ஆசிரியர் தின வாழ்த்துகள்

Vinkmag ad

thiruஆசிரியர் தின வாழ்த்துகள்
—————————————-

ஐந்தாம் வகுப்பு வரை கீழச்சிறுபோது அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் பயின்றேன்.ஆசிரியர் மரியாதைக்குரிய
திரு.சவரிமுத்து அவர்கள் என் வாழ்வில் மறக்க முடியாதவர்.

மாணவர்களிடையே அவர் பழகும் பாங்கு அழகானது.

முளைக்கிற விதையை தேடி விதைத்து பயிர் செய்யும் விவசாயி போல அல்லாமல் படிக்கும் பிள்ளைகளை அனைவரையும் செல்லப்பிள்ளைகளாக வளர்ப்பார்.

அவரின் செல்லப்பிள்ளைகளில் நானும் ஒருவன். எங்கள் வீட்டில் வந்து இவன் படிப்பை மற்றும் நிறுத்திவிடாதீர்கள் என்று எனக்காக பலமுறை மன்றாடி கெஞ்சி இருக்கிறார். இல்லையென்றால் நான் நடுநிலை பள்ளி தாண்டி இருப்பது சந்தேகமே.

என்னைப் போல பல மாணவர்கள் இடைநில்லா மாணவராக்கி பட்டதாரியாக்கினார். மேல் நிலை கல்வி காலத்தில் நான் ஊருக்கு போகும் போது அவரை சந்திப்பேன். எங்கள் உரையின் போது அவரது வலது கை என் முதுகை சுற்றி என் வலது மேல் கையை பிசைந்தவாறு இருக்கும். அதில் நீ என் படைப்பு என்ற செய்தியும் பெருமையும் இருக்கும்.

மரியாதைக்குரிய திரு.சவரிமுத்து ஆசிரியர் அவர்கள் சொந்த ஊர் சவேரியார் சமுத்திரம். எங்கள் ஊரிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.பணி ஓய்வு பெற்று உள்ளார்.

வேரை ஆழமாக பரப்பிய மரம் எவ்வளவு உயரமும் வளரும் என்பது போல எனது வேரை பலமாக்கியவர் மரியாதைக்குரிய
திரு. சவரிமுத்து சார் அவர்கள். ஆரம்ப பள்ளி முதல் முதுகலை பட்டம் வரை எத்தனையோ சிற்பிகள் என்னை செதுக்கினாலும் தலைமை சிற்பி இவர்தான்.

ஒவ்வொரு ஆசிரியர் தினமும் அவர் நினைவு எழுவதை தடுக்க முடியாது.

நேற்று நான் எனது நண்பர் ஆசிரியர் திரு. செல்வம் அவர்களை அழைத்து கொண்டு சாரை பார்க்க சென்றோம். வாசலில் இருமுறை அழைத்தும் பதிலில்லை. இருவரும் உள்ளே சென்றால் முதுமையால் தளவுற்று கட்டிலில் படுத்திருந்தார்.‌எங்களை கண்டதும் அடையாளம் தெரியவில்லை. சற்று நேரம் கழித்து நினைவை வலு கட்டாயமாக வரவழைத்து தெரிந்ததும் நா தழு தழுத்தார். எப்போதும் பாசத்தோடு என்னை சுற்றும் அவர் கை தளர்ந்திருந்தது. நான் எனது வலது கையால் அவர் முதுகை சுற்றி அவர் வலது கையை அழுத்தி நான் உங்கள் படைப்புசார் என மனதுக்குள் கூறிக்கொண்டே அவரிடம் ஆசி பெற்று வந்தேன்.

” கொடைக்குணம் உடைய குலத்தில் பிறந்தவர்

இரக்கம் மற்றும் அன்பு காட்டும் அருள் உடையவர்

தெய்வத்தன்மை கொண்டவர்

கற்பிக்கும் கொள்கையில் உறுதிப்பாடு கொண்டவர்

மக்களில் மேம்பட்டவர்

பெருமை, திண்மை, தாங்கும் தன்மை ஆகியன கொண்ட நிலம் போன்ற பண்புள்ளவராய் மாணவரின் முயற்சிக்கு ஏற்பப் பலன் தருபவராதல்.

துலாக்கோல் போல எல்லா மாணாக்கரையும் சமமாக நோக்குதல்

மலர் போல் அனைவர்க்கும் மகிழ்வும் மணமும் தருதல்

உலகியல் அறிவு பெற்றிருத்தல்

உயர்குணம் உடைமை

ஆகிய பாங்குகளை உடையவர்
நல்லாசிரியர் என நன்னூல் கூறுகிறது.

மேற்கண்ட அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றவர் மரியாதைக்குரிய ஆசிரியர் திரு. சவரிமுத்து அவர்கள்.

நான் நானாக இருக்க
நல்ல கல்வி தந்த அனைத்து ஆசிரிய பெருந்தகைகளுக்கும்
ஆசிரியர் தின வாழ்த்துகளை
தெரிவித்துக்கொள்கிறேன்.

பா.திருநாகலிங்க பாண்டியன் M.Sc.,(N)
Nursing Tutor
Madurai Medical College
Madurai.

News

Read Previous

கேரளா-முக்த் பாரதத்தை உருவாக்குவோம்!

Read Next

செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்…

Leave a Reply

Your email address will not be published.