காலம் கலத்துப்போட்ட கலையும்

Vinkmag ad

காலம் கலத்துப்போட்ட கலையும்
———————————————————–
(முஸ்லீம்களின்) வாழ்வியலும்
——————————————————–

“இந்திய சினிமாவில் முஸ்லீம்கள்” எனும் தகவல் களஞ்சியத்தை தனது அயராத ஆய்வுகளால் தேடிக்கண்டடைந்து அவற்றை தொய்வின்றி திரட்டாக இலக்கியவெளிக்கு அளித்திருக்கும் எழுத்தாளர் அப்சல் பல சிறுகதைகளுக்கு சொந்தக்காரர்.
இதற்கு முன் இந்தி நடிகர் தர்மேந்திரா குறித்து ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார்.பெருநாள் படைப்புகள் எனும் ஒரு தொகுப்பும் அவரது இலக்கியப்பணியில் சேர்த்தி.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது வசிப்பது சென்னையில்.

இந்திய சினிமாவில் முஸ்லீம்கள் எனும் இப்புத்தகத்தில் காலவெள்ளத்தின் கட்டுக்கடங்காத பெருக்கால் எவ்வாறு முஸ்லீம் சமூகமும் அதன் வாழ்வியல் நெறிமுறைகளும் கலைக்கப்பட்டு பிறழ் பதிவாய் மாற்றியமைக்கட்டது என்பதை தரவுகளின் துணைக்கொண்டு ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார்.துவக்கத்தில் செம்மைப்படுத்தின வாழ்வியலாக எதோ ஒரு வகையினத்தில் முஸ்லீம்களின் பங்களிப்பு இந்திய சினிமாவில் பிரதிபலித்துக்
கொண்டிருந்ததையும்,காலப்போக்கில் எவ்வாறு அவர்களது அழகிய வாழ்வியலும் பங்களிப்பும் மழுங்கடிக்கப்பட்டன என்பதையும் பல திரைப்படங்களை உதாரணமாக முன்னிறுத்தி பதிந்துள்ளது அவரது ஆய்வுப்பணியின் செழுமையை வெளிக்காட்டுகிறது.

கலையின் வடிவமைப்பில் ஒளியொலித்திரைக்கலையும் ஒரு அங்கம்.கலைக்கு மதம் இனம் போன்ற எந்த பாகுபாடும் கிடையாது.பெரும் சாகரமான கலை வடிவமைப்பில் மூழ்கி தமக்கானதை கண்டடைபவர் திறமைசாலி.திரைக்கலை என்பது ஒரு கூட்டு முயற்சி.பல துறைகளையும் தன்னகத்தே கொண்டு பலருக்கும் வாய்ப்பளித்துக்கொண்டிருக்கும் ஒரு பொக்கிஷம் இது.இந்தியத்
துணைக்கண்டம் பல மத இனக்கலாச்சாரங்களை கலவையாக கொண்ட ஒரு தீபகற்பம்.இதன் கலை வடிவங்களும் அதனதன் தன்மைக்கேற்ப மாறுபட்டிருக்கும்.
வேற்றுமையில் ஒற்றுமையை காணத்துடிக்கும் ஒரு கலைஞன் தனது படைப்பை இவற்றையெல்லாம் மனதுள் இருத்தித்தான் படைக்க வேண்டியுள்ளது.பெரும்பாலானவை வரலாற்று ஆவணங்களாய் மாறிப்போகின்றன.இப்படி தனது அனுபவங்களை தோழர் அப்சலால் முன்னிறுத்தப்பட்டு அவற்றை ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மைகளையும் நிலைநிறுத்தி படைக்கப்பட்ட படைப்பு தான் இந்த அரிய புத்தகம்.

இந்தியத்திரைப்படங்களின் ஆரம்பக்காலந்தொட்டே முஸ்லீம்கள் இத்துறையில் பெரும் பங்காற்றியிருப்பது ஆச்சர்யமான உண்மை.ஆண் பெண்ணெனும் பாகுபாடின்றி அனைவரது பங்களிப்பும் சரிசமமாய் இருந்தது கண்டு வியப்பே மேலோங்குகிறது.
தமிழ்த்திரைப்படங்கள் தொடங்கி மலையாளம் கன்னடம் தெலுங்கு மராத்தி ஹிந்தி ஒரியா மற்றும் போஜ்புரி போன்ற மொழிகளிலும் பல இஸ்லாமியர்கள் பங்காற்றியுள்ளனர்.
இப்படி தொடர்ந்து செயல்பட்டுக்
கொண்டிருந்த இக்கலை ஊடகம்
90-களுக்கு பிறகு எப்படி மாற்றம் கண்டது என்பதையும் விரிவாக ஒரு ஆய்வுப்பார்வையாக நம் முன் நிறுத்துகிறார் படைப்பாளி.

உதாரணத்துக்கு…
“கள்ளழகர்” படத்தில் விஜயகாந்த் நடித்திருந்த கதாபாத்திரமும் “விஸ்வரூபம்” படத்தில் கமல் ஏற்றிருந்த கதாபாத்திரத்துக்குமான வித்தியாசத்தையும் நுணுகி ஆராய்ந்தாலே உண்மை விளங்கும்.
அதோடு இன்றைய காலகட்டத்தில் வியாபார நோக்கோடு எடுக்கப்படும் படைப்புகள் தனது கலைத்தன்மையை இழப்பதோடல்லாமல் மத இன துவேஷத்தையும் பரப்பும் விதமாகவும் அமைந்துவிடுவது காலத்தின் சாபக்கேடு என்பதாயும் பதிவு செய்கிறார்.

பொதுவில்…
இஸ்லாமிய கலாச்சார விழுமியங்களை அதன் சமூக நல்லிணக்க போதனைகளை அதன் சாரம் குறையாமல் மற்றவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் ஒரு கலைவடிவமாக திரைத்துறையையும் உபயோகப்படுத்த வேண்டுமென்பதே படைப்பாளியின் பேரவாவாக இருப்பதை உணர முடிகிறது.
எல்லாவற்றையும் ஒற்றை சொல்லாக சொல்ல முடியாது தான்.ஆனாலும் வார்த்தைகளின் கோர்வை வரிகளாக வரிகளின் கோர்வை படைப்பாக மாறுவது போல்…முஸ்லீம்கள் இந்திய சினிமாவுக்கு ஆற்றியுள்ள பெரும் செயல்களை இப்புத்தகம் வெளிச்சமிட்டுள்ளது.இதுவொரு நல்ல தகவல் களஞ்சியம்.
இதன் தொடர்ச்சியாய் இன்னும் பல அரிய தகவல்களடங்கிய படைப்புகள் தமிழில் வர வேண்டும்.

வாழ்த்துகள்.

-சு.மு.அகமது

“இந்திய சினிமாவில் முஸ்லீம்கள்”
– அப்சல்
பக்கங்கள் : 232
விலை : ₹ 250/-

வெளியீடு :
இருவாட்சி(இலக்கிய துறைமுகம்)
41,கல்யாண சுந்தரம் தெரு,
பெரம்பூர்,சென்னை – 600 011
அலைபேசி : 94446 40986
மின்னஞ்சல் : bookudaya@gmail.com

News

Read Previous

உயிர் எழுத்துக் கோவை!

Read Next

கடல்

Leave a Reply

Your email address will not be published.