குர்ஆன் காட்டும் வழியில்தான் முஸ்லிம்கள் பயணிக்க வேண்டும்

Vinkmag ad

இஸ்லாம் என்றால் அமைதி, சமாதானம், தன்னிறைவு என்னும் பொருளுடையது. இன்றைய உலகில், மிகப் பெரும் மதங்களில் ஒன்றாக இஸ்லாம் விளங்குகிறது.

எழுநூற்று இருபது கோடிக்கும் அதிகமாக உள்ள மானிட மக்களில் நூற்றைம்பது கோடிக்கு மேற்பட்டவர்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் முஸ்லிம்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாம் மார்க்கம், இறைவனின் ஞான வெளிப்பாடுகளாகிய திருக்குர்ஆன், திருநபி முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களாகிய அல் ஹதீஸ், பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் ஒப்புதலைப் பெற்றுள்ள இஜ்மா, ஒருதலைசிறந்த மார்க்க மேதையின் கருத்தை, பெரும்பாலான முஸ்லிம் ஞான மேதைகள் ஒப்புக் கொள்வதன் மூலம் உருவாகும் கியாஸ் என்னும் நான்கு அடிப்படைகளை கொண்டு விளக்கப் பெறும் வாழ்வியல் முறையாகும்.

ஆங்கில நாட்டு அறிஞர் பெர்னாட்ஷா ஒருமுறை கூறியதாக சொல்வார்கள்: இஸ்லாம், எல்லாவற்றிலும் சிறந்து மேலோங்கியதாக இருக்கிறது; ஆனால், இன்றைய முஸ்லிம்கள் எல்லோரிலும் தாழ்ந்து சீரிழந்து இருக்கிறார்கள்.

ஷாவுடைய இந்தப் படப்பிடிப்பு இன்றைக்கு எத்துணை அளவு பொருத்தமாக இருக்கிறது என்பதை முஸ்லிம் உலக நடப்புகளை கூர்ந்து பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். கி.பி. 2000 முடிவுற்று, 2001ஆம் ஆண்டு துவங்கியபோது, இருபத்து ஓராம் நூற்றாண்டு பிறக்கிறது; இந்த நூற்றாண்டு புத்தெழுச்சியை உருவாக்கப் போகிறது என்றார்கள். ஆனால், 21ஆவது நூற்றாண்டின் தொடக்கம் முதலே முஸ்லிம் உலகில் -எந்தவொரு முஸ்லிம் பிரச்சனை இல்லாத நாடு என்று நாம் போற்றும் அளவுக்கு இல்லை என்பதே உண்மையாகும். சில ஆண்டுகளுக்கு முன்னர் அரபு வசந்தம் என்று சொன்னார்கள். டுனீஷியா, அல்ஜீரியா, மொராக்கோ, லிபியா, எமன், எகிப்து போன்ற எல்லா நாடுகளிலும் குழப்பங்களும் கொந்தளிப்புகளும் ஏற்பட்டு, இன்றளவும் அங்கே புகைந்து கொண்டுதான் இருக்கின்றது. இருக்கின்ற ஆட்சியாளர்களை தூக்கி எறிந்து விட்டு, புதிய ஜனநாயக நல்லாட்சியை கொண்டு வரப் போவதாக கூறினர். அமெரிக்கா போன்ற நாடுகளின் நேர்முக, மறைமுக ஆதரவுடன் இங்கெல்லாம் கிளர்ச்சிகள் நடந்தன. இறுதியில், இருந்ததும் கெட்டு, இப்போது இரண்டுங் கெட்டான் நிலையில் இந்த நாடுகள் சிக்கித் தவிக்கின்றன.

ஈராக்கில் சதாம் உசேனை ஒழிப்பதற்கென்றே அமெரிக்க, ஐரோப்பிய கூட்டணி, ஐ.நா. சபையின் உதவியோடு எல்லா அட்டூழியங்களையும் செய்தன.

இப்போது அங்கே பழைய ஈராக் இல்லை; மூன்று ஈராக் முளைத்து விட்டது. குர்திஸ்தான் வந்து விட்டது; ஈராக்கின் மொசூல் பகுதியில புதிய கலீபா தோன்றியிருக்கிறார்; தென் கிழக்கு ஈராக் ஷீயாகளின் ஆதிக்கம் மிகுந்ததாக தனித்து விட்டது.

ஆமை புகுந்த வீடு; அமீனா புகுந்த வீடு; எப்படி பொலிவு இழக்குமோ, அப்படி அமெரிக்கா புகுந்த ஈராக் நாடும் பொலிவும் – வலிவும் இழந்து கேவலப்பட்டு நிற்கிறது. அடுத்துள்ள சிரியாவில் ஆளும் அரசுக்கு எதிராகப் போரிட்டு வருகிறவர்கள், தனி நாடு அமைத்துக் கொண்டு, புதிய கலீபாவாக தன்னைப் பிரகடனப்படுத்தியுள்ள அபூபக்கர் அல் பக்தாதியின் ஆளுகைக்குள் இருப்பதாக அறிவித்திருக்கிறார் கள்.

ஈரான் தேசத்தவர், ஈராக்கில் உள்ள ஷீயாக்களின் ஆட்சியை பாதுகாப்பதற்கு எல்லா ஆயத்தங்களும் செய்கிறார்கள் என்று பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. சவூதி அரேபியா, ஈரானுடைய வளர்ச்சி எந்தத் திசையிலும் ஏற்படாமல் இருப்பதற்கு எல்லாவிதத் தடைகளையும் ஏற்படுத்தி வருகிறது என்று செய்தி நிறுவனங்கள் பரப்பி வருகின்றன. அரபு நாடுகள் அனைத்திலும்அமளியும், அமைதியின்மை யையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையை விட்டு, பிற முஸ்லிம் நாடுகள் மாறியிருக்கின்றவா என்றால், அதுவும் இல்லை என்பதே வேதனை தரும் விஷயமாகும்.

ஆப்கனிஸ்தானில் தேர்தல் பற்றிய சண்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆப்கன் தாலிபான்களின் தீவிரப்போக் கால், அங்கே எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் தத்தளிக் கிறார்கள் மக்கள். ஆப்கானிய தாலிபான்கள், பாகிஸ்தானுக்குள் புகுந்து, தங்களின் தீவிரவாதத்திற்கு ஆதரவு திரட்டுகிறார்கள் என்று பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டுகிறது. வஜீரிஸ்தான் மாநில எல்லையில் பாகிஸ்தான் இராணுவத்துக்கும், தாலிபன் களுக்கும் தொடர்ந்து சண்டை நடந்து கொண்டிருக் கிறது. தினந்தோறும் பலியாவோர் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில்- ஆயிரக்கணக்கில் பெருகிக் கொண்டே செல்கிறது.

இப்போது வரும் செய்திகளின்படி தாலிபான்களுடன் உஸ்பெகிஸ்தானில் உள்ள உஸ்பெக்குகளும் சேர்ந்து கொண்டு, பாகிஸ்தான் இராணுவத்தை எதிர்த்து வருகிறார்கள் என்று தெரிகிறது. சுருங்கச் சொன்னால், மத்திய கிழக்கிலும், மத்திய ஆசியாவிலும் உள்ள எந்தவொரு முஸ்லிம் நாட்டிலும் அமைதி இல்லை.இப்போது, பழைய சோவியத் யூனியனில் இருந்த உக்ரைன் நாடு, சுதந்திரம் பெற்றது. உக்ரைன் ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சிக்காரர்கள் போரிடுகின்றனர். இந்தக் கிளர்ச்சிக்காரர் களுக்கு ஆதரவாக ரஷ்யா தனது படையை தந்து கொண்டிருக் கிறது. சமீபத்தில் உக்ரைன் விமானத்தை, கிளர்ச்சிக்காரர்கள் போர்வையில் ரஷ்யா சுட்டு வீழ்த்தி, ஒரு முஸ்லிம் நாட்டின் இறையாண்மைக்கு வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறது.முஸ்லிம் நாடுகள், அரபு நாடுகளாயினும், பிறவாயினும், பிரச்சனை பூமியாகி விட்டிருக்கின்றன. அவரவர் நாட்டில், அவரவர் ஆட்சியைப் பாதுகாக்கும் அவசியத்திலும், அவதியி லும் ஒவ்வொரு நாடும் சிக்கிச் சீரழிகிறது.

இதனைச் சரியாகப் புரிந்துள்ள இஸ்ரேலிய ஜினியனிஸம், தற்போது, பாலஸ்தீனியர்களை பூண்டோடு அழிக்கும் சதியில் இறங்கி விட்டது. காஸா பகுதியில் வான்வழியிலும், தரைவழியி லும் தாக்குதல் நடத்தி, அழிவுக்கு மேல் அழிவை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும், ஐ.நாவும் வேடிக்கை பார்ப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன.

முஸ்லிம் நாடுகளில் குழப்பம் மிகுந்து விட்டதால் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகுதமாகி வருகின்றன. மியான்மரில் ராக்கைன் மாநில ரோஹிங்கியா முஸ்லிம்கள் படும் அவதி களுக்கு அளவே இல்லை.

பர்மிய புத்த பிக்குகளின் வெறித்தனம் இலங்கைக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு, பேர்வளா பகுதிகளில் புத்த பலசேனா காரர்கள் கட்டவிழ்த்து விடும் கொடுமைகளுக்கு அளவே இல்லை. இந்திய மண்ணில் அஸ்ஸாம் பகுதியில் வகுப்புக் கலவரங்கள் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. உ.பி. முசாபர்நகர் பகுதியிலும் கலவரத் தீ இன்னமும் அடங்கவில்லை.

புதிதாக பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க. ஆட்சியில் நாடு முழுவதிலும் வகுப்பு கலவரங்களை தூண்டி விடுவார்களோ என்ற உள்ளச்சம் எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும் ஊடுருவி இருக்கிறது. செஞ் சீனாவின் உய்குர் முஸ்லிம்கள் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். ஜிங்கியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்கள் ரமளான் மாதத்தில் நோன்பு வைக்கக் கூடாது என்று அரசே அறிவிக்கும் அளவுக்கு இஸ்லாமிய விரோதப்போக்கு தலை தூக்கியிருக்கிறது.

ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் மஸ்ஜிதுகளுக்கு மினாரா கட்டக் கூடாது என்றும், முஸ்லிம் மகளிர் பொது இடங்களுக்கு வரும்போது பர்தா அணியக்கூடாது என்றும் சட்டம் போடும் அளவுக்கு இஸ்லாமிய எதிர்ப்பு வெளிப்பட்டுக் கொண்டிருக்கி றது.

இலங்கைபோன்ற நாடுகளில் ஹலால் மட்டன் என்பதற்கு பெரும் எதிர்ப்பை கிளப்புகிறார்கள்.

இப்படியெல்லாம் உலகம் எங்கெணும் முஸ்லிம்கள் பல சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் ஆளாகி வருகிறார்களே? இதற்கெல்லாம் என்னதான் விடிவு? என்று முஸ்லிம் உலகம் தனக்குத் தானே கேட்டுக்கொண்டிருக்கிறது.

இதற்கான விடையை நமக்கு நாமே கற்பனை செய்வது தவறாகி விடும். ரமளான் மாதத்தில் ஞானஒளியாக வெளியாக் கப்பட்டுள்ள திருக்குர்ஆன் இதற்கு விடை தர முடியும். திருக்குர்ஆன் காட்டும் பாதையில் செல்லும் முஸ்லிம்கள் இவற்றை பின்பற்றியாக வேண்டும்.

முதலில், இஸ்லாம் கூறுகின்றபடி நடப்பவர்களாக முஸ்லிம்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, தொழுகையை கொண்டும், பொறுமையைக் கொண்டும் வாழ்ந்து கொண்டு இறைவனிடம் உதவியை தேட வேண்டும்.

மூன்றாவதாக தீவிரவாதம், வன்முறை, அழிவுப் போக்கு மூலம் இருப்பதை இழக்க முடியுமே தவிர, எதையும் புதிதாக உருவாக்க முடியாது.

360 சிலைகள் அலங்காரமாக இருந்த கஃபாவை நபி முஹம்மது (ஸல்) அவர்கள் அழிக்கவில்லை. கஃபாவை கவ்விக் கொண்டிருந்த சிலைகளையே அகற்றினார்கள். அழிப்பது இஸ்லாம் அல்ல; சீர்திருத்தி ஆக்குவதுதான் இஸ்லாம் என்பதை எல்லோரும் புரிந்திடச் செய்தல் அவசியமாகும்.

நான்காவதாக, உலகம் முழுவதிலும் கலீபா ஆட்சி என்று ஒன்றை இந்த காலத்தில் உருவாக்க நினைப்பதும், அதற்கு ஆதரவு திரட்டஎண்ணுவதும் இன்றைய சூழ்நிலையில் சாத்தியமாகுமா? என்று தீர்க்கமாக சிந்திக்க வேண்டிய கட்டாயம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. தனிமனித ஒழுங்கும், சமுதாய கட்டுப்பாடும் திருக்குர்ஆன் அடிப்படையி லான ஆட்சி நிர்வாகமும் முஸ்லிம்களை நேர்வழிப்படுத்தும் என்பதை உணரச்செய்ய வேண்டும்.

ஐந்தாவதாக, குழப்பங்களுக்கு ஆட்படாத முஸ்லிம் நாடுகளாக உள்ள கிழக்காசிய நாடுகளில் உள்ள மார்க்க மேதைகள் இந்திய துணைக்கண்டத்தில் மார்க்க சேவை ஆற்றி வரும் ஆன்மீக அறிஞர்கள் போன்றவர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு இன்றைய முஸ்லிம் உலகின் முக்கியத் தேவையாகும். அமைதியை அமைதியான அகங்களில்தான் தேட வேண்டும். கலங்கி விட்ட முட்டையிலே

குஞ்சு பிறக்காது!

கருத்திழந்தார் வாழ்க்கையிலே

புதுமை இருக்காது!

ஜெர்மன் நாட்டு கதே, (ழுடிநவாந) அவர் தனது சீடரான எக்கர்மேன்னுக்கு (நுஉமநசஅயnn) கூறினார்.

– (இஸ்லாம் என்னும்) இந்த போதனை ஒருபோதும் தோற்காது என்பதை நீங்கள் காணலாம். நம்முடைய எல்லா வாழ்வு முறைகளிலும் இதைவிட சிறந்த ஒன்றை நாம் காணவும் முடியாது. பொதுவாக சொன்னால் யாரும் இதைவிட சிறந்த ஒன்றை எட்டவும் முடியாது. கே.எம்.கே.

News

Read Previous

இசை ஜீனியஸ் ராஜா

Read Next

பாதை அமைத்த தகராறில் வெட்டு: இருவர் கைது

Leave a Reply

Your email address will not be published.