கண்ணதாசன்

Vinkmag ad
கடந்த ஆண்டு எழுதி, வண்ணக்கதிரில் வந்த கட்டுரை உங்கள் வாசிப்புக்கும், பகிர்வுக்கும்…
எஸ் வி வி

கண்ணதாசன் 
நிரந்தரமானவன் அழிவதில்லை !
எஸ் வி வேணுகோபாலன் 
முத்து என இட்டபெயர் முத்தாகவிலை என்று முறையீடு செய்யவிலையோ…’ என்ற கவியரசு வரிகளை ஆனைக்கட்டி ரவிதான் எனக்குச் சொன்னது.  முத்தையா என்பதுதான் கண்ணதாசனின் இயற்பெயர். வாலியைப் போலவே கண்ணதாசன் குறித்த சிலாகிப்பும் என் அண்ணனது கல்லூரித் தோழன் ரவி மூலம் தான் தொற்றிக் கொண்டது. பாடலைச் சும்மா கேட்டுக் கொண்டிருந்த காலம்போய் அதன் நுட்பத்தில் உள்ளத்தைப் பறிகொடுக்கத் தொடங்கிய காலம் பள்ளிக்கூடப் படிப்பு நேரம்.  எத்தனை கொடுத்து வைத்த இளமைப் பருவம்! தொலைக்காட்சிக் கருவிகளைக் காலம் கடந்து கண்டுபிடித்த விஞ்ஞானிகள், அவற்றை நிதானமாகத் தமிழகத்திற்குக் கொண்டு சேர்த்தவர்கள் யாவரும் நீடூழி வாழட்டும். வானொலியில் பாடலை ஒலிபரப்பிக் கொண்டிருப்போர் என்றென்றும் அமரத்துவம் எய்தட்டும்.
கண்ணதாசனைக் கேட்கவும், படிக்கவும் ஒரே நேரத்தில் சாத்தியமாயிற்று. ஒன்று நூலகத்தில் சிக்கிய அவரது கவிதைத் தொகுப்புகள். மற்றொன்று அப்போது வாராவாரம் குமுதம் இதழில் வந்து கொண்டிருந்த அவரது கவிதைகள்.
‘பூவினைக் காடுகள் புன்னகைக் கோடுகள் பொன்னிறப் புள்ளிமான் கூட்டம், காவியப் பேடுகள் கண்மயர்க் கூடுகள் காதலே என்மனத் தோட்டம், நாவினால் மென்மொழி நாட்டுவாள் பைங்கிளி நாடுவேன் நாடுவேன் நானே, பாவியேன் நெஞ்சினைப் பற்றுமோர் பெண்மையைப் பார்க்கிலேன் கண்ணபிரானே’ என்ற அவரது வரிகளில் துள்ளிய ஆசிரிய விருத்தம் எல்லா வருத்தங்களையும் தீர்க்கும் ரசமாக என்னுள் இறங்கிய வேட்கைப் பருவமது.
கண்ணதாசன் கவிதைத் தொகுதிகளை நான் பள்ளிக்கூடப் படிப்பு மேற்கொண்டிருந்த காஞ்சிபுரத்திலும், எனது பெற்றோர் இருந்த வேலூரிலும் நூலகங்களில் தேடித் தேடி வாசித்துக் கொண்டிருப்பேன்.  அவரது அரசியல் உணர்விலும், இறை நம்பிக்கையிலும் ஏற்பட்ட மாற்றங்களின் பிரதிபலிப்புகள் அவரது தொகுதிகளில் பயணம் செய்பவர்களுக்குப் பளிச்சென்று தெரிந்துவிடும்.
கம்பனில் ஆழ்ந்த ரசனையை அவர் வளர்த்துக் கொண்டதை, அர்த்தமுள்ள இந்து மதம் என்ற தலைப்பில் அவர் பேசி வந்த சொற்பொழிவுகளில் நேரே கேட்கும்போது கிறங்கிப் போகிற அளவு அந்த சந்தங்களை சொல்லிக் காட்டுவார். தனது எந்தப் பாடலை எந்தத் தனிப் பாடலின் தாக்கத்தில், எந்தக் கம்பன் கவியின் வேகத்தில் எழுதினேன் என்று விவித்பாரதி அலைவரிசையில் சிறப்பு தேன்கிண்ணம் பகுதியில் அவரே எடுத்துச் சொல்வதை எழுபதுகளின் பிற்பகுதியில் வானொலி நேயர்களாக இருந்தோர் அறிந்திருப்பர்.
அகலிகை சாப விமோசனம் நிகழ்ந்த பரவசத்தில், விசுவாமித்திரர் ராமனைப் புகழ்ந்து, தாடகையை எதிர்த்த போரில் உன் கை வண்ணம் கண்டேன், இங்கே கல்லை மிதித்து அதைப் பெண்ணாக மாற்றியதில் உன் கால் வண்ணம் கண்டேன் என்று சொல்வார். ‘பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்’ என்பது கண்ணதாசன் எழுதிய (பாசம்) திரைப்படப் பாடல் வரிகள்!
சூர்ப்பணகை வருகையைக் கொஞ்சிக் கொஞ்சி கம்பன் வருணித்த, ‘பஞ்சியொளிர் விஞ்சுகுளிர்’ என்ற அருமையான செய்யுள், ‘வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்’ என்று முடிவதைத் தான், ‘வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்..’ என்ற கண்ணதாசனின் அற்புதப் பாடலாக சி எஸ் ஜெயராமன் அவர்களது தனித்துவக் குரலில் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருப்பது.
‘கண்வழி சொரியும் உப்பு
      கடவுளால் வருவதல்ல,
மண் வழி வரலாம் பெற்ற
     மகன் வழி வரலாம் சேர்ந்த
பெண் வழி வரலாம்
     செய்த பிழை வழி வரலாம் ஆனால்
நண்பர்கள் வழியிலேதான்
      நான் கண்ட கண்ணீர் உப்பு’
என்பது அவரது கவிதை! இதே கருத்து, ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா என்ற அவரது திரைப் பாடலிலும் வரும் (அவன்தான் மனிதன்).
உருக்கமான கவிதைக்கு அவரிடம் குறைவு இருக்க இயலுமா, என்ன! உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையைப் பார்த்து அவர் எழுதிய ஒரு கவிதை மிகவும் பரவலாக அறியப்பட்டது: ‘ அவனை எழுப்பாதீர் அப்படியே தூங்கட்டும் ஆழ்ந்த துயிலினிலே அமைதியினைக் காணட்டும்’ என்று தொடங்கும் அந்தக் கவிதையை அவர் எழுதிய பிறகு, காய்ச்சல் கண்டிருந்த அவரது உறவுக்காரர் ஒருவரின் அந்தக் குழந்தை மரித்துவிட்டது. அதிர்ந்து போனார் கவிஞர். பின்னர், ‘அறம்பாடி விட்டேனோ அறியேன் யான் சிறுகுருவி திறம் பாடமாட்டாமல் செத்த கதை பாடுகிறேன்’ என்று எழுதினார்.
திருமகள் என்ற இதழில்  வெளியான ‘ காலை குளித்தெழுந்து கருஞ்சாந்துப் பொட்டுமிட்டு’ என்று தொடங்கும் கவிதைதான் கவியரசரின் பிரசுரமான முதல் கவிதை. இந்த சொல்லாட்சி, வேகம், எளிமை அவரது திரைப்படங்களில் ஆட்சி செய்து அசத்தியது.
‘நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே’ என்று சவாலே சமாளி படத்தில் வரும் பாடலின் கடைசி சரணம் அதிகம் வானொலியில் ஒலிபரப்பு ஆகாதது: ‘ தங்கம் எடுத்த கை அது தங்கம் பார்த்ததா, தர்மம் காத்த கை சமதர்மம் கண்டதா…’ என்று போகும் அந்த ஆவேச வரிகள், ‘ஆலயம் செய்வோம் அங்கே அனுமதி இல்லை, நீ அந்தக் கூட்டமே இதில் அதிசயமில்லை’ என்று சிகரத்தை எட்டும்.
கதையின் சுருக்கத்தை மிகத் திறம்பட தனது பாடல் வரிகளில் சொற்செட்டாக வடித்துக் கொடுக்கும் பேராற்றல் அவருக்கிருந்தது. அவர்கள் படத்தில் வரும் ‘இப்படியோர் தாலாட்டு பாடவா’ என்ற பாடலின் சரணம்  ‘அன்றொரு நாள் மீராவும் கண்ணனை நினைந்தாள் ஏனோ அவளுடைய தலையெழுத்து மன்னனை மணந்தாள்’ என்று சொல்லிச் செல்லும் கதாநாயகி, ‘அதுவரைதான் தன்கதையை என்னிடம் சொன்னாள் நான் அப்படியே என் கதையை உன்னிடம் சொன்னேன்’ என்று தனது கதையை அங்கே இணைத்துவிடும் அழகை எப்படி விவரிக்க!
ராஜபார்ட் ரங்கதுரை படத்தில், ‘அம்மம்மா தம்பி என்று நம்பி’ என்ற பாடலை வேறு யார் எழுதி இருக்க முடியும்? ரோஜாவின் ராஜா படத்தின், ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான் என்ற பாடலில் பி சுசீலாவின் அற்புதக் குரலில், ‘நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை, அவள் மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீர் மறைத்தும் மறையவில்லை’ என கசியும் தவிப்பு வரிகளை வேறு யார் தொடுத்திருக்கக் கூடும்?
காவியத் தலைவி படத்தில் வரும் ‘ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்’ என்ற பாடல் யாரைத் தான் உருக வைக்காது! அதுதான் மேதைமை.  காதல் (நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான் – பூவும் போட்டும்), பாசம் (மலர்ந்தும் மலராத – பாச மலர்), சோகம் (கண்கள்   இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ – மன்னாதி மன்னன்), வேதனை (கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் – வானம்பாடி), கழிவிரக்கம்  (உள்ளத்தில் நல்ல உள்ளம் – கர்ணன்), சுய பரிதாபம் (பாலூட்டி வளர்த்த கிளி – கௌரவம், மனிதன் நினைப்பதுண்டு – அவன் தான் மனிதன்), தாபம் (நாலு பக்கம் வேடருண்டு – அண்ணன் ஒரு கோவில்)….எந்த உணர்வைக் கேட்டாலும் அந்த வகைப்பட்ட பாடலை அவரது பேனா எழுதி இருக்கவே செய்யும்.
தனக்கான இரங்கல் கவிதையைத் தானே யாத்துக் கொண்ட ரசனை மிக்க கவி அவர். வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை நீங்கி வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை (கருப்பு பணம்) என்றெழுதிய அவரது படைப்பில், கவிதைகளாக மலர்ந்த பலவும் அதிகம் பேசப்படாதிருப்பது. சொல்லப் போனால் இணையத்தில் அவரது தனிக் கவிதைகள் ஏற்றப்படாதிருப்பது வியப்புக்குரியது.
குமுதம் இதழில் வந்த அவரது சிறப்பான கவிதை ஒன்று இப்படி தொடங்குகிறது:

சாலையிலே ஒரு முடவனைக் கண்டுகைத் தாங்கலில் கொண்டுவிட்டேன்
தனிமையில் வாடிய குருடனை அணைத்துநற் சாதமும் ஊட்டிவிட்டேன்
வேலையில்லாதவன் வெம்பசி தீர்ந்திட விருந்தொடு காசுமிட்டேன்
வேண்டிய கல்வி கொடுத்தொரு பிள்ளையை மேற்படி ஏறவிட்டேன்
ஓலையில்லாதொரு பாவிகள் குடிசைக்கு ஓலையும் போட்டுவைத்தேன்
உறவினரற்ற பிணத்தை எடுத்தெரி யூட்டி முடித்துவிட்டேன்
காலைதொடங்கி நள்ளிரவு வரையில் என் கடமைகள் தொடர்கின்றன
கண்களை மூடிக் கனிந்ததும் அற்புதக் கனவுகள் வருகின்றன….
.

இந்தப் பொது சிந்தனை, உதவும் உள்ளம், பரந்த பார்வைதான் கண்ணதாசனை இறவாக் கவியாக உயர்த்தியிருப்பது. மறைந்த பிறகும் பிறந்தநாளைக் கொண்டாட வைத்திருப்பது!

(ஜூன் 24 அன்று அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது)

************

நன்றி:வண்ணக்கதிர்: ஜூலை 6. 2014

News

Read Previous

ஓர் இரவில் ஓர் உறவில்..

Read Next

வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதின் பயன்கள்

Leave a Reply

Your email address will not be published.