கல்விக்கண் திறந்த காமராசரின் மறுபக்கம்!

Vinkmag ad

கல்விக்கண் திறந்த காமராசரின் மறுபக்கம்!

1953ஆம் ஆண்டு இராசாசி ஆட்சியில் கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தை
முறியடித்த தமிழர் காமராசர். முதல்வரான பிறகு காமராசர் தமிழகமெங்கும்
கல்விக்கூடங்களை திறந்து தமிழர் வீட்டுப் பிள்ளைகளை படிக்க வைத்தார்.
அந்த வகையில் தமிழர்கள் அவருக்கு நன்றி செலுத்துவதில் தவறில்லை.

ஆனால் அவர் ஆட்சிக் காலத்தில் தான் தமிழ்நாடு தனது தாயகப்பகுதிகளை
அதிகமாக இழந்தது. அதன் காரணமாக கேரளா அபகரித்துக் கொண்ட தேவிகுளம்
பீர்மேடு வாழ் தமிழர்களின் வீட்டுப்பிள்ளைகள் இன்றைக்கு கல்வி கற்க
முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காமராசரும் ஒருவகையில் காரணம்
என்பதை வேதனையோடு தான் சொல்ல வேண்டியுள்ளது.

‘காமராசர் ஆட்சிக்காலம் பொற்காலம்’ என்று பேசுபவர்கள் எல்லை காக்கும்
போரில் ‘காமராசர் ஆட்சிகாலம் இருண்ட காலம்’ என்பதை சொல்ல மறுக்கிறார்கள்.

தெற்கெல்லைப் போரிலும், வடக்கெல்லைப் போரிலும் ஈடுபட்ட மார்சல் நேசமணி,
ம.பொ.சி. ஆகியோர் காமராசரின் அலட்சியப் போக்கை கடுமையாகவே கண்டனம்
செய்துள்ளனர். இந்த உண்மையை பெரியாரிய இயக்கங்கள் தமிழர்களிடம் ஒருபோதும்
கூறியதில்லை.

எல்லை மீட்பில் பெரியார் கலந்து கொள்ளாததோடு அதற்கு எதிராகவும் வேலை
செய்ததால் குட்டு வெளிப்பட்டு விடும் என்று அஞ்சுகிறார்கள். தமிழ்த்தேசிய
நோக்கில் காமராசரின் எதிர் நிலைப்பாட்டை உண்மையாகவே போராட்டம்
நடத்தியவர்களைக் கொண்டு விளக்கிக் கூறுவது நமது கடமையாகும்.

திருவிதாங்கூரில் தமிழ் பேசுகின்ற வட்டங்கள் தேவிகுளம், பீர்மேடு
நீங்கலாக 1.11.1956 முதல் தாய்த் தமிழகத்தோடு இணைக்கப்பட்டன. அதற்கு
முன்னரே தமிழர்கள் நேசமணி தலைமையில் தமிழர் தாயகப் பகுதிகளை மீட்பதற்கு
மிகத் தீவிரமாக போராட்டங்களை நடத்தி வந்தனர். அப்போது காமராசர் மலையாள
காங்கிரசுக்கு பரிந்து பேசுவதற்காக நேசமணியை அணுகிப் பேசினார். இது
குறித்து நேசமணி விளக்குகிறார்: “தாங்கள் போராட்டங்களை கை விட்டு விட்டு,
மலையாள காங்கிரசான திருவிதாங்கூர் சமஸ்தான காங்கிரசுடன் சமரசம் செய்து
கொள்ளுங்கள்.

திருவிதாங்கூர் உள்ளே ஒரு தமிழ்மாவட்டத்தை அமைத்து பிரச்னையை முடித்துக்
கொள்வது தான் நல்லது. ஆனால் காமராசர் எடுத்துக் கொண்ட முயற்சி தோல்வி
அடைந்தது”. ( A. Nesamani – Inside Travancore Tamil nadu)
திருவிதாங்கூர் தமிழர்கள் நிலைமையை நேரில் கண்டும் தமிழ்பகுதிகளைக்
கொண்டு ஒரு வருவாய் கோட்டம் அமைத்து மலையாளிகளிடம் சேர்ந்து வாழச்
சொன்னாரே தவிர, தாய் தமிழகத்துடன் வந்து இணைந்து கொள்ளுங்கள் என்று சொல்ல
மனம் வரவில்லை. தமிழ்ப்பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் குறித்து
எதுவும் சொல்லாமலே காமராசர் இருட்டடிப்பு செய்துவிட்டார் என்பதை இதன்
மூலம் அறிய முடிகிறது.

அப்போது திருவிதாங்கூர் கொச்சி நாட்டிற்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது.
மலையாள காங்கிரஸ் கட்சி பணபலம், ஆள்பலத்தோடு களம் கண்டது. அப்போது
நேசமணியின் திரு.தமிழ்நாடு காங்கிரசுக்கு எதிராகவும், மலையாள
காங்கிரசுக்கு ஆதரவாகவும் காமராசர் பரப்புரை செய்தார்.

வடிவீஸ்வரத்தில் நடந்த கூட்டத்தில் காமராசர் பேசியது வருமாறு: “நேசமணி
எந்தக் யுத்தக்களத்திற்குப் போனார்? மார்சல் பட்டம் அவருக்கு எவன்
கொடுத்தான்? விலை கொடுத்து வாங்குவதற்கு அது என்ன கடைச்சரக்கா?
என்றெல்லாம் இகழ்ந்து பேசினார்… அவர் வளர்ப்பு மகள் அனந்த நாயகி
அம்மாள் தம்பி நேசமணிக்கு தங்கள் எதிர்ப்பை தாள முடியுமா? என்று கேட்டு
வைத்தார். அப்போது அந்த அம்மாளுக்கு நேசமணியின் மூத்த மகள் வயது கூட
இருக்காது” (நூல்: எ.எ.ரசாக் – நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம்)
காமராசர், அனந்தநாயகி அம்மாளின் தரம் தாழ்ந்த பேச்சுகள் நேசமணியை
எதிர்க்கும் மலையாள காங்கிரசுக்கு வலு சேர்த்தது என்று தான் சொல்ல
வேண்டும்.

சென்னை மாகாணத்தில் காமராசரின் தலைமையின் கீழ் இயங்கிய ம.பொ.சி. அவர்கள்
தனது சுயசரிதை நூலில் பின்வருமாறு எழுதுகிறார்: “முதல்வர் காமராசரை
சந்தித்து தென் திருவிதாங்கூர் நிலைமையை விவரித்தேன். பிரதமருடன்
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பட்டாம் தாணுவின் ஆட்சி நடத்தும்
அடக்குமுறைக் கொடுமைகளை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அவரை
வற்புறுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன். திரு.காமராசர் எனக்கு
நம்பிக்கை தரும் வகையில் பதிலளிக்க வில்லை. தெற்கெல்லை கிளர்ச்சி
காரணமாகத்தான் இவ்வளவு நேர்ந்ததென்றும், அது தேவையற்ற கிளர்ச்சி என்றும்
அவர் கூறினார்.

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது பழமொழி. ஆனால் தமிழ்நாடு
காங்கிரசுக்கு சதை கிடையாது. அதனால் தென் திருவிதாங்கூர் தமிழர்களுக்கு
இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராக அது ஆடவே இல்லை.” (ம.பொ.சி- எனது
போராட்டம்)

1952ஆம் ஆண்டு இராசாசி ஆட்சியில் தான் ஆந்திரர்கள் ‘மதராஸ் மனதே’ என்று
முழக்கமிட்டனர். அப்போது காமராசர் வாய்மூடி மெளனம் காத்தார்.
“சென்னை மீட்பில் காமராசரின் மவுனத்தைக் கண்டு ஆந்திரராகிய என்.சஞ்சீவி
ரெட்டியார், “காமராசரின் மெளனம் புத்திசாலித்தனமானது, பொருள் நிறைந்தது.
மற்ற தலைவர்களும் அவரை பின்பற்ற வேண்டும்” என்று அறிக்கை விட்டார்.
(ம.பொ.சி- எனது போராட்டம்)
1956இல் காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு
பெயர் சூட்டக்கோரி உண்ணாநிலை நடத்தி உயிர்நீத்தார். நேருவின் கூட்டாளியான
காமராசர் நினைத்திருந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்.
தமிழ்நாடு பெயர் மாற்றக்கூடாது என்கிற பிடிவாதமே சங்கரலிங்கனாரின்
உயிரைக் குடித்தது.

1960ஆம் ஆண்டு உயர்கல்வியில் தமிழ் பயிற்றுமொழித் திட்டத்தை கொண்டு வர
கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியன் முயன்றார். அதற்கு காமராசர் பெரும்
முட்டுக்கட்டை போட்டார். 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போரிலும்
தில்லிக்கு ஆதரவாகவே செயல்பட்டார். இவரின் நிழல் முதல்வர் பக்தவத்சலம்
மாணவர்களை கொன்றொழித்த போது கண்டித்திடவும் மறுத்தார்.

மொத்தத்தில் காமராசர் மொழிப்பற்று, இனப்பற்று, மண்பற்று இந்த மூன்றையும்
ஏற்றுக் கொள்ளாத தலைவராகவே வாழ்ந்து மறைந்தார் என்பது தான் கசப்பான
உண்மையாகும்.

kathir nilavan

https://www.facebook.com/kathir.nilavan.5

 

News

Read Previous

துபாயில் பணிபுரியும் ஃபார்மஸிஸ்ட் உமர் முக்தாருக்கு பெண் குழந்தை

Read Next

இலக்கியத்தில் நோன்பு…..

Leave a Reply

Your email address will not be published.