இராஜா தேசிங்கின் நினைவிடம்…

Vinkmag ad

002இராஜா தேசிங்கின் நினைவிடம்…

செஞ்சிக் கோட்டை என்றாலே அனைவரது நினைவுக்கும் வருபவர் இராஜா தேசிங்கு.

ஆனால் அவருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, 12ஆம் நூற்றாண்டில் கோனார்களால் கட்டப்பட்டு, பல்வேறு காலக்கட்டங்களில் வளர்ச்சிப் பெற்றதுதான் செஞ்சிக் கோட்டை.

இருந்தும்கூட செஞ்சிக் கோட்டையுடனான வரலாற்றில் இன்றும் நின்று நிலைத்துள்ளார் இராஜா தேசிங்கு.

இராஜா தேசிங்கின் தந்தை சொரூப்சிங் 1700 முதல் 1714 வரை செஞ்சியின் ஆளுநராக இருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தறுவாயில் வடஇந்தியாவில் உள்ள பண்டேல்கன்டில் இருந்து இராஜா தேசிங்கு செஞ்சி வருகிறார்.

1714 ஜனவரியில் செஞ்சியின் ஆளுநராக பதவியேற்றுக் கொள்கிறார்.

தங்களின் அனுமதி பெறாமல் இராஜாதேசிங்கு பதவியேற்றது முகலாயப் பேரரசுக்கும் ஆற்காடு நவாபுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்கள், அவரது அரசுரிமையை அங்கீகரிக்கவில்லை.

இதுமட்டுமல்லாமல் தேசிங்கின் தந்தை ஆற்காடு நவாபுக்குச் செலுத்த வேண்டிய கப்பத் தொகை ரூ.7லட்சம் நிலுவையில் இருந்தது.

இதனை வசூலிக்க வந்த நவாபின் செயலாளர் லாலா தோடர்மால், தேசிங்கினால் அவமானப்படுத்தப்பட்டார். இதுதான் சமயமென, செஞ்சியைத் தாக்க ஆற்காடு நவாபின் படைகள் விரைந்தன.

இந்தப் படைகளை, குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களுடன் தேசிங்கு எதிர் கொண்டார். இறுதியில் இராஜா தேசிங்கும், அவரது தளபதியும் வழுதாவூர் பாளையக்காரருமான மகமத்கானும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தேசிங்கின் உடலை செஞ்சிக் கோட்டைக்கு எடுத்து வந்த ஆற்காடு நவாப் சதத் உல்லா கான், தகன மேடை அமைத்து எரியூட்ட ஏற்பாடு செய்தார். இரஜபுத்திர வழக்கப்படி தேசிங்கின் மனைவி இராணிபாயும் உடன்கட்டை ஏறினாள்.

(இதில் குறிப்பிடப்பட்டிருப்பது இராஜா தேசிங்கின் சுருக்க வரலாறுதான்.)

21 வயதே நிரம்பிய இராஜாதேசிங்கு செஞ்சி மண்ணை ஆட்சி செய்தது 1714 ஜனவரியில் இருந்து 1714 அக்டோபர் 3ஆம் தேதி வரையிலான 10 மாதங்கள் தான்.

எழுதப்பட்ட வரலாற்றிலும், கதைப்பாடல்கள் மூலமாகவும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துவிட்டார் இராஜா தேசிங்கு.

இராஜாதேசிங்கின் வரலாற்றை மிகவும் ஆய்வுசெய்த விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி பேராசிரியர் பொன்.நடராஜன் கூறுவார்,

“10 மாதங்களே ஆட்சி செய்த இராஜா தேசிங்கு மக்களுக்கு எவ்வித திட்டங்களையும் வகுத்து நன்மை செய்ய முடியவில்லை. ஆட்சியின் ஆரம்பமும் இறுதியும் வாரிசுரிமைப் போரிலேயே முடிந்தது. இருந்தும் இன்றும் மக்களால் தேசிங்குப் போற்றப்படுவதற்குக் காரணம், உரிமைக்காகப் போராடிய வீரமும் வலிமையுமாகும். இவரது ஆட்சியின் போது 172 பாளையங்கள் இருந்தன. இவற்றுள் தேசிங்கு மட்டுமே பேரரசையும் நவாபையும் எதிர்த்து உரிமைக்குப் போராடி இறந்தார். இதனால் மக்கள் அவரது வீரத்தைப் பெரிதும் போற்றுகின்றனர். அடக்குமுறையால் வாய்மூடி இருந்த மக்களுக்குத் தேசிங்கின் வீரம் போற்றத்தக்கதாய் இருந்தது.”

இராஜா தேசிங்கின் நினைவு தினம் ஆண்டுதோறும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தாலும், தேசிங்கின் வம்சா வழியினரான பொந்தில் சமூகத்தினராலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இராஜா தேசிங்கு, ஆற்காடு நவாபு படையுடன் போரிட்டு மாண்டது, செஞ்சியில் இருந்து மேல்மலையனூர் செல்லும் வழியிலுள்ள கடலி எனும் கிராமமாகும்.

இங்கு மணமேடையையும் உதறி, வீறுகொண்டெழுந்து வந்து, நண்பனுக்காக உயிர் துறந்து, நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்த, மகத்கானுக்கு அழகிய சமாதி, இசுலாமியர்களால் கட்டப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

டெல்லிப் பேரரசை எதிர்த்துப் போரிட்டு உயிர்நீத்த மாவீரன் இராஜா தேசிங்கிற்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டுமென்பது, இன்னமும் கோரிக்கை வடிவிலேயே நிற்கிறது.


News

Read Previous

புகை இல்லாத புகைவண்டி

Read Next

தோரணம்

Leave a Reply

Your email address will not be published.