த்தூ..

Vinkmag ad

த்தூ..

 

னையோலை காலத்தை

தமிழாலே நெய்தோரே,

ஒரு பிடி தமிழள்ளி

உயிர்வரைக் குடித்தோரே;

பசுமாட்டு சாணந் தட்டி

பசி நெருப்பை தணித்தோரே,

சுரைக்காயில் சட்டிசெய்து

சம தர்மத்தை அளந்தோரே;

மரத்திலும் நதியிலும்

இறையச்சம் கண்டோரே,

கும்பிட்டப் படையலையும்

நான்கு காகத்தோடு தின்றோரே;

உண்மைக்கும் வீரத்திற்கும் உயிரை

நன்றியோடு தந்தோரே,

அன்பென்றும் காதலென்றும் சொல்லி

அறத்தால் உயர்ந்தோரே;

எங்கே தொலைத்தீர்

யாரிடம் விற்றீரையா உம்மை ?

எங்கே காற்றில் போனதோ உங்கள்

மாண்பும் அறிவும் அறமும் ?

இருப்பது ஓருடல் ஓருயிர்

அதை சாதியால் பிரிப்பீரோ ?

மதத்தால் பிரிந்து

பின் மனிதத்தைக் கொல்வீரோ?

மானுடம் வெறுக்குதய்யா..

மனசு வலிக்குதய்யா..

ஐயோ; நெஞ்சு பதைக்குதய்யா

நித்தம் மரணம் மரணம் உயிர்கள் துடிக்குதய்யா..

எக்குலம் உன் குலம்

இன்று இரத்தக் குளம் ஆகலாமா?

எம் மொழி எவ்வினம் நீ

சாதி பார்த்து சாகலாமா?

ஓங்கி ஓங்கி வெட்டுகிறாய்

நீ கால காலத்தின் நீதிக்கு முப்பாட்டன் அறிவாயோ?

நீண்டு நீண்டு முடியா வரலாறு

அதை நீ ஒற்றைச் சாதிக்குள் அடைப்பாயோ?

அடித்தாலே வலிக்கிறதே; நீ அறுக்கிறாயே?

பொறுக்குமா நெஞ்சம்??

உயிரோடு புதைக்கிறாயே எரிக்கிறாயே

சகிக்குமா தாய்மை யுள்ளம் ??

ஆணென்றும் பாராமல்

பெண்ணென்றும் கூசாமல்,

குழந்தை கிழத்தைக் கூட

கொள்ளுதையா உன் சாதி;

மனிதத்தையும் மதிக்காமல்

சமையத்தையும் நினைக்காமல்

கடவுளின் பேர் சொல்லி

கொன்று குவிக்குதையா உம் மதம்;

சுட்டு சுட்டு வீழ்த்துவாய்

எல்லாம் வீழ்ந்தபின் நாளை

சுடுகாட்டில் அமர்ந்து அழுதால் –

அடங்கிவிடுமா உனது சாதி வெறி ? மத வெறி?

இருப்பவர் சிரிப்பவர் போனபின்

எஞ்சிய பிணக்காட்டில் நாளை

யாரைக்கண்டு அணைப்பாய்

எதன் வழி நாளை பிறப்பாய் ?

காரியுமிழ்கிறது உன் பிறப்பு

உன் பிணத்தின் மீதும் முகத்தின் மீதும்

த்தூ..!!!

தூக்கிக்கொண்டு ஓடு உன் கோபத்தை

நீயில்லா தெருக்களில் மீண்டும் பிறக்கட்டும்

சாதியின்றி மதமின்றி அந்த

பனையோலைக் காலத்தை தமிழாலே நெய்தவர்கள்!!

——————————————————————

வித்யாசாகர்

News

Read Previous

பயம்

Read Next

சிங்கப்பூரில் இந்தியாவுக்கு வெளியே இந்தியர்கள் நடத்தும் மாபெரும் இஃப்தார் நிகழ்வு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *