வாழ்த்த வயதில்லாதவர்கள் வணங்கலாமா?

Vinkmag ad
அண்மைக் காலமாக அரசியல் கட்சிக்காரர்கள் தங்களுடைய தலைவர்களின் விசேட நாள்களில் அவர்களுக்கு மரியாதை செய்வதாகக் குறிப்பிட்டு ‘வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்’ என்று விளம்பரங்களின் மூலம் தெரிவிக்கிறார்கள். பல்வேறு வகைகளில் பலதெய்வ வணக்கக்காரர்கள் பத்தோடு பதினொன்றாக வணங்குவது பற்றி நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை.  
ஆனால் ஏக தெய்வ வணக்கமுள்ள, ஒரே இறைவனை மட்டுமே வழிபட வேண்டிய முஸ்லிம் பெயருள்ளவர்கள் இப்படி ‘வணங்குவது’  பெரிய பாதகமாகும். ஈமான் கொண்டு இறைவனை மட்டுமே வணங்கக் கடமைப்பட்டுள்ள முஸ்லிம்கள் இவ்வாறு வணங்குவதை விட்டுவிட்டு,  மற்றபடி தங்கள் தலைவர்களை வரம்புக்கு உட்பட்டுப் புகழ்வதில் தப்பில்லை. மேலும் நீண்ட காலமாக ‘இதய தெய்வம்’ என்ற ஒரு வார்த்தையையும் சில அறியாத முஸ்லிம்கள் சொல்லி வருவதுண்டு.  இதுவும் அறியாமையே.  
இதயத்துக்கு ஒரு தெய்வம், மனதுக்கு ஒரு தெய்வம், உடலுக்கு ஒரு தெய்வம் என்றெல்லாம் முஸ்லிம்கள் சொல்ல முடியாது. சொல்வது பெரிய அறியாமையாகும். இன்னும் முக்கியமான ஒரு கொடுமை, சிலர் சந்தர்ப்பம் வரும்போது கண்மூடித்தனமாக தங்கள் தலைவர்களின் சிலைகளுக்கு மாலைகள் அணிவிக்கிறார்கள். சிலைகளே கூடாது என்று கூறும் மார்க்கம் இஸ்லாம். ஆனால் இஸ்லாமியப் பெயர் உள்ள, ஈமானை சரியாக உணராதவர்கள் கட்சிகளில் ஈடுபட்டு சிலைக்கு மாலையிட்டு, குஃப்- ரியத்துக்கு(இறைநிராகரிப்புக்கு) ஆளாகிக் குற்றவாளியாக மாறி சமுதாயத்துக்கு இழுக்கை உண்டாக்கித் தங்களின் வாழ்நாளில் பெரிய நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள்.
பல ஊர்களில் இவ்வாறான தவறான பேர்கள் ஜமாஅத் – பள்ளிவாசல் பொறுப்புகளிலும் ஈடுபடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இது மகா வேதனை தரத்தக்கது. இவ்வாறான அறியாமையை நீக்க ஆங்காங்கே இருக்கும் மார்க்க சீலர்கள், ஆலிம்கள், இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கையை விளக்கி, அவர்களின் தவறான போக்கைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துவது நல்லது.
‘தமிழ்மாமணி’ பா.க.ஈ. அப்துல்லாஹ்
– நன்றி; சமரசம்  

News

Read Previous

தேர்தல் ஆணையத்தின் தெளிவான தீர்ப்பு! – பேரா. கே.எம்.கே.

Read Next

சென்னையில் ”கையருகே நிலா” நூல் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published.