தொழுகையில் மிளிரும் சமத்துவம்

Vinkmag ad
தொழுகையில் மிளிரும் சமத்துவம்
இஸ்லாமியத் தொழுகையில் இன்னொரு சிறப்பும் உண்டு. பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதற்காகவும், அரபிப் பாடசாலைகளில் (மதரஸா) ஓதி கொடுப்பதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ள ‘இமாம்’கள் மட்டுமே தொழுகை நடத்திட வேண்டும் என்ற நியதி எதுவும் இல்லை.
தொழுகைக்காக வந்திருப்பவர்களில் ஒருவரை இமாமாக முன் நிறுத்தி அவரைப் பின்பற்றியும் தொழலாம். அவர் மார்க்க சட்ட திட்டங்களில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இறையச்சம் மிக்கவராய் இருத்தல் வேண்டும்.
ஜமாத்துடன்-கூட்டாகத் தொழும்போது வரிசையைச் சீராக வைத்துக் கொள்ள வேண்டும். தொழுகைக்கான வரிசை அணிவகுப்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தோளோடு தோள் சேர்ந்து இணைந்து நிற்க வேண்டும். இடைவெளி விட்டு விலகி நிற்கக் கூடாது.
இப்படிக் கட்டுப்பாட்டுடனும், ஒழுங்குடனும் அணிவகுத்து முஸ்லிம்கள் தொழும்போது அங்கே ஆண்டான்-அடிமை, ஏழை-பணக் காரன் என்ற பாகுபாடு இம்மியும் எழுவதில்லை. அனைவரும் தோளோடு தோள் உராய்ந்து நின்று தொழுது சமத்துவ, சகோதரத்துவ ஒற்றுமையை இதன் மூலம் உலகிற்கு உணர்த்துகிறார்கள்.
இந்தக் கூட்டுத் தொழுகையானது இனப்பாகுபாடு, சாதி வேறுபாடு மற்றும் மனிதர்களுக்கு இடையே உள்ள மனமாச்சரியங்களைக் களைகின்ற மாபெரும் தீர்வாக அமைந்துள்ளது.
கூட்டுத்தொழுகையானது கருத்திலும் செயலிலும் உள்ள ஒற்றுமை உணர்வு, இறை சன்னிதானத்தில் முஸ்லிம்கள் காட்டுகிற பணிவு, அவர்களுக்கிடையே உள்ள பிணைப்பு, கட்டுப்பாடு, ஒழுங்கு ஆகியவற்றை உணர்த்து கிற ஓர் அழகிய செயல்பாடாக அமைந்துள்ளது.
இறைச் சன்னிதானத்தில் அனைவரும் சமமே என்ற சமத்துவ பண்பாட்டை விதைக்கும் விளை நிலமாகத் திகழ்கிறது, தொழுகை.
தொழுகையில் நிமிர்ந்து நிற்பது, குனிவது, நெற்றியைத் தரையில் வைத்து வழிபடும் நிலை முதலிய பல நிலைகள் உள்ளன. தொழுகையின்போது நெற்றி, இரு உள்ளங்கைகள், இரு முழங்கால்கள், இரு கால்களின் விரல்கள் ஆகிய உறுப்புகள் தரையில்படும்படி செய்யப்படும் சிர வணக்கம் ‘சஜ்தா’ எனப்படும். இது இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய-செய்யக்கூடிய முறையாகும். இதனால்தான் இறைவனைத் தவிர வேறு யாரையும் தரையில் தலை படும்படி முஸ்லிம்கள் வணங்குவதில்லை.
தொழுகையின்போது தரையில் நெற்றி படும் நிலையில் (‘சஜ்தா’) என்ன சொல்ல வேண்டும் தெரியுமா?
‘சுப்ஹான ரப்பியல் அஃலா (வபிஹம்திஹி)’- இதற்கு, ‘இறைவனே பரிசுத்தமானவன்; உயர்ந்தவன்; அவனுக்கே புகழனைத்தும்’ என்பதே பொருள்.
இந்த சொல்லும் செயலும் சொல்வதென்ன?
‘பணத்தால், இனத்தால், நிறத்தால், அறிவால், ஆற்றலால் நான் உயர்ந்தவன் அல்லன். இறைவா! நீயே உயர்ந்தவன்.’ என்ற எண்ணத்தை இந்த வார்த்தை ஒவ்வொருவர் மனதிலும் உருவாக்குகிறது. தான் என்ற அகந்தையை அழிக்கிறது.
ஒரு முஸ்லிம், இந்தியாவின் ஜனாதிபதியாக இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவர் ஒரு பள்ளிவாசலுக்கு தாமதமாகத் தொழ வருகிறார் என்பதற்காக, தொழுகையின் நேரத்தை ஒரு சில வினாடிகள் தள்ளி வைக்க முடியுமா? அல்லது இந்தியாவின் முதல் குடிமகன் நான்; அதனால் தொழுகையின் முதல் வரிசையில்தான் நிற்பேன் என்று அவர் ‘அடம்’ பிடிக்க முடியுமா?
இறைவன் சன்னிதானத்தில் ஏழை-பணக்காரர், உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற ஏற்ற தாழ்வுகள் இல்லை. அங்கே இறைவனுக்கே- அல்லாஹ்வுக்கே ‘முதல் மரியாதை’.
‘இறை இல்லத்தில் ஏற்ற தாழ்வுகள் இல்லை என்பது மட்டுமல்ல; இறைவனை வணங்க எந்த இடையூறும் இல்லை; இடைத்தரகர்களும் இல்லை என்று சொல்லும் இஸ்லாம் மார்க்கமே மேலானது’ என்று புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய ஜெர்மனியைச் சேர்ந்த ஆமினா மோஸ்லார் கூறிய கருத்து இங்கே கவனிக்கத்தக்கது.
உலக முஸ்லிம்கள் அனைவரும் மக்கா மாநகரில் உள்ள புனித இறை இல்லமான கஅபாவை முன்னோக்கியே தொழ வேண்டும். கஅபா உள்ள திசை ‘கிப்லா’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்னோக்கும் திசை என்பது பொருளாகும்.
ஒரு மனிதர் எந்த நாட்டில் இருந்தாலும் அவர் இறை இல்லமான கஅபா அமைந்துள்ள திசை நோக்கியே தொழ வேண்டும்.
இதை அறியாத சிலர், ‘திசையை வணங்கும் முஸ்லிம்கள்’ என்று பிழையான கருத்தின் பக்கம் திசை திருப்புகிறார்கள்.
‘(நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தை  (கஅபா எனும்) மஸ்ஜிதுல் ஹராமின் பக்கமே திருப்பிக் கொள்வீராக! நிச்சயமாக இதுதான் உங்கள் இறைவனுடைய உண்மை(யான கட்டளை)யாகும்’ (திருக்குர்ஆன்-2:149) என்பது நபிகளாருக்கு இறைவன் பிறப்பித்த உத்தரவு.
இதைப் பின்பற்றியே உலக முஸ்லிம்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து ‘கஅபா’ இருக்கும் திசை நோக்கித் தொழுகிறார்கள். இதன்மூலம் உலகளாவிய ஒற்றுமையும், ஒழுங்கு முறையும் பின்பற்றப்படுகிறது.

News

Read Previous

வறுமை!

Read Next

இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நடத்தும் “சங்கமிப்போம்” மாபெரும் சங்கம விழா!

Leave a Reply

Your email address will not be published.