கண்ணம்மா, கண்ணம்மா… உன் பழைய கதையை சொல்லம்மா!

Vinkmag ad

patiகண்ணம்மா, கண்ணம்மா… உன் பழைய கதையை சொல்லம்மா!

தலைப்பு சொல்லப்போகும் கதை நம்மில் பெரும்பாலானோர் மறந்து போன நிகழ்வாக இருக்கக்கூடும்?

கண்ணம்மா என்னும் பாட்டியிடம் இன்றைய பேரப்பிள்ளை கண்ணன் கேட்ட கேள்வி தான் கண்ணம்மா, கண்ணம்மா…உன் பழைய கதையை சொல்லம்மா என்பது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது மகன்,மருமகள் மற்றும் பேரன் கண்ணனை பார்க்க கிராமத்தில் இருந்து பட்டணம் வந்திருந்தாள் பாட்டி கண்ணம்மா; பாட்டி கண்ணம்மாவைப் பார்த்த மகிழ்ச்சியில் குதூகலமானான் கண்ணன்.
பாட்டி… அப்பா சின்ன பிள்ளையாய் இருக்கும் போது எந்த வண்டியில் ஸ்கூல் போவார்னு? கேட்ட பேரனிடம் அவன் நடராஜா  வண்டில தான் போவானு சொன்ன பாட்டியை இடைமறித்த பேரன் அது எவ்ளோ வேகமா போகும்னு கேட்டான்? 5 அல்லது 10 கிலோ மீட்டர் வேகத்துல போகும்னு கண்ணம்மா சொன்னார்.

கெக்கே பிக்கேனு சிரித்த பேரனுக்கு கண்ணம்மா சொன்ன “நட”ராஜா வண்டி காலாற நடந்து போவதுனு தெரியாது தானே?

காலையில் பள்ளிக்கூடம் போய்விட்டு மாலையில் வீடு திரும்பும் தனது மகன், அவனது கூட்டாளிகளோடு தெருவில் ஓடி ஆடி விளையாடிய செய்தியை தனது பேரனிடம் சொன்ன போது, பேரனின் முகத்தில் வாட்டத்தை கண்டாள் பாட்டி.

“காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு – என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா” என்னும் பாரதியார் பாடலை தனது பேரனிடம் சொன்ன கண்ணம்மா, உன் தந்தையை அப்படித்தான் வளர்த்தேன் என்று கூறினாள்.

பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில் வீட்டின் திறந்தவெளி முற்றத்தில் அமர்ந்து நிலாவை காட்டி சாந்தமாமா, சாந்தமாமா என் பிள்ளைக்கு ஒரு கதை சொல்லுனு கூறிக்கொண்டே பருப்பு சாதத்தை தன் மகனுக்கு ஊட்டி விட்ட கதையை பேரனிடம் இயல்பாய் சொன்னாள் பாட்டி.

வாராந்திர பள்ளிக்கூட விடுமுறை நாளில் உறவினர் வீடுகளுக்கு செல்வதும்,அங்கே இருக்கும் சிறுவர்களோடு சேர்ந்து தனது மகன் கபடி விளையாடும் செய்தியை கண்ணம்மா சொல்லும் போதே..கபடினா என்ன பாட்டினு? இடைமறித்தான் கண்ணன் .

பரபரப்பான பட்டணத்து வாழ்க்கை முறையில் வளர்ந்த பேரனுக்கு கபடினா என்னானு?தெரியாத விசயம் கண்டு வேதனைப்பட்டாள் கண்ணம்மா.

தலா 7பேர் கொண்ட இரண்டு அணியினருக்கு இடையில் நடப்பது தான் கபடி என்றும், ஒருவர் எதிர் அணியை நோக்கி கையைப்பிடி கையைப்பிடினு பாடிக்கிட்டே இரண்டு கைகளையும் வீசியவாறு எதிரணியில் ஒருவரை தொட்டு விட்டு வந்தால் ஒரு புள்ளி என்றும், கையைப்பிடித்து இழுத்து அமுக்கி விட்டால் எதிர் அணியினருக்கு ஒரு புள்ளி என்றும் சொல்வார்கள் என கபடியைப்பற்றி தனக்கு தெரிந்த வகையில் பேரனிடம் விளக்கினாள் கண்ணம்மா.

கையைப்பிடி… கையைப்பிடினு பாடியது தான் காலப்போக்கில் கபடி..கபடினு மாறிடுச்சோனு? பேரன் கேட்ட கேள்விக்கு இருக்கலாம்? என்று ஆமோதித்தாள் கண்ணம்மா.

தனது அப்பா சிறுபிராயத்தில் வளர்ந்த விதம் குறித்து பாட்டி கண்ணம்மா சொன்ன விசயத்தை உன்னிப்பாக கவனித்த பேரனின் கண்களில் நீர் கசிவதை கண்ட கண்ணம்மா திடுக்கிட்டாள்.

சற்று நேரத்தில் தேம்பி, தேம்பி அழ ஆரம்பித்த பேரனை சமாதானப்படுத்த முயன்றாள் கண்ணம்மா; இல்லப்பாட்டி நான் அதிகாலை எழுந்து பள்ளிக்கூடம் போய்ட்டு மாலை இருட்டிய பிறகு வீடு வருவேன் என்றான் பேரன்.

பின்னர் டியூஷன் என்று மீண்டும் என்னை படிப்பு என்னும் சிறைக்கூடத்தில் அடைத்து விட்டு இரவில் வீடு திரும்பியதும் சாப்பாடு தருவார் அம்மா.

இரவில் சாப்பிடும் போது மட்டுமல்ல, மற்ற நேரத்தில் கூட நீ சொன்ன அந்த சாந்தமாமா(நிலா)வை எனக்கு காட்ட மாட்டார்கள்.பின்னர் தூங்கிடுவேன்,மீண்டும் எழுந்து பள்ளிக்கூடம் போயிடுவேனு சோகமாய் சொன்ன பேரனின் முகம் கண்டு வாடினாள் கண்ணம்மா.

பாட்டி கண்ணம்மா சொன்ன அழகிய கிராமத்து வாழ்க்கை நமக்கும் கிடைக்காதா? என்ற ஏக்கத்தோடு அப்பா, நானும் பாட்டியோடு அவர் ஊருக்கே போய்விடுகிறேனு தனது அப்பாவை பார்த்து சொன்னான் கண்ணன்.
பாட்டி, நீ என் அப்பாவை வளர்த்தது போல் என்னையும் உனது கிராமத்திற்கே அழைத்துச் சென்று நிலாச்சோறும், மாலை நேரத்து விளையாட்டும், உறவினர் வீட்டு விருந்தோம்பலும் என்று இனம் புரியாத அந்த இன்பமான வாழ்க்கையை எனக்கு தா பாட்டினு பேரன் கெஞ்சிய நிலை கண்டு கண்ணீர் வடித்தாள் கண்ணம்மா.
ஆடம்பரம் நிறைந்த பரபரப்பான பட்டணத்து வாழ்க்கையை விட, எளிமையான பசுமை நிறைந்த அமைதியான இயற்கைச்சூழல் நிறைந்த கிராமத்து வாழ்க்கையே மிகவும் அழகானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும் என்ற நம்பிக்கை மகன் கண்ணனுக்கு ஆழமாய் பதிந்து விட்டதை கண்ணனின் தந்தை உணரத்தொடங்கினார்.

அடுத்து வரும் பள்ளி ஆண்டுத்தேர்வு விடுமுறையில் உன்னை பாட்டியோடு ஊருக்கு அனுப்பி வைக்கிறேன்; அங்கு போய் நீ நினைத்தபடி மகிழ்வோடு இருக்கலாம்? என்று தனது மகனை அமைதிப்படுத்தினார் கண்ணனின் தந்தை.

ஆடம்பர பட்டணத்து வாழ்க்கை என்னும் பெயரில் நான்கு சுவற்றுக்குள் சிறைப்பறவையாய் அடைத்து வைத்திருக்கும் பிள்ளைகளை வருடத்திற்கு ஒருமுறையேனும் கிராமத்து வாழ்க்கை முறைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

கிராமங்களும் உயிர்ப்பெறும்,இயற்கை வளமும் பாதுகாப்பாய் இருக்கும்; பிள்ளைகளும் உடல் ரீதியாகவும்,மன ரீதியாகவும் புத்துணர்ச்சி பெறுவர்.

கண்ணம்மாவைப் போன்று ஒவ்வொரு பாட்டியும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது பேரப்பிள்ளைகளுக்கு பழைய கதையை சொல்லட்டும்.
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.

(13.12.2019)

News

Read Previous

திருக்குறளும் சட்டமும்

Read Next

முக்காடு போடும் முஸ்லிம் பெண்ணின் மகத்துவம் காண்பீரோ!

Leave a Reply

Your email address will not be published.