேசப்பட்டது. ஏழை, பணக்காரர் பேதம் ஒழிக்கப்பட்டு விட்டது என்று மோடி அடித்த நகைச்சுவை துணுக்கை இந்த ஆயிரமாவது ஆண்டில் பிறிதோர் துணுக்கு வெல்ல முடியாதது. உமா பாரதி அடுத்த கட்டத்திற்குச் சென்று, கார்ல் மார்க்ஸ் தத்துவத்தைத் தான் நரேந்திர மோடி நடைமுறைப்படுத்தி சமத்துவத்தை உருவாக்கி விட்டார், இடதுசாரிகளே அவர் பக்கம் சென்று நில்லுங்கள் என பேசிக் கொண்டிருக்கிறார். தனது மகன் செய்த அட்டகாசத்தால் வயதான அந்தத் தாய் வங்கிக்குச் சென்று நோட்டுக்களை மாற்றி ஊடகங்களுக்கு ‘போஸ்’ கொடுக்க வேண்டி வந்தது. அவர் வைத்திருந்ததும் கறுப்புப் பணம்தானா என்று இன்னும் மோடி விளக்கம் தரவில்லை.
இவ்வளவுக்கும் பிறகும், நல்ல நடவடிக்கைதான், ஆனால் சரியாக நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டனர் என்று பூசி மெழுகும் குரல்கள் இரண்டாம் வாரத்தில் மெல்ல ஒலிக்கத் தொடங்கின. புதிய ஐநூறு ரூபாய் நோட்டுகளை முதலிலேயே இறக்கி இருக்கலாம், ரிசர்வ் வங்கி அத்தனை ஒத்துழைப்பு தரவில்லை என்று ஆள் ஆளுக்கு ஒரு தத்துவம் பேச ஆரம்பிக்கின்றனர். இந்த இரண்டாயிரம் ரூபாய்த் தாள்கூட நிரந்தரமல்ல, பதுக்கி வைக்காதீர்கள், அதையும் மோடி அடுத்த ஆண்டு செல்லாதது என அறிவிப்பார், இது தற்காலிக ஏற்பாடு என்றும் மிரட்டப்படுகிறது. மாயாவாத தத்துவத்தின் மேடையில் அவர்கள் ஆட்சி மட்டுமே நிரந்தரம் என்றும், மற்ற யாவும் அநித்தியம் என்றும் புகழப் படுகிறது. எப்படி பிரும்ம தத்துவம் அறிவுக்கும், கேள்விக்கும் அப்பாற்பட்டது என்று யாக்ஞவல்கியர் கட்டம் கட்டினாரோ, அதேபோல் மோடியின் நடவடிக்கைகள் பாமர அற்ப ஜீவிகளின் புத்திக்கு அப்பாற்பட்டது, கேள்வி கேட்பவர்கள் தேச துரோகிகள் என்று பகிரங்கமாக முத்திரை போடப்பட்டு வருகிறது. மோடியும் தன பங்கிற்கு எதிர்ப்போரை மிரட்டத் தொடங்கி விட்டார்.
தேச மாதிரி ஆய்வு உள்ளிட்ட பல கணக்கீடுகளின்படி கள்ள நோட்டுக்கள் புழக்கம் 400 கோடி என்றே மதிப்பிடப் பட்டிருக்கிறது. இது மொத்தப் பண மதிப்பில் 0.028 சதவீதமே ஆகும்! மூட்டைப் பூச்சியைக் கொல்ல வீட்டையே கொளுத்துவானேன் என்று கேட்கின்றனர் பொருளாதாரத்தை ஒழுங்காகக் கற்றவர்கள். கறுப்புப் பணம், நோட்டுத் தாள்களாகவா இருக்கும் என்றும் கேட்கின்றனர்.  அவை தங்கக்கட்டிகளாக, நகைகளாக, நிலப் பத்திரங்களாக, அந்நிய வங்கிகளில் சேமிப்பாக எப்போதோ உருமாறி இருக்காதா என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். இது முதல்கட்ட நடவடிக்கை, பொறுத்திருந்து பாருங்கள், அடுத்து தங்க நகை, ரியல் எஸ்டேட் எல்லாவற்றையும் மடக்கிப் பிடிப்போம் என்று சவால் விடுகிறார் பிரதமர்.
சோவியத் ஒன்றியத்தில் மிகயீல் கோர்பச்சேவ், ரூபிள் மதிப்பில் சில நோட்டுக்களை செல்லாது என அறிவித்தார். பிறகு நடந்த பிரச்சனைகளும் குழப்பமும் இப்போது வரலாறு. கானா, மியான்மர், நைஜீரியா உள்ளிட்ட வேறு சில நாடுகளிலும் இப்படியாக DEMONETISATION எனப்படும் பண நோட்டு செல்லாது என அறிவிக்கப்படுவது நடந்திருக்கிறது. ஆனால் எந்த உருப்படியான பொருளாதார மேம்பாட்டுக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் உதவவில்லை என்றே சொல்லப்படுகிறது. உலக அளவில் முக்கிய பொருளாதார வல்லுநராகக் கருதப்படும் பிரபாத் பட்நாயக், ஜெயதி கோஷ் போன்ற பல அறிவுஜீவிகள், ஹர்ஷ் மந்தர், ஆனந்த் பட்வர்த்தன், டி எம் கிருஷ்ணா போன்ற செயல்பாட்டாளர்கள் இணைந்து கையெழுத்திட்டு நவம்பர் 15 அன்று வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கை, மோடி அரசின் இந்த நடவடிக்கை கறுப்புப்பணத்தை ஒழிக்கும் வழியிலான முயற்சி அல்ல என்பதையும், சாதாரண மக்களது அன்றாட வாழ்க்கை, வாழ்வாதாரங்களோடு நிகழ்த்தப்படும் மோசடி விளையாட்டு என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  2 லட்சம் கோடிக்கு மேலான வாராக்கடன் வசூலுக்கு முயற்சி செய்யாத அரசு, நிலுவை வைத்திருக்கும் பெரும்புள்ளிகள் பெயர்ப்பட்டியலை வெளியிடாத அரசு, அந்நிய வங்கிகளில் பணம் பதுக்கி வைத்திருப்போர் பெயர்களை வெளியிட மறுக்கும் அரசு இந்த ஆர்ப்பாட்டத்தோடு உருப்படியற்ற இந்த திட்டத்தை அறிவிப்பானேன் என்று கேட்கின்றனர் கையெழுத்திட்ட 150 பேரும்!  உடனடியாக மக்களுக்குப் பயனுள்ள வகையில் புழக்கத்திற்கு உதவும் மதிப்பிலான நோட்டுக்களை அதிக அளவில் வெளியிட வேண்டும் அல்லது 500, 1000 ரூபாய்த் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நோட்டுகளில் கறுப்பு வெளுப்பு ஏது, அரிசியில் கல்லைப் பொறுக்கி வீசாமல், அரிசியையே எறிவார்களா என்று கேட்கும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் கே சி சக்ரவர்த்தி, பண நோட்டுக்களைக் கொல்வதில் என்ன பயன், தவறிழைப்போரைத் தப்பி ஓடவிட்டு என்றும் கேள்வி எழுப்புகிறார். ஐமுகூ அரசு தரப்பில் இப்படியான ஆலோசனை கேட்கப்பட்டபோது வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி தீர்மானமாக மறுத்துவிட்டதாகவும் அவர் சொல்லி இருக்கிறார். அமெரிக்க முன்னாள் நிதி ஆலோசகர் லாரி சம்மர்ஸ் அவர்களும் உலகளாவிய அளவில் பண நோட்டுக்களைச் செல்லாது என்று அறிவிப்பது வீண் வேலை, எந்தப் பயனும் அளிக்காது என்று சொல்லி இருக்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்குமுன் ஸ்வச் பாரத் என தூய்மை பாரதம் திட்டத்தை மகாத்மா பிறந்த நாளில் ஆர்ப்பாட்டமாக அறிவித்து அதற்காகத் தனியே வரி பிடித்தமும் செய்துகொண்டு, மேற்கொண்டு எந்தப் பணியும் மேற்கொள்ளாமல் ஊரே நாறிக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து எதையாவது அறிவித்து தமது பெயரே தொடர் முழக்கமாக, தமது அறிவிப்புகளே தேச விவாதப் பொருளாக இருக்கும்படி செய்வதைத் திட்டமிட்டு உறுதி செய்து வருகிறார் நரேந்திர மோடி. ஆனால், இந்த உயர் மதிப்பு பண நோட்டுக்களைச் செல்லாது என்று அறிவித்ததன் பின்புலத்தில் உள்ள அரசியல் மிகவும் ஆழமாகத் தோன்றுகிறது.
தமது ஆட்சிக் காலத்தின் செம்பாதியில் நிற்கிறது பாஜக தலைமையிலான அரசு. இரண்டரை ஆண்டுக் காலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி கொஞ்ச நஞ்சமல்ல. பண்பாட்டுத் தளத்தின் ஒவ்வொரு முனையிலும் அவர்கள் தொடுத்து வரும் தாக்குதலின் எதிர்வினைகளும், எதிர்ப்புகளும் புறந்தள்ள முடியாத விவாதப் பொருளாகி வருகின்றன. கல்வியில், பொருளாதாரத்தில், வெளியுறவு விவகாரங்களில், உள்துறை நிர்வாகத்தில் என எந்த விஷயத்தை எடுத்தாலும் கேள்விக்கு உட்பட்டிருக்கின்றன மோடி ஆட்சியின் செயல்பாடுகள். தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், காஷ்மீர் விவகாரத்தில் சிவிலியன் மக்களுக்கு எதிரான இராணுவ அத்துமீறல், சட்டமன்றத் தேர்தல்களை முன்வைத்து உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் சங் பரிவாரம் பரப்பி வரும் நச்சுப் பரப்புரைகள், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட உருவமாக எழுப்பப்படும் பிம்பங்கள் போன்ற நடப்புகள் கண்மூடித் தனமாக மோடியை ஆதரித்தவர்களையும் சற்று ஐயுற்று சிந்தித்துப் பார்க்க வைத்துள்ளன. விலைவாசியை அவரால் மிரட்டி ஒடுக்க முடியவில்லை. விவசாயிகள் தற்கொலைக்கு இந்த அரசிடம் பதில் இல்லை என்பது மட்டுமல்ல ஒற்றைத் துளி கண்ணீர் சிந்தும் கரிசனம் கூட அறவே இல்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரிய விடுதலை எழுச்சி பெற்ற தேசத்தின் ஆட்சியாளர்கள் பன்னாட்டு மூலதனத்தின்முன் அடிபணிந்து கிடக்கும் அதிர்ச்சியான நாட்கள் இவை.
கறுப்புப் பண ஒழிப்பு பற்றி 2014 தேர்தல் மேடையில் முழங்கிய மோடி, எந்த நடவடிக்கையும் அதை நோக்கிய வழியில் எடுக்கப் படாதிருக்க, ஆட்சியின் மீதான கறுப்புப் புள்ளிகள் கூடிக் கொண்டிருப்பதைப் பார்த்த அதிர்ச்சியில் தேர்வு செய்திருக்கும் மிகப் பெரிய திசை திருப்பல் வேலையாக இது இருக்கக் கூடும். இதோ பார், பெரிய போரைத் தொடுத்துவிட்டேன் என்ற அரசின் பெருமிதக் களிப்பில் எந்த நாணயமிக்க வெளிச்சமும் தென்படவில்லை. ஏனெனில், ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகை, குறைந்த வட்டியில் வங்கிக்கடன்கள், அதைத் திரும்பச் செலுத்தாவிடில் வசதியாகத் தள்ளுபடி, ஏக்கராக கணக்கில் நிலங்களை எடுத்தாளுதல் என அம்பானி, அதானி போன்ற பெருந்தொழில் அதிபர்களோடு கூச்சமின்றி பொருளாதார முன்னேற்றம் பற்றி கதைக்கும் ஒருவரை எப்படி நம்புவது? பங்கேற்பு பத்திரங்களில் ஆளே இல்லாத மொரிஷியஸ் தீவு போன்ற இடங்களில் இருந்து போலி முகவரியிட்டு அந்நிய முதலீடு என்ற நாடகம் நடத்தப்படுவதை கேள்விக்கு உட்படுத்த மறுப்போரை எப்படி நம்புவது? அரசின் நோக்கம் வேறு.
சேமிப்புப் பொருளாதாரத்தில் காலகாலமாகப் பழகி வந்த நமது தேசத்தின் தன்மையை செலவாணி பொருளாதாரத்தை நம் மீது திணிக்கும் பன்னாட்டு மூலதனம், ரூபாய் நோட்டுக்களை ஆத்திர அவசரத்திற்குக் கூடக் கையிருப்பில் வைத்திருப்பதைத் தவறு என்று கற்பிக்கப் பார்க்கிறது. பொருள்களை வாங்கிக் குவி, பங்கு பத்திரத்தில் தூக்கிப் போடு என மனித உள்ளத்தையே சந்தைப் படுத்தும் பண்பாட்டுப் போர் இது. ஃபாசிச சக்திகள் மூளைச் சலவையை முதலில் செய்யத் தொடங்கிய மக்களுக்கு எதிரான அடாவடி அராஜக அக்கிரம செய்கைகளில் இறங்குகின்றனர். செல்லாக் காசாகி விட்ட தங்களது அரசியலை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள நோட்டுக் கற்றைகளைச் செல்லாதது என அறிவித்து எதிரும் புதிருமான விவாதங்களைக் கிளப்பிவிட்டு இன்னொருபுறம் தங்களது அன்றாடப் பாடுகளுக்கு அவதியுறும் மக்களை சந்தேகப் படாமல் வரிசையில் நின்று மோதிக் கொள்ளவும், அடிபட்டு சாகவும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது மோடி அரசு.
சஹாரா நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் கிடைத்த ஆவணங்கள் சில, நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த காலத்தில் லஞ்சம் பெற்றுக் கொண்ட சான்றுகளைக் கொண்டிருப்பதாக விரிவான கட்டுரைகளை எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி, காரவன் இதழ்கள் வெளியிட்டுள்ளன. அரவிந்த் கெஜ்ரிவால் எழுப்பியுள்ள வெளிப்படையான புகார்கள் இந்த அடிப்படையிலானவை என்றும் தெரிகிறது. ஊழல் புகார்களுக்கு அப்பாற்பட்டவர் எனும் பலூனில் பெரிய ஓட்டை விழுந்திருக்கிறது.  
ஊழல் மலிந்த காங்கிரஸ் கட்சி, இதை எதுவும் அரசியல் மேடையில் வலுவாக எழுப்பும் தாரமீக அறம் வீழ்ந்துபோய் திண்டாடி நிற்கிறது. மக்களுக்கான அரசியலை இடைவிடாது முன்னெடுக்கும் நேர்மையும், தத்துவார்த்த நெறியும் கொண்டு இயங்கும் இடதுசாரிகள் தோள்களில் இந்தக் காலம் அசாத்திய பொறுப்பைச் சுமத்தி இருக்கிறது. அனைத்து விதங்களிலும் ஆட்சியாளரது இந்த சூதாட்டத்தை அம்பலப்படுத்தி பெருந்திரள் மக்கள் வலுவோடு எதிர்ப்புக் குரல்களை உரத்து எழுப்பவும், போராட்டங்களின் தன்மை, வடிவங்களில் மேலும் ஈர்ப்புமிக்க மாற்றங்களோடு மக்கள் உள்ளத்தைத் தொட்டு ஈர்க்கவுமான நேரம் இது.
***************
செம்மலர்: டிசம்பர் 2016

News

Read Previous

இருளிலிருந்து ஒளி……

Read Next

தியாகத் திருநாள் !

Leave a Reply

Your email address will not be published.