அறிவியல் விழிப்புணர்வும் ஊடகங்களும்

Vinkmag ad

453 Science and mediaஅறிவியல் கதிர்
அறிவியல் விழிப்புணர்வும் ஊடகங்களும்
பேராசிரியர் கே. ராஜு

அறிவியல் செய்திகளுக்கும் விழிப்புணர்வுக்கும் இன்று ஊடகங்கள் கொடுக்கும் இடம் மிகமிகக் குறைவானது. மக்களை உணர்ச்சிவயப்படுத்தும் கொலைகள், பாலியல் செய்திகள், அரசியல் கட்சிகளின் மோதல்கள் போன்ற பரபரப்புச் செய்திகளும் சினிமா நடிக நடிகைகளின் படங்களும்  பெரும்பாலான செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் இடம் பிடித்துவிடுகின்றன. தொலைக்காட்சி சானல்களிலும் அவையே பிரதான இடத்தைப் பிடிக்கின்றன. அறிவியல் வளர்ச்சி, அறிவியல் சாதனைகள், வாசகர்களிடம் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய செய்திகள் பெரும்பாலும் அச்சு ஊடகங்களாலும் மின்னணு ஊடகங்களாலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகின்றன. அறிவியலுக்கு விரோதமான கருத்துகள் அறிவியல் போர்வையைப் போர்த்தியபடி இணையதளங்களிலும் வலைப்பூக்களிலும் இன்று ஆயிரக்கணக்கில் வலம் வரம் தொடங்கியிருப்பதால் உண்மையான அறிவியல் செய்திகள் இவற்றுடன் போட்டிபோட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. நோய்த் தடுப்பு முறைகளுக்கெதிராக அவதூறு பரப்பும் `மருத்துவர்களும் புற்றுநோயிலிருந்து எய்ட்ஸ் வரை உள்ள அனைத்து நோய்களுக்கும் மூலிகைத் தீர்வு சொல்லும் `உடல்நல நிபுணர்களும், பூமிக்கு அப்பாற்பட்ட பிரபஞ்ச வாழ்க்கை பற்றிய அசாதாரணமான கற்பனைச் செய்திகளைச் சொல்லும் `விஞ்ஞானிகளும் பெருகியுள்ளனர். அறிவியல் செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தராததது மட்டுமல்ல, போலி அறிவியல்வாதிகளின் கூற்றுகளை ஆராய்ந்து மோசடிகளை அம்பலப்படுத்துவதும் இல்லை. ஒவ்வொரு நாளிதழும் சோதிடத்திற்கென ஒரு பகுதியை ஒதுக்குகிறது. ஆனால் உண்மையான அறிவியல் செய்திகளுக்கென ஒரு பகுதி ஒதுக்குவதில்லை. அறிவியல், தொழில்நுட்பச் செய்திகளைக் கொடுத்து மக்களுக்கு அதிகாரம் அளிப்பது, அதன் மூலம் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவைப் பலப்படுத்துவது என்பதன் முக்கியத்துவத்தை பெரும்பாலான ஊடகங்கள் ஏன் தங்கள் கடமையாக உணர்வதில்லை? இதற்கு நாம் அனைவருமே பொறுப்பேற்க வேண்டும். இந்த பிரச்சனைக்கு பல முகங்கள் உண்டு. அறிவியலை விற்பனைச் சரக்காக ஊடகங்கள் கருதாதது ஒரு காரணமாக இருக்கலாம். அறிவியல் செய்திகளை விளம்பரப்படுத்துவோர் (sponsors) இல்லாதது மற்றொரு காரணமாக இருக்கலாம். அறிவியல் செய்திகளின் சிக்கலான தன்மைகளைப் புரிந்து கொண்டு அவற்றை வாசகர்களிடையே பரவசத்துடன் கொண்டுசெல்லும் பயிற்சியில்லாதவர்களாக ஊடகவியலாளர்கள் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். ஊடகவியலாளர்களுடன் அமர்ந்து அறிவியல் செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் ஈடுபாடும் திறனும் விஞ்ஞானிகளிடம் பொதுவாக இல்லை என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அறிவியல் தகவல் தொடர்பை செம்மைப்படுத்த அக்கறை செலுத்தாத அதிகார வர்க்கம் ஒரு காரணம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. நமது பெரும்பாலான அறிவியல் நிறுவனங்களிடம் மனிதவளத் திறனுடன் செயல்படும் தகவல்தொடர்புப் பிரிவுகள் கிடையாது. ஊடகங்களை ஈர்க்காத ஒருவித ஜடத்தன்மையுடன் அறிக்கைகளை அவசரஅவசரமாகத் தயாரித்து பத்திரிகைகளுக்கு அனுப்பிவிடும் வழக்கமே பொதுவாக இருக்கிறது. உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் அறிவியல் செய்திகளை ஊடகங்களுடன் பகிர்ந்துகொள்ள அந்த நிறுவனங்கள் முயற்சி செய்வதில்லை. மக்களுக்கு அறிவியல் செய்திகளைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் இல்லை என்று ஒதுக்கிவிட முடியாது. எப்படிச் சொல்கிறோம் என்பதில்தான் விஷயம் அடங்கியிருக்கிறது. அறிவியல் சமூகத்திற்கும் ஊடக சமூகத்திற்கும் இடையே ஓர் உயிரோட்டமான சங்கமம் ஏற்பட வேண்டும். அதன் வழியாக ஊடகங்கள் அறிவியல் செய்திகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய நிலைமை ஏற்பட வேண்டும். அறிவியல் நிறுவனங்கள், அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் இப்படிப்பட்ட முக்கியத்துவத்தை அடையும்போது அவர்கள் மேற்கொண்டுள்ள பணியைப் பொதுமக்கள் ஏற்பார்கள் என்பது மட்டுமல்ல, அறிவியல் ஆராய்ச்சிகளுக்கான நிதியும் வளமும் கிடைப்பதற்கு அது வழிவகுக்கவும் செய்யும்.
(உதவிய கட்டுரை : அக்டோபர் 2015 சயன்ஸ் ரிப்போர்ட்டரில் ஹசன் ஜவைத் கான் எழுதியுள்ள தலையங்கம்)

News

Read Previous

முத்துப்பேட்டை ஷெய்கு தாவூது தர்கா !

Read Next

பெண்ணிவள்

Leave a Reply

Your email address will not be published.