கோடையும் வாடையும்

Vinkmag ad

திருச்சி – A. முஹம்மது அபுதாஹிர்

கொளுத்துகின்ற
கோடை வெயில்
கொடுமையானது !
அதனை விட
வரதட்சணையால்
பல பெண்கள்
உயிரோடு கொளுத்தப்பட்டது
கொடுமையானது !

வசந்த காலத்தின்
தென்றலைப் பார்க்க
ஆசைப்பட்டவர்கள்
வரதட்சணை தீயின்
வாடைக் காற்றில்
வாடி வருகிறார்கள் !

மே, ஜூன், ஜூலை வாடைகாற்று
உடலெல்லாம்
வியர்த்து விட்டது !
வரதட்சணைக் கோடையால்
மேனியெல்லாம் தீ ஜூவாலை
சகோதரிகள் பலரின் உயிரை
கரித்து விட்டது !

எத்தனை டிகிரி
வெயிலடித்தடித்தாலும்
அது குறைவானதுதான் !
படித்த டிகிரிக்கு
வரதட்சணை வாங்குவதுதான்
மிகவும் மோசமானது !

கோடையின்
கத்திரி வெயில் அடித்தது !
அனலால்
வீட்டில் இருக்க முடியவில்லை
எங்கள்
புத்திரிக்கு திருமணம் நடந்தது
வரதட்சணையால்
வீட்டை விற்காமல் இருக்கமுடியவில்லை !

அறுபது டிகிரி
வெயிலடித்தால்
குளிர் பானத்தை குடிக்கலாம் !
அறுபது பவுன்
வரதட்சணை கொடுத்தால்
பணத்துக்கு எங்கே போவது !

கோடையில்
குளிர்ச்சிக்கு
ஊட்டிக்கு போகிறார்கள்
வரதட்சணையால்
வீட்டையே விற்றவர்கள்
வசிக்க எங்கே போவார்கள் !

மகனுக்கு
நிலாவைக் காட்டும்
அன்பான அம்மாக்கள்
மாமியாராகும் போது
மருமகளுக்கு
சூரியனாகி விடுகிறார்கள் !
தாய் பேச்சை
கேட்காத பிள்ளைகளும்
வரதட்சணை என்று வரும் போது
வாய் மூடி விடுகிறார்கள் !

பாலையில்
கானல் நீர் அங்கே !
ஆம் அங்கே நீரில்லை
கல்யாணத்தில்
பெண்ணைப் பெற்றவர்கள்
சிரிக்கிறார்கள்
ஆனால்
அவர்களுக்குள்
சிரமங்கள் மறைந்திருக்கிறது

கோடை மழை
இன்று வரும்
வானிலை அறிக்கையில்
உள்ளம் குளிர்ந்தது !
கொடுமையான
இந்நிலை என்று மாறும்
உள்ளம் கொதிக்கிறது !

கோடையின்
வாடை !
காய்ந்து போகும்
இலை !
மயக்கம் தலைவலி
என்ற நிலை – அவை
கொடியதல்ல
வரதட்சணையைவிட !

பெண் சிசுக்கொலை
இளம் பெண்களின்
தற்கொலை !
கணவன், மாமியார்
செய்யும் படுகொலை
கொடியது மட்டுமல்ல
கோடையை விட !
கொதிக்கும் கோடையின்
அக்கினியின் கொடுமையை
குளிர்பானம் குடித்து
தணித்து விடலாம் !
சகோதரா
கொதித்தெழு – இந்த
அக்கிரமத்தை எதிர்த்து நீ
எப்போது குரல் கொடுப்பாய்?
நீ மனம் வைத்தால்
தடுத்து விடலாம் !

admin

Read Previous

ரமழானை உணர்வோம்! ரைய்யானில் நுழைவோம்!!

Read Next

மகாகவி பாரதியார் வரலாறு

Leave a Reply

Your email address will not be published.