முத்துப்பேட்டை ஷெய்கு தாவூது தர்கா !

Vinkmag ad

முத்துப்பேட்டை ஷெய்கு தாவூது தர்கா !

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை – ஜாம்புவானோடையில் அடக்கமாகி இருக்கும் ஹக்கீம் செய்கு தாவூது காமில் தர்கா மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அனைத்து மதத்தினரும் மதமாச்சரியமின்றி வந்து வழிபடும் சிறப்புமிக்கது.

இயற்கை அழகுமிக்க அலையாத்திக் காடுகளுக்கு பெயர்போன லகூன் பகுதியான ஜாம்புவானோடை கோரை ஆற்றின் தெற்கு கரையோரம் அமைந்துள்ளது இந்த தர்கா.

இதன் ஆரம்பகால வரலாறு முதல் தற்பொழுது வரை மதங்களை கடந்து தமிழகம் மட்டுமன்றி, காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்தும் வருவது சிறப்பு வாய்ந்தது. இஸ்லாமியர்கள் மட்டுமன்றி, அனைத்து மதத்தினரும் வந்துசெல்லும் இந்த தர்கா பற்றி கூறப்படும் கதையாவது சிறப்பு வாய்ந்தது.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் முத்துப்பேட்டை ஜாம்புவானோடையில் தனது விளைநில தரிசு நிலத்தில் கருப்பையா கோனார் என்பவர் தனது ஆள்களுடன் சென்று ஏர் பூட்டி உழவுத் தொழிலை மேற்கொண்டிருந்தார்.

அப்போது, ஏர் முனை கீறிய ஓர் இடத்தில் இருந்து ரத்தம் பீய்ச்சி அடித்தது. அந்த கோனாரின் இரு கண்களும் ஒளி மங்கி பார்வை இழந்தாராம். அச்சத்தில் கை, கால், நடுங்கி புலம்பியவாறு உழவை நிறுத்திவிட்டு கோனார் தம் இல்லம் சென்று விட்டார்.

அன்று இரவு அவரது கனவில் அரபி தோற்றம் கொண்ட பெரியவர் ஒருவர் தோன்றினார். கோனாரை விளித்து, கருப்பையா நீ ஏர் உழுத நிலத்தில் வெகு காலத்திற்கு முன் நான் அடக்கமாகி இருக்கிறேன், என் பெயர் செய்கு தாவூது ஆகும். உன் பார்வையை பற்றி நீ கவலைப்படாமல் உடன் எழுந்து அருகில் நாச்சிக்குளத்துக்கு சென்று அங்கு வசிக்கும் கபீர் கான், ஹமீத் கான் என்ற இரு தவசீலர்களிடம் நடந்தவற்றை கூறு என்றாராம். கோனார் விழித்தெழுந்ததும் தன் இரு கண்களிலும் பார்வை வந்துவிட்டதை உணர்ந்தார். உடன் அவர் எழுந்து நாச்சிக்குளம் சென்றார்.

அவர் அங்கு செல்லும் முன்பே தவசீலர்கள் இருவரின் கனவிலும் ஆண்டகை தோன்றி கோனார் வருவது பற்றி அறிவுறுத்தி இருந்தார். கோனார் கொண்டு வந்த அற்புத செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த தவசீலர்கள் விரைந்து வந்து மேற்படி நிலத்தை வந்தடைந்தபோது அங்கு ரத்தம் பீய்ச்சி அடித்த இடத்தில் மல்லிகை கொடி வளர்ந்து மலர்கள் சொரிந்திருப்பதைப் பார்த்து குறிப்பிடப்பட்ட இடத்தில் தர்கா ஒன்றை எழுப்பினார்களாம்.

 

( தினமணி – ஈகைத் திருநாள் சிறப்பு மலர் 2015 )

News

Read Previous

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா

Read Next

அறிவியல் விழிப்புணர்வும் ஊடகங்களும்

Leave a Reply

Your email address will not be published.