தியாகத் திருநாள்

Vinkmag ad
அறிவோம் இஸ்லாம்
பாத்திமா மைந்தன்
24. தியாகத் திருநாள்
துல்ஹஜ் மாதம் 10-ம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை, ‘ஈதுல் அள்ஹா’ எனப்படும். இது ‘ஹஜ்’ கடமையின் நிறைவையொட்டி கொண்டாடப்படுவதால் ‘ஹஜ்ஜுப் பெருநாள்’ என்றும், நபி இப்ராகீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூர்வதால், ‘தியாகத் திருநாள்’ என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு ‘பக்ரீத் பண்டிகை’ என்ற பெயரும் உண்டு.
ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் இரவு இப்ராகீம் நபி, தன் மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை அறுத்து பலியிடக் கனவு கண்டார். இது இறைவனின் ஆணையா? அல்லது சாத்தானின் வேலையா? என்பதைக் கண்டறிய முடியாமல் குழப்பம் அடைந்தார். மறுநாளும் அதே கனவு. பத்தாம் நாள் இரவில், ”இப்ராகீமே! அல்லாஹ்வுக்கு அடி பணியுமாறு சாத்தான் உம்மைப் பணிக்க மாட்டான். பணிக்கப்பட்ட வண்ணம் ஆற்றுவீராக” என்ற குரல் கேட்டு விழித்தெழுந்தார். விடிந்ததும் தன் மகன் இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு, இறைக் கட்டளையை நிறைவேற்ற புறப்பட்டார். தந்தையும் மகனும் முன்னும் பின்னுமாக நடந்து சென்றார்கள். செல்லும் வழியில் சாத்தான் அவர் களின் மனதைக் கலைக்க முயன்றான். அவர்கள் சாத்தானை இனம் கண்டு கொண்டு அவன் மீது கற்களை வீசி எறிந்து விரட்டி அடித்தார்கள். இப்போது தந்தையும் மகனும் இருமலைகளுக்கு இடையே உள்ள பள்ளத்தாக்கை அடைந்தனர்.
‘என்னருமை மகனே! நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாகக் கனவு கண்டேன். இது பற்றி உமது கருத்தென்ன?’ என்று கேட்டார். அதற்கு இஸ்மாயில், ‘தந்தையே! நீர் ஏவப்பட்டபடியே செய்வீர். இன்ஷா அல்லாஹ் -அதைச் சகித்துக் கொண்டு உறுதியாக இருப்பவனாகவே என்னை நீங்கள் காண்பீர்கள்’ என்று பதில் அளித்தார்.
மகனின் பதிலைக் கேட்டு மகிழ்ந்த நபி இப்ராகீம், இஸ்மாயிலைக் குப்புற படுக்க வைத்து கத்தியால் அறுத்தார். பலமுறை அறுத்த போதிலும் கத்தி மழுங்கியதே தவிர கழுத்து அறுபடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த இப்ராகீம் நபி, அருகில் இருந்த கல்லில் கத்தியை ஓங்கி அடித்தார்கள். அதன் கூர்மையால் அந்தக் கல் இருகூறாகப் பிளந்து ஒரு கூறு கீழே விழுந்தது. (அந்தப் பாறையை இப்போதும் மினாவில் காணலாம்)
அப்போது ‘இப்ராகீமே! நீர் கண்ட கனவை உண்மைப்படுத்தினீர். நாம் நன்மை செய்வோருக்கு இவ்விதமே கூலி கொடுப்போம். நிச்சயமாக இது மகத்தானதொரு சோதனையாகும்’ என்ற குரல் கேட்டது. இதைக் கேட்டு இப்ராகீம் நபி அதிர்ந்து நின்றார். அப்போது இறைவன் மீண்டும், ‘அருகில் பாருங்கள்; அதையே அறுத்துப் பலியிடுங்கள்’ என்றான். அங்கு வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஓர் ஆட்டுடன், ‘அல்லாஹு அக்பர்’ என்ற இறைத் துதியை மொழிந்தவாறு நின்றார்கள். இதைக் கேட்ட இப்ராகீம் (அலை) அவர்கள் ‘லாயிலாஹ இல்லலாஹு, அல்லாஹு அக்பர்’ என்று கூற, இஸ்மாயில் (அலை) அவர்கள், ‘அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து’ என்று முழங்கினார். இந்த மூவரும் கூறிய தக்பீரே இரு பெருநாட்களிலும் முழங்கப்பட்டு வருகிறது.
இப்ராகீம் நபி அவர்கள் இறை ஆணைப்படி தன் மகன் இஸ்மாயிலை அறுத்து பலியிட முன் வந்த தியாகத்தை நினைவு கூரும் வகையில் கொண்டாடப்படுவதே இந்தப் பெருநாளாகும்.
ஈதுல் அள்ஹா பெருநாள் தினத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘நாம் இன்றைய தினம் செய்யும் முதல் வேலை யாதெனில் (பெருநாள் தொழுகை) தொழுவதுதான்’ என்று தோழர்களிடம் சொன்னார்கள். இதன் மூலம் நேரத்தோடு பெருநாள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
பள்ளி வாசலிலோ அல்லது பெருநாள் தொழுகைக்காக ஏற்பாடு செய்த இடத்திலோ தொழுகையை நிறைவேற்ற வேண்டும். தொழுகையின்போது இறைவனைப் போற்றும் ‘தக்பீர்’ முழங்கப்படுகிறது. இந்தத் தக்பீர் துல்ஹஜ் மாதம் 9-ம் நாள் அதிகாலை (சுபுஹு தொழுகை) தொழுகைக்குப் பிறகு தொடங்கி, துல்ஹஜ் 13-ம் நாள் மாலை நேரத் தொழுகை (அஸர் தொழுகை) வரை 23 தொழுகை வேளைகளில் மொழியப்படுகிறது.

News

Read Previous

செந்தமிழ்

Read Next

வஃபாத்து செய்தி

Leave a Reply

Your email address will not be published.