தொழுகை அறிவிப்பு

Vinkmag ad
அறிவோம் இஸ்லாம்
பாத்திமா மைந்தன்
11. தொழுகை  அறிவிப்பு
தொழுகை, இஸ்லாத்தின் பிரதான தூண். தொழுகை முஸ்லிமாகிய ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும்.
இறைவனை வணங்குவது, தொழுவது எல்லாம் மற்ற மதங்களில் தனி மனித விருப்பம் சார்ந்தது. ஆனால் வரையறுக்கப்பட்ட நேரங்களில் இறைவனைக் கட்டாயம் வணங்க வேண்டும் என்பதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.
தொழுவது எப்படி முக்கியமோ அதேபோல தொழுகின்ற நேரமும் முக்கியம். ‘நிச்சயமாக தொழுகையோ குறிப்பிட்ட நேரத்தில்  (தவறாமல்) நம்பிக்கையாளர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையாகவே இருக்கின்றது’ என்று திருக்குர்ஆன் (4:103) கூறுகிறது.
ஒவ்வொரு தொழுகை நேரத்திற்கும் தொடக்கமும் உண்டு; முடிவும் உண்டு. அதற்குள் தொழுது விட வேண்டும்.
இவ்வாறு இறை வழிபாட்டுக்கு நேரத்தைக் கற்பித்து, வாழ்க்கையில் நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை மனிதர்களுக்கு இறைவன் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.
தொழுகை தொடங்குவதற்கு முன்பாக அதற்கான தொழுகை அறிவிப்பு (‘பாங்கு’) செய்யப்படுகிறது.
‘தொழுகை அறிவிப்பு’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘அல் அதான்’ என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. இதற்கு ‘அறிவித்தல்’ என்று அர்த்தம்.
பார்சியன் மொழியில் ‘பாங்க்’ (ஒலி) என்பர். இதுவே தொழுகை அறிவிப்பை ‘பாங்கு’ என்று சொல்லும் வழக்கம் தமிழ் முஸ்லிம்களிடம் வந்து விட்டது.
தொழுகைக்கான அறிவிப்பு சுருக்கமாக இருந்தாலும், அதில் பொருள் செறிவும் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையும் இடம் பெறுவது சிறப்புக்குரியதாகும்.
அல்லாஹு அக்பர் (இறைவன் மிகப் பெரியவன்) – 2 முறை;
அஷ்ஹது அல் லாயிலாஹ இல்லலாஹ் (அவன் இணை துணையற்ற ஏகன்) -2 முறை;
அஷ்ஹது அன்ன முகம்மதர் ரசூல்லாஹ் (முகம்மது நபி இறைவனின் திருத்தூதர்) -2 முறை;
ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழுகைக்கு வாருங்கள்) -2 முறை;
ஹய்ய அலல் பலாஹ் (வெற்றியை நோக்கி வாருங்கள்) -2 முறை;
மீண்டும் அல்லாஹு அக்பர் -2 முறை;
லாயிலாஹ இல்லல்லாஹ்- ஒரு முறை.
அதிகாலை சுபுஹு தொழுகைக்கு அழைப்பு விடுக்கும்போது மட்டும், ‘அஸ்ஸலாத்து ஹைரும் மினன் நவ்ம்’ (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்ற வரிகளை 2 முறை கூற வேண்டும்.
தொழுகைக்கான அழைப்பின் நோக்கமே, அனைத்து இறை நம்பிக்கையாளர்களையும் ஒரே நேரத்தில் ஒன்று திரட்டி தொழச் செய்வதுதான்.
ஒவ்வொருவரும் தனக்காகத்தான் தொழுகிறார்கள். இருந்த போதிலும் அவர்களை ஒன்று கூடச் செய்வதன் நோக்கம், ஒரு சமூக ஒற்றுமை உருவாக்கமே.
ஒரு இமாமைப் பின்பற்றி தொழுவதே கூட்டுத் தொழுகை. இமாம் என்பதற்குத் ‘தலைவர்’ என்று அர்த்தம். முதன்மை பொறுப்பு வகிப்பவர்; கூட்டுத் தொழுகையை முன்னின்று நடத்துபவர்; வழிகாட்டி, முன்னோடி என்ற பொருளும் உண்டு.
ஒருவர் கடமையான தொழுகையைத் தனியாகத் தொழுவதை விட பலருடன் சேர்ந்து, இமாமைப் பின்பற்றிக் கூட்டாகத் தொழுவது பல மடங்கு சிறப்புக்குரியதும், மேலானதும் ஆகும். இதை ‘ஜமாத்துடன்’ தொழுவது என்பார்கள்.
“தனியாகத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும்” என்றும்,
‘ஜமாத்-கூட்டுத் தொழுகைக்காக அளிக்கப்படும் நன்மைகள் மக்களுக்குத் தெரியுமானால், அவர்களுக்கு ஆயிரக்கணக்கான நிர்பந்தங்கள் இருப்பினும் அதற்காக ஓடி ஓடி விரைந்து வந்து விடுவார்கள்’ என்றும் நபிகளார் கூறினார்கள்.
தொழுகையை பள்ளி வாசலிலும் தொழலாம்; மைதானத்திலும் நிறைவேற்றலாம்; வீட்டிலும் தொழலாம். நேரம் தவறாமல் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதே முக்கியமானது. இதனால்தான் ஓடும் ரெயிலிலும் சிலர் தொழுவதைப் பார்க்கிறோம்.
‘பூமி முழுவதும் தொழுமிடமாகவும், சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் ஆக்கப்பட்டுள்ளது. எனவே என் சமுதாயத்தாரில் யாருக்கேனும் தொழுகை(யின் நேரம்) வந்து விட்டால் (அவர் எந்த இடத்தில் இருக்கின்றாரோ அந்த இடத்தில்) தொழுது கொள்ளட்டும்’ என்று நபிகளார் நவின்றார்கள்.
இதே கருத்தை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த தத்துவமேதை டாக்டர் ராதாகிருஷ்ணன், ‘இந்த உலகம் முழுவதையும் வணங்கும் இடமாக இஸ்லாம் மாற்றி இருக்கிறது’ என்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேசியபோது கூறினார்.
எங்கு வேண்டுமானாலும் தொழலாம் என்ற போதிலும் பள்ளிவாசலில் ‘ஜமாத்துடன்’ தொழுவதே சிறந்தது.
‘ஆரம்ப தினத்திலேயே (அல்லாஹ்வின்) பயத்தின் மீது (பரிசுத்தமான எண்ணத்துடன்) அமைக்கப்பட்ட பள்ளி வாசல்தான் நீங்கள் நின்று தொழவும் (தொழ வைக்கவும்) மிகத்தகுதி உடையது’ (9:108) என்று திருமறை தெரிவிக்கிறது.

News

Read Previous

குடியரசு தினம் என்றால் என்ன? ஒரு பார்வை

Read Next

விழித்தெழட்டும் என் நாடு!

Leave a Reply

Your email address will not be published.