துல்ஹஜ் முதல் 10 தினங்களின் சிறப்புகள்!

Vinkmag ad

துல்ஹஜ் முதல் 10 தினங்களின் சிறப்புகள்!

நாட்களில் மிகச் சிறந்தவை துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களாகும்; இரவுகளில் சிறந்தவை ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்களாகும் என்பதாக அறிஞர்கள் விளக்கமளித்துள்ளனர்.

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்களை விட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதும் மகத்தானதும் வேறு இல்லை. மற்ற நாட்களில் செய்யப்படும் நல்லறங்களை விட துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்களில் செய்யப்படும் நல்லறங்கள் இறைவனுக்கு மிகவும் விருப்பமானவை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்: “(துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா?” என்று கேட்டனர். அதற்கு அண்ணலார், “அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும் சிறந்ததுதான். ஆயினும் தனது உயிருடனும், தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத பேராளியைத் தவிர” என்று விடையளித்தார்கள். (புகாரீ 969)

இந்தச் செய்தி நோன்பை மட்டும் கூறாமல் பொதுவாக நோன்பு உட்பட அனைத்து நல்லறங்களையும் குறிக்கின்றது. இந்த நாட்களில் தொழுகை, திக்ரு, தர்மம் செய்தல் போன்ற எந்த நல்லறங்களைச் செய்தாலும் அதற்கு தனிச் சிறப்பு உண்டு.

அல்லாஹ் தன் அடியார்களுக்கு அவர்களின் குறுகிய ஆயுளில் நிறைந்த நல்லமல்களைச் செய்து மகத்தான பேறுகளைப் பெறுவதற்காக சில முக்கிய நாட்களை வழங்கியிருப்பது மிகப் பெரிய கருணையாகும். அந்த வரிசையில் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களை சிறப்பித்து குர்ஆனிலும் ஹதீஸிலும் கூறப்பட்டுள்ளன.

அல்லாஹ் கூறுகிறான்: வைகறைப் பொழுதின் மீதும், பத்து இரவுகளின் மீதும் சத்தியமாக! (அல் ஃபஜ்ர் : 1-2)

இந்த வசனத்திற்கு விளக்கவுரையாக இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “பத்து இரவுகள் என்பது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளதைப் போன்று துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களாகும்.”

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கு காரணம், இஸ்லாத்தின் தலையாய வணக்க வழிபாடுகள் இந்நாட்களில் ஒருங்கே அமைந்திருப்பதாகும். தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய யாவும் இந்நாட்களில் நிறைவேற்றப்படுகின்றன! இந்த நிலை வேறு எந்த நாட்களிலும் அமைவதில்லை.” (ஃபத்ஹுல் பாரி)

இந்த பத்து நாட்களில் அதிகமாக தஸ்பீஹ் (ஸுப்ஹானல்லாஹ்), தஹ்லீல் (லா இலாஹ இல்லல்லாஹ்), தஹ்மீத் (அல்ஹம்துலில்லாஹ்), தக்பீர் (அல்லாஹு அக்பர்) போன்றவற்றை கூறுமாறு ஹதீஸ்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இப்னு உமர் (ரலி) கூறுகிறார்கள்: “அமல்கள் செய்வதில் அல்லாஹ்வுக்கு மிகவும் உவப்பான நாட்கள் துல்ஹஜ் பத்து நாட்களாகும்; இதுபோல் வேறு எந்நாட்களும் இல்லை! எனவே இந்த நாட்களில் சுப்ஹானல்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் போன்றவற்றை அதிகமதிகமாக சொல்லுங்கள்!” (தப்ரானி)

News

Read Previous

நீரிழிவை கட்டுப்படுத்த உதவும் காய்கறிகள்

Read Next

பேசி தீருங்கள்

Leave a Reply

Your email address will not be published.