திருக்குறளும் சட்டமும்

Vinkmag ad
திருக்குறளும் சட்டமும்
 — கவிஞர்.முனைவர்.ப.பாலமுருகன்
முன்னுரை:
          திருக்குறள் எழுதப்பட்ட காலம் கி.மு. முதல் நூற்றாண்டுக்கும், கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. திருக்குறள் அறக்கருத்துகளை உள்ளடக்கியது. உலக நாடுகளில் பயிலும் மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் என்பது இதன் சிறப்பைப் பறைசாற்றும்.  தமிழறிஞர்களில் திருக்குறளை எடுத்துரைக்காதவர் எவரும் இல்லை.  “இதில் இல்லாத பொருளொன்றில்லை” எனவும், “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்த குறளென்றும்” இதன் சிறப்பை தமிழ்ப்  புலவர்கள் கூறுவர்.  இதில் சட்டக் கருத்துகள் பொதிந்துள்ளன என்பதைக் காணப் புகுவோம்.
சட்டம்:
          எந்த சமுதாயமும் இயங்க குடிமக்கள் தங்களது கடமையை செவ்வனே செய்ய வேண்டும். அதைக் கண்ணியத்துடன் செய்ய வேண்டும். அதையும் கட்டுப்பாட்டுடன் செய்ய வேண்டும்.  சட்டம் என்பது “எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது, செய்ய வேண்டியதைச் செய்யாமலிருந்தாலோ, செய்யக் கூடாததைச் செய்தாலோ அதன் விளைவு என்ன” என்பதை வரையறுப்பதே சட்டம்.  எந்த சட்டமும் பொது அறிவுக்கு ஒவ்வாததாக இருக்க முடியாது.  சட்டம் என்பது அரசின் கொள்கைகளுக்கு ஏற்றபடியே இருக்கும்.  அதனால் ஒரு காலத்தில், ஒரு பகுதியில் ஏற்கப்படும் சட்டம் பிரிதொரு காலத்தில் அதே பகுதியில் மறுக்கப்படலாம்.  ஒரே காலத்தில் இருவேறு பகுதிகளில் வெவ்வேறு சட்டங்கள் நிலையிலிருக்கலாம்.  ஆனால் எந்த சட்டமும் மக்களின் ஒழுக்கத்தையும், அறத்தையும் அடிப்படையாகக் கொண்டே இயங்கும்.
மாறாநெறி:
          ஒழுக்கம் என்பது தனி மனிதனில் தொடங்கி சமுதாயத்தில் முடியும்.  அறம் என்பது நெஞ்சுக்கு நேர்மையானவற்றைச் செய்தல்.  ஒழுக்கமும், அறமும் நிறைந்த சமுதாயமே கேடில்லாதது.  அதுவே உயர்ந்தது. உலகம் கேடின்றி இயங்க ஒழுக்கமுடன் கூடிய அற நெறியே மாறா நெறியாகப் போற்றப்பட்டது.  உலகில் பல அறிஞர்கள் தோன்றி இதை வலியுறுத்தி வந்துள்ளனர்.  அவர்களில் திருவள்ளுவர் கி.மு. நான்காம் நூற்றாண்டிலேயே வடித்துத் தொகுத்து  இதை உலகுக்கு வழங்கினார் என்பதே பீடு!  முப்பாலிலும் அறநெறிக் கருத்துகளே விரவிக்கிடக்கின்றன.  எத்திறத்து அரசுக்கும், எவ்வகைக் குடிகளுக்கும், எக்காலத்துக்கும் பொருந்தும் சட்டக்கருத்துக்களை உள்ளடக்கியதே திருக்குறள்.
அறத்துப்பாலில் பயிலும் சட்டக்கருத்துக்கள்:
          அறத்துப்பாலின் நான்கு இயல்களிலும் உள்ள 38 அதிகாரங்களில் உள்ள 380 குறள்களில் பாயிரத்தில் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இறைமைத் தன்மை (Sovereignty), மதச்சார்பின்மை (Secularism), அரசியலமைப்பு நிலை (Constitution) ஆகியவை விளக்கப்படுகிறது. இவற்றுடன் ‘வான் சிறப்பில்’ உலக உயிர்கள் ஒழுக்கமுடன் வாழ உணவு தேவை என்பதையும், அதற்குப் பயிர்த்தொழில் அவசியம் என்பதையும், அதற்கு மூலம் வான் மழை என்பதும் கூறப்படுகிறது. ‘நீத்தார் பெருமையில்’ அறவோர் என்பவரே அந்தணர் என்பதும், பின்னர் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாசொல் இவற்றை நீக்குவதே அறம் எனக் கூறுவதும் காணக் கிடைக்கிறது.
          இல்லறவியல், துறவறவியல் ஆகியவற்றில் இல்வாழ்வானின் கடமைகளில் ஒன்று துறவிகளைக் காப்பது என்பதையும், சீரிய ஒழுக்க வாழ்வை வாழ்பவன் வாழ்வாங்கு தெய்வத்துக்கு இணையாக வைக்கப்படுவான் என்பதையும் விளக்குகிறது.  ஒழுக்க வாழ்வு குற்ற எண்ணத்தைத் தூண்டாது; குற்ற எண்ணம் இன்றேல் குற்றமோ, குற்றச் செயலோ இல்லை என்பது விளக்கப்படுகிறது.  போலித் துறவிகள் நிலையை அடையாளம் காட்டும் வள்ளுவர், உலகம் பழிக்கும் தீய ஒழுக்கத்தை விட்டுவிட்டால் மழித்தலும், நீட்டலும் வேண்டாம் என்பதைக் கூறுகிறார். ஊழிற்கு புதிய விளக்கத்தை வள்ளுவர் காட்டும் பாங்கு வள்ளுவத்திற்கே உரிய சிறப்பாகும்.
பொருட்பாலில் புகலும் சட்டக் கொள்கைகள்:
          பொருட்பாலில் காணும் ஏழு இயல்களில் எழுபது அதிகாரங்களில் 700 குறட்பாக்களில் கூறும் சட்டக்கருத்துக்கள் முக்காலத்துக்கும் பொருந்தும். சமுதாயத்திற்கும், அரசு இயற்றுவோருக்கும் உரிய அறக்கருத்துகளையும், வாழ்வியல் கோட்பாடுகளையும், ஒழுக்க நெறிகளையும், தலை சிறந்த உளவியல் ஞானியான திருவள்ளுவர் குறுகத்தரித்துக் கொடுத்திருப்பது தமிழின் பெருமை.
          அரசன்; அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், தூங்காமை, கல்வி, கேள்வி ஆகிய பண்புடையவனாகவும், காட்சிக்கு எளியவனாகவும், கடுஞ்சொல் கூறாதவனாகவும் இருக்க வேண்டுவதையும் அவனுக்கு நல்ல படை, குடி, பொருள் ஈட்டும் ஆற்றல், நட்பு, அமைச்சு, அரண் ஆகியன அமைய வேண்டும் என்பதையும், கூறி, ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இன்றிக் கெடுவான்’ என எச்சரித்து, ‘ஒருபாற் கோடாமல், குடிபுறங்காத்தோம்பிக் குற்றம் கடிந்து; கொலையிற் கொடியாரை ஒறுத்து; தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணம் ஒத்தாங்கு ஒறுத்து; சிறக்க வேண்டும் என்ற அறநெறிக் கருத்துகளை அரசனுக்கான விதிகளாக வகுத்துள்ள வள்ளுவம் வானுயர்ந்ததாகும்.
          அரசனுக்குப் பக்கபலமாக அமைச்சன்; அறிவார்ந்த அவை; தூதர்; நட்பு முதலியவற்றின் ஒழுகலாற்றை வள்ளுவர் கூறியது நூலின் பெருமை. பொருட் பெண்டிரால் விளையும் கேட்டை விளக்கி, சூதின் தாக்கத்தைக் கூறிய பாங்கு போற்றுதற்குரியது. ஒழுக்கத்தின் மேன்மையை விளம்பி, பிச்சை எடுத்தல் சமூக இழிநிலை என்பதைக் கூறி நீதியை நிலை நாட்ட சட்டம் என்ற கருதுகோள் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை விளக்கி ஒழுக்கமே உயர்ந்த சட்ட நெறி என்பதை நிறுவிக்காட்டிய வள்ளுவம் இணையற்ற பெற்றியுடையதாகும்.
இன்பத்துப்பாலில் இயம்பும் சட்டக் கோட்பாடுகள்:
          இன்பத்துப்பாலிலும் சட்டக் கருத்துகளை இயம்பும் வள்ளுவத்திற்கு ஈடு எந்த இலக்கியமும் இல்லை.  இதில் காணும் களவியல், கற்பியல் ஆகியவற்றில் விலைமாதரும், பிறன் மனைப் பெண்டிரும் வள்ளுவரால் வெறுக்கப்படுகின்றனர்.  ஆண்களில் பிறன் மனை நோக்காதவனே பேராண்மையுடையவன் என வள்ளுவர் வகுக்கிறார்.  மனுதர்மத்திலும், இந்துச் சட்டத்திலும் பின்னாளில் தொகுக்கப்பட்ட திருமணங்கள் பற்றி அப்போதே அங்கீகாரம் கொடுத்த வள்ளுவரின் சமூக நீதி வெளிப்படையாகக் காணக் கிடைக்கிறது.  கூடலின் முதற்படியே ஊடல் என்பதை,  “ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப்பெறின்” எனக் கூறிய பாங்கு எந்த இலக்கியத்திலும் காணக் கிடைக்காத ஒழுக்க நெறியாகும். வாழ்வாங்கு வாழ்ந்து தான் கண்ட சமூக நெறிகளை, சட்ட நெறிகளை மனித குலம் மேம்படவே வள்ளுவர் வடித்தளித்துள்ளார் என்பது வெள்ளிடை மலை.
முடிவுரை: 
          திருக்குறளின் 1330 குறட்பாக்களிலும் சட்டநெறிகள் மிளிர்வது வெளிப்படும். இது முக்காலத்துக்கும் பொருந்தும் தன்மையுடையது.  எந்த வகையான ஆட்சியாளரும், குடிகளும் கடைபிடிக்கத்தக்க உன்னதமான சட்டநெறிக் கருத்துகள் அமைந்த பெட்டகம் என்பதில் இருவேறு கருத்து இல்லை.  திருக்குறள் சட்ட நெறிக் கருத்துகள் பொதிந்த மறை நூல் என்பதை இவ்வுலகம் ஏற்றுள்ளது தமிழுக்கும், தமிழருக்கும், மனித குலத்திற்கும் கிடைத்த வெற்றியாகும்.
உதவிய நூல்கள்:        
திருக்குறளும் சட்டமும்
சங்கத்தமிழ் கூறும் சட்ட நெறி
குறள் கூறும் சட்ட நெறி
சட்டமும், சமுதாயமும்
குறள் கண்ட வாழ்வு
சங்க காலத் தமிழர் வாழ்வு
பேரறிஞர்களின் திருக்குறள் சிந்தனைகள்
திருக்குறளாராய்ச்சி
குறள் கூறும் சமுதாயம்
திருக்குறட் சிந்தனைகள்
கவிஞர்.முனைவர்.ப.பாலமுருகன்., M.A., M.L., M.Sc., M.Phil., Ph.D.
வழக்கறிஞர் மற்றும் சான்றுறுதி அலுவலர்,
தலைவர், மேட்டூர் வழக்கறிஞர்கள் சங்கம்;
செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு & புதுச்சேரி வழக்கறிஞர்கள் குழுமம்;
நிறுவனர், சட்ட ஆய்வு மையம்;
நூலாசிரியர்: திருக்குறளும் சட்டமும்

News

Read Previous

இலண்டனில் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்

Read Next

கண்ணம்மா, கண்ணம்மா… உன் பழைய கதையை சொல்லம்மா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *