காதலர் தினம் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு!!

Vinkmag ad
காதலர் தினம் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு!! -சமூக ஆர்வலர் அஞ்சுகோட்டை அப்துல் ரசாக் ஆதங்கம்!

இன்றைய சமூகத்தில் காதலர் தினம் என்ற பெயரில் பலதரப்பட்ட அனாச்சாரங்கள் அரங்கேறுகின்றன. திறந்த வெளியில் கட்டிப்பிடிப்பதும், முத்தமிடுவதும், ஆள் அருவம் (நடமாட்டம்) இல்லாத இடத்திற்கு காமுகனும், காமுகியும் சென்று தங்களது காம இச்சையை தவிர்த்து கொண்டு, நீ யாரோ? நான் யாரோ? என்று செல்வதும்தான் இன்றைய காதலர் தின கொண்டாட்டமாகிவிட்டது.

சீண்டலின் சிற்றின்பங்களும், மோகத்தின் முனகல்களும், மெத்தைத் தேடலின் முனைப்புகளும், விலக்கப்பட்ட கனிகளின் சுவைகளும் காதல் என கற்பித்துக்  கொண்டுள்ளார்கள். பார்த்தோம், சிரித்தோம், பழகினோம், துடித்தோம்,  தவித்தோம், திரிந்தோம், உலாவினோம், அளாவினோம், இணைந்தோம், கலந்தோம், இன்புற்றோம், இறுதியில், மணந்தோம், வேறு வேறாய்! என்றுதான் இன்றைய காதல் உள்ளது.

Colorful Flower Garden

மணிமேகலை, தமயந்தி காலத்திலும் காதலர் தினம் என்ற ஒன்று இருந்தது. அன்றைய காதலர் தினம் கன்னியமான ஒன்றாக இருந்தது.  ஆனால் இன்றைய காதலர் தினமோ கயமை நிறைந்ததாக உள்ளது. காதலர் தினத்தன்று அரங்கேறும் கலாச்சார சீரழிவை எதிர்த்து போராடும் நண்பர்கள்  மற்றும் இயக்கங்கள், பிற்போக்குவாதிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும், சித்தரிக்கப்படுகின்றனர். மனித நேயமுள்ள ஒவ்வொருவரும், இது நமது கலாச்சாரத்திருக்கு உகந்ததா?, நன்கு சிந்திக்க வேண்டும்.

வணிக நிறுவனங்களும், மீடியாக்களும், முற்போக்கு சிந்தனையாளர்கள் என்று கூறிக்கொண்டு தொன்மையான கலாச்சாரத்தை சீரழிக்க கூடியவர்களும், சினிமாக்காரர்களும், காமுகர்களும், இன்றைய காதல் தின கொண்டாட்டங்களை, உரம் போட்டு ஊக்குவித்து வருகின்றனர்.

நான் அறிந்த காதலை பற்றி இங்கு பகிர்கின்றேன்……

உண்மைக் காதலில் காமத்தின் சாரல் உண்டு. ஆனால் அது எப்போதும் அடைமழையாகி கரையை கடப்பதில்லை.   உலகின் தோன்றிய மொழிகளில் முதன்மையானது  தமிழ் மொழி. அந்த தமிழ் மொழின் இலக்கணம் மற்றும் இலக்கியங்கள் சிறப்பு வாய்ந்தவைகள். இலக்கியங்களில் பழமை வாய்ந்தவைகள் அக நானூறு மற்றும் புற நானூறு.

புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன.  அக நானூற்றின் பாடல்கள் “உள்ளம் ஒன்றுபட்ட தலைவனும் தலைவியும் ஊழினால் ஒன்று கூடி தாம் உணர்ந்த இன்பம் இதுதான் என பிறருக்குச் சொல்ல முடியாமல் உள்ளத்தே அனுபவிக்கும் உணர்ச்சியை  பற்றி  எடுத்துரைக்கின்றன.

பண்டைய இலக்கியங்களில் காதல் ஏக்கங்களாலும், தீண்டல்களாலும், வீரத்தின் சாரல்களாலும் நனைந்து கிடந்தது. அறத்தையும், மறத்தையும் உயிரெனக் கொண்டிருந்த தமிழரின் வாழ்க்கை காதல் எனும் கயிற்றினால் கட்டப்பட்டிருந்தது.
முதலில் காதல் வயப்பட்டவன் தமிழன்தான். அதோடு நின்று விடாமல் அதற்காக இலக்கியம் படைத்தவனும் அவன்தான்.  உண்மையான காதல் எப்போதுமே காதலர்களை வெற்றிகளை நோக்கியே பயணிக்க வைக்கும். தன காதலனை / கணவனை,  போர்களம் அனுப்பும் சங்கக் காதலியர் அம்புகளுக்குள் தங்கள் அன்பைத் நனைத்து  அனுப்பினால். அந்த ஊக்கம் அவர்களுக்கு புறமுதுகிடாத வீரத் தோள்களை பரிசளித்தது. காதலியருக்காக தீயவற்றை விட்டு விடுவதும், நல்லவற்றைப் பற்றிக் கொள்வதுமாக உண்மைக் காதல் வசீகரிக்கும்.

தமிழரின் வாழ்வோடும், அடையாளத்தோடும், கலாச்சாரத்தோடும் காதல் செம்புலத்திற் பெய்த நீர் போலக் கலந்தே இருந்தது.

PAYANAM

காதலியுங்கள். காதல் என்பது ஒரு இனம் புரியாத உணர்வு ஆனால் அது உணர்ச்சிகளின் கூடாரம் அல்ல. உண்மையான காதலை பெற்றவன்தான், அதன் அருமையை பற்றி கூற இயலும்.

காதல் என்பது ஒரு நந்தவனம் போன்றது. காதலில் நடப்பவர்கள் நந்தவனத்தில் நடக்கிறார்கள். ஒரு முறை நடந்த திருப்தி இதயத்தின் தாழ்வாரங்களில் எப்போதும் சிறகடித்துக் கொண்டே இருக்கும். அது வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி. காதல், என்பது வழியில் தென்படும் பூக்களையெல்லாம் முட்டிச் செல்லும் வண்டு அல்ல. ஒற்றைப் பூவை மட்டுமே தாங்கிப் பிடிக்கும் தண்டு. நீயின்றி நானில்லை எனும் நிலமையில் இணைந்திருக்கும் நிலை.

காதல், உங்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும். உங்கள் உயிர் உங்கள் உடலை விட்டு வெளியேறி உங்களை இன்னோர் உயிராய் மாற்றி வைக்கும். கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை இந்தக் காதலில் மட்டுமே சாத்தியம். நீங்கள் யார் என்பதையும் உங்கள் பலம், பலவீனங்கள் அனைத்தையும் அதுதான் உங்களுக்குக் கற்றுத் தரும்.

Image result for kadhalar dhinam

காதல், வாழ்க்கையை அழகாக்கும். வாழ்க்கையை அர்த்தப்படுத்தும். வாழ்க்கையை வலுவாக்கும். அது பாதங்களுக்குக் கீழே பனித்துளியாக உங்கள் பயணங்களை கவிதையாக்கும். வெட்கத்தின் மூச்சுகளுடன் கனவுகளை காவியமாக்கும். காதலியுங்கள், ஆனால் காதல் என்றால் என்ன என்பதை அறிந்தபின் காதலியுங்கள். அரளிப்பூவுக்கு மல்லி என பெயர்சூட்டிக் கொள்ளலாம். ஆனால், அரளிப்பூவில் மல்லியின் வாசத்தை நுகர்வது இயலாது.

நானும் காதலித்தேன் ஒருதலை பட்சமாக! நானும் ஏங்கிய காலம் உண்டு “அவள் மூச்சு காற்று என்மீது படாதா என்றல்ல?”, “தூரத்திலிருந்தாவது அவளது கனுக்காலை காண இயலாதா என்று”. காதலளினால்   உயர்ந்தவர்களில் நானும் ஒருவன். காதலிக்கும் காலம் என்றுமே வசந்த காலம். அன்றும் காதலித்தேன், இன்றும் காதலிக்கின்றேன். அன்று என்  காதலியையும், கல்வியையும் காதலித்தேன். இன்றும், என்றும் என் பெற்றோரையும், இல்லத்தரசியையும், சமூக/ சமுதாயத்தையும், என் தாய் திருநாட்டையும் காதலித்து கொண்டே இருப்பேன்.

உண்மையாக காதலிப்போருக்கும், காதலிக்கப் படுவோருக்கும், இனிய காதல் தின வாழ்த்துகள்.

 

News

Read Previous

காதல்

Read Next

வறுமை!

Leave a Reply

Your email address will not be published.