அன்பு செலுத்தி எதிரிகளையும் நம் வசமாக்குவோம்!

Vinkmag ad

hindu

எதிர்,எதிரே சந்தித்து கொள்ளும் இருவர் அஸ்ஸலாமு அலைக்கும் என முகமன் கூறி கொள்ளட்டும் என்ற இறைத்தூதர் முகம்மது நபி(ஸல்)அவர்களின் உபதேசம் மனிதநேயத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடாகும்.
இத்தகைய நற்பண்புகளைத்தான் சகோதர சமுதாயத்தவர்கள் வணக்கம் என்றும் நமஸ்தே என்றும் பல்வேறு கோணத்தில் பின்பற்றி வருகின்றனர்.
வணக்கம் என்ற வார்த்தை வெறும் சடங்கு சம்பிரதாயமாகவும்,மரியாதை நிமித்தமாகவுமே மற்றவர்களால் அவதானிக்கப்படுகிறது.
ஆனால் முஸ்லிம்கள் சொல்லும் அஸ்ஸலாமு அலைக்கும் என்ற வார்த்தையில் மட்டுமே, உங்களின் மீது சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக என்ற மனிதநேயம் கலந்த பிரார்த்தனை கூறப்படுகிறது.
இஸ்லாமிய விழுமியங்களில் முதன்மையானது சகோதரத்துவம் மற்றும் மனிதநேயமாகும்.
இன்றைய கால கட்டத்தில் மனிதநேயம் மரணித்து விட்டதோ? என்றே எண்ணத்தோன்றுகிறது.
இந்தியா முழுவதும் அமைதியற்ற சூழலும்,ஒரு வகையான பதற்றமும்,இனம் புரியாத கவலையுமே மேலோங்கி நிற்கிறது.
சிறுபான்மை,பெரும்பான்மை என்ற இடைவெளி தான் மனிதநேயத்தின் முதல் விரோதியாய் சித்தரிக்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போது மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைத்துள்ள இந்த தருணத்தில்,தேசத்தால் நாம் இந்தியர் என்ற ஒற்றுமையுடன் ஆள்வோருக்கு அனுசரணையாக இருப்பதும்,
இனம்,மதம்,மொழி,கலாச்சாரம் போன்ற பாகுபாடுகளை கடந்து எல்லோரும் நமது தேசத்து மக்கள் என்ற உணர்வோடு பிரிவினை பாராமல் நீதமான மக்களாட்சியை கொடுப்பது தான் நல்லாட்சியின் அடையாளம் என்பதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் செயல்பட வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்.
சமீப நாட்களாக முகநூல் போன்ற மீடியா தளங்களில் இந்து,முஸ்லிம் வெறுப்பு செய்திகளும்,பகைமை கருத்துக்களும் பரிமாறப்பட்டு வருவது கவலைக்குரியதாகும்.
ஒரு இந்து சகோதரர் தனது முகநூல் பக்கத்தில் சவூதி,பாகிஸ்தான்,போன்ற இஸ்லாமிய நாடுகளில் அங்குள்ள சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை முதலில் கொடுக்க சொல்லுங்கள்,பிறகு இந்தியாவில் முஸ்லிம்களாகிய உங்களுக்கு நாங்கள் இடஒதுக்கீடு கொடுப்பது பற்றி யோசிப்போம் என்று பதிவிட்டார்.
அவர் குறிப்பிட்டுள்ள நாடுகளில் சமத்துவமும்,சகோதரத்துவமும் தான் கடைபிடிக்கப்படுகிறது என்பதை அந்த நாடுகளில் பிழைக்க போயுள்ள நமது இந்திய தேசத்து முஸ்லிமல்லாத சகோதரர்களிடம் அவர் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு முஸ்லிம் சகோதரர் தனது முகநூல் பக்கத்தில் சிவசேனாவை பற்றியும் அதன் நிறுவனர் பால்தாக்கரே பற்றியும் விமர்சனம் செய்தார் என்பதற்காக அந்த முஸ்லிம் சகோதரன் மறைந்த பால்தாக்கரே ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மஹாராஷ்ட்ர மாநிலம் புனேயில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
உண்மையிலேயே அவர்தான் செய்தாரா? அல்லது ஒரு முஸ்லிம் பெயரில் அமைதியை விரும்பாத இன்னொரு சமூகத்தை சேர்ந்தவர் செய்தாரா? என்பதை கூட அவதானிக்காமல் ஒரு இளம் பொறியாளர் கொலை செய்யப்பட்டிருப்பது தேசத்தின் மீதான கறையாகி விட்டது.
முஸ்லிம்களும் தங்களது மார்க்க ஒழுக்க நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு அனைத்து சமூகத்தவரிடமும் அன்பு பாராட்டி வாழவேண்டும்.
மதீனாவின் பேரரசர் முகம்மது நபி(ஸல்)அவர்கள் கடைபிடித்த நல்லிணக்கம் பற்றிய சில விபரங்களை காண்போம்.
நபி (ஸல்) மதீனாவில் அரசியல் அமைப்பு, சட்டம் ஒழுங்கு ஆகிய அனைத்திலும் முதன் முதலாக முஸ்லிம்களுக்கு மத்தியில் நிலைத் தன்மையையும் ஒருமைப்பாட்டையும் நிறுவினார்கள். அதன் மூலம் மதீனாவில் புதிய இஸ்லாமிய சமுதாயத்திற்கும், சமூகத்திற்குமான அடித்தளத்தை மிக ஆழமாக உறுதிப்படுத்தினார்கள்.
இரண்டாம் கட்டமாக, முஸ்லிம் அல்லாதவர்களுடன் தங்களது சமூகத் தொடர்புகளை முறைப்படுத்தத் துவங்கினார்கள்.
அதற்குக் காரணம், முழு மனித சமுதாயமும் நிம்மதி, பாதுகாப்பு, நற்பயன்கள், நல்லுறவுகள் கிடைக்கப்பெற வேண்டும். ஒரே ஒருமைப்பாட்டுக்குக் கீழ் நாட்டு மக்களை கொண்டுவர வேண்டும் என்பதுதான்.
ஆகவே சுயநோக்கங்களும், இனவெறியும் நிரம்பி இருந்த அக்காலத்தில் எங்கும் காணப்படாத மன்னித்தல், பெருந்தன்மையுடன் நடத்தல், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சட்டங்களை நபி (ஸல்) அமைத்தார்கள்.
எதிரிகளிடம் கூட நல்லுறவு பேணியவர்கள் நபியவர்கள்.தமது சிறிய தந்தை ஹம்ஸா(ரலி) அவர்களை கொன்று இதயத்தை பிளந்து ஈரலை வாயில் வைத்து கடித்து துப்பிய அபூசுப்யான்(ரலி)அவர்களின் மனைவியான ஹிந்தாவையும் மன்னித்து சகோதரத்துவம் கண்டவர்கள் நபியவர்கள்.
அதனால் தான் ஹிந்தாவை போன்ற எத்தனையோ சகோதர சமூகத்து மக்கள் இஸ்லாம் நோக்கி தங்களின் வாழ்வை அமைத்துக் கொண்டனர்.
நமது இறைநம்பிக்கையில் அதிகாரம் செலுத்தாதவரை நமக்கு யாரும் எதிரிகள் இல்லை என்பதை உள்ளத்தில் வைத்து எல்லோரிடமும் அன்பு பாராட்டினால் எதிரிகளும் நமது நாளைய சகோதரர்களே!
கீழை ஜஹாங்கீர் அரூஸி
jahangeerh328@gmail.com

News

Read Previous

லாரி மோதி பள்ளி மாணவர் காயம்

Read Next

செயற்கை சுவாசத்தால் உயிர் வாழும் உலகின் முதல் குழந்தை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *