சிங்கப்பூரில் இந்தியாவுக்கு வெளியே இந்தியர்கள் நடத்தும் மாபெரும் இஃப்தார் நிகழ்வு!

Vinkmag ad

singai iftarசிங்கப்பூரில் இந்தியாவுக்கு வெளியே இந்தியர்கள் நடத்தும் மாபெரும் இஃப்தார் நிகழ்வு!

(மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் பயண இலக்கிய பதிவு)

உலகின் வளம் வாய்ந்த தீவு தேசமாக திகழ்கிறது சிங்கப்பூர் .

ஒரு மீன் பிடி பிரதேசமாகவும், சதுப்பு நில பூமியாகவும் இருந்த தீவை, உலகம் மதிக்கும் பொருளாதார தேசமாக மாற்றியதில் , சிங்கையின் தந்தை லீக் வான் யூ அவர்களின் பங்களிப்பு முதன்மையானது.

பல்வேறு இனங்களும், மதங்களும் வாழும் சிங்கப்பூரில், மக்களிடையே இணக்கத்தையும், சுமூகத்தையும் உருவாக்கியதில் சிங்கப்பூர் அரசு உலகிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது.லீக் வான் யூ அவர்களின் கனவும் இதுதான்.

இங்கு சீனப் பெருநாள், ரமலான் பண்டிகை, தீபாவளி, ஆகியவை அரசு ஆதரவுடன் கொண்டாடப்படுகிறது. அப்போது அரசு அலுவலகங்கள் விழா கோலமாக இருக்கும்.

அது போல , இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி சிங்கப்பூர் முழுக்க 1 மாதம் உற்சாகமாக நடைபெறுகிறது.பல்வேறு அமைப்புகளும் இதை முன்னெடுக்கின்றன.

அதில் குறிப்பாக ‘IMSSA’ என்ற அமைப்பு பிரம்மாண்ட மக்கள் திரளுடன் இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

இன்று (மே 12) சிங்கப்பூரின் ஈசூன் பகுதியில் நடைப்பெற்ற இஃப்தாருக்கு ,புதிய நிலா ஆசிரியர் அண்ணன் ஜஹாங்கீர் மூலம் அழைப்பு வந்தது.

அவருடன், FIM தலைவர் நாகூர் கவுஸ், சகோதரர்கள் பிலால், ஃபாரூக்,கீழக்கரை நிஜாம் காக்கா,நெளதா, பிஸ்மில்லா கான், ஜெமில் ஆகியோரோடு சென்றேன்.

அந்த அமைப்பின் தலைமை செயல் நிர்வாகி ஹஜ்ரத் ஷேக் அலி பாகவி அவர்கள் எங்களை வரவேற்று அமர வைத்தார். இவர்தான் இந்த அமைப்பின் மூளை என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பூர்வீகம் தென்காசியாகும்.

இந்நிகழ்வில் சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம், நாடாளுமன்ற செயலாளர் பைசல் இப்ராகிம், மற்றும் பிற நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருந்தனர். அமைச்சர் சண்முகத்திடம் என்னை அண்ணன் ஜஹாங்கீர் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.

அவர் எல்லோரோடும் அளவளாவினார்.

அங்கு நேரம் போகப் போக மக்கள் கூட்டம் பெருகிக் கொண்டே இருந்தது.

பெரும்பாலும் பெண்களே இங்கு செயல் வீராங்கணைகளாக திகழ்வதை பார்க்க முடிந்தது. அதுவும் பல்கலைக்கழகங்கள், பள்ளிகளில் படிக்கும் பெண்களே அதிகம் என்பது ஒரு ஆச்சர்யம். இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கில் தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.

இஃப்தார் நிகழ்வுக்கான உணவு தயாரிப்புகளை இவர்களே முன்னின்று தயாரித்து தங்கள் உழைப்பை வெளிக்காட்டுகிறார்கள். கேட்காமலேயே இவர்களுக்கு ஸ்பான்ஸர்கள் கிடைக்கிறார்கள். இதுவெல்லாம் இந்த அமைப்பின் மீது மக்கள் காட்டும் நன்மதிப்பை வெளிக்காட்டுகின்றன.

அதனால் தான் இவர்கள் நடத்தும் இஃப்தாரில் மட்டுமே , வட்டார பேதங்களை கடந்து மக்கள் குடும்பம், குடும்பமாக திரள்கிறார்கள் என பலரும் கூறுகிறார்கள்.

அதுபோல,பெளத்த,இந்து, கிரித்தவ சமூக மக்களும் இந்நிகழ்வுக்கு வருகை தருவது ஒரு சிறப்பாகும். இந்த நல்லிணக்க நிகழ்வை போற்றும் வகையில் சிங்கப்பூர் அரசு இந்த அமைப்பை விருது கொடுத்து ஊக்கப்படுத்தியிருக்கிறது.

இது பற்றி எனக்கருகில் அமர்ந்து இருந்த, ஸ்ரீ நாராயணா மிஷனின் தலைமை நிர்வாகி தேவேந்திரன் அவர்கள் என்னிடம் ” இது தான் சிங்கப்பூரின் பொக்கிஷம் ” என்றார். இப்படி ஏராளமானோர் இந்நிகழ்வுகளில் உற்சாகமாக பங்கேற்கிறார்கள்.

நான் பல நாடுகளில் இஃப்தார் நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறேன்.

இந்தியாவுக்கு வெளியே , இந்தியர்கள் நடத்தும் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு இதுதான் ஆகும்.

இன்று ஆண்கள், பெண்கள் என சுமார் 3500 பேர் பங்கேற்றதாக தெரிவித்தனர். ரமலானில் ஞாயிறு தோறும் பல்வேறு பகுதிகளில் இது போல் பிரம்மாண்ட மக்கள் திரளுடன் கூடிய நல்லிணக்க இஃப்தார் நிகழ்வுகளை IMSSA அமைப்பு நடத்துவது குறிப்பிடத்தக்கது.

எல்லா அமைப்புகளையும் அழைத்து , எல்லோரும் பாராட்டும் வகையில் நிகழ்ச்சி நடத்துவது இவர்களின் சிறப்பாகும்.

நான் அங்கு போனபோது, நிறைய நண்பர்களையும் சந்திக்கும் வாய்ப்பாகவும் இந்நிகழ்வு அமைந்தது. அது எனக்கு தனிப்பட்ட வகையிலும் மகிழ்ச்சியாக இருந்தது.

சிங்கப்பூரில் பலருக்கு இது ஒன்று கூடலாகவும், பரஸ்பர சந்திப்புக்கான தளமாகவும் இருக்கிறது என்பதையும் பார்க்க முடிந்தது.

ரத்த தானம் வழங்குதல் , மத, இன சார்பற்று எல்லோருக்கும் உதவுதல் , பொது சேவையை ஊக்குவித்தல், பெண்களை சமூக ஊழியர்களாக உருவாக்குதல் என இந்த அமைப்பில் பணிகள் பாராட்டுக்குரியவையாக இருக்கிறது.

இந்நிகழ்ச்சி முடிந்து மக்கள் களைவதற்கே நீண்ட நேரமானதையும் பார்க்க முடிந்தது.

ஒரு நல்ல முன்மாதிரி முயற்சி என்ற வகையில் மனதார இவர்களை பாராட்டுவோம்.

News

Read Previous

த்தூ..

Read Next

மலேசியாவில் தமிழர்கள் கட்டிய அழகிய பள்ளிவாசல்!

Leave a Reply

Your email address will not be published.