தியாகத் திருநாள்

Vinkmag ad
தியாகத் திருநாள்
துல்ஹஜ் மாதம் பிறை ஒன்றிலிருந்து பத்து நாட்கள் வரை ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றிய பிறகு கொண்டாடப்படுவது ஹஜ் பெருநாள் ஆகும். ஹஜ் பெருநாள் ‘ஈதுல் அள்ஹா’ (தியாகத் திருநாள்) அழைக்கப்படுகிறது.
இறைவனின் நேசத்துக்கு உரியவராக வர்ணிக்கப்பட்டவர் இப்ராகீம் நபிகள். இவர், இளமைக்காலம் தொட்டே பகுத்தறிவில் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார்கள். எந்த ஒரு நிகழ்வையும் ஏன், எதற்கு என்று கேள்வி எழுப்பி, அதற்கு விடை காண்பதற்கு பெரு முயற்சி எடுத்துக் கொண்டார்கள்.
இப்ராகீம் நபிகளின் தந்தை ஆஜர் என்பவர் களிமண்ணில் கடவுள் பொம்மைகள் செய்து அவற்றை விற்பனை செய்து வந்தார். இதனை பிடிக்காத இப்ராகீம் நபிகள், ‘கீழே விழுந்தால் உடைந்து விடக்கூடிய, தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத மண் பொம்மைகள் எப்படி உலகைக் காக்கும் கடவுளாக முடியும்’ என்று அதனை எதிர்த்தார்கள். அதனால் தந்தையை மட்டுமல்ல அந்த ஊரையே பகைத்துக் கொண்டார்கள். ஒருமுறை தான் கண்ட கனவின் மூலமாக அருமை மனைவி ஹாஜரா அம்மையாரையும், அருந்தவச் செல்வன் இஸ்மாயிலையும் பாலைவனத்தில் விட்டுவிட்டு திரும்பி வந்து விட்டார்கள். அவர்களுக்கு அது சோதனை. ஆனால் அதன் விளைவாக மக்கா என்ற சிறப்புற்ற நகரமும், ’ஜம்ஜம்’ என்ற வற்றாத ஜீவ நீர் ஊற்றும் உருவானது.
மற்றொரு முறை, குழந்தை இஸ்மாயிலை, அல்லாஹ்வின் கட்டளைப்படி அறுத்து பலியிடுவதாக கண்ட கனவை நிறைவேற்ற முயன்றார்கள். அப்போது அல்லாஹ் அதனைத் தடுத்து, ஒரு ஆடு அனுப்பி, அதை அறுத்து குர்பானி கொடுக்க கட்டளையிட்டான். அரேபிய மாதமான துல்ஹஜ் மாதம் 10-ம் நாள் இது நடந்தது.
உலக வாழ்வில் தான் சந்தித்த நிகழ்வுகள் அனைத்தையும் ஏன் எதற்கு என்று கேட்டவர்கள், அல்லாஹ்வின் கட்டளை என்று வந்தபோது எந்தவித ஆட்சேபனையும் இன்றி உடனே அடிபணிந்தார்கள். எனவே தான் அல்லாஹ் இப்ராகீம் நபிகளை, ‘தன் நேசத்துக்கு உரியவர்’ என்று பெருமிதத்தோடு குறிப்பிடுகின்றான்.

இப்ராகீம் நபிகள் வாழ்வில் செய்த இந்த தியாகத்தை நினைவுகூரும் விதமாக உலக முஸ்லீம்கள் துல்ஹஜ் மாதம் 10-ம் நாள் பக்ரீத் பண்டிகையாக, தியாகத் திருநாளாக வருடந்தோறும் கொண்டாடி வருகின்றனர். அதன் மூலம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள்.
தியாகத் திருநாள் அன்று முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சம் சிறப்புத்தொழுகை மற்றும் குர்பானி கொடுத்தல் ஆகும். பெருநாள் தினத்தன்று குர்பானி கொடுப்பதைவிடச் சிறந்ததொரு காரியம் வேறெதுவும் கிடையாது.
தியாயகத் திருநாளின் மகிழ்ச்சியான கொண்டாட்டம் உலக முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்து ஏழை எளியோருக்கும் பொருந்தும். ஏழைகளின் நிலை அறிந்து, அவர்களின் வலி உணர்ந்து, அவர்களையும் நலமாகவும், வளமாகவும் வாழ வழி வகுப்பதுதான் இஸ்லாமியப் பண்டிகைகளின் முதன்மையான நோக்கம்.

தொகுப்பு
முனைவர் ஆ.முகமது முகைதீன், துபாய்

News

Read Previous

வெள்ளைப் பூக்களின் … பயணம் !

Read Next

தோற்றுவாய்

Leave a Reply

Your email address will not be published.