காற்றும் வெளிச்சமும் தேவை வகுப்பறைக்குள்

Vinkmag ad
தாரே ஜமீன் பர் (2007)
காற்றும் வெளிச்சமும் தேவை வகுப்பறைக்குள் 
எஸ் வி வேணுகோபாலன் 
ந்த ஏக்கம் ததும்பும் கண்கள், பொலிவைத் தொலைத்த முகம், இழிவுகளை சகித்துக் கொண்டு நகரும் உடல் மொழி….இர்ஷான் அவஸ்தி என்ற அந்தச் சிறுவன் கதாபாத்திரம் அத்தனை எளிதில் மறக்காது. தாரே ஜமீன் பர், முற்றிலும் வித்தியாசமான திரைப்பார்வை அனுபவம்.
குழந்தைகளை இந்த உலகில் மிக அதிகம் வாட்டி எடுக்கும் அவஸ்தை, பெற்றோரால் தரம் தாழ்ந்து பார்க்கப்படுவது. ஒப்பீடு என்ற ஒரு விஷயம் நியாயமாகப் புரிந்து கொள்ளும் முயற்சிகளை மாசு படுத்திவிடுகிறது.
இர்ஷான் அவஸ்தி, பள்ளியில் ஒரு போதும் உருப்படியான மதிப்பெண்கள் பெற முடிவதில்லை. அவனுக்கு எதுவும் மண்டையில் ஏறாது, புரியாது என்று அடித்துச் சொல்லி விடுகின்றனர் பள்ளியில்.  தந்தை நந்திகிஷோர் அவஸ்திக்கு அவனைப் பார்த்தாலே இருப்பு கொள்வதில்லை. சோம்பேறி. திமிர். வேண்டுமென்றே படிப்பதில்லை என்று பொருள் செய்து கொண்டு வெறுக்கிறார். ஏனெனில், முதல் மகன் வகுப்பில் சூட்டிகையாக இருக்கிறான். தாயோ செய்வதறியாது பரிதவிப்பில் துடிக்கிறாள்.
குடும்பத்தோடு இருந்தும் தனிமைப்பட்டுக் கிடப்பவனை, தங்கி இருந்து படிக்கும் போர்டிங் பள்ளிக்கூடம் ஒன்றில் கொண்டு விட்டுவிடுவது என்ற முடிவை எடுக்கிறார் தந்தை. ஓர் இரவு முழுவதும் அடித்துத் துவைப்பதை விடவும் அதிக வன்முறை இத்தகைய முடிவுகள். அந்தப் பள்ளியும் இன்னொரு பள்ளிக்கூடம் தான். நகல் எடுக்கப்பட்ட வேறு ஆசிரியர்கள். பிரதி எடுக்கப்பட்ட அதே அணுகுமுறைகள்.
பின்னர் நடப்பது என்ன என்பது உலகளாவிய தன்மையில் ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும், சமூகத்திற்குமான பாடமாக அமையும் வண்ணம் எடுக்கப்பட்ட சிறப்பான திரைப்படம் இது.
மாயாஜாலங்கள் செய்யும் கோமாளி போல் திரைக்கதையில் ஓர் ஆசிரியர் நுழைவதும், அவர் புதிய கோணத்தில் இர்ஷான் அவஸ்தி குறித்த தேடலில் அவனைக் கண்டடைவதும், அவனுக்கான படைப்புலகில் அவனுக்குரிய அங்கீகாரத்தைப் பொதுவெளியில் உறுதிப்படுத்துவதும் ஒரு பரவசமிக்க முறையில் நிறைவேறுகிறது.
ஓரிரவில் நிகழ்வதில்லை இத்தனையும். நொறுக்கப்பட்ட உளவியலை நம்பிக்கையோடு மீண்டும் ஒரு மறுகட்டுமானம் செய்வதும், வறண்டு போன உதடுகளில் புன்னகையைத் துளிர்க்க வைப்பதும் அத்தனை எளிதில் சாத்தியமாவதில்லை.
இர்ஷான் அவஸ்தி பாட வேளைகளில் வேறெங்கோ கவனத்தில் இருக்கிறான், கேள்விக்குத் தப்பும் தவறுமாகப் பதில் சொல்கிறான், சக மாணவர்கள் கேலிக்கு ஆளாகிறான் என்று காட்சிப் படுத்தவில்லை படம். தொடர்பு படுத்திக் கொள்வதன் பிரச்சனை இரண்டு பக்கங்களிலும் இருக்கிறது என்பதை அசாத்திய பார்வையில் பிடிபட வைக்கிறார் திரைக்கதை ஆசிரியர் அமோல் குப்தே.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றார் வள்ளுவர். எண்களும் எழுத்துகளும் இர்ஷான் அவஸ்தியின் மனக்கண்ணில் என்னென்ன உருமாற்றம் அடைகின்றன, எங்கெல்லாம் பறக்கின்றன, விடைகள் சொல்லவேண்டிய நிர்ப்பந்தமான கட்டத்தில் அவன் எங்கே அலைவுறுகிறான் என்பதை  நுட்பமாகக் காட்சிப்படுத்துகிறது படம்.
வண்ணங்களின் மீதான அவன் காதல், ஐஸ் குச்சியின் மீது ஊற்றப்படும் பல வண்ணச் சாறுகளோடு சேர்ந்து உருகும் உற்சாகம் உள்ளிட்டு, அவனளவில் இன்பமான சொந்த உலகத்தில் அவன் சுவாரசியமாக உலவ முடிகிறது. மற்றவர்கள் எதிர்பார்க்கும் இன்னோர் உலகத்தின் திறப்புக்கான கடவுச் சொல் அவனுக்குப் பிடிபடுவதில்லை.  அவனாகச் சில கலைவடிவங்கள் உருவாக்கும் முனைப்பில் இருப்பதும் முக்கியமானது.
வெளியூர் சென்று திரும்பும் தந்தை தங்களுக்கு என்ன தின்பண்டங்கள் வாங்கிவைத்திருக்கிறார் என்ற ஆர்வத் துள்ளலில் அவரை அணுகிக்  கேட்கும்போது, நாளேடு வாசிக்கும் முன்னுரிமையில் அவர் அவனது அன்பை அலட்சியப்படுத்தும் காட்சி நிறைய பேசுகிறது.
 ‘மெதுவாகக் கற்றல்’ எனும் டிஸ்லெக்சியா பிரச்சனையால் பீடிக்கப்பட்டிருக்கிறான் இர்ஷான். ஒரு கொள்கலன் தனது அளவுக்கு அதிகமான நீரை வழியச்செய்துவிடுவது போல் நழுவிப்போகும் செய்திகளும், விஷயங்களும், பாடங்களும் வைத்து அவனை மதிப்பீடு செய்யும் கல்வியுலகில், அவனது தேடல் உலகில் நிறைந்து ததும்பும் விஷயங்களை நோக்கி கவனத்தைத் திருப்புகிறார் சிறப்பு ஆசிரியர்.
அவர் மெனக்கெட்டு அவனைப் பற்றி மேல்விவரங்கள் அறிந்து கொள்ளும் ஆவலில் அவனது வீட்டை வந்தடையும்போதும் நந்திகிஷோர் அவஸ்தி மகனைக் குறித்த கேள்விகளுக்கு எரிச்சலோடு தான் பதிலுரைக்கிறார். ஆசிரியர் விடாப்பிடியாக, இர்ஷான் புழங்கும் இல்லத்தின் பகுதியில் ஊடுருவும் கண்களோடு அலசி ஆராய்ந்து கண்டுபிடிக்கும் ஓர் அபார விஷயம், அவனுக்குள்ள ஓவியத்திறன் குறித்ததாகும். ஆனாலும், பெற்றோருக்கு அவன் எதிர்காலம் பற்றிய கவலைகள் விடைபெறுவதில்லை.
அந்த ஏழு நிமிட உரையாடல் காட்சியில், பின்னணியில் இசை வைக்கவில்லை என்கிறது படத்தைப் பற்றிய ஒரு குறிப்பு. இர்ஷான் அவஸ்தியின் உளவியல் துடிப்புகளுக்கு ஏற்ப படத்தின் இசைக்கோவை, பின்னணி இசை அசாத்திய பங்களிப்பு செய்திருக்கிறது.
டிஸ்லெக்சியா என்பது ஒரு நோயல்ல, அறிவாற்றல் குறைவு என்று பொருள் அல்ல. எழுத்துகள், சொற்கள் வாசிப்பு மற்றும் தொடர்புபடுத்திக் கொள்ளுதலில் ஓர் அசாதாரண தன்மை. இடமிருந்து எழுத்துகள் வாசிப்பது சாதாரண தன்மை, வலமிருந்து இடம் நோக்கி எதிர்த்திசையில் எழுத்துகளை வாசிப்பது டிஸ்லெக்சியா தன்மையின் வெளிப்பாடுகளில் ஒன்று.
இந்தத் தன்மை இருந்த சில மனிதர்கள் உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களாக, சமூகத்தில் சாதனை படைத்தவர்களாக இருந்ததை, இருப்பதை இர்ஷான் அவஸ்தி வகுப்பறையில் சிறப்பு ஆசிரியர் விளக்குகிறார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் முதல் அபிஷேக் பச்சன் வரை எடுத்துக்காட்டுகள் முன்வைக்கிறார். அவர் உரையாடலை அவஸ்தியோடு தனியாகத் தொடங்காமல் அவனைச் சுற்றியுள்ள சக மாணவர்களோடு, ஏன், ஆசிரியர்களோடும் நடத்துவது தான் திரைக்கதையின் மற்றுமொரு சிறப்பம்சம். இர்ஷான் விஷயத்தின் சிறப்புத் தனி கவனம் செலுத்த சிறப்பு ஆசிரியருக்கு அனுமதி வழங்கும் பள்ளியின் முதல்வர் கல்வி அமைப்பின் முக்கிய புள்ளியில் இருப்பவரது பொறுப்புணர்வு குறித்த செயல் விளக்கமாகவும் மாறுகிறார்.
உடல் ஊனமுற்ற ஒரு மாணவன் தான், இர்ஷானுக்கு நெருக்கமாக இருப்பவன். சிறப்பு ஆசிரியர் அந்த நட்பின் அஸ்திவாரத்தில் இர்ஷான் அவஸ்தியை நெருங்குவது கொஞ்சம் எளிதாகிறது. இதுவும் முக்கியமான உளவியல் நுட்பம்.
ஆண்டு இறுதியில் போர்டிங் பள்ளிக்கூடத்தில் ஒரு மிகப்பெரிய ஓவியப்போட்டி நடக்கிறது. இது திரைக்கதையின் அடுத்த அபார அம்சம்.  குறிப்பிட்ட பாட திட்டம், கால வரையறை கெடுபிடிகளுக்குள் இர்ஷான் போன்ற மாணவர் நீந்திக் கரை சேர முடியாத இடத்திலிருந்து, பள்ளிச்சூழல் இர்ஷான்  தேர்ச்சி பெற்றிருக்கும் அம்சத்தில் தேர்வு போல அல்ல பங்கேற்பின் இன்பத் திருவிழா போல நகர்கிறது. அதில் போட்டியாளர்கள் கிடையாது. பங்கேற்பாளர்கள் தான். மாணவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்களும்!
ஓவியம் வரைய இயலாது திண்டாடும் ஆசிரியர்கள் தங்கள் அபத்த வரைதலை மாணவர்கள் வேடிக்கை பார்ப்பதில் எரிச்சல் அடைவதில்லை. அதைக் கொண்டாடி மகிழவும் செய்கிறார்கள். அந்தப் போட்டி நடைபெறும் இடமே அற்புதமான ஒரு சூழலாக அமைந்திருக்கும்.
இரண்டு பேர் மட்டும் இதில் தனித்துவமான வேள்வியில் இறங்கி இருக்கின்றனர் தீவிரமாக, ஒருவர் சிறப்பு ஆசிரியர். மற்றவர் மாணவர் இர்ஷான் அவஸ்தி. ஆஹா…ஆஹா….அதன் உச்சம் அவர்கள் வரைந்து முடிக்குமிடம்.  கண்ணீர் பெருக வைக்கும் காட்சிகள்.
படத்தின் வண்ணக்கலவை போலவே முக்கிய கவனம் பெறும் இசைக்கலவை, க்ளைமாக்ஸ் காட்சியின் மகத்தான பாத்திரம் வகிக்கிறது. ரசிகர்களின் திரைப்பார்வை அனுபவத்தை உன்னத தளத்திற்கு எடுத்துச் செல்வதில் இசையின் பங்களிப்பு அபாரம்.
தன்னையே வரைந்திருக்கிறார் தனது ஆசிரியர் என்று அந்தச் சிறுவன் கரைந்துபோய்ப் பார்க்கும் இடத்தில் தர்ஷீல், அமீர் கான் இருவரது முக பாவங்களும், உடல் மொழியும் அபாரமாக இருக்கும். நிறைவுக் காட்சியில், ஊருக்குத் திரும்ப காரை நோக்கி நடக்கையில், திரும்பிப் பார்த்து ஆசிரியரை நோக்கி ஓடோடிப் போய்த் தழுவிக் கொள்ளும் காட்சி யாரையும் உருக்கிவிடும்.
ஓவியங்களில் முதலாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒன்று அந்த ஆண்டு பள்ளியின் சிறப்பு மலரின் அட்டைப்படத்தை அலங்கரிக்கும் என்பது ஏற்கெனவே செய்யப்பட்ட அறிவிப்பு. இப்போதோ இரண்டு ஓவியங்கள் ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு, அதில் நடுவர் பட்ட பாடு என்ன என்பதைப் பள்ளி முதல்வர் அத்தனை புதிரோடும், உள்ளக் கிளர்ச்சியோடும் ரசமாகப் பேசும் காட்சி முக்கியமானது.
படத்தின் நிறைவுக் காட்சி இன்னும் கவித்துவமானது. இர்ஷான் பெற்றோர், அண்ணன் மூவரும் பள்ளிக்குள் நுழைவதும், ஒவ்வோர் ஆசிரியரும் இர்ஷான் பற்றி அவர்கள் வாழ்க்கையில் முதன்முறை பாராட்டு மழை பொழிவதை இதயம் குளிரக் கேட்டு நகர்ந்து கடைசியில் முதல்வரை சந்திக்கையில் சிறப்பு மலரின் அட்டைப்படத்தில் இருப்பது இர்ஷான் ஓவியம்.
சிறப்பு ஆசிரியராக அசத்தல் நடிப்பை வழங்கி இருக்கும் அமீர்கான், படத்தின் இணை இயக்குனரும் கூட.  தர்ஷீல் சஃபாரி எனும் சிறுவன் இர்ஷான் அவஸ்தியாகவே உருப்பெற்றிருந்தார். பெற்றோராக வருவோர், அண்ணன், ஆசிரியர்களாக இடம் பெற்றோர், சக மாணவர்கள் என எல்லோரும் இயல்பான நடிப்பை வழங்கி இருப்பது படத்தின் பெருஞ்சிறப்பு.
கதைக்கருவிற்கான இசை, இர்ஷானது வெவ்வேறு உளவியல் போக்குகளைத் தக்கவாறு வெளிப்படுத்தும் இசை, ஓவியப் போட்டியினூடே அந்த இடத்தை நீராட்டும் இசை, இசைக்கருவிகளின் பொழிவில் ஆசி மழையாகப் பொழியும் இசை என உணர்வுகளோடு பேசும் கூட்டிசை இந்தப்படத்தின் முக்கியமான அம்சம்.  ஷங்கர் மகாதேவன், இஷான் நூரானி, லோய் மூவரும் சேர்ந்து பின்னணி இசையமைத்தது ஒரு சிறப்பு. ஷங்கருக்கு பின்னணி பாடகருக்கான தேசிய விருது பெற்றுத் தந்த படம், வேறு பல அம்சங்களுக்காகவும் தேசிய விருதும், ஃபிலிம் ஃபேர் விருதுகளும்  பெற்றது வியப்பில்லை.
பெற்றோர் பலரைக் கண்ணீர் சிந்த வைத்த படம், சமூகத்தின் அணுகுமுறையை ஓரளவுக்கேனும் அசைத்திருக்கும் என்று சொல்லலாம்.  பல நகரங்களில் சிறப்பு வகுப்புகள், ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சிகள், வெவ்வேறு கற்றல் திறனுள்ள மாணவர்களை நோக்கிய மேம்பட்ட அணுகுமுறைக்கான பட்டறைகள் உருவானது குறிப்பிட வேண்டிய தாக்கம்.
மரமேறும் போட்டி வைத்தால் ஒரு மீன் அதில் தோற்றுப் போகும் என்றார் ஐன்ஸ்டீன். எனக்குத் தெரிந்ததை எழுதுவதற்குப் போனால், எனக்கு தேர்வு வைத்தவர்களோ எனக்கு என்ன தெரியாது என்பதைக் கண்டுபிடிப்பதில் குறியாயிருந்தனர் என்று தேர்வுகள் பற்றிய கட்டுரையில் வின்ஸ்டன் சர்ச்சில் குறிப்பிட்டிருந்ததை, கல்லூரிப் பாடத்தில் வாசித்த நினைவு.
தினங்களைக் கொண்டாடுவதை விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறோம் என்று கவிஞர் அப்துல் ரகுமான் கேள்விக் கவிதை தொடுத்திருந்தார். தாரே ஜமீன் பர் (தரை மீது நட்சத்திரங்கள்) வீடு, பள்ளி, பொதுவெளியில் குழந்தைகள் குறித்த அணுகுமுறை, கல்வி பற்றிய பார்வை போன்ற பொதுவான அம்சங்கள் மீதும் வெளிச்சத்தைப் பரவ விட்ட அருமையான திரைப்படம்.

News

Read Previous

கவிதை

Read Next

சமூக உயிரோட்டம்

Leave a Reply

Your email address will not be published.