ரமழானை உணர்வோம்! ரைய்யானில் நுழைவோம்!!

Vinkmag ad

 

புண்ணியம் பூத்துக் குலுங்கும் ரமழான் திங்களை வரவேற்றுள்ள நம்முடைய மனதோடு நாம் ஓரிரு நிமிடங்கள் தனிமையில் கண்ணை மூடிக்கொண்டு சிந்திப்போமானால் நமது குறைகளை நாமே உணர்ந்திட முடியும். அதனால் இறைவனிடம் பாவமன்னிப்பு வேண்டியவர்களாக நம்முடைய செயல்களை செம்மையாக்கிடவும் முடியும்.

«அல்லாஹ்வால் அருள்மறை அருளப்பட்ட மாதம் ரமழான்.

«சத்தியத்திற்காக போரிட அனுமதி இருப்பினும் அது தடை செய்யப்பட்ட மாதம் ரமழான்.

«சுவனத்தின் வாயில்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கும் மாதம் ரமழான்.

«நரகத்தின் வாயில்கள் அடைக்கப்பட்டிருக்கும் மாதம் ரமழான்.

«இப்லீஸ் விலங்கிடப் பட்டிருக்கும் மாதம் ரமழான்.

«ஒரு நற்காரியத்திற்கு பலமடங்கு நன்மை தரப்படும் மாதம் ரமழான்.

«ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க “லைலதுல் கத்ர்” எனும் கனதிமிகும் ஒரு இரவை கொண்ட மாதம் ரமழான்.

இப்படி பல்வேறு பாக்கியங்கள் நிறைந்த ரமழான் மாதத்தில் நமது செயல்பாடுகளை சீர்துாக்கிப் பார்த்து சரிசெய்து கொள்வது நம் ஒவ்வொருவர் மீதும் பொறுப்பாகும்.

இஸ்லாத்தின் மீது திணிக்கப்பட்ட முதல் போரான “பத்ர் யுத்தம்” என்பது ஹிஜ்ரி இரண்டாம் வருடம் ரமழான் பதினேழாம் நாள் நடைபெற்றது. அவ்வமயம் தற்காப்புப் படை நடத்த வேண்டிய போர் நிலைக்கு தள்ளப்பட்ட நபி(ஸல்) அவர்களும் நபிமணித் தோழர்களும் ஈமானின் உறுதிக் கொண்டு ஆற்றியத் தியாகங்களை நினைவிற் கொண்டு நாம் சிந்திக்க வேண்டும்.

அவர்கள் ஆள் பலமும் ஆயுத பலமும் அற்றவர்களாய் – நோன்பு நோற்றவர்களாய் அந்த போர்களம் காண நேரிட்டது. பதிநான்கு சஹாபாக்கள் “ஷஹீது”களாக ஆக்கப்பட்டனர். தொழுது “சுஜுது” எனும் சிரம் பணிந்து நெக்குருக நெஞ்சமுருக நபி (ஸல்) அவர்கள் கேட்ட துஆக்களினால் முஸ்லிம்களை வெற்றியின் வசந்தத்தை அல்லாஹ் நுகரச் செய்தான்.அன்றைய அந்த வெற்றியால் நாமோ இன்றைய முஸ்லிம்கள் .. இல்லையா! அல்ஹம்து லில்லாஹ்.

ஆனால் எப்போதும் எதிலும் அலட்சியத்தில் இருக்கும் நாம் புனித ரமழானிலும் அலட்சியமாக இருக்கலாமா? அறவே கூடாது. இபாதத்களை அதிகப்படுத்துவதும் சொல் செயல் யாவற்றிலும் பேணிக்கையாக இருப்பதுமே  ரமழானுக்கு நாம் செலுத்துகின்ற கண்ணியமாகும்.

இனிய நெஞ்சங்களே!

1.அமைதியுடனும் அளப்பெரிய பொறுமையுடனும் இருங்கள். கோபதாபங்களுக்கு ஆட்படாதீர்கள்.

2.குர்ஆனை அதிகமதிகம் ஓதிக் கொண்டே இருங்கள். தர்மங்களை தாராளமாக செய்யுங்கள். உற்றார் உறவினர்களோடு இணக்கமாக வாழ்ந்து – அவர்களின் தேவைகளை கேட்டறிந்து நிவர்த்தி பண்ணுங்கள்.

3.தொலைக்காட்சி அலைபேசி மற்றும் வலை தளங்களில் நேரத்தை வீணடிக்காதீர்கள். சஹர் நேர சமுதாய நிகழ்ச்சிகள் ஆயினும் அவைகளை பார்க்காதீர்கள். வரலாறுகள் சட்டங்கள் போதனைகள் எவையாயினும் அவைகளை கேட்பதற்கு சஹர் நேரம் பொருத்தமற்றது என்பதை உணருங்கள்.

4. மன அமைதியான அந்த சஹர் நேரத்தில் “தஹஜ்ஜத்” தொழுவுதல் “இஸ்திஃபார்” மற்றும் துஆக்களில் மனதை இலயிக்க விட்டு இறைவனோடு உரையாடுங்கள்.

5. ரமழானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் ரஹ்மத் எனும் அருள்மாரி பொழிகின்ற அற்புதத் தினங்கள்.

“அல்லாஹும் மர்ஹம்னா பி(bi) ரஹ்மதிக”

(அல்லாஹ்வே! உன்னருளால் எங்களுக்கு கிருபை செய்வாயாக!!)

 

இரண்டாம் பத்து நாட்கள் அல்லாஹ்வால் மன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு பாவங்கள் தொலைகின்ற புண்ணியத் தினங்கள்.

“அல்லாஹும் மஃபிர்லனா துனுாபனா வ கதாயானா”

(அல்லாஹ்வே! எங்கள் பாவங்களையும் பிழைகளையும்  மன்னித்தருள்!!)

 

மூன்றாம் பத்து நாட்கள் நாசகார நரகத்தில் இருந்து பாதுகாவல் பெறுகின்ற பாக்கியத் தினங்கள்.

“அல்லாஹும் மஃதிக்னா மினன் நார் –

வ அத்கில்னல் ஜன்னத யா ரப்பல் ஆலமீன்”

(அல்லாஹ்வே! நரகில் இருந்து எங்களை பாதுகாப்பாயாக! மேலும் சுவனத்தில் எங்களை நுழையச் செய்வாயாக!!)

 

இப்படி இறைவனிடம் இறைஞ்சிடும் வார்த்தைகளையே நமது வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்கட்டும்.

மேலும் நம்மிடம் எவரேனும் தேவையற்ற பேச்சுக்கள் பேசினாலும் கேலி கிண்டல் நையாண்டித்தனம் புரிந்தாலும் அவைகளை கவனத்தில் கொள்ளாமல் “அல்லாஹும்ம இன்னீ சாயிம்” (அல்லாஹ்வே! நிச்சயமாக நானொரு நோன்பாளி) என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

ரமழானின் மகத்துவத்தை உணர்ந்து நோன்பை பேணிக்கையுடன் கடைபிடிப்பதால் அல்லாஹ்வுக்காக ஐம்புலன்களையும் அடக்கியாளும் ஒரு உன்னத பயிற்சியை இதனால் நாம் இங்கு பெற்றுக் கொள்ள முடியும். முறையாக நோன்பை நோற்பதின் மூலம் மறுமையிலும் “ரைய்யான்” எனும் நோன்பாளிகளுக்கான சொர்க்கத்தின் விசேட நுழைவில் சென்று மகிழுற முடியும்.

இவ்வாறு மனம் மொழி மெய் ஆகியவற்றை நாம் பாதுகாத்து கொள்ளும் பட்சத்தில் “ஈமான்” எனும் நம்பிக்கை நம்முடைய உள்ளக் கிடங்கில் நிறைந்து நிற்கின்ற நிலைமையை பெற்று விடும். அதற்குப் பிறகென்ன? சொல்லும் செயலும் நன்மையை நோக்கியே நம்மை இழுத்துச் செல்லும்.

நபிமணி (ஸல்) நவின்றார்கள்..

“நம்பிக்கை கொண்டு நன்மையை எதிர்பார்த்து ரமழான் நோன்பு நோற்பவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப் படும்.”

(அபூஹுரைரா (ரழி) .. “புகாரி”)

நீடித்த வாழ்நாளையும் நிறைவான சுகத்தையும் நிம்மதியான செல்வத்தையும் நம்மனைவருக்கும் அல்லாஹ் நல்கிடுவானாக!

 

தங்கள் துஆவை நாடும்

என்டி.முஹம்மது இஸ்மாயீல் புகாரி

“தாருல் முஸ்தகீம்”

காயல்பட்டணம்.

 

 yentyads@gmail.com

News

Read Previous

மறுமையை மறக்கலாகுமா?

Read Next

கோடையும் வாடையும்

Leave a Reply

Your email address will not be published.