மலேசியாவில் தமிழர்கள் கட்டிய அழகிய பள்ளிவாசல்!

Vinkmag ad

malay masjidமலேசியாவில் தமிழர்கள் கட்டிய அழகிய பள்ளிவாசல்!

( மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் பயண இலக்கிய பதிவு)

கடல் வணிகத்தில் கொடி கட்டி பறந்த சமூகம் ஒன்றின் வரலாற்று செய்தி இது.

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட முஸ்லிம்கள், தாங்கள் பயணித்த இடங்களில் எல்லாம் தமிழை வளர்த்தனர். அத்துடன் மார்க்க பணிகளையும் முன்னெடுத்தனர்.

தமிழ் பத்திரிக்கைகள் தொடங்கியது, அந்நிய நாட்டில் தங்கள் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைத்தது, தமிழ் அறிஞர்களை வரவழைத்து தமிழ் நிகழ்ச்சிகளை நடத்தியது என அவர்கள் ஆற்றிய தமிழ் தொண்டு சிறப்பானது.

அது போலவே தங்களின் இறைக்கொள்கையையும் போற்றி பாதுகாத்தனர்.

அன்று தமிழத்திலிருந்து செல்பவர்களுக்கு ,தென்கிழக்காசியாவின் நுழைவாயிலாக மலேஷியா வின் பினாங்கு தீவு திகழ்ந்தது.

அங்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் போன்ற டெல்டா மாவட்ட முஸ்லிம்கள் மிகப் பெரும் வணிகர்களாக செல்வாக்கு பெற்றிருந்தனர்.

அவர்கள் தொழுவதற்காகவும், தமிழில் சொற்பொழிவுகளை நடத்துவதற்காகவும் ஒரு பள்ளிவாசலை பினாங்கு தீவின் துறைமுகத்தை ஒட்டி எழுப்பினர்.

18 ஏக்கர் பரப்பளவில் இடம் வாங்கப்பட்டு,1801 ல் இப்பள்ளி கட்டி முடிக்கப்பட்டது. இது கப்பித்தான் பள்ளி என அழைக்கப்படுகிறது.

அன்றைய பினாங்கு கவர்னர் ஜார்ஜ் எலைட் உதவியுடன் , காதர் மெய்தின் மரைக்காயர் தலைமையில் இப்பணிகள் நிறைவுற்றது. இவரது பூர்வீகம் பரங்கிப்பேட்டையாகும்.

தூர நோக்கோடு,இதன் வருவாய்க்காக சுற்றிலும் குடியிருப்புகளும் , வணிக வளாகங்களும் கட்டப்பட்டது.

மூன்று பிரதான நுழைவாயில்கள், அழகிய மினரா, மூன்று குவி மாடங்கள், அழகிய உள்கட்டமைப்பு என பள்ளி அழகுற காட்சியளிக்கிறது.

ஒரு நீர் தடாகம்,இரண்டு கிணறுகள் , முன்புறம் ஒரு தோட்டம் என காட்சியளிக்கும் இப்பள்ளியை காண தினமும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணமுள்ளனர்.

முன்னாள் இந்திய ஜனாதிபதி மேன்மைமிகு அப்துல் கலாம் அவர்கள் இப் பள்ளிக்கு வருகை தந்து, ஒரு ரோஜா செடியை நட்டுள்ளார். அச்செடி அவர் பெயர் தாங்கிய கல்வெட்டுடன் காட்சியளிக்கிறது.

இவ்வளாகத்தில் ஒரு சமுதாய கூடமும் உள்ளது. இங்கு சனி, ஞாயிறுகளில் திருமணங்கள் நடைபெறுகின்றன. தமிழக முஸ்லிம்களின் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

வருடந்தோறும் இங்கு தொடங்கும் மீலாது அமைதி பேரணியில் 7ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை கூடுகிறார்கள். அது தமிழ் பேசும் முஸ்லிம்கள் தென்கிழக்காசியாவில் ஒன்று கூடும் மிகப் பெரும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், காரைக்கால், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, கடையநல்லூர், தென்காசி பகுதிகளை சேர்ந்தவர்கள் இதனை சுற்றி வாழ்கின்றனர்.

சோழர் ஆட்சி செய்த பகுதியில் இருந்து , அதாவது நாகப்பட்டினம் துறைமுகம் வழியாக வந்தவர்கள் என்பதால், இவர்கள் குடியிருந்த வீதி சூலியா தெரு என அழைக்கப்படுகிறது.

நகைக் கடைகள், நாணயமாற்று கடைகள், உணவகங்கள், மளிகை கடைகள், கப்பல் வணிகம்,என இவர்களின் வணிக ஆளுமைகள் இப்பள்ளியை சுற்றியே இருக்கிறது.

தமிழர்களின் சந்தையான லிட்டில் இந்தியாவும் இதன் அருகே தான் உள்ளது.

இப்பள்ளியிலிருந்து கூப்பிடும் தொலைவில் தான் ,செட்டியார் சமூக மக்கள் கட்டிய மாரியம்மன் கோயிலும் சிறப்புற இயங்கி கொண்டிருக்கிறது.

அக்காலத்திலேயே தமிழகத்திலிருந்து சென்றவர்கள் அருகருகே வழிபாட்டுத் தலங்களை கட்டி ,தங்கள் இன ஒற்றுமையை வெளிக்காட்டியுள்ளதை இதன் மூலம் புரிய முடிகிறது.

நான் மஹ்ரிப் தொழுகைக்கு சென்றப் போது, ரமலானை முன்னிட்டு இப்பள்ளி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அந்தி சாயும் இனிய மாலைப் பொழுதில் , ஒளி வெள்ளத்தில் அந்தப் பள்ளிவாசல் புராதான கலையுடன் காட்சியளித்தது. அந்த மனம் மயங்கும் சூழலில் இப்படம் எடுக்கப்பட்டது.

பினாங்கு தீவு என்பது அமைதி, சுற்றுலா,சுவையான உணவு ஆகியவற்றுக்கு பெயர் போனது. அதன் சிறப்புகளில் இப்பள்ளியும் ஒன்று, பார்க்கும் அனைவரையும் ஈர்க்கிறது.

இப்பள்ளி கட்டிய பிறகு தான், மலேஷியாவின் பிற பகுதிகளில் கோலாலம்பூர், மலாக்கா, கெடா, ஈப்போ, கில்லாங், ஜொஹர் போன்ற இடங்களில் தமிழக மக்கள் பள்ளிவாசல்களை கட்டினர்.

மலேஷியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் தமிழர்கள் கட்டிய பள்ளிகளுக்கு இதுதான் முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது.

News

Read Previous

சிங்கப்பூரில் இந்தியாவுக்கு வெளியே இந்தியர்கள் நடத்தும் மாபெரும் இஃப்தார் நிகழ்வு!

Read Next

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *