நபிகளாரின் பொன்மொழிகள்

Vinkmag ad

அறிவோம் இஸ்லாம்
பாத்திமா மைந்தன்
6. நபிகளாரின் பொன்மொழிகள்
இஸ்லாமிய நெறிமுறையில் இறைவனுடைய அருள் வேதமாகிய திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாக நபிகளாரின் பொன்மொழித் தொகுப்பாகிய ‘ஹதீஸ்’கள் மதிக்கப்படுகின்றன.
‘ஹதீஸ்’ என்பது ‘ஹதஸ்’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்த சொல்லாகும். ‘ஹதீஸ்’ என்றால் உரை, உரையாடல், நிகழ்ச்சி, புதிய செய்தி எனப் பொருள்படும்.
‘ஹதீஸ்’ என்பது இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம், உடற்கூறு, குணநலன்கள் ஆகியவற்றையே குறிக்கும்.
‘மனிதர்களே! அகிலங்களுக்கு ஓர் அருட்கொடையாக நீங்கள் நேர்வழி பெறுவதற்காக என்னுடைய இறுதித் தூதரை நான் அனுப்பி விட்டேன். உங்களின் இம்மை வெற்றியும், மறுமை ஈடேற்றமும் இந்த இறுதித் தூதரைப் பின்பற்றுவதில்தான் அடங்கி உள்ளது’ என்று திருமறையில் இறைவன் பல்வேறு இடங்களில் சுட்டிக் காட்டுகின்றான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இளமை பருவத்திலேயே நற்பண்புகளின் தாயகமாகத் திகழ்ந்தார்கள். மனிதர்கள் அனைவருக்கும் அவர்கள் ஓர் அழகிய முன்மாதிரியாக விளங்கினார்கள்.
‘நபியே! நிச்சயமாக நீர் மகத்தான நற்குணம் உடையவராகவே இருக்கின்றீர்’ (68:4) என்று திருமறையில் இறைவன் சான்று பகர்கின்றான்.
‘நற்குணங்களை பரிபூரணப்படுத்தவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்’ என்பது நபிமொழி.
இறைத்தூதராக நியமிக்கப்பட்ட அந்த நொடி முதல் நபிகளாரின் சொல்லும், செயலும் மிகக் கவனத்துடன் பதிவு செய்யப்பட்டன.
நபிகளார் நிகழ்த்திய உரைகள், அறிவுரைகள், ஏவிய செயல்கள், தடுத்த காரியங்கள் ஆகிய அனைத்தும் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்கின.
நம்மிடையே இன்று நூற்றுக்கணக்கான நபி மொழித் தொகுப்புகள் (ஹதீஸ்) புழக்கத்தில் இருந்தபோதிலும், நபிகளார் வாழ்ந்த காலத்தில் நபிமொழிகள் நூல் வடிவில் தொகுக்கப்படவில்லை. அதற்குக் காரணம் அப்போது விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் மிகச்சிலரே எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர். அவர்களும் திருக்குர்ஆனை எழுதும் பணியில் ஈடுபட வேண்டி இருந்தது.
பெரும்பாலான நபித்தோழர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்ததால் நபிகளாரிடம் கேட்ட, பார்த்த செய்திகள் அனைத்தையும் மனதில் பதிய வைத்துக் கொண்டனர்.
சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும், பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லவும் நபிகளார் வாழ்ந்து வந்ததால், ஹதீஸ்களை பதிவு செய்ய வேண்டும் என்ற கருத்து எழவில்லை.
நபிகளாரின் மறைவுக்குப் பிறகு லட்சக்கணக்கான ஹதீஸ்களை மனனம் செய்திருந்த நபித்தோழர்கள் பலர், மார்க்க அழைப்புப் பணிக்காகத் தொலைதூர நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். மேலும் பலர் அறப்போர்களில் ஈடுபட்டு உயிரிழந்தனர். இதனால் நபி மொழிகளை ஒன்று திரட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
உமர் (ரலி) அவர்களுக்கு நபிமொழிகளை நூல் வடிவில் தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. முந்தைய சமுதாயத்தார் பல்வேறு நூல்களை எழுதி அதிலேயே மூழ்கி இறைவேதத்தை மறந்து விட்டதை நினைத்து, அதுபோன்ற நிலை இச்சமுதாயத்திலும் உருவாகி விடக்கூடாது என்பதற்காக நபிமொழியைத் தொகுக்கும் பணியைத் தொடங்காமலேயே விட்டு விட்டார்கள்.
நபிகளார் காலத்திற்குப் பிறகு இஸ்லாம் வேகமாக பரவி வந்தது. இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு அதன் ஆழமான கொள்கைகளும், எல்லா வகையிலும் அது தனித்து விளங்கியதும்தான் காரணம் என்பதை இஸ்லாத்தின் எதிரிகள் கண்டு கொண்டனர். இஸ்லாத்திலும் அர்த்தமற்ற கருத்துகள் நிறைந்திருப்பதாக நிரூபித்தால், இஸ்லாத்தின் வளர்ச்சியை பெருமளவு கட்டுப்படுத்தி விடலாம் என்று அவர்கள் கனவு கண்டனர்.
திருக்குர்ஆனில் திரிபு வேலை செய்ய முடியாது என்பதால், நம்ப முடியாத கருத்துகளை நபிகளார் கூறியதாக பொய்யுரைகளை பரப்பலானார்கள். இதனால் உண்மையான ஹதீது எது? இடைச்செருகல் எது? என்பதை இனம் பிரித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் நபித்தோழர்களுக்கு ஏற்பட்டது.
நபிமொழியைத் தொகுக்கும் பணியில் முதன் முறையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர் கலீபா உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) ஆவார். இதன்படி நபிமொழிகளைத் தொகுக்கும் பணியை மதீனாவில் சுக்ரீ (ரஹ்) தொடங்கினார்.
இதைத் தொடர்ந்து ஆதாரபூர்வமான நபிமொழிகளைத் தொகுக்கும் பணியை இமாம் இஸ்மாயில் புகாரீ (ரஹ்) அவர்கள் தொடங்கினார்கள். இது நபிமொழி தான் என்பதை அவர்கள் முதலில் உறுதி செய்வார்கள். பிறகு அதைத் தமக்கு யார் சொன்னது? அவருக்கு யார் சொன்னது? அது உண்மைத் தன்மை உடையதுதானா என்பதைத் தீர விசாரித்தே பதிவு செய்தார்கள். அதனால்தான் அவர்கள் தொகுத்த நபிமொழித் தொகுப்பிற்கு ‘ஸஹீஹுல் புகாரி’ – ஆதாரபூர்வமான ஹதீஸ் என்ற பெயர் ஏற்பட்டது.
இமாம் புகாரீ அவர்களைப் பின்பற்றி இமாம் முஸ்லிம் பின் அல் ஹஜ்ஜாஜ் (ரஹ்), திர்மிதீ (ரஹ்), அபூ தாவூத் (ரஹ்), இப்னு மாஜா (ரஹ்), நஸயீ (ரஹ்) ஆகியோர் நபிமொழிகளைத் தொகுத்தனர்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட நபிமொழித் தொகுப்புகள் வெளி வந்தபோதிலும், மேற்கண்ட ஆறு நூல்கள் நம்பிக்கைக்குரிய, ஆதாரபூர்வமான நூல்கள் எனப் பொதுவாக மதிக்கப்படுகின்றன.
‘எனக்குப் பிறகு இறை மறை, என் வழிமுறை என்ற இரண்டையும் விட்டுச் செல்கிறேன். அவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டால் நீங்கள் வழி தவற மாட்டீர்கள்’ என்பது நபிமொழி.
(தொடரும்)

News

Read Previous

பேராசிரியர் தமிழண்ணல் மறைவு!

Read Next

புத்தாண்டு வாழ்த்து !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *