சிறுகதை : ஊஞ்சலாடும் நெஞ்சம்

Vinkmag ad

சிறுகதை

ஊஞ்சலாடும் நெஞ்சம்

கருணா மணாளன் – திருநெல்வேலி

 

ஐஸா லாத்தா என்று அழைக்கப்படும் ஆயிஷா ஆறாம் பண்ணையில் நல்ல செல்வாக்குள்ள பெண்மணி. செல்வ செழிப்பில் ஒரு காலத்தில் கொழித்தவள். இன்று வறுமைச் சேற்றில் உழலும் கண்ணியம் மாறா கண்மணி ஆயிஷா.

ஆறாம் பண்ணை கொங்கறாயக்குறிச்சிவாசிகளால் அன்றும் சரி, இன்றும் சரி ஐஸா லாத்தா என்றுதான் அழைக்கப்படுகிறாள். காரணம் அவளிடம் படிந்துள்ள பண்பாடுகள். பின்பற்றத்தக்கதாகவுள்ள கோட்பாடுகள், போக்குகள்.

இப்படிப்பட்ட ஆயிஷாவிற்கு ஒரு இக்கட்டான சோதனை.

இருபது வருடங்களுக்கு முன்பு ஆறாம் பண்ணையில் சீமானாக விளங்கிய ஷேக் மன்சூரிடம், கொங்கறாயக்குறிச்சி கவுஸ் முகம்மது ஐம்பதாயிரம் ரூபாயைத் தந்து, “மன்சூர் காக்கா, எங்கள் குடும்பத்து சொத்தை பாகப்பிரிவினை செய்து, என் பங்கிற்குக் கிடைத்த இந்த பணத்தை தங்களிடம் தந்து வைக்கிறேன். என்னுடைய இரண்டு பெண்களுக்கும் வயதுக்கு வந்த பின் அவர்களுக்கு கல்யாணம் செய்ய பயன்பட வேண்டும். ஒருவேளை அதற்குள் நான் காலமாகிவிட்டால், என் பங்கிற்கு நீங்கள் இருந்து செய்து வைக்க வேண்டும். உங்களிடம் எதற்காக தருகிறேன் என்றால், உங்களிடம் பல வகை தொழில் இருக்கிறது. அதில் ஒன்றில் இந்தப் பணத்தை முதலீடு செய்து வருகிற லாபத்தில் பாதி எங்களுக்கும், உழைப்பதால் மீதி உங்களுக்கும் சேரட்டும்” என்று சொன்னார்.

உடனே ஷேக் மன்சூர் பணம் பெற்றுக் கொண்டதற்கு ஆதாரமாக ஒரு வெள்ளை தாளில் எழுதி கையெழுத்து போட போன போது, கவுஸ் முகம்மது சொன்னார். “இது தேவையற்ற ஒன்று. நான் உங்களை நம்பி ஒப்படைக்கிறேன். இந்த வகைக்கு மனிதர்களில் யாரையும் நான் சாட்சியாக வைக்க விரும்பவில்லை.”

ஷேக் மன்சூரின் செங்கல் சூளையில் அந்தப் பணத்தை முதலீடு செய்து ஒன்றரை லட்சமாகப் பெருகி வரும்போது, ஷேக் மன்சூருக்கு சோதனை குறுக்கிட்டது. மாற்றாரின் தூண்டுதல் பேரில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். போட்டிக்கு ஒவ்வொரு துறையிலும் குறுக்கிட்டு, ஷேக் மன்சூரை நிமிர விடாமல் பண்ணினர். சோதனையாக இரண்டு வருடங்களாக பருவ மழை பெய்யாததினால் விவசாயத்திலும் பெரும் வீழ்ச்சி. மனமுடைந்த ஷேக் மன்சூர் இருப்புப் பணத்தை காலி செய்தார். தான, தருமங்கள், நன்கொடைகள் கொடுத்து உதவிய கரம் கொடுத்துக் கொண்டே இருந்தது. கஜானா காலி ! கவுஸ் முகம்மது பணம் மட்டும் அப்படியே இருந்தது. அதை மனைவி ஆயிஷாவிடம் ஒப்படைத்த மறுவாரம், திடீர் மாரடைப்பில் இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்.

இன்று?

ஆயிஷாவின் பொறுப்பில் இரண்டு பெண் குமர்கள். அவர்களுக்கு கணவன் ஷேக் மன்சூர் காலமாகும் முன்பு இரண்டொரு வசதியான குடும்பத்தில் மாப்பிள்ளை பேசி இருந்தார். அவர்கள் மணமுடித்துத் தரும்படி இப்போது நெருக்கினார்கள். இதை விட்டு விட்டால் இப்படியொரு இடம் குதிர்வது கடினம்.

நுணுக்கி நுணுக்கிப் பார்த்தாலும் ஒன்றரை லட்சம் ரூபா செலவாகும். இரண்டு குமர்களும் கரை சேருவதற்கு முழுசாக ஐம்பது ரூபா கூட கைவசம் இல்லாமல் சங்கடப்பட்டாள் ஆயிஷா.

கொங்கறாயக்குறிச்சி கவுஸ் முகம்மது இறந்த பிறகு, கணவன் படும் கஷ்டத்தை உத்தேசித்து ஆயிஷா சொன்னாள், “ அந்த மனிதர்தான் போய் சேர்ந்து விட்டாரே ! அந்தப் பணத்தை செலவு செய்தால் என்ன? அவர் தந்ததற்கு என்ன அத்தாட்சி இருக்கு? சாட்சி தான் யார்?

”அது அமானிதம் ! சாட்சியாக அல்லாஹ் இருக்கிறான். அத்தாட்சிக்கு என் மனசாட்சி இருக்கே. தவறியும் இந்த மாதிரி எண்ணத்தை உன் உள்ளத்தில் இனி நினைத்துக் கூட பார்க்காதே !” என்றார் அந்த நிலையிலும் ஷேக் மன்சூர்.

ஆசை ஆயிஷாவை அலைக்கழித்தது. ‘கொடுத்தவரும் பணத்தைப் பெற்றவரும் இப்போது இல்லை. அமைதியாக அலமாரியில் உறங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பணக்கட்டுகளை நாம் பயன்படுத்தினால் என்ன? இனிமேல் இந்தப் பணத்தை கேட்டு யார் வரப்போகிறார்கள்?’

அலமாரிப் பக்கமாக சென்று சாவி துவாரத்தில் சாவியை நுழைத்துத் திறந்தாள் ஆயிஷா. பணப்பெட்டகத்தை திறக்கும் போது வாசலிம் சிறு சலசலப்பு.

திடுக்கிட்டுத் திரும்பினாள் ஆயிஷா.

ரஹ்மத் நிஸா

காலஞ்சென்ற கொங்கறாயக்குறிச்சி கவுஸ் முகம்மதுவின் விதவை மனைவி.

அவசரம் அவசரமாக அலமாரியை மூடி விட்டு, “வாங்கம்மா, வாங்க” என்று இதயம் படபடக்க ஆயிஷா அழைத்தாள்.

“சுகமா இருக்கிறாயா ஐஸா லாத்தா?”

“சொகத்துக்கு என்ன கொறச்சல்? எங்கே இந்தப் பக்கம்? நிக்கிறீங்களே, இப்படி பாயில் உக்காருங்க” தடுக்குப்பாயை தட்டி போட்டாள்.

“எப்படி வாழ்ந்த குடும்பம் இப்படி ஆயிடுச்சு. உங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு சோதனை வரக்கூடாது. உங்களிடம் உதவி கேட்டு வெறுங்கையோடு திரும்பியவர்கள் இல்லை. இன்று நீங்கள் மானம், மரியாதைக்கு அஞ்சி, வீடுகளில் வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாத்தும் கொடுமை பகைவருக்கும் வரக்கூடாது லாத்தா !”

“ரெண்டு நாளா வீடுகளிலே வேலை கெடைக்கல்லே, கொங்கறாயக் குறிச்சி வந்தால் ஏதாச்சும் வேலை தருவீங்களா?”

“அஸ்தக்பிருல்லாஹ் ! அப்படியெல்லாம் சொல்லாதீங்க ஐஸா லாத்தா! நான் அதுக்கு வரல்லை… ஒரு காரியமா உங்களை பார்த்துட்டு போக வந்தேன்”

“காரியமாவா…?

“ ஆமாம் ஐஸா லாத்தா … எங்க வூட்டுக்காரர் இருபது வருஷத்துக்கு முந்தி உங்க கணவரிடம் ஐம்பதாயிரம் ரூபா கொடுத்து எங்க குமர் கல்யாண வகைக்கு இருக்கட்டும்னு சொல்லி இருக்காங்க. அந்தப் பணம் உங்கக்கிட்ட பத்திரமா இருக்கும்னு நெனைக்கிறேன்.”

“இப்போ என்னோட பெண்களுக்கும் மீயாம்பள்ளியிலிருந்து மாப்பிள்ளை பேசி வருது..”

“அப்படியா…”

“ஆமா.. இன்னும் முடிவாகல்லே. ஆனால் உங்க பெண்களுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை வீட்டார் கல்யாணம் செய்து தரும்படி நெருக்குவதாகவும், குறிப்பிட்ட நாள் தவறினால் அவர்கள் வேறு இடம் பார்த்து விடுவதாகவும் கெடு வைத்திருப்பதாக கேள்விப்பட்டேன்.”

“ஆமாம்மா.. அவுங்க இருந்தபோது எடுத்த முடிவு. அல்ப ஆயுசுலே அவுங்க போய சேர்ந்துட்டாங்க. இப்போ வெறுங்கையா இருக்கோம். விட்டு போனால் போகட்டும். கொடுப்பினை இல்லைன்னு ஆறுதல் பெறவேண்டியதுதான்.”

“அப்படிச் சொல்லிடாதீங்க ஐஸா லாத்தா. எங்கப் பணத்தை உங்கள் பெண்கள் வகைக்கு பயன்படுத்திக்கங்க என்று சொல்லத்தான் நான் வந்தேனாக்கும். நீங்க மறுக்காமல் நான் சொன்னதை செய்யுங்கள்.” “அப்போ உங்கள் பெண்களுக்கு…?”

“அதை அந்த ‘ரப்புல் ஆலமின் பார்த்துக் கொள்வான்’ ரஹ்மத்துன்னிஸா புறப்பட்டு விட்டாள்.

செயலற்று நின்ற ஆயிஷா மறுகணம் சுதாரித்துக் கொண்டாள்.

‘ரஹ்மத்துன்னிஸாவின் பெண்களை இறைவன் பார்த்துக் கொள்வான் என்று எவ்வளவு ஆணித்தரமாக சொல்லிவிட்டாள். அப்படியானால் நம் பெண்களுக்கு.. ஆம், நம் பெண்களையும் இறைவன் பார்த்துக் கொள்வான் என்ற உறுதி நம்மிடம் ஏன் இதுவரை இல்லாமல் போய்விட்டது?’

ஆசை… அடுத்தவர் உடமைக்கு ஆசை எழும்போது தானாகவே இறைவன் மீதுள்ள நம்பிக்கை நழுவி விடுகிறது.

இனி இந்த ஆயிஷா மனிதரைவிட அவனை படைத்த இறைவனையே நம்புவாள்.

ஒன்றரை லட்சம் ரூபாயை ஒரு துணிப்பையில் நிறைத்துக் கொண்டு கொங்கறாயக் குறிச்சி நோக்கி நடையை கட்டினாள் ஆயிஷா.

மூடிக் கிடந்த என் உள்ளத்தின் கதவுகளை திறந்த ரஹ்மத்துன்னிஸாவே ! என்னை நீ வென்றுவிட்டாய். உன் பணத்தை மோசடி செய்ய இருந்த இழிநிலையிலிருந்து என்னை நீ காப்பாற்றி விட்டாய். உன் உறுதி வீண் போகவில்லை. உன் நம்பிக்கை நசிந்து விடவில்லை. உன் பெண்களை வாழவைக்க இறைவன் என்னை உன்னிடம் அனுப்பி இருக்கிறான்.

 

நன்றி

 

நர்கிஸ்

மார்ச் 2015

News

Read Previous

இடத்தகராறில் தாய்மாமனை கொலை செய்த விவசாயி கைது

Read Next

இறைவனிடம் கையேந்துங்கள் …………

Leave a Reply

Your email address will not be published.